இலங்கை அரசு தனது உள்நாட்டு இனவாத அரசியலைத் தொடர்வதற்காகவும், தொடர்ந்தும் தன் அரச அதிகார ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகவும்,  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் அரசியலாக புலிகளின் மறு உருவாக்கம் என்ற பூச்சாண்டிக் கதைகள்  கடந்த மாசி மாதம் ஊடகங்களில் தலைகாட்டத் தொடங்கியது .

யுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்கள் கடந்த பின்னும்,  புலிகளின் மறு உருவாக்கம் என்ற பொய்யைக் கசியவிட்டுப்  பின்,  அப் பொய்யை உண்மையென நிருபிக்க வேண்டிய தேவை,  ஏன் இலங்கை அரசுக்கு உள்ளது ஏன ஆராய்ந்தால்-   அது தற்போது பல இக்கட்டான  நெருக்கடிகளுக்கிடையே சிக்கியுள்ளது இலகுவாகத் தென்படும்.

இன்று இலங்கையை  ஆட்சி செய்யும் மஹிந்த அரசானது போனோப்பார்ட்டிச (Bonapartism )அரசாகும் .  போனோப்பார்ட்டிசம் என்பது இங்கு, ஒரு   அதிகார மத்தியத்துவப்படுத்தப்பட்ட- பலம் வாய்ந்த ஒருவர் தலைமையிலான அரசு- அது  ஜனரஞ்சக வனப்புரைகள் (populist rhetoric )மற்றும் கவர்சிகரமான திட்டங்களை முன்னிறுத்தி  ஜனரஞ்சக சொல்லாட்சி மூலம்  தன் அதிகாரத்தை  நிலை நிறுத்தும்.  தன் தேவைகேற்ப வாக்குறுதிகளை அள்ளி வீசும் . எல்லோரையும் திருப்திப்படுத்த வெறும் வாய்சவடால் மூலமே வகை செய்யும் . அதேவேளை,  அது தன்  அதிகாரக் கொடுங்கோண்மையை தேவைப்படும் போது ஈவு இரக்கமின்றிப் பிரயோகிக்கும்.  அரச அதிகாரத்தைத் தமது நேரடியான  கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அல்லது சொந்தப் பெயரில் ஆட்சி செய்ய சமூக வர்க்கங்களுக்கு (உதாரணமாக பாட்டாளி வர்க்கத்துக்கோ அல்லது பூர்சுவா வர்க்கத்துக்கோ) தன்னம்பிக்கை இல்லாத போது அல்லது அதிகாரத்தை நிலைநிறுத்தப் போதுமான சக்தி வர்க்கங்களுக்கு இல்லாத போது,  இவ்வகை அரசு உருவாகுதாக வரலாற்றுப் பொருள்முதல்வாத தத்துவாசிரியர்கள் கூறுகின்றனர். இதனாலயே எல்லா வர்க்கத்தையும் 'திருப்திப்படுத்த' இவ்வகை அரசுக்கு பொப்புலிச / ஜனரஞ்சக வனப்புரைகள் மற்றும் 'கவர்சிகரத்' திட்டங்கள் தேவைபடுகிறது.

இந்த வகையில் போனோப்பார்ட்டிச மஹிந்த அரசானது  இரு வகை அழுத்தங்களை எதிர்நோக்கியபடியுள்ளது. முதலாவது அழுத்தம், அமெரிக்கா தலைமையிலான  மேற்குலக ஆதிக்க அரசுகளால் அதற்குக் கொடுக்கப்படும் 'சர்வதேச' அழுத்தமாகும். இவ்வழுத்ததம் 2009-இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 30 வருட யுத்தம் முடிந்த சில மாதங்களிலேயே ஆரம்பித்து விட்டது. அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகள்,  புலிகளை அழிக்க முழுமூச்சுடன் மஹிந்த அரசுக்கு உதவியிருந்த போதும், அவ்வரசு யுத்தத்தின் பின்னும் தொடர்ந்து நீடிப்பதை விரும்பவில்லை. யுத்தத்துக்குத் நேரடியாகத் தலைமை தாங்கி   இரத்தம் படிந்த கரங்களைக் கொண்ட  மஹிந்த குடும்பத்தின் ஆட்சியை ஏற்றுக் கொள்ளவது- உலகமகா யுத்தக் கொடுமைகளை நிகழ்த்தும் மேற்குலகுக்குக்  கொஞ்சம் தர்ம சங்கடமாகவும்,  மனித உரிமைகள்,  யுத்தக் குற்றங்கள் பற்றிய தமது 'இரட்டை நிலைப்பாடு' கொண்ட பொய்முகம் அம்பலப்பட்டுவிடுமோ என்ற சஞ்சலமும் குறிப்பிடத்தக்க காரணங்கள். ஆனால்இ மிக முக்கியமான  காரணம்,  ஆசிய முலதனங்களின் (சீன,  இந்தியா) ஆக்கிரமிப்பை இலங்கையில் தவிர்த்துத் தமது கட்டுப்பாட்டில் இலங்கையின் பொருளாதாராத்தை,  அதன் சந்தையை வைத்திருப்பதே மேற்குலகின்   தேவையாகும்.   இதனாலேயே,  யுத்தத்துக்குப் பின் வந்த ஜனாதிபதித் தேர்தலில் யு என் பி,  தமிழ் தேசியக் கூடமைப்பு,  ஜேவீபி போன்ற கட்சிகளின் உதவியுடன்,  மஹிந்த சொன்னதைச் செய்த இரண்டாங்கட்டக்  குற்றவாழியான   ஜெனரல் பொன்சேகாவை வேட்பாளராக நிறுத்தியது மேற்குலகு. தோல்வியில் முடிந்த அந்த தேர்தல் நாடகத்தின் தொடர்ச்சியாகவே இன்றும் வருடத்துக்கு  ஒரு முறை ஜெனிவா தீர்மான நாடகம் அமெரிக்கத் தலைமையில் மேற்குலகால் மேடையேற்றப்படுகிறது. இந்த வருட ஜெனிவா தீர்மானமானது,  போனோப்பார்ட்டிச- மஹிந்த அரசைக் கொஞ்சம் நிலைகுலைய வைத்ததென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.    இதன் அடிபடையில் மஹிந்த அரசானது,  மேற்குலகையும் திருப்பதிப்பத்தியப்படி,  ஆசிய மூலதனத்தையும் சரியான வகையிற் கையாள வேண்டிய நிலையிலுள்ளது.

இரண்டாவது மிக முக்கியமான நெருக்கடி உள்நாட்டில் உருவாகியுள்ளது. 30 வருடங்கள் யுத்தம் நடந்த காலத்தில்,  ஒரு பக்கம்  தமிழ் பேசும் வடக்குக் கிழக்கு மக்கள் உயிர்பலி கொடுத்தபடி யுத்தத்தின்  கொடுமையை அனுபவித்தபடியிருக்க,  மறுபக்கத்தில் ஒருவேளை வயிறாற உணவுண்ண வசதியில்லாமையால்,  யுத்தக்களத்துக்கு  தமது பிள்ளைகளை அனுப்பியதுடன்   யுத்தம்சார் செலவீனங்களையும், வரிச்சுமையையும்  சுமந்தவர்கள் தென்னிலங்கை மக்களே. போர் முடிந்த பின் பாலும் தேனும் ஆறாய் ஓடுமெனப் பிரச்சாரம் செய்த இனவாத,  யுத்த வெறி கொண்ட ஆதிக்க சக்திகளை நம்பியிருந்த மக்களுக்கு இன்று கிடைத்துள்ளது பாலும் தேனுமல்ல! மாறாக மேலும் மேலும் உயரும் விலைவாசிகளும், புதிய வரி விதிப்புகளும், அரசின் இலவச கல்வி மற்றும் சுகாதார வசதிகள் தனியார்மயப்படுவதுமே. அத்துடன் கடல்வளங்கள்,  விவசாயக் காணிகள், நன்னீர் வளங்கள், கடல் -  மற்றும் நிலத்தடிக் கனிமங்கள் சர்வதேச நாடுகளின் மூலதனத்துக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது . மற்றும் விதைகள்,  நாற்றுகள், மந்தை அபிவிருத்தி போன்ற விவசாயம் சார்ந்த விடயங்களின் மீதான சர்வதேசக் கம்பொனிகளின் ஏகபோக உரிமையை அங்கீகரித்தன் மூலம், இலங்கையின் விவசாயத்தின் சுயாதிபத்தியத்தை ஒழித்தமை போன்ற தேசவிரோதச் செயல்களுமே,     போனோப்பார்ட்டிச- மஹிந்த  அரசால் யுத்தத்துக்கு 'ஆதரவு ' தெரிவித்ததற்கான   பரிசாக மக்களுக்கு வழங்கப்பட்டது.

அத்துடன் அபிவிருத்தி என்ற பெயரில் எதற்கும் உதவாத விமானத்தளங்களும், கசினோ கிளப்புகளும்,  கட்டுமரம் கூடக் கட்டமுடியாத கப்பல் துறைமுகங்களும் அரசினால் ஆரம்பிக்கப்படுகிறது. பல்லாயிராம் கோடி ரூபாய்கள் கடன்வாங்கி நிறுவப்படும் இக்கட்டுமானங்கள் எந்தவகையிலும் மக்களுக்குப் பயன்தருவனவாக இல்லை. வறுமையும், பிணியும்,  பட்டினியும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது .

சொந்த நிலத்தில் விவசாயம் செய்த சிறுவிவசாயிகள்,  இப்போ சர்வதேச நிறுவனங்களின் விவசாயப் பண்ணைகளில்  கூலிகளாகப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதே போன்றே மீனவர் நிலையும். இலங்கையில் விசேட பொருளாதார கடல் வலயத்தில் மீன் பிடிக்கும் சீன, சவூதி அரேபிய, இந்திய, ஜப்பானிய  மீன்பிடிக்கப்பல்களில் கழிவகற்றல் தொடக்கம் அக் கப்பல்களிற் சிலவற்றில்  பிடிக்கப்படும் மீன்களைப் பதனிடும் தொழிற்சாலைகளில் நாட்கூலிகளாக  வேலைபாற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  விலை வாசி இலங்கையில் விண்ணை முட்ட உயர்ந்தாலும்,  அரச பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவன    உழைப்பாளர்களின் சம்பளமோ விலைவாசி உயர்வுகேற்ப உயர்த்தப்படவில்லை.   இவ்வாறு ஏமாற்றப்பட்ட  மக்கள் - யுத்தத்தின் பின்னான காலத்திற்  பல எதிர்பார்ப்புகளுடன் இருந்த மக்கள் இப்போ,  குறிப்பாகத்  தெற்கிலும் பரவலாக நாடு முழுவதும்  தமது அதிருப்தியை  பகிரங்கமாகவே தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

இதன் வெளிப்பாடுகளாகவே,  ஒருவருடத்துக்கு மேலாக நடைபெறும் மாணவர் போராட்டங்கள்,  வெலிவெரியாவில் நடந்த போராட்டம்,  குப்பை மேடுகளுக்கும்,  நகர அபிவிருத்தி என்ற பெயரில் நடந்த நில அபகரிப்புகளுக்கு எதிரான போராட்டம்,  புத்தளம் மீனவர்களில் போராட்டம்,  காலியில் நடந்த இயற்கை மாசடைவுக்கு எதிரான போராட்டம் எனப் பல வகையான  மக்கள் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இப்போரட்டன்களில் வெலிவேரியா மற்றும்  புத்தள மீனவர் போராட்டம் என்பன இராணுவத்தை உபயோகித்து, சிலர்  படுகொலை செய்யப்பட்டதுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. மாணவர் போராட்டத்தைப் பொறுத்த அளவில் பொலிசாராலும், பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினாலும் இதுவரை 4 மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இப்போரட்டங்கள் தொடர்வதும், தற்போது நடந்த சில மாகாணசபைத் தேர்தல்களும், மஹிந்த அரசின் ஆதரவுத்தளம் தகர்ந்து போவதைத் தெரிவிக்கின்றது .

ஆகவே, சர்வதேச மற்றும் உள்நாட்டு நெருக்கடிகளை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள இன்று மஹிந்த- பொனபார்ட் அரசு, ஏதாவது ஒரு வழியில் இந்  நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க வேண்டிய தேவையுள்ளது.

இதற்கு மிகவும் இலகுவான ஒரே வழியும் இ பல வருடங்கள் இலங்கையின் மாறுபட்ட ஆட்சியாளர்களினால் பரீட்சிக்கப்பட்டதுமான ஒரே தந்துரோபாயாம்,  இனவாதத்தைத் தூண்டி விடுதலாகும். ஆரம்பத்தில் கூறியபடி  இதை தற்போது நடைமுறையில் செயற்படுத்த அரசுக்கு இருக்கக்  கூடிய மிகச் சிறந்த ஆயுதம் புலிகளின் மீள்வரவு என்ற கதையைப் பார்ப்பி விடுதலும், அதன் அடிபடையில்   - திட்டமிட்டமுறையில் சிலரை புலிகளாக்கிக் கொலை செய்வதே! இதுதான் சித்திரை நடுப்பகுதியில், கேப்பிடிகொலவா பிரதேசத்தில் அல்லது நெடுங்கேணியில் உள்ள வெடிவைத்தகல்லு என்ற கிராமத்தில், மூன்று தமிழ் இளைஞர்களைக் கொலை செய்ததுடன் அரங்கேறியது.

இதன் மூலம் புலிகள் வந்து விட்டார்கள். ஆகவே,  அவர்களுக்கு எதிராக அனவரும் யுத்தக்  காலத்தைப் போன்று இணைய வேண்டும். புலிகளுக்கும் - அதன் அடிபடையில் தமிழருக்கும் எதிரான போர் தொடர்கிறது - இன்னிலையில் அரசை நலிவடைய விடக்கூடாதென தென்னிலங்கை மக்களுக்கு படம் காட்டுவதே மஹிந்த அரசின் நோக்கமாகும் .

அதேவேளை,  மேற்கு நாடுகளுக்கு புலிகள் இன்றும் உள்ளனர். தமிழ் பயங்கரவாதம் இன்றும் உள்ளது.  ஆகவே, எந்த விதத்திலும் எது வித மனித உரிமைக் கோரிக்கைகளையும் இப்போ நிறைவேற்ற முடியாதெனக் கூறுவதே போனோபர்ட் மஹிந்தவின் திட்டமாகும் .

இவ்வாறு, சர்வதேச மற்றும் உள்ள நாட்டு நெருக்கடிகளைச் சமாளிக்கத்தான்  அப்பன், தேவியன், கோபி என்ற மூன்று முன்னாள் புலிப் போராளிகள் ,  மஹிந்த அரசால்  படுகீழ்த்தரமான, மிலேஞ்சத்தனம்மான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லா வகையிலும் திட்டமிட்ட முறையில்,  மஹிந்த அரசினதும் அதன் அடிவருடிகளாகச் செயற்பாடும் தமிழ் கைக் கூலிகளினதும் வலையிற் சிக்கியே பலியெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் கொலையை மனித உரிமை மீறல்கள்ளாகவே கணிக்கப்படல் வேண்டும். அதை விடுத்தது,  புலம்பெயர் தமிழ்  இடதுசாரிகள் என தம்மை கூறுபவர்களும், தென்னிலங்கை முற்போக்குச் சக்திகளும் இவர்களைத்  தமிழ் தேசியப் போராளிகளாக அடையாளப்படுத்தி அஞ்சலிகள், செவ்வணக்க அறிக்கைகள் விடுகின்றனர். இப்போக்கானது மறுபடியும் தனிமனித பயங்கரவாதத்தை தமிழ் சமூக்கத்தில்  உயிர்பிக்க நினைக்கும், சிங்கள மற்றும் தமிழ்  இனவாதிகளின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதான  செயற்பாடாகவே அமையும் .   அன்று தமிழ் தேசிய சக்திகளாகத் தம்மை முன்னிறுத்திய, தமிழ் மேற்தட்டு வர்க்கத்தின் சொல்லாடல்களால் உணர்ச்சி வசப்பட்டு,    துரையப்பா கொலையிலிருந்து ஆரம்பித்த - மக்கள் போராட்டத்தை மறுதலித்து   முன்னெடுக்கப்பட்ட தனிமனித பயங்கரவாதம், எவ்வாறு, எங்கு முடிந்ததென்று அனைவரும் அறிவோம். இன்று மறுபடியும் அப்படி ஒரு நிலை வருவதைத்  தடுப்பது இலங்கையின் இடதுசாரிகளின் கையிலேயே உள்ளது. இதன் அடிபடையில் சரியான முறையில் மக்களை அணிதிரட்டி, இனவாத அரசியலுக்கு எதிரானா நடைமுறைப் போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் மறுபடியும் அழிவுகளைத் தடுக்க முடியும். உக்கிரமான- அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் இணைந்த போராட்டத்தின்  மூலம் மகிந்தாவின் பொனப்பர்ட் - குடும்ப அரசையும் அதன் இனவாத, பயங்கரவாத இராணுவ ஆட்சியையும் தூக்கி எரிய முடியும். இதற்கு வெளியில் இடது சாரிகளுக்கும், இலங்கை மக்களுக்கு வேறு எந்த வித தெரிவுமில்லை !