பாட்டாளி வர்க்க சக்திகள் அரசியற் செயல்தளத்தில் தீர்மானகரமாகத் தலையிடுகின்ற காலத்தில், சுயநிர்ணயம் தொடர்பான இன்றைய பொதுப்புரிதல் அபத்தமாகிவிடுகின்றது. தேசிய இனம் என்ற சொல் பலவித அர்த்தம் கொண்டதாக, முரணாக, முரண்பாட்டை தோற்றுவிப்பதாக இருப்பதால், இது பற்றிய அரசியற் தெளிவு இன்று அவசியமானது. மார்க்சிய லெனினிய மூல நூல்கள் தேசிய இனம் என்ற பதத்தை, தேசங்கள் - தேசிய இனங்கள் - தேசிய சமுகங்கள் - இனக்குழுக்களை குறிக்கவும், இதனடிப்படையில் தனிநபர்களின் தோற்றுவாயை வரையறுப்பதற்கும், தேசிய உறவுகளை விளக்கவும், சிறிய தேசிய பிரிவுகள், சிறுபான்மை தேசிய பிரிவுகள் முதல் மக்களுக்கு இடையிலான உறவுகளை குறிக்கவும் கூட பயன்படுத்தப்பட்டுள்ளது. தேசிய இனம் என்ற சொல், ஒரே அர்த்தத்தைக் கொண்டு பயன்படுத்தப்படவில்லை. பல அர்த்தங்கள் கொடுக்கக் கூடியது. ஒரே அர்த்தம் கொண்டு அணுகினால், ஒன்றையொன்று முரண்படுத்தி விடும். இனங்காட்டக் கூடிய சிறப்பான இயல்புகள் மற்றும் சிறப்பு அம்சங்களுக்குரியதே தேசிய இனம் என்ற சொல்.

தேசிய இனம் என்ற சொல்லின் அரசியல் உள்ளடக்கத்தில் உள்ள குறிப்பான வேறுபாட்டை வேறுபடுத்திப் பார்க்காமல், சுயநிர்ணயம் என்ற சொல்லை பொத்தாம் பொதுவில் பயன்படுத்தும் போக்கு, அரசியல் செயற்பாட்டுத் தளத்தை மக்களுக்கு எதிரானதாக்கி விடுகின்றது.

உதாரணமாக கடந்த காலத்தில் இலங்கையில் நிலவிய இரண்டு பாசிச போக்குக்கு எதிரான அரசியல் சூழலில், "ஜனநாயகம்" என்ற சொல் செயல்தந்திர ரீதியாக பொத்தாம் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது. அப்போது "ஜனநாயகம்" என்பது புலியெதிர்ப்பாக, அரச சார்பானதாக, மக்களின் ஜனநாயகத்தை மீட்பதாக .. இன்னும் இன்னும் பல அர்த்தம் கொண்ட வரையறையுடன், ஒன்றுக்கு ஒன்று முரணானதாகவும் கூட அர்த்தப்படுத்திக் கொண்டு இயங்கியது.

இன்று இரு பாசிசத்துக்கு பதில் ஒரு பாசிசம் உள்ள நிலையில், "ஜனநாயகம்" என்ற பதம் வேறு பல அர்த்தத்தை கொண்டதாக வெளிப்படுகின்றது. ஆம், அது பாசிசத்துக்கு எதிரான ஜனநாயகத்தைக் கோருகின்றது. அதே நேரம் ஜனநாயகத்துக்கு மற்றொரு அரசியல் பரிணாமம் உண்டு. "ஜனநாயகம்" என்பது வர்க்க அமைப்பை பேனுகின்றதும், சுரண்டும் உரிமையை அடிப்படையாகக் கொண்தான அரசியல் எல்லைக்கு உட்பட்டது. இந்த வர்க்க அடிப்படையில் "ஜனநாயக" மறுப்பை ஆதாரமாகக் கொண்டது. வர்க்க அமைப்பு தகர்கின்ற போது "ஜனநாயகம்" அர்த்தம் இழந்துவிடும்;. அதாவது அனைவருக்கும் அனைத்து உரிமைகள் உள்ள போது, "ஜனநாயகம்" கோரிக்கையாகவோ முன்னிறுத்தும் ஒரு விடையமாகவோ இருக்காது. ஆக அனைவருக்கும் "ஜனநாயகம்" இருப்பின், "ஜனநாயகம்" என்பது இன்றைய வர்க்க அரசியல் உள்ளடக்கத்தை இழந்து அர்த்தமிழந்துவிடும்;. வர்க்க அமைப்பு இருக்கும் வரை "ஜனநாயகமும்", "ஜனநாயக" மறுப்பும் இருக்கும்.

இந்த வகையில் செயல்தந்திர ரீதியாக சுயநிர்ணயம் என்ற பதமும், பொத்தாம் பொதுவாக பயன்படுத்தப்பட்டது. எல்லாம் தேசிய இனம் என்பதால், அந்த பொது வரையறைக்குள் சுயநிர்ணயம் என்ற அரசியல் உள்ளடக்கமும் சிதைக்கப்பட்டு இருக்கின்றது. எல்லாம் தேசிய இனமாக இருக்க முடியும், ஆனால் அவை தேசமாக இருக்க முடியாது. இதனால் எல்லா தேசிய இனமும் சுயநிர்ணயத்தைக் கொண்டு இருக்க முடியாது. தேசங்கள் மட்டும் தான் சுயநிர்ணயத்தை கொண்டு இருக்க முடியும். தேசிய இனங்கள் - தேசியக் குழுக்கள் - இனக்குழுக்கள், சிறுபான்மை தேசிய இனங்கள் சுயநிர்ணயத்தை கொண்டு இருக்க முடியாது.

இதன் அர்த்தம் தேசங்கள் மட்டும் தான் தனியாக வாழக் கூடியதாக, தேசிய இனம் என்ற வரையறையை கடந்து தேசமாகவும் இருக்கின்றது. தேசிய இனங்களாக இருப்பவை அனைத்தும், தேசமாக இருப்பதில்லை என்பது தான் இதன் அர்த்தம். தேசமாக இருக்க முடியாதவைக்கு சுயநிர்ணயம் என்பது, எதார்த்தத்தை மறுப்பதாகும். எதார்த்தம் சார்ந்து அரசியல் உள்ளடக்தில் நின்று போராடுவதை மறுப்பதாகும்.

எது எதார்த்தமான சமூக பொருளாதாரமாக உள்ளதோ அதை சரியாக புரிந்து கொண்டால் தான், சமூக மாற்றங்களுக்கான போராட்டமும் சாத்தியமாகும். சொற்களை மாற்றுவதன் மூலம், சொற்களை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சொல்லுக்குரிய உள்ளடக்கத்தை மாற்றிவிட முடியாது. சொல்லை மாற்றுவதை புரட்சியாக கற்பிப்பது எவ்வளவு கற்பிதமோ (அதாவது சொல்லை மாற்றுவதன் மூலம் மாற்றம் நிகழ்வதாக நம்பும் கற்பிதம்), அதே போல் தேசமல்லாத தேசிய இனங்களுக்கு சுயநிர்ணயம் உண்டு என்று கூறுவது அரசியல் அபத்தமாகும்;.

தேசங்களுக்கே சுயநிர்ணயம், தேசிய இனங்களுக்கு அல்ல. இது தான் மார்க்சிய லெனினியம்.

இலங்கையில் தமிழ்மக்களின் போராட்டத்தை வெறும் தேசிய இன முரண்பாடாக குறுக்கிவிட்ட தவறு, சுயநிர்ணயம் பற்றிய தவறான அரசியல் விளக்கங்களுக்கு தொடர்ந்து அடிப்படையாகயுள்ளது. இலங்கை தேசியத்துக்குள்ளான இன முரண்பாடா அல்லது இரண்டு தேசங்களுக்குரிய முரண்பாடா இலங்கையில் நிலவுகின்றது?

லெனின் "தேசங்களிடையில் முழு சமத்துவத்தை ஏற்படுத்துவதோடு நில்லாமல் ஒடுக்கப்பட்ட தேசங்களின் சுயநிர்ணய உரிமை, அதாவது தடையேதுமில்லாமல் சுதந்திரமாக அரசியல் ரீதியில் பிரியும் உரிமை நிலவும் படியும் செய்யவேண்டும்." என்றார். இங்கு "தேசங்களின் சுயநிர்ணய உரிமையை" ஒழிய, "தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை'யை லெனின் முன்வைக்கவில்லை. ஆனால் இரண்டையும் ஒன்றாக்கிய தவறு, பொதுவான அரசியல் தளத்தில் காணப்படுகின்றது. இது மட்டுமல்ல தமிழ்மொழி பெயர்ப்பில் உள்ள லெனின் நூல்களிலும் கூட, இந்தத் தவறு காணப்படுகின்றது. இரண்டு விதமான தமிழ் மொழி பெயர்ப்பு இன்று காணப்படுகின்றது. லெனின் மூல நூல்கள் "தேசங்களின் சுயநிர்ணய உரிமையை" பற்றி பேசுகின்றதே ஓழிய, "தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை' பற்றி பேசவில்லை. இந்த வகையில் அடிப்படையான தேடுதலை, விவாதப் புள்ளியை இக்கட்டுரை தொடங்கி வைக்கின்றது.

இலங்கையில் இரண்டு தேசங்கள் இருக்கின்றது. தமிழ் - சிங்களம் என்ற தேசிய இனங்கள் சார்ந்த இரண்டு தேசங்கள் இருக்கின்றன. முஸ்லிம் என்ற தேசிய இனமும், மலையகத் தமிழ் இனம் என்ற தேசிய இனக் குழு அல்லது இனக் குழுவும் (?) காணப்படுகின்றது. இதைவிட வேறாக செறிந்து வாழும் முஸ்லிம் தேசிய இனப்பகுதியுடன் தொடர்பற்ற முஸ்லிம் தேசிய இனக் குழு அல்லது இனக் குழுவும் (?) கூட இலங்கையில் காணப்படுகின்றது. இவை அனைத்தும் இரண்டு தேசத்துக்குள் இருக்கின்றது. இவை உள்ளடங்கியது தான் இலங்கை. ஆனால் இலங்கை ஒரு தேசமல்ல. அதாவது பல் இனங்கள் மற்றும் தேசங்கள் இணைந்து கொண்டு உருவான ஒரு தேசமல்ல.

மேற் கூறியது போல் இன்று இலங்கையில் இரண்டு தேசங்கள் உண்டு. இவ் இரண்டு தேசங்களுக்குரிய தேசிய முரண்பாட்டை, வெறும் தேசமல்லாத தேசிய இன முரண்பாடாக குறுக்கி தனிமைப்படுத்துவது தவறானது. இங்கு தேசங்களுக்கு சுயநிர்ணயம் என்பதற்கு பதில் தேசிய இனங்களுக்கு சுயநிர்ணயம் என்பது, அடுத்த தவறாகும்.

இதைவிட தேசமல்லாத இனங்களுக்கும், தேசமாக உள்ள இனங்களுக்கும் இடையிலான இன முரண்பாடு உண்டு. இதற்கு சுயநிர்ணய தீர்வு என்ற அடிப்படையில் அணுகுவது தவறானது. எது எதார்த்தமோ அதை அடிப்படையாகக் கொள்ளாது கற்பிதம், பொய்மையை அடிப்படையாகக் கொண்டு அரசியல் ரீதியாக ஏமாற்றுவதாகும். பாட்டாளி வர்க்கம் தீர்மானகரமாக மக்கள் திரள் அமைப்பு சார்ந்து வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்காத காலத்தில், இன ஐக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்தந்திர ரீதியாக பொத்தாம் பொதுவாக தர்க்க எல்லைக்குள் பயன்படுத்திய வரையறைகளை, இன்று குறிப்பாக்கி வேறுபடுத்தி கையாளவேண்டிய மக்கள் திரள் சார்ந்த வர்க்கப் போராட்டக் காலகட்டத்தில் உள்ளோம்.

வரலாற்று ரீதியாக இதைப் பற்றிய விரிவான அடிப்படை புரிதலுக்கும், ஆய்வுக்குரிய பொருள் மீதான மையக் குறிப்பு இது. நடைமுறையிலான உடனடியான அரசியல் வேலையையும், அரசியல் விவாதங்களையும் தொடர்ந்து கையாள்வதற்கான ஆரம்பக் குறிப்பாகும்.

 

பி.இரயாகரன்

08.05.2013