2013 பொதுவில் இலங்கையில் உள்ள அனைத்து உழைக்கும் மக்களும் அரசியல், பொருளாதார ரீதியில் பாரிய சவால்களுக்கு உட்பட்ட ஆண்டாகும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள், சுத்தமான நீர் வழங்க கோரிய போராட்டங்கள், ஆட்கடத்தல்கள் படுகொலைகளையும் நிறுத்தவும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான என்ற கோரிக்கையுடனான போராட்டங்கள் ஆகியன மக்களின் எதிர்ப்பை அரசியல் அதிகார மையத்துக்கு வெளிப்படுத்தி நின்றன. எனினும் மக்களின் இந்த போராட்டங்கள் எவ்விதத்திலும் வெளிப்படாத, பிரதிபளிக்காத பிரதேசமாக மலையகம் காணப்பட்டது. மலையக மக்கள் முகம்கொடுக்கும் பொதுப் பிரச்சினைகளுக்கும் (பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு, மனித உரிமை மீறல்கள், தனியார்மயம், இலஞ்ச ஊழல் அதிகரிப்பு) தமக்கே உரித்தான விசேட பிரச்சினைகளுக்கும் (சம்பள கூட்டு ஒப்பந்தம், வீடு, காணி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு) குரல் கொடுக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? ஏனைய பிரஜைகளைவிட பொதுப் பிரச்சினைகளில் அதிகம் பாதிப்பவர்களாகவும் விசேடமாக பாரபட்சங்களுக்கும் உள்ளாக்கியுள்ள நிலையில் மலையக மக்களின் மௌனம் ஆழமாக பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மலையக அரசியல் தலைமைகள் பொதுவில் அரசாங்கத்திற்குச் சார்பாக இருப்பதனால் அரசாங்கத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்ற மக்களின் எண்ணத்தினால் இந்த மௌனம் நிலவுகின்றது என்றோ அல்லது மலையக மக்களை சரியாக வழிநடத்த மாற்று கொள்கையுடனான வேலைத்திட்ட நடைமுறையுடனுமான அரசியல் சக்தி இன்மையினாலே என்று நோகுவது கோளாறுகளைக் கொண்டதாகும்.

 

 

மலைகயத்தில் மைய நீரோட்டத்தில் உள்ள அரசியல் சக்திகள் அனைத்தும் அரசாங்கத்தை சார்ந்து நிற்கின்றன.  அரசாங்கத்தைப் சார்ந்து நிற்பவைகளுக்கிடையிலான வாக்குப் போட்டிகளே தேர்தல் காலத்தில் ஒரே ஒரு ‘போராட்டமாக’ நிற்கின்றது.  இந்த போராட்டத்தில் யார் வெற்றி பெற்றலும் செயற்பாடுகளில் அரசியல் நடைமுறையில் பாரிய வேறுபாடுகள் இல்லை. சமரச அரசியல் என்ற மக்கள் உரிமையை சமரசம் செய்யும் அரசியல் பல்வேறு பெயர்களினால் முன்னெடுக்கப்படுகிறது. இன்று அதன் தொடர்ச்சியாக அபிவிருத்தி அரசியல் என்ற பெயரில் அது நிலவுகிறது. அத்தோடு அரசாங்க அதிகார மையத்துடன் நாங்களே அதிக உறவையும் செல்வாக்கையும் வைத்திருக்கின்றோம் என்பதனை வெளிப்படுத்தும் ஆர்வமும் இந்த மைய நீரோட்ட அரசியல் சக்திகளிடம் காணப்படுகிறது.

 


எனவே, மைய நீரோட்டத்தில் உள்ள அரசியல் சக்திகள் தங்கள் தேர்தல் மூலமான வெற்றியின் பலத்தை கொண்டு மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் நிலைநாட்டவேண்டும் என்ற அடிப்படையிலேயே இயங்கி வருகின்றன. இந்த அணுகுமுறையில் இவர்களுக்கிடையே மாற்றங்கள் இல்லை. இந்த கருத்து ஜனநாயக வழிமுறை என கூறப்பட்டாலும் அது மக்களை அரசியலில் இருந்து நீக்குவதற்கும் மறுபுரமாக மக்களை ஒடுக்குவதற்கும் சாதகமாக உள்ளமையை காணத்தவறக் கூடாது. நாங்களே மக்களின் பிரதிநிதி என்று கூறுபவர்கள் ஒரு கூறிகொள்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருந்த வரலாறு இல்லை. மக்களின் பிரதிநிதிகள் என்பது மக்கள் எவ்வளவு தூரம் அரசியல் செயற்பாடுகளில் இணைந்துள்ளார்கள் அரசியல் தீர்மானங்களில் பங்குபற்றுகிறார்கள் என்பதை வைத்தே அளவிடக்கூடியதாகும். மலையகத்தில் இந்த அளவிட்டை கொண்டு நோக்கினால் இலங்கையில் ஏனைய மக்களை விட அரசியலில் இருந்து நீக்கம் பெற்றவர்களாகவே மலையக மக்கள் காணப்படுகின்றார்கள்.


மைய நீரோட்ட அரசியல் சக்திகள் தேர்தல் காலத்தில் ஒரு கட்சியின் செயற்பாடுகளை விமர்சிப்பதன் மூலம் அவர்கள் தங்களை மாற்று அரசியல் சக்தி என்று காட்ட முனைகின்றபோதும் அவர்கள் உண்மையில் பதிலீடுகளே. இவர்கள் உடனடியாகவோ அல்லது சற்று காலம் தாழ்த்தியோ தாங்கள் பதிலீடுகளே என்பதை வெளிப்படுத்திவிடுவர். இதனை மலையக அரசியல் வரலாறு மலையக மக்களுக்கு உணர்த்தி வந்துள்ளது.  அப்படியானால் மாற்று அரசியல் சக்தி என்றால் என்ன? மக்களை மையப்படுத்தியதும் மக்கள் ஊக்கத்துடன் பங்குபற்றல் இடம்பெறுகின்ற அரசியலாகும். இங்கு மக்கள் விழிப்புணர்வுட்டப்பட்டு அரசியலில் அணிதிரட்டப்படுவது அடிப்படையான அம்சமாகும். இங்கு மக்கள் சொல்லுகின்றவற்றை கேட்டு கொண்டிருக்கும்  முனைப்பற்ற மக்கள் கூட்டத்திற்கு பதிலாக உரையாடலை மேற்கொள்ளும் மக்களாக மாற்றப்படும் பண்பாடு காணப்படும். இவ்வாறான மாற்று அரசியலுக்கான முனைப்பும் தேவையும் மலையக இலக்கியப் பரப்பில் தொடர்ந்து நிலைபெற்று வந்துள்ளமையை மறுக்க முடியாது. அத்தோடு இது மலையகத்தில் பல்வேறு தரப்பினரால் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன.

 

நடேசய்யர் முதற்கொண்டு அந்த அரசியல் பாரம்பரிய ஜனநாயகவாதிகளின் செயற்பாடுகள், இடதுசாரி அரசியல் சக்திகள் என தொடர்கிறது. இன்று மலையகத்தில் மாற்று சக்திகளாக அரசியல் தொழிற்சங்க அமைப்புகள், சில தனிநபர்கள், புத்திஜீவிகள், இலக்கியவாதிகள், ஆசிரியர்கள் இருந்து வருகின்றன.  இவர்கள் மாற்று குரல்களாக பல மட்டங்களில் ஒலித்துவருகின்றன.  இவர்களுக்கிடையில் ஒரு ஐக்கியப்பட்ட வேலைத்திட்டம் ஒன்று இல்லாத போதும் இவர்களின் குரல்கள் ஊடகங்களில் ஒலி;ப்பதன் வாயிலாக மக்களின் எதிர்பார்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை.  மலையகத்தில் பதிலீட்டு தலைமைகள் அனைத்தும் மக்கள் நலன்சார் விடயங்களுக்கு உதட்டளவிலேனும் இன்று முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணமாக இவர்களின் குரல் காரணமாக அமைந்துள்ளது.  தவிர்க்க முடியாமல் மக்களின் உரிமைகளையும் ஏதோ ஒரு அடிப்படையில் பேசுவதற்கு அவர்கள் நிற்பந்திக்கப்பட்டுள்ளனர்.  இதனை மாற்று சக்திகளுக்கு கிடைத் வெற்றி என கொள்வதில் சிக்கல் உண்டு.  இது ஆதிக்க, பதிலீடு அரசியல் சக்திகளின் பிடி மக்களிடத்தில் நிலவுவதனை உறுதி செய்துள்ளமையை மாற்று சக்திகள் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.


இந்த பின்னணியில் மாற்று அரசியல் சக்திகள் அரசியல் ரீதியாக வலுப்பெற வேண்டிய அவசரத் தேவைக் காணப்படுகிறது. இதற்கு மாற்று அரசியல் சக்திகளிடையே ஐக்கியமும் மக்கள் மையப்படுத்தப்பட்ட நடைமுறையும் (practice) தவிர்க்க முடியாதது. ஒரு பொது உடன்பாடுகளின் அடிப்படையில் மாற்றுச் சக்திகள் ஐக்கியப்படாத நிலையில் அது சலகை அரசியலுக்கும் சமரச அரசியலுக்கும் பண்பாட்டுச் சீரழிவுகளுக்கும் மலைய மக்கள் தொடர்ந்தும் இழுத்துச் செல்லப்படுவதனையும் தடுக்கவியலாது.

 

மலையகத்தில் இருந்து - விஜயகுமார்