தம் மழழை செல்வங்களை நினைத்தப்படி வைத்தியர்களாகவோ பொறியியலாளர்களாகவோ ஆக்கிட முடியாவிடினும் கனவேனும் காணக் கூடியதாகவுள்ளது. குறைந்த பட்ச கல்வி அறிவையேனும் பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்க கூடியதாக உள்ளது. இதற்கு காரணம் கல்வி இலவசமாக கிடைப்பதாகும். ஆனால் தொடர்ந்து நிலைமை இப்படியே இருக்க போவதில்லை. அரசு இது வரை இலவசமாக வழங்கி வந்த கல்வியை மெல்ல மெல்ல தனியார் கைகளில் ஒப்படைத்து வருகின்றது. எதிர் காலத்தில் பெற்றோர்களிடம் எவ்வளவு பணம் இருக்கின்றதோ அந்தளவிற்கு தான் பிள்ளைகள் கல்வி கற்க முடியும்என்ற நிலை உருவாகி வருகின்றது.

 

இதனை பெற்றோர்கள் தற்போதும் உணர ஆரம்பித்திருக்கின்றார்கள். வீட்டில் உயர்தரம், சாதாரணதரம் அல்லது புலமை பரீசில் பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்களுக்கு இது தொடர்பான நல்ல அனுபவம் இருக்கும். தனியார் வகுப்புக்களுக்கு சென்றால் தான் நல்ல பெறுபேறுகளை பெற முடியும் என்ற நிலை. மாதாமாதம் ஆயிரக்கணக்கில் மேலதிக வகுப்பு கட்டணங்களிற்காக செலிவழிக்க முடிந்தவர்களாலேயே மேற்படிப்பு பட்டபடிப்பு தொடர்பாக சிந்திக்க முடியும். இதனை தவிர பாடசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களும் அதிகம். தற்போது பாடசாலைகளில் பெற்றோர்கள் சிரமதான பணிகளிலும் ஈடுபட வேண்டியுள்ளது.

 

தற்போது பெற்றோர்களாக இருப்பவர்கள் மாணவர்களாக இருந்த போது காணப்பட்ட நிலைமைக்கும் தற்போதைய நிலைமைக்கும் பாரிய வித்தியாசங்கள் ஏற்ப்பட்டுள்ளன. முன்பு பாடசாலையில் சீருடைகள், பாடபுத்தகங்கள் என்பன இலவசமாக வழங்கப்பட்டன. உணவு நிவாரண அட்டைகள் வழங்கப்பட்டன. அரச பேரூந்துகளில் பயணிக்க பருவ சீட்டுக்கள் வழங்கப்பட்டன. பாடசாலைகளில் தவணைக் கட்டணமாக வருடாந்தம் சிறு தொகையே அறவிடப்பட்டது. ஆனால் இன்று நிலைமை வேறு. உணவு நிவாரண அட்டை நிறுத்தப்பட்டு இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பாடசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களிற்கு அளவே இல்லை.

 

இன்று பாடசாலைகளுக்கு வர்ணம் பூசுவது, பாடசாலை சூழலை சுத்தம் செய்வது, பாடசாலை காவலாளிக்கு சம்பளம் கொடுப்பது என பாடசாலையை நடத்தும் முழுபொறுப்பும் பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள், பாடசாலை மாணவர் சங்கங்கள் ஊடாக பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

பாடசாலையில் கற்பிக்கப்படுவது சரியில்லை என அனைவரும் மேலதிக வகுப்புக்களை தேடி செல்கின்றார்கள். பாடசாலை கல்வி பின்தள்ளப்பட்டு தனியார் மேலதிக வகுப்புக்கள் முதன்மையானதாக்கப்படுகின்றன. பாடசாலை ஆசிரியர்களை தவிர்த்து இன்று பிரபலமான தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் தோன்றியுள்ளனர். பாடசாலை ஆசிரியர்கள் மீதான நம்பிக்கையும் மரியாதையும் இல்லாது போயுள்ளது.

 

பாடசாலை பாடபுத்தகங்களிற்கு மேலதிகமாக பல புத்தகங்கள் கடைகளில் வாங்கச் சொல்லப்படுகின்றது. மொத்தத்தில் பிள்ளைகளுக்கு கல்வி அறிவை பெற்றுக் கொடுக்க அதிகளவிளான பணத்தினை செலவு செய்ய வேண்டியுள்ளது. இலவச கல்வி என்ற பெயர் இன்னும் பாவனையில் இருப்பதற்கு காரணம் பாடபுத்தகங்களும் பாடசாலை சீருடைகளும் இலவசமாக வழங்கப்படுவது மாத்திரமே ஆகும். அந்த இலவசங்களையும் இல்லாது செய்யும் திட்டங்கள் மெல்ல மெல்ல கொண்டுவரப்படுகின்றன. இதற்கு எதிராக "அரசாங்கம் பாட புத்தகங்களை பணத்திற்கு விற்க முயல்கிறது" என விமர்சனங்கள் கிளம்பி போது, "இல்லை,இல்லை நாம் ஒரு போதும் இலவச பாடபுத்தக விநியோகத்தினை நிறுத்த போவதில்லை, பாடசாலைகளில் இலவசமாக விநியோகிக்கும் அதே வேளை ஏனையோரும் சர்வதேச பாடசாலைகளில் கற்கும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் குறிப்பிட்டளவில், அரசாங்க பாடபுத்தகங்களை கடைகளில் பணத்திற்கு விற்பனை செய்ய போகின்றோமே ஒழிய இலவச பாடபுத்தக விநியோகத்தினை ஒருபோதும் நிறுத்தும் திட்டம்இல்லை" என அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

அத்துடன் எதிர்ப்பு கிளப்பிய எதிர்கட்சிகளும் இது விற்பனையாகாது என்று அந்த விடயத்தினை மறந்து விட்டன. மேலோட்டமாக பார்க்கும் போது சின்னதொரு விடயமாக தோன்றினாலும் இது பாரதூரமானதொரு விடயமாகும். காரணம் நடக்க போவது இது தான். அரசாங்கம் கடைகளில் பாடபுத்தகங்களை விநியோகிக்கும் அதேவேளை பாடசாலைகளில் இலவசமாக விநியோகப்பதினையும் நிறுத்தப்போவதில்லை. அரசாங்கம் பாடபுத்தக விநியோகிகத்தினை நிறுத்தினால் பாரிய எதிர்ப்புக்களை சந்திக்க நேரிடும். ஆகவே இலவச விநியோகம் நடக்கும் ஆனால் முன்னர் போல் அல்ல இரண்டு மூன்று அல்லது அதனை விட அதிகமான கால இடைவெளியில். சில நேரம் கடைகளுக்கு முன்னதாக விநியோகித்து ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் கடந்த பிறகு தாமதமாக பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படலாம். என்ன நடக்கும் பாடபுத்தகங்கள் ஒவ்வொரு வருடமும் விநியோகிக்கபடாவிடின் மாணவர்கள் பழைய புத்தகங்களை பயன்படுத்த நேரிடும். இதன்போது பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் கடைகளில் விற்பனையாகும் புதிய பாடபுத்தகங்களை வாங்கி பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். இது மாணவர்களிடையே கடுமையான தாழ்வு சிக்கலை உருவாக்கிடும். பின் ஏனைய மாணவர்களும் தன் பெற்றோரை நச்சரிக்க ஆரம்பித்து விடுவார்கள். பாசமிகு பெற்றோர்கள் கடன் வாங்கியேனும் தன் பிள்ளைகளுக்கு புதிய பாடநூல்களை வாங்கி கொடுத்து விடுவார்கள். மறுபுறம் தற்போது பெற்றோர்கள் தன் பிள்ளைகளை மூன்றாம் தவணை விடுமுறையிலேயே அடுத்த வருடம் கற்க வேண்டிய பாடங்களை கற்பதற்காகவும் பாடசாலைகளில் கற்பிக்க முன் பிள்ளைகளுக்கு கற்பித்து பிள்ளைகளை திறமையாளர்களாக்கிட வேண்டும் என்ற ஆவலிலும் மேலதிக வகுப்புகளிற்கு அனுப்ப ஆரம்பித்து விடுகின்றனர். இந்த நிலையில் பாடபுத்தகங்கள் கடையில் கிடைக்கும் ஆயின் எப்பாடு பட்டாலும் அதனை வாங்கிகொடுத்து விடுவார்கள் நம் பெற்றோர்கள். காலபோக்கில் இது சாதாரணவிடயமாகிட இலவச பாடபுத்தக விநியோகமும் நிறுத்தப்படும். அப்போது அது ஒரு பிரச்சினையாகவே தோன்றாது. ஆனால் நடுத்தர வர்க்கத்திற்கு இந்த நிலையை சமாளிக்க கூடியதாகவிருப்பினும் தொழிலாளர்கள், மீனவர்கள், கூலி விவசாயிகளுக்கு இது பெரும் நெருக்கடியையே தரும்.

 

இந்த விடயமே கிராம சேவையாளர்கள் மூலம் சீருடை விநியோகிக்கப்பட்டதின் மூலமும் முயற்சிக்கப்பட்டது. அத்தனை சவால்களையும் சிரமங்களையும் சுமந்து பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்றார்கள் பெற்றோர்கள். ஆனால் இன்று பரீட்சை வினாத்தாள்கள் பிழையாக தயாரிக்கப்படுகின்றன. விடைத்தாள் திருத்துவதில் குழறுப்படிகள் நடக்கின்றன. பாடபுத்தகங்களில் பிழை விடப்படுகின்றன. தொடர்ச்சியான இப்படியான குளறுப்படிகள் கல்வியின் தரத்தினை வீழ்ச்சியடைய செய்துள்ளதோடு மாணவர்கள் கல்வியின் மீது கொண்டிருந்த நம்பிக்கையும் ஆர்வமும் இழக்க செய்யப்பட்டுள்ளது.

 

இதற்கான காரணம் என்ன? காரணம் மிக தெளிவானது. அரசாங்கம் மக்களுக்கு கல்வியை வழங்கும் பொறுப்பிலிருந்து விலகி அந்த பொறுப்பினை தனியார் கைகளில் ஒப்படைத்திடும் திட்டத்தினை மெல்ல மெல்ல அரங்கேற்றி வருகின்றது. இலவச கல்வியானது சூட்சமான முறையில் தனியார் மயமாகும் இடைமாறு காலகட்டத்தின் நெருக்கடிகள் தான் இவை. இடைமாறுகால கட்டமே இத்தனை நெருக்கடிகளை தருகிறது என்றால், இலவச கல்வி முற்றுமுழுதாக தனியார்மயமானால் ஏற்படப்போகும் நிலையை அனுமானிக்க கூடியதாகவிருக்கும். அரசாங்கம் ஏன் கல்வியை தனியார் மயமாக்கிறது என்ற வினா எழலாம் உங்களுக்கு. அரசாங்கம் இதற்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களில் அதிகமானவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்கின்றார்கள். இலங்கையில் தனியார் கல்வி நிறுவனங்களை அமைத்தால் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்கும் மாணவர்கள் செலவழிக்கும் பணத்தினை சேமிக்கலாம், மாணவர்களுக்கு கல்வி கற்க உள்நாட்டிலே அதிக வாய்ப்பும் தெரிவும் கிடைக்கும், வெளிநாட்டு மாணவர்களை இலங்கையில் கல்வியை தொடர வரவழைப்பதின் மூலம் அந்நிய செவவானியை உழைக்க முடியும் என மூன்று காரணங்களை கூறுகின்றது.

 

உண்மையில் வெளிநாடுகளுக்கு இந்நாட்டின் சாதாரண குடும்ப பிள்ளைகள் சென்று படிப்பதில்லை. நாட்டின் செல்வந்தர்களின் பிள்ளைகளே வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்கின்றார்கள். இவர்கள் வெளிநாடுகளின் சிறந்த பல்கலைக்கழகங்களில் கௌரவத்திற்காக சென்று படிப்பவர்கள். அதனை விட சாதாரண குடும்பங்களை சேர்ந்தவர்கள் தொழில் செய்வதற்காகவே, தொழில் விசா கிடைக்காததினால் இலகுவாக பெற கூடிய மாணவர் விசாவில் சென்று பகுதி நேரமாக படித்துக் கொண்டு தொழில் செய்கின்றார்கள்.

 

அதனை விட கணிசமான அளவில் படிப்பதற்காக செல்லும் மாண வர்கள் அந்நாடுகளில் பகுதிநேர தொழில் செய்தே படித்து வருகின்றார்கள். இதன் படி பார்த்தால் வெளிநாடு செல்லும் மாணவர்களை என்ன செய்தாலும் தடுத்து நிறுத்திட முடியாது என்பதுடன் அவ்வாறு செல்பவர்களினால் குறிப்பிட்டளவு பணம் நாட்டிற்கு வருகிறது என்பதுவே உண்மையானதாகும்.

 

அடுத்ததாக தனியார் கல்வி மூலம் அனைவருக்கும் விருமபியதினை தெரிவு செய்து கற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது முற்றுமுழுதான பொய் பிரச்சாரம் ஆகும்.

 

உதாரணத்திற்கு தற்போது மாலயே என்னும் இடத்தில் தனியார் மருத்துவ கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மருத்துவ பட்டபடிப்பிற்கான கட்டணம் அறுபத்தைந்து இலட்ச ரூபாய்களாகும். அத்துடன் ஒரு மாணவனுக்கான மாதாந்த செலவு ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்களாகும். இந்த நாட்டில் எத்தனை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இவ்வாறான தொகையை செலவு செய்து மருத்துவ படிப்பினை பெற்று கொடுக்க கூடியவர்களாக இருக்கின்றனர்? கல்வி தனியார் கைகளில் கிடைத்தால் அது பணம் படைத்தவர்களுக்கு மட்டும் உரியதானதொன்றாகிவிடும்.

 

அப்படியாயின் அரசாங்கம் கல்வியை தனியார் மயப்படுத்துவதில் விடாபிடியாக நிற்பதன் காரணம் என்ன? எம் நாட்டு அரசாங்கத்திற்கு அதிகளவு கடன்கொடுத்து இயக்குவது உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமுமே ஆகும். இவை இலங்கைக்கு கடன் வழங்கும் போது மக்களுக்கான நலன்புரி சேவைகளை வழங்குவதற்கு மேற்கொள்ளும் செலவீனங்களை குறைத்திடுமாறு நிபந்தனை விதிக்கின்றனர். காரணம் இந்த உலக நிறுவனங்களின் பின்னால் இருப்பது உலக ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளே ஆகும். அவர்கள் இந்நிறுவனங்களினூடாக எம்போன்ற நாடுகளுக்கு கடன் கொடுப்பதன் நோக்கம் அந்நாடுகள் எம்நாட்டில் முதலீடுகளை செய்து வருமான மீட்டுவதற்கான உட்கட்டமைப்புக்களை ஏற்படுத்துவதற்கே ஆகும். சுய உற்பத்தி பொருளாதாரம் இல்லாத ஒரு நாட்டு அரசினால் மக்களுக்கு நலன்புரி சேவைகளை இலவசமாக வழங்கி கொண்டு உட்கட்டமைப்புக்களை ஏற்படுத்த முடியாது. அதற்கு பதிலாக அரசின் செலவீனங்களை குறைத்து கிடைக்கும் கடனில் உட்கட்டமைப்புக்களை விருத்தி செய்கிறது. உலக வங்கியினதும், சர்வதேச நாணய நிதியத்தினதும் நிபந்தனையையும் தன் தாரக மந்திரமாக கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது, ஏற்கனவே போக்குவரத்து சேவையும் சுகாதார சேவையும் தனியார் மயமாக்கப்பட்டுவிட்டது. அடுத்தது கல்வித்துறை தான்.

 

அதன் அடிப்படையில் தான் இவ்வாண்டிற்கான கல்விக்கான நிதி ஓதுக்கீடாக 1.1மூ எனும் மிககுறைந்த தொகையை ஒதுக்கியது தற்போதைய அரசாங்கம். உலகளவில் கல்விக்கு தேசிய உற்பத்தி வருமானத்தில் 6% நிதி ஒதுக்கப்படல் வேண்டும் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையும் அதில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்தளவு நிதி ஒதுக்கப்பட்டது இல்லை. கடந்த வருடம் 2.2% ஒதுக்கப்பட்டது. அதனை இவ்வருடம் 1.1% குறைத்தது அரசாங்கம். குறைத்ததும் இல்லாமல் நிதியமைச்சரான சனாதிபதி தன் வரவு செலவு திட்ட உரையில் அரசாங்கம் ஓதுக்கும் நிதியையும் பெற்றோர்கள் செலவு செய்யும் நிதியையும் இராணுவத்திற்கு கல்வி வழங்க ஒதுக்கபடும் நிதியையும் சேர்த்து கல்விக்கு நாட்டில் 5.5% செலவு செய்யப்படுவதாக கணக்கு காட்டி எல்லோர் தலையிலும் மிளகாய் அரைத்தார்.

 

நம் நாட்டின் சனாதிபதிக்கு மட்டும் தான் இப்படி பொய் கூற முடியும். இவ்வாறு கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படும் போது அரசு கல்வியை வழங்கும் பொறுப்பிலிருந்து விலகி தனியாரிடம் கல்வியை வழங்கும் பொறுப்பினை ஒப்படைக்க முயல்வதோடு ஓதுக்கீட்டை இடைவெட்டுவதினால் துண்டு விழும் தொகையினை சுமக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களிடம் சுமத்தப்படுகிறது. கல்வி தனியார் மயமாக்கப்படும் போது அரச பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் தற்போது தனியார் போக்குவரத்து சேவையின் முன் அரச போக்குவரத்து சேவை அடைந்திருக்கும் நிலைக்கே சீரழிந்து செயலிழந்து செல்லும்.

 

கடந்த வருடங்களில் ஒரு கிழமைக்கு ஒன்று என மொத்தம் 350 பாடசாலைகள் இழுத்து மூடப்பட்டுள்ளமையானது தனியார் மயமாக்கலின் முன் இலவச கல்வியின் எதிர்கால நிலையை கட்டியம் கூறி நிற்கின்றது. தற்போது சபிரி பாடசாலை திட்டம் எனும் திட்டத்தை நடைமுறைபடுத்தி வரும் அரசாங்கம் அதன் மூலம் 9000 அதிகமான பாடசாலைகளில் வெறும் 3000 பாட சாலைகளை தேர்ந்தெடுத்து அபிவிருத்தி செய்கின்றது. பாடசாலை அபிவிருத்திக்கு வேறு நிதி ஒதுக்கீடுகள் இல்லாத நிலையில் ஏனைய 6000 கும் அதிகமான பாடசாலைகள் நிர்கதியாய் விடப்பட போகின்றன. தற்போது நடப்பது போல அந்த பாடசாலைகளை பெற்றோர்களும் பழைய மாணவர்களும் பொறுப்பேற்று நடத்-தா விட்டால் அவை கட்டம் கட்டமாக மூடப்படும்.

 

எதிர்காலத்தில் உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கின்றதோ அந்தளவிற்கு தான் உங்கள் பிள்ளைகள் கல்வியை பெற முடியும். அப்படியே கிடைத்தாலும் அது சமத்துவமாக கிடைக்க போவதில்லை. தற்போது சந்தையில் அசல் ஜபோன்கள் அதிக விலையிலும் அதே போன்ற நகல் சீன அழைபேசிகள் குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்படுவது போல கல்வி துறையிலும் இவ்வாறான பாடநெறிகள் விற்பனை செய்யப்படும். இந்த நிலை கல்வி சமத்துவத்தை ஒழித்து பாரிய ஏற்ற தாழ்வுகளை உருவாக்குவதோடு கல்வியின் தரத்தினையும் குறைத்திடும்.

 

இறுதியாக கல்வி அனைவருக்குமான சமூக உரிமை என்ற நிலையில் இருந்து பணம் படைத்தவர்களுக்கான வரப்பிரசாதமாக மாறிடும். இந்த நெருக்கடியின் முன் அனைவருக்கும் இரண்டு தெரிவுகள் தான் இருக்கின்றன. முதலாவது தெரிவு. பணம் உழைப்பது. மேலதிக பகுதி நேர வேலை செய்வது அல்லது இரண்டு தொழில்கள் செய்வது குடும்பம் பிள்ளைகள் உறவினர்கள் என தனிபட்ட வாழ்க்கையின் முக்கால் வாசியை தியாகம் செய்து விட்டு பிள்ளைகளின் கல்விக்காக உழைப்பது. அரச துறையில் தனியார்துறையில் உயர்தொழிலில் இருப்பவர்கள் இவ்வாறு ஒரளவிற்கு ஈடுகொடுக்க முடிந்தாலும். முன்பு கூறியது போல கூலி விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் தம் பிள்ளைகளை இந்த போட்டியில் இருந்து விலக்கி கல்வியை இடைநிறுத்தி வேலைக்கு அனுப்பவே நேரிடும் அல்லது களவெடுக்க வேண்டும், லஞ்சம் பெற வேண்டும் அல்லது மோசடி செய்திட வேண்டும். அண்மையில் புத்தளம் பகுதியில் ஒரு மாணவி பாடசாலை கட்டணம் செலுத்த தேங்காய் திருடிய சம்பவத்தினை கொஞ்சம் நினைவுபடுத்தி கொள்ளுங்கள். எப்படியாயினும் இந்த தெரிவில் இறுதியாக எஞ்சுவது ஏமாற்றமும் விரக்தியும் தான்.

 

இரண்டாவது தெரிவு கல்வி தனியார் மயமாக்கலை எதிர்த்து இலவச கல்வியை வென்றெடுக்கும் போராட்டத்தை நடத்தி கல்வியை சமூக உரிமையாய் வென்றெடுத்தல். மாணவர்கள் கடந்த 30 வருடங்களாக பல்வேறு தியாகங்களை செய்து போராடி வருகின்றார்கள். அவர்களது போராட்டம் குறிப்பிட்ட நிகழ்வுகள் சார்ந்ததாகவே அமைந்திருந்தது. அந்தந்த காலப்பகுதியில் ஏற்படும் நெருக்கடிகளை எதிர்த்து போராடினார்கள் ஆனால் அந்த போராட்டங்கள் முழுமையானதாக அமையவில்லை. ஆனால் மாணவர் போராட்டங்களே இலவச கல்வியை அழிவிலிருந்து பாதுகாத்து வந்தது. ஆனால் இனியும் மாணவர்களால் அது தொடர்ந்து சாத்தியமில்லை. மாணவர்கள் மாணவர் பருவத்தில் இலவச கல்விக்காக போராடுகின்றார்கள். அதன் பின் அவர்கள் தொழிலிற்கு சென்ற பின் அந்த போராட்ட த்தை கைவிட்டு தன் பிள்ளைகளுக்கு கல்வியை பெற்று கொடுப்பதற்கான பொருளாதார போராட்டத்தில் இறங்கி விடுகின்றார்கள். இது மாணவர்களின் வர்க்க இயல்புடன் தொடர்புடையது.

 

உண்மையில் பாதிக்கப்டும் பெற்றோர்களாகிய உழைக்கும் தொழிலாளர் வர்க்கம் வேடிக்கை பார்த்து கொண்டிருருப்து தான் போராட்ட த்தினை முழுமையடைய செய்யாமல் இருக்கின்றது. போராடும் மாணவர்களும் பாதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களும் கூட்டணி அமைத்து போராட வேண்டும். அதுவே உண்மையான திசையில் போராட்டத்தினை தொடர்ச்சியாக கொண்டு செல்வதற்கான வழி. எனவே மாணவர்களும் தொழிலாளர்களும் கரம் கோர்த்து இலவச கல்வியை வென்றெடுக்க போராடுவதே எம்முன் இருக்கும் ஒரே தெரிவாகும்.