அமெரிக்க ஏகாதிபத்தியம் அண்மையில் புலிகளை தடை செய்து இருந்தனர். உலக பொலிஸ்காரனும் உலக அடாவடிக்காரனும் உலக வன்முறைக்கு தலைமை தாங்குபவனுமான அமெரிக்கா புலிகளை தடை செய்ததன் மூலம் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய கோரிக்கையை ஒழித்துக்கட்டி விடமுடியும் என நம்புகிறது.

உலகின் இரு பெரும் வல்லரசுகள் உலகைப் பங்கிட நடத்திய பனிப்போரின் போது தான் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை உள்ளடங்கிய போராட்டம் வெடித்துக்கிளம்பியது.

இந்தப்போராட்டத்தைப் பயன்படுத்தி இவ்விரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவும் ருசியாவும் இலங்கையை தமது பொருளாதார இராணுவ நலனுக்கு பயன்படுத்த தமது சார்பான தமிழ் குழுக்களை அடையாளப்படுத்தி சிலவற்றை இந்தியாவுக்கு ஊடாகவும் நகர்த்தியது. இந்த இரு வல்லரசுகளுக்குமிடையிலான மோதல் இயக்கங்களுக்கும் ஏற்பட்டது . ருசியாவில் கொர்பச்சோவின் காலம் இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவந்தது.

இதன் தொடர்ச்சியில் இலங்கையிலும் இயக்க மோதலில் உலகில் அமெரிக்க தலைமையில் ஒற்றை ஆதிக்கம் ஏற்பட்டது போன்று புலிகளின் தலைமையில் ஒற்றை ஆதிக்கம் ஏற்பட்டது. இவை அனைத்தும் சர்வதேச நிகழ்வுப்போக்குக்கு இசைவாக அதன் தொடர்ச்சியில், நடந்து முடிந்தன. இந்த நிலையில் புலிகள் மக்கள் முன் ஈழத்தை இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஒப்பிட்டு நாம் முன்னேறுவோம் என அடிக்கடி கூறத்தொடங்கினர். இதன் பின் ஒரே ஏகாதிபத்தியம் அரசு, புலிகளை வழி நடத்துவதில் இலங்கையை தான் முழுமையாக கட்டுப்படுத்தும் அரசியல் நிலை ஏற்படும் வரை இருவரையும் கையாண்டது .

அதாவது முன்பு உலகு எங்கும் தெரிந்தது போல் இஸ்ரேல் இராணுவ பயிற்சித்தளமொன்றில் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் ஒரேநேரத்தில் ஒருவருக்கு ஒருவர் தெரியாது பயிற்சி அளித்ததைப் போன்றதே இது. அதாவது அங்கு கண்ணிவெடி செய்வது, வைப்பது தொடர்பான பயிற்சி ஒருவருக்கும், கண்ணிவெடி அகற்றுவது தொடர்பான பயிற்சி மற்றொருவருக்கும் வழங்கிய நிலையைத்தான் அமெரிக்கா அரசு, புலிகள் இடையிலான உறவுக்குள் தனது நலனை முன்வைத்துக் கையாண்டது .

இன்று இலங்கையில் அமெரிக்காவின் நலன்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு நல்ல நிலையை அடைந்துள்ளது. அதை அமெரிக்கா ஜனாதிபதியே சொல்லும்  நிலையில் தான் புலிகளின் மீதான தடை அமைந்துள்ளது.

இனியும் இலங்கையினை தனக்கு இசைவாக மாற்ற புலிகள் தேவையில்லை என்ற நிலையில் தான் (இங்கு இனம் தெரியாத அமெரிக்கா தொடர்பாளர்கள், வழிநடத்துனர்கள் தொடர்ந்தும் புலிகளை அழிக்கும் வழியில் வழிகாட்டுவர் என்பது கவனத்துக்குரியது.) புலிகளை அமெரிக்கா தடை செய்தது. இதன் மூலம் புலிகளை அழித்து ஒழிக்க அல்லது சரணடைய வைப்பதன் மூலம், தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை ஒழித்துக் கட்ட முடியும் என நம்புகிறது .

அமெரிக்காவின் தடை தொடர்பாக புலிகளின் தொடர்புசாதனங்கள், மற்றும் பத்திரிகைக் குறிப்பாக சரிநிகர் உள்ளிட்டு இத்தடை புலிகளைப் பாதிக்காது என பல ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டு இருந்தனர்.

அமெரிக்காவின் தடை புலிகளைப் பாதிக்காது என முற்போக்குகள் எனக் கூறுவோரும் கூறுகின்றனர். எல்லாவித அரசியல் ஆய்வையும் கைவிட்ட பின் இப்படிப் பிரகடனம் செய்வதன் மூலம், உண்மையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய போராட்டத்தை முச்சந்திக்கு இழுத்து நகர்த்தி வலுக்கட்டாயமாக போராட்டத்தை அழிக்க செய்யும் முயற்சியாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிரியாகக் காட்டி, அதைச் சார்ந்து இராது போராட முனையும் ஒரு கம்யூனிசக்கட்சிக்கு கூட தடை முன்வைக்கப்படின் அது நெருக்கடியைக் கொடுக்கும்.

அமெரிக்காவை எதிர்த்து அதைச்சார்ந்து இருக்காத ஒரு கட்சிக்கே இந்த நிலை ஏற்படின் அமெரிக்காவை எதிர்க்காது அதைச் சார்ந்து நின்ற புலிகளை பாதிக்காதா ?

அரசியல் ரீதியில் அமெரிக்காவை எதிர்க்காது உள்ள இயக்கம், மக்கள் மத்தியில் உள்ள முரண்பாட்டை வன்முறை மூலம் கையாளும் ஓர் இயக்கம், மற்றைய தேசிய இனங்களை எதிரியாகக் காட்டும் இயக்கம் எப்படி இதற்கு வெளியில் சுயாதீனமாக இயங்க முடியும் . எந்த அரசியல் தளத்தில் எதை முன்வைத்து நீடிக்க முடியும்.

மக்களிடம் தீவிர முரண்பாட்டைக் கொண்ட புலிகள், அமெரிக்காவை எதிர்க்காத நிலை என்பன, புலிகளை தன்னந்தனியாக நடுரோட்டில் வழிநடத்திச் செல்ல அமெரிக்கத்தடை அமைந்துள்ளது. எதிர்காலத்தில் இத்தடை பிரதிவிளைவுகளை ஏற்படுத்த உள்ளது.

மற்றைய வல்லரசுகள் ஆதரவு கிடைக்கும் ஒரு நிலையில் மட்டும் தான், புலிகளால் நீடிக்க முடியும் அந்தளவுக்கு புலிகளின் அரசியல் உள்ளது .

புலிகள் பணம் சேகரிக்கும் ஒரே ஒரு நிகழ்ச்சித்தொடரை மட்டும்  காட்டியே பலரும் அபிப்பிராயம் தெரிவித்தனர். புலிகளைப் பொறுத்த வரையில் பணம் ஒரு பிரச்சனை அல்ல. மாறாக புலிகளின் சர்வதேச இராணுவத் தொடர்புகள் தான் பிரச்சனைக்கு உரியதாக மாறுகிறது.

மக்களின் முரண்பாடுகளை ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக நின்று போராட முடியாத புலிகள், முற்று முழுதாக இராணுவவாதத்துக்குள்ளும் சர்வதேச இராணுவவிநியோகத்திலும் தான் சார்ந்துள்ளனர்.

அமெரிக்காத்தடை என்பது சர்வதேச ஆயுத சேகரிப்பைத் திட்டவட்டமாகத் தடுக்கும் அல்லது அவ்விநியோகத் தொடரை அரசுக்குக் காட்டிக் கொடுத்து அழிக்கும். இந்த வகையில் அண்மையில் இரு கப்பல்களை அரசுக்குக் காட்டிக்கொடுத்து அழித்ததன் பின்னணியில், மூன்றாவது சக்தி ஒன்றின் தகவல் தனக்குக் கிடைத்துள்ளது என்பதை அரசு புலிகள் அறிக்கைகள் உறுதி செய்கின்றன.

சர்வதேச புலிகளின் ஆயுத சேகரிப்பு அதன் தொடர்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்குள் இருந்து தான் மூன்றாவது தரப்பு தகவல் வெளிவர முடியுமே ஒழிய வெளியில் அல்ல.

நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்யாத ஆயுத விநியோகஸ்தர்கள் வியாபாரியாகவோ, உளவாளியாகவோ, வேறுபெயர்களில் கூட இருக்க முடியும்.

இந்த உலக ஆயுத விநியோகம் தவிர்க்கமுடியாது அமெரிக்காவின் நேரடி அல்லது மறைமுகமான கட்டுப்பாட்டைக் கொண்டதாகவே இருக்கும். ஏனெனில் இன்றைய உலக ஒழுங்கும், அமெரிக்காவின் பொலிஸ்கார வேலையும் இதுவாக உள்ளபோது, புலிகளின் அரசியல் நிலையில் இதற்கு வெளியில் ஆயுத சேகரிப்பை செய்யமுடியாது.

இங்குதான் அமெரிக்கத்தடை புலிகளின் இராணுவவாத நிலை மீதான செயல்தளத்தை சிதைக்கின்றது. புலிகளின் அரசியல் இராணுவவாதமாக உள்ளவரை கருவியுத்தமும் கருவிமேலாண்மையும் தான் வெற்றி எனக் கூறும்  வரை மக்கள் தான் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள் என்பதை நிராகரிக்கும் வரை, புலிகளின் ஆயுத விநியோகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் புலிகளை முடக்கி அழிக்க முடியும் என்ற அமெரிக்க ஏகாதிபத்திய நிலை தான், புலித்தடையாக வெளிவந்துள்ளது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலிகளுக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடு உள்ளவரை, அமெரிக்காவை எதிரியாகப் பிரகடனம் செய்யாத அரசியல் உள்ளவரை, அமெரிக்கத் தடை புலிகளை தனிமைப்படுத்தி அழிக்கும் வகைப்பட்ட செயல் ஆகும்.

தமிழ் மக்களின் நீதியானதும் நியாயமானதுமான சுயநிர்ணயக்கோரிக்கையை முன்வைத்து போராட வேண்டுமாயின், சர்வதேசரீதியில் தேசியத்தை அழித்து ஒழிக்கும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் போராடவேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சனையை முன்வைத்து அமெரிக்காவை எதிர்த்தும் போராடவேண்டும். இல்லாதவரை அமெரிக்காத்தடை போராட்டத்தைச் சிதைத்து அழிக்கும். மக்களிடம் இருந்தும் சர்வதேச விநியோக தளங்களிலிருந்தும் அமெரிக்காத்தடை புலிகளைத் தனிமைப் படுத்தும் செயலுக்கு, புலிகளின் அரசியல், அதைத் தங்கத்தட்டில் ஏந்திக் கோரும் வகையில் உள்ளது என்பது கவனத்துக்குரியது.