அறியாமைக்குள் மூழ்கடிக்கின்ற
பண்டிகைகளும் தினங்களும்
வியாபார நிறுவனங்களின் காட்சிஅறைகளில்
விளம்பரப்படுத்துவதை காண்கின்றோம்,
கண்ணாடிக்கூண்டுக்குள் மின்னுகின்ற 
காட்சிப்பொருட்களை 
பார்க்கும் ஏழைக்குழந்தை
கைகளில் சுமக்கமுடியாப் பொருட்களை
தள்ளுவண்டில்களில் நிறைத்தவண்ணம் 
போகிறவர்களை பார்த்து பிரமித்துப்போகிறது!

 

 

மேதினத்திற்கான எந்த ஆரவாரத்தையும்
இந்தக் குழந்தைகள்
கடைத்தெருக்களிலும் காண்பதில்லை
சிகப்பு உடைகளையோ
தொப்பிகளையோ
கொடிகளையோ 
இலாபம் ஈட்டுவதற்கான பண்டமாக்குவதற்கும்
முதலாளித்துவம் கவனமாகவே கையாள்கிறது


ஊர்வலத்திற்கான 
ஏற்பாடுகளுடன் கூடிய சுவரொட்டிகள்
வாக்குக்கட்சிகளின் 
தேர்தல்காலம்போலவே அழைப்புவிடுகின்றன
ஏற்றிச்செல்வதற்காய் ஊர்திகளும்
ஏந்துவதற்கான தமது பதாகைகளும்
உரக்க ஒலிப்பதற்காய் 
தமது கோசங்களும் தயாராகிறது


உழைப்பவர்களும் குடும்பங்களும்
கடலிலும் காடுகளிலும்
களனிகளிலும் ஆலைகளிலும்
வேர்வை சிந்தியவண்ணமே 
யாருடையதோ 
சுகபோகத்திற்காய் கசக்கிப்பிழியப்படுகிறார்கள் 
உழைப்பவர்
உரிமையைப் போராடிப்பெற்றதினம்
அவர்களுக்கே மறுக்கப்படுகிறது


இது எங்களின் தினம்
நாளும் நசுக்கப்படுவோர்
கூடியெழுவோமென சூழுரைக்கும் தினம்
கஞ்சிக்கு உழைப்பவன் திண்டாட
காலமெல்லாம் சும்மாயிருந்து 
தின்றுகொளுப்பவர் கொட்டம்
அடக்குவோமென
செங்கொடி பறக்கும் தினமல்லவா
இது எங்களிற்காய்
சிக்காக்கோவில் 
இரத்தம் சிந்தி வென்றெடுத்த மேதினம்!

-கங்கா 30/04/2012