நாம் கொண்டிருக்கக் கூடிய கருத்துக்கள், கட்சிகள் எதற்காக!? அதிலும் பாசிசத்தைக் கண்டு அஞ்சுபர்களுக்கு, கருத்துக்களும் கட்சிகளும் எதற்கு!? பாசிசத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடாத வரை, கருத்துக்களுக்கும் கட்சிகளுக்கும் என்ன தான் பயன்? பாசிசத்தைக் கண்டு அஞ்சுபவர்கள், மக்களை ஒரு நாளும் அணிதிரட்ட முடியாது. ஒரு வர்க்கத்தின் கட்சி இலங்கையில் இன்னும் உருவாகாமல் இருப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. பாசிசத்தை பகைக்காத வண்ணம் அரசியலை முன்னிறுத்திக் கொள்ளுகின்ற கட்சிகள் முதல் தனிநபர்கள் வரை, மக்களை பாசிசத்துக்கு அடிபணிய வைக்கின்றனர். அதைத்தான் தங்கள் கருத்துகளாலும் கட்சிகள் மூலமாயும் செய்கின்றனர்.

அச்சமும், பீதியும், போராட முன்வரும் சக்திகளைக் கூட போராடாமல் இருக்குமாறு வழிநடத்துகின்றனர். தாங்கள் போராடாமல் இருக்கும் வண்ணம், கோட்பாட்டு அடிப்படைகளைக் கண்டுபிடிக்கின்றனர். வாழ்வதற்கும் - போராடுவதற்கும் இடையிலான இடைவெளியை அகலப்படுத்துகின்றனர். மக்களின் வாழ்வுடன் சம்மந்தமில்லாத வண்ணம், கருத்துக்களை கட்சிகளை உருவாக்குகின்றனர். மனிதவாழ்வு என்பது போராட்டம் என்பதைக் கைவிடுகின்றனர். இந்த இடத்தில் முன்னாள் புலி உறுப்பினர்களை சமூகம் புறக்கணிக்கும் அதே காரணிகளைக் கொண்டு, கட்சிகள், குழுக்கள், தனிநபர்கள் தங்கள் செயற்பாட்டை வரையறுக்கின்றனர். தங்கள், பாசிசத்தை கண்டுகொள்ளாத கருத்துகள் கட்சிகள் மூலம், பாசிசத்தை மேலும் பலப்படுத்துகின்றனர்.

முன்பு புலிகளில் இருந்தவர்கள், யுத்தத்தின் பின், தாங்கள் கட்டிப் பாதுகாத்த இந்த சமூக அமைப்பில் வாழ்வது என்பது பாரிய போராட்டமாகியுள்ளது. அரச பாசிச பயங்கரவாதத்தைக் கண்டு அஞ்சம் மக்கள், முன்னாள் புலிகளுடனான உறவைத் தவிர்க்கின்றனர். இதற்கு பின்னால் பொதுவாக இரண்டு காரணங்கள் காணப்படுகின்றது.

1. அரச பாசிசம் தொடர்ந்து மக்களையே கண்காணிக்கின்ற நிலையில், முன்னாள் புலிகளுடன் மக்கள் உறவாடுவதை தவிர்க்கின்றனர்.

2. புலிகளின் கடந்தகால நடத்தைகள், அவர்கள் மேலான நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவதில்லை.

இவ்வாறாய் முன்னாள் புலிகள் சந்திக்கின்ற வாழ்வியல் நெருக்கடிகள் மிகக் கடுமையானவை. குறிப்பாக பெண்கள் பாதிப்பு மேலும் தனித்துவமான மேலதிகமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த வகையில்

3.ஆணாதிக்கம் வரையறுத்த அடக்க ஒடுக்கமான பெண் என்ற கட்டமைப்பை தாண்டிப் போராடிய பெண்ணை, சமூகம் அடக்கமற்றவளாக அச்சத்துடன் தன்னில் இருந்து விலக்கி வைக்கின்றது.

இப்படி முன்னாள் புலிகள் முன்பு தாம் போராடிய போராட்டத்தைவிட, இன்று வாழ்வதற்கான போராட்டம் கடுமையானதாக இலக்கின்றி மாறியுள்ளது. தனித்தனியாக தொடங்கும் போராட்டம் ஒரு நேர உணவுக்கு கூட வழியற்ற பொதுச் சமூக புறக்கணிப்புக்குள் உள்ளாகிறது. அவர்களுக்கு பிச்சையைக் கூட போட அஞ்சும் சமூக அமைப்பில், அவர்கள் பிச்சை கூட எடுக்க முடியாது.

இதன் பின்புலத்தில் எந்த வாழ்வுக்கான அடிப்படையுமற்றவர்கள், வாழ்வதற்காக குற்றங்களில் ஈடுபடுமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர். அரசின் எடுபிடிகளாக வாழுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். பெண்கள் உடலை விற்று வாழுமாறு கோரப்படுகின்றனர். இப்படி சாதாரணமான சமூகத்தில் இருந்து, விலக்கி வாழுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவர்களுக்கு முன் நின்று கைகொடுத்து சமூகத்தை வழிநடத்திப் போராட வேண்டியவர்களோ, போராடவே அஞ்சுகின்றனர். கருத்துகளை, கட்சிகளை வைத்துக்கொண்டு, போராடுவதைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். சமூகம் கூட இந்த அவலத்தைக் கண்டும் காணாமல் உதவும் குறைந்தபட்ச எல்லைக்குள் உதவும் மனப்பாங்கு கூட, போராட வேண்டியர்களிடம் இல்லை.

மக்கள் பாசிசத்தைக் கண்டு அஞ்சுவதைவிட, போராட வேண்டியவர்கள் கூடுதலாக அஞ்சுகின்றனர். பாசிசத்துடன் முரண்படாமல், பகைக்காமல் கருத்தையும், கட்சியையும் கொண்டு புரட்சி பற்றி, சமூக மாற்றம் பற்றி பேச முனைகின்றனர். அரசுக்கும் சமூகத்திற்கும் இடையில் பல முரண்பாடுகள் பல முனையில் காணப்படுகின்ற நிலையில், அரசியல் இலக்கியம் பேசுகின்ற கட்சிகள் முதல் தனிநபர்கள் வரை இதற்கு வெளியில் தங்களை முன்னிறுத்துகின்றனர். வெறும் கருத்துகளைக் கொண்டு, சமூகத்தை பாசிசத்தின் கீழ் தொடர்ந்து அடிமையாக வாழுமாறு இவர்கள் வழிகாட்டுகின்றனர். கருத்து கருத்துக்காகவே, செயலுக்கானதல்ல என்பது இவர்கள் நிலை. கருத்து மக்களுக்காக தான், ஆனால் செயலுக்கானதல்ல என்பது இவர்களின் அரசியல் வரையறை.

பாசிசத்தின் கீழ் சமூகத்தின் அவலம் அங்குமிங்குமாக மனிதனை சிதைக்கின்ற போது, போராடவென கருத்துகளை கட்சிகளை வைத்திருகின்றவர்கள் கூட போராட அஞ்சும் நிலையில், மக்கள் வாழ்வதற்கு கூட வழிகாட்டும் எந்த நம்பிக்கையையும் கொடுக்க எவரும் இல்லை. இந்த உண்மை தான் சமூகத்தின் முன் நிதர்சனமாக இருக்கின்றது.

இந்த சமூக அமைப்பில் நாங்கள் பேசும் தத்துவங்கள், கோட்பாடுகள்… மட்டுமின்றி அறிவு முதல் நடைமுறைகள் வரை மக்களுக்கு பயன்படாத போது, இதைக் கொண்டிருப்பதால் இந்த சமூகத்துக்கு என்ன பயன்? சமூகத்தை இந்தப் பாசிச சூழலில் இருந்து மீட்கவும், வழிகாட்டாதவரையும் இவையெல்லாம் எதற்கு? மார்க்சியம் என்பது சமூகத்தை விளக்கி வியாக்கியானம் செய்வதற்கல்ல, சமூகத்தை மாற்றுவதற்கே. இதை நடைமுறையில் செய்யாத கட்சிகள் முதல் தனிநபர்கள் வரை, தங்களை தங்கள் மீளாய்வுக்கு உள்ளாக்கியாக வேண்டும். இதையே வரலாறு மீண்டும் இன்று கோருகின்றது.

பி.இரயாகரன்

07.11.2012