கடந்த ஒரு வருடத்துக்கு முன் வாள் கொண்டு வெட்டப்பட்ட பரிதி, 08.11.2012 சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். இதை இலங்கை அரசு செய்ததாக புலிகளின் அறிக்கைகளும், அஞ்சலிகளும் குற்றம் சாட்டுகின்றன. அதேநேரம் இலங்கை அரசு இதை மறுக்கின்றது. அதே நேரம் முரண்பட்ட புலிக் குழுக்களின் வேறுபட்ட பார்வைகள் முதல் எச்சரிக்கை வரை வெளிவருந்திருக்கின்றது. மக்கள் இந்தக் கொலை புலிக் குழுக்களுக்கு இடையிலான கொலையாக நம்புகின்றனர். ஏன் இந்த முரண்பாடு?

கடந்த பத்தாண்டுகளில் அரசு, புலிகளும் இது போன்ற படுகொலைகள் மூலம், பல நூறு கொலைகளை நடத்தி முடித்திருக்கின்றார்கள். இது போன்று பல்வேறு இயக்கங்களும் கூட செய்திருக்கின்றன. இது தான் முரண்பாடுகளை தீர்க்கும் அரசியல் வழிமுறையாக இருந்திருக்கின்றது. இந்த நிலையில் இந்தக் கொலையைக் கூட யார் கொலையாளி என்று தெரியாத வண்ணம் மூடிமறைக்கின்ற, மூடிமறைத்த அரசியல் பின்புலத்தில் தான் இவை நடந்து வந்திருக்கின்றது. இதை யார் செய்து இருப்பார்கள் என்பதை காரணகாரியத்துடன் தொடர்புபடுத்தி தெரிந்துகொள்ள வேண்டியளவுக்கு வரைமுறையின்றி நடந்து வந்திருக்கின்றது. துயரம் என்னவென்றால், இந்த வழிமுறையை எதிரி பயன்படுத்தி விடுவதுதான். இந்த அரசியல் பின்புலத்தில் இது போன்ற கொலைகள், யார் செய்தது என்ற விடை காண முடியாத சந்தேகங்களும் ஏற்பட்டுவிடுகின்றது.

இன்று இதை யார் செய்தார்கள் என்ற கேள்விக்கு, புலிகளே இதை செய்தனர் என்று நம்பும்படியான காரணகாரியங்களும், அதற்கான அடிப்படைகளும்; உண்டு. இதை மறுக்க முடியாத வண்ணமான அவர்களின் நடத்தைகள் உள்ளது. 2009க்குப் பின்னான இன்றைய நி;லையும் இதுதான். இன்று

1.புலிக் குழுக்கள் தங்களுக்குள் ஏற்படும் முரண்பாட்டை ஜனநாயகபூர்வமாகவா அணுகித் தீர்க்கின்றனர்!? இல்லை.

2.புலிகள் தாமல்லாத கருத்து முரண்பாடுகளை ஜனநாயகபூர்வமான வழிகளிலா தீர்க்கின்றனர்!? இல்லை.

பொதுவாக வன்முறை முதல் கொலை செய்வதன் மூலம் தீர்வு காணும் அரசியல் வழிமுறையைத்தான் கொண்டுள்ளனர். இதைத்தான் அரசும் தொடர்ந்து செய்கின்றது. மக்களை அச்சுறுத்துகின்ற, சமூக அக்கறையாளர்களை போட்டுத் தள்ளுகின்ற மக்கள் விரோத பாசிச அரசியல் வடிவம் தான் இது.

இந்த அரசியல் பின்புலத்தில் தான் இந்தப் படுகொலையை நாம் தொடர்ந்து நோக்கமுடியும். இந்த சூழலை எதிரி முதல் இதை அரசியலாக கொண்ட அனைத்து சக்திகளும், சூழலுக்கு ஏற்ப தமக்கு சார்பாக பயன்படுத்திவிடுகின்றனர். இந்த மாதிரியான அரசியல் வழிக்குள், அவர்களே பலியாகிவிடுகின்றனர்.

பரிதியின் படுகொலை பரிசில் நான்காவது படுகொலை. 2009 இல் புலிகள் இலங்கையில் அழிக்கப்பட்ட பின், புலம்பெயர் நாடுகளில் அதிகார மற்றும் சொத்துப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது. பல முனை கொண்ட முரண்பாடுகள், பரிதியின் படுகொலை மூலம் உச்சத்தை எட்டியிருக்கின்றது.

மக்கள் பற்றி எந்த சமூக அக்கறையுமின்றி, இவை அனைத்தும் தொடர்ந்து அரங்கேறுகின்றது. குறுகிய தமிழ் தேசியப் போராட்டத்தினால்; தங்களால் பலிகொடுத்தவர்கள் பற்றிய எந்த உணர்வும் உணர்ச்சியுமின்றி, தொடர்ந்து தமக்குள் மோதுகின்றனர். போராட்டத்தின் பெயரில் நடத்திய ஆயிரக்கணக்கான படுகொலைகளை எதிரி பயன்படுத்தியதன் மூலம், எதிரி மிக இலகுவாக மக்களுக்குள் ஊடுருவி புலிகளை முற்றாக அழித்தொழிக்க முடிந்தது.

இதன் தொடர்ச்சியாக புலம்பெயர் தேசத்திலும,; அதற்கான வித்துதான் இது போன்ற படுகொலை. கொலையாளி யார் என்று தெரியாத வண்ணம், எதிரி ஊடுருவவும் அழித்தொழிக்கவும் இது வழிகாட்டுகின்றது. புலிகளின் ஒற்றுமை உலகறிய நாறிக் கிடக்க, எதிரி செய்ததாக கூறி முன்வைக்கும் அஞ்சலிகளுக்கு இன்னும் முடிவில்லை. முகமூடி அணிந்த போலித்தனங்களும், அமைப்பு ஒற்றுமையைக் கோரி நடக்கும் படுகொலைகள், எதிரிகள் ஊடுருவி அவர்களை அழித்தொழிக்கவே தொடாந்து உதவிசெய்யும். இதுதான் கடந்தகால வரலாறும் கூட.

இந்தப் படுகொலை ஒற்றுமையையோ, விடுதலையையோ பெற்றுத் தராது. எதிரிக்கே பலம் சேர்க்கின்றது. முரண்பாடுகளையும், குழுவாதங்களையும் ஜனநாயகபூர்வமாக அணுகாது, மாபியா வழியில் தீர்வு காண்பதும், அதை மூடிமறைப்பதும், தேசியத்தின் பெயரில் விளக்கம் கொடுப்பதும் விடுதலைக்கான பாதையல்ல.

இதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வுக்கு தொடர்ந்து புதைகுழியைத்தான் வெட்டுகின்றனர். இந்தப் படுகொலை அரசியலில் இருந்து மக்கள் தங்களை விடுவிப்பதன் மூலம் தான், இந்த முகமூடி மாபியா படுகொலை அரசியலை தனிமைப்படுத்தி அம்பலப்படுத்த முடியும். இந்தக் கொலைகார அரசியலில் இருந்து விடுபட்டு, மக்கள் தங்கள் சொந்த விடுதலைக்கான அரசியலை கண்டடைவதன் மூலம் தான், தங்கள் விடுதலைக்கான பாதையை கண்டறிய முடியும்.

 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

14.11.2012