பாரிஸ் கூட்டத்தில் முன்னிலை சோஸலிசக் கட்சியின் பிரசாரச் செயலாளர் - தோழர் பூபுடு ஜெயக்கொட

 

கடந்த அரை நூற்றாண்டிற்கு மேற்பட்ட இனவாத அரசியலால், நாடு இனவாத சகதிக்குள் மூழ்கியுள்ளது. இதனால் எம்நாட்டின் இனப்பிரச்சினை தீர்வில்லா பிரச்சினையாகவே தொடர்கின்றது. இந்நிலையில் எம்மீதான அரசின் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், நாம் தமிழ்மக்கள் பிரச்சினைகளை, சிங்கள மக்கள் மத்தியில் நேர்மையாக எடுத்துச் சொல்லி வருகின்றோம். இலங்கை அரசு இன்று தமிழ்-முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள இன அடக்கு முறைகள், திட்டமிட்ட முறையில் அம்மக்ககளின் பிரதேசங்கள் மீது செய்துவரும் இனவொழிப்பு நடவடிக்கைகளை ஏன்தான் செய்கின்றது.? என்பதையும் விளக்கி வருகின்றோம்.

 

 

அரசு தன் குடும்ப அரசியலைத் தொடரவும், நம்நாட்டிற்குள் வந்தவண்ணமுள்ள நவதாராளவாதிகளைக் காப்பாற்றவுமே இனங்களுக்கிடையில் ஐக்கியத்தைகக் சீர்குலைத்து குரோதங்களை வளர்த்து வருகின்றது. இவ்வுண்மையை நாம் சமவுரிமை இயக்க அமைப்பின் மூலம் நாடு முழுவதும் விரிந்த பிரச்சார இயக்க நடவடிக்கை ஆக்கியுள்ளோம். இந்நடவடிக்கைகளுக்கு ஊடாகவே தமிழ் மக்கள் பிரச்சினைக்காக சிங்கள மக்களை சிந்தித்து செயற்படவும், அவர்களின் நியாயமான உரிமைகளுக்காக போராட வைக்கவும் முடியும். இப்படியானதொரு அணிவகுப்பின் மூலமே தமிழ் மக்களையும் அதன் பங்குதாரர்கள் ஆக்கவும் முடியும். சகல இனவாதங்களையும் கடந்த நிலைகொண்டு தமிழ்-சிங்கள மக்கள் மத்தியில் இவ்வேலைகளை முன்னெடுக்கும் இவ்வேளையில், எம்மையும் இவ்வரசு புலிகள் என்கின்றது. இவ்வாறு பாரிஸில் நடைபெற்ற ஏப்ரல் வீரர்களின் 43-வது நினைவு தினக கூட்டத்தில் முன்னிலை சோஸலிசக் கட்சியின் சார்பில் இலங்கையில் இருந்து வந்து கலந்து கொண்டு உரையாற்றிய தோழர் பூபுடு ஜெயக்கொட அவர்கள் குறிப்பிட்டார்கள்.

 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இன்று எம்நாட்டின் அரசியல் நிலைமையின் பாற்பட்டு 43-வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஏப்ரல் வீரர் போராட்டத்தின் சாதக-பாதகங்களைக் கணக்கில் எடுத்தும் எம் அரசியல் அமைப்பை நகர்த்த வேண்டிய சூழ்நிலையிலும் உள்ளோம். இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில், 53-ம் ஆண்டு கர்த்தால் அன்றிருந்த அரசையே ஆட்டங் காண வைத்ததுமல்லாமல், அரசின் செயற்பாட்டை முடக்கயதின் விளைவால், கடலில் நன்கூரம் இடப்பட்ட கப்பலிலேயே மந்திரிசபைக் கூட்டத்தை நடாத்தும் நிலையும் ஏற்படுத்தியது. இப்போர்ப்பட்டதொரு வல்லமை மிக்க சக்தியாக விளங்கிய இடதுசாரி இயக்கம், அதையடுத்த காலகட்டப் பகுதிகளில், பாராளுமன்ற சகதிக்குள் மூழ்கியதோடு மட்டுமல்லாமல், பேரினவாதிகளின் எடுப்பார் கைப்பிள்ளைகளுமாயினர். இவாகளின் இவ்வரலாறு இப்படியாகவே இன்று வரை நீடிக்கின்றது.

 

இப்பேர்ப்பட்ட 17-ஆண்டுகால இடதுசாரி இயக்க வீழ்ச்சியின் பின்னானதொரு, எழுசிச்சியாகவே ஏப்ரல் போராட்டம் ஏற்படுகின்றது. ஏப்ரல் வீரர்களின் போராட்டம் பாட்டாளி வர்க்கப் புரட்சியல்ல, இளைஞர் சக்தியின் வீறுகொண்டதொரு புரட்சிகர போராட்ட நடவடிக்கையாகும். பிசகற்ற தத்துவத்தின் பாற்பட்டு, மக்களின் அடித்தளம் கொண்டதொரு புரட்சியாக முன்னெடுக்கப் பட்டிருக்குமேயானால், அப்பரட்சி சந்தித்த பாரிய அழிவுகளையும், இழப்புகளையும் இல்லாதாக்கியிருக்க முடியும். இருந்தும் அன்றைய வரலாற்றுச் சமூகச் சூழலில் அதற்கிருந்த வரலாற்று பாத்திரத்தை குறைத்து மதிப்பிட முடியாது. நாட்டில் சமதர்ம ஆட்சியொன்றை உருவாக்கும் பொருட்டின் பாற்பட்டு, அதில் தம்மை இணைத்த ஏப்ரல் வீரர்களையும் அவர்தம் தியாகங்களையும் மதித்து, அவர்களுக்கு நாம் சிரம் தாழ்த்தியாக வேண்டும்.

 

மேற்கூறிய பட்டறிவுக்கூடான அனுபவங்களைப் பாடமாகப் பெற்றே, நாட்டில் எம் அரசியல் வேலைகளை முன்னெடுத்து வருகின்றோம். அன்றைய 71-ஏப்ரல் நிகழ்வுகளுக்கு இருந்த சூழல் இன்று எமது எம்நாட்டில் இல்லை. ஆனால் அடக்குமுறை வடிவங்கள் அப்படியே தான் உள்ளன. இன்றைய மகிந்த அரசானது தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல, நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கு எதிரான அரசுமாகும்.

 

சிங்கள மக்கள் தம் அத்தியாவசிய வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக வீதியல் இறங்கிப் போராடும் போது, அரசு ராணுவத்தை ஏவி சுட்டுத்தள்ளகின்றது. அரச காடைத்தனத்தின் உச்சகட்டத்தை எரிபொருள் விலையேற்றத்திற்காகவும், சுத்தமான குடிநீருக்காகப் போராடிய மக்களுக்கு கிடைத்ததை கண்கூடாகக் கண்டோம். அத்தோடு பல்கலைகக்கழக மாணவர்கள் தங்களுக்கு இல்லாதாக்கப்படும் கல்வி வசதியுடன் கூடிய ஏனையவற்றிற்காக போராடும் தொடர் நிகழ்வுகள் நாளாந்த செய்திகள் ஆகின்றன. எனவே ஒடுக்கபடும் சிங்கள மக்களும், அடக்கு முறைகளுக்கு உள்ளாகும் ஏனைய இன மக்களின் போராட்டங்களுடன் இணையும் போதே இவ் அரசையும் அதன் பயங்கரவாதத்தையும் முறியடிக்க முடியும் என்றார்.