வர்க்கக் கண்ணோட்டமற்ற அரசியல் மக்களுக்காக என்றும் எங்கும் போராடுவதில்லை. மாறாக அதைக் குழிபறிப்பதையே, அரசியல் அடிப்படையாகக் கொண்டது. சமாந்தரம், நடுநிலை என்று முன்தள்ளும் தத்துவ மோசடி எங்கிலும் இதை நாம் இனம் காணமுடியும். ஒடுக்கப்பட்ட வர்க்கங்களாக மக்கள் பிளவுபட்டு இருக்கும் போது, "ஒடுக்கப்படுபவர்" என்று வர்க்கம் கடந்து அதை வகைப்படுத்தும் அரசியல், மோசடியிலானது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் என்பதற்கு பதில் "ஒடுக்கப்படுபவர்" என்பது, குறித்த ஒடுக்குமுறையல்லாத அனைத்தையும் தனக்குள் ஒடுக்குவதை அங்கீகரித்தல் தான். இங்கு இதை சமாந்தாரக் கோட்பாடாக கோருகின்றது.

கறுப்பு வெள்ளையாக தக்கவைக்கக் கோரும் சசீவனின் சமாந்தரக் கோட்பாடு சரி, கறுப்பு வெள்ளையற்ற மையக் கோட்பாட்டை முன்வைக்கும் முன்னாள் புலிப்பிரமுகர்களின் கோட்பாடும் சரி, வர்க்கமற்ற அரசியல் புள்ளியை தேர்ந்தெடுத்து முன்வைக்கின்றது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான அரசியலில் பிரமுகராக தங்களை முன்னிலைப்படுத்த, இப்படித்தான் அரசியல்-இலக்கியத்தில் நுழைகின்றனர். இதுவொன்றும் புதிய சரக்கல்ல.

சசீவனின் கருத்து மீதான எனது முதலாவது எதிர்வினையை அடுத்து, சசீவன் முகப்பு நூலில் (பேஸ்புக்கில்) எழுதி அழித்த அவரின் குறிப்பை எடுப்போம். "தனியே 'லைக்' அடித்துவிட்டு ஒதுங்கிவிடும் நவீன அரசியல் கலாச்சாரத்தில், சமூக நிகழ்வுகளுக்கு நீங்கள் ஆற்றிவரும் எதிர்வினை முக்கியமானது. நீங்கள் எழுதப்போகும் பகுதிகள் முடிவடைந்த பின்னர் உங்கள் பதிவுக்கான விரிவான பதிலைச் சொல்ல முடியும்.... தவறான புரிதலில் இருந்து தொடரை ஆரம்பிக்கக்கூடாது என்பதற்காக ஒரே ஒரு விடயம். ஒடுக்குமுறை சார்ந்த தரப்படுத்தல்கள் - ஒடுக்கப்பட்டவர்களை அதிகார வர்க்கம் பிரித்தாள்வதற்கே உதவியுள்ளதை சமகாலத்தில் கண்டுள்ளோம். கண்டு கொண்டும் இருக்கின்றோம். மேலும், நவீன சமூகக்கட்டமைப்பு ஒடுக்குபவர் - ஒடுக்கப்படுபவர் என்ற மிகச்சிக்கலான வரைபடத்தை எமக்களித்துள்ளது. இது தொடர்பான கரிசனையில் இருந்தே எனது கருத்து உருவாகியுள்ளது. உங்கள் பொறுப்பான எதிர்வினைக்கு நன்றிகள்." என்று சசீவன் குறிப்பிடுகின்றார்.

"தனியே 'லைக்' அடித்துவிட்டு ஒதுங்கிவிடும் நவீன அரசியல் கலாச்சாரத்தில்" என்பது மட்டும் இங்கு தவறானதல்ல, தன்னை முதன்மைப்படுத்தாது மக்களுக்காக தன்னை அமைப்பாக்கி களத்தில் இறங்கிப் போராடாத பிரமுகர்தனமும் படுபிற்போக்கானதும் அயோக்கியத்தனமானதுமாகும். இது மக்களை அறிவு மூலம் ஏமாற்றிப் பிழைக்கும் மோசடிகளாலானது.

குறிப்பாக நாம் உங்கள் "சமாந்தர" கோட்பாட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உங்கள் மேல் எதிர்வினையைத் தொடங்கவில்லை. பல விடையங்களை அடிப்படையாகக் கொண்டது. "ஒடுக்குபவர் - ஒடுக்கப்படுபவர்" மீதான உங்கள் "கரிசனை" உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தால், நிறைய கற்றுக்கொண்டு இருக்க முடியும். ஆனால் உங்கள் உரை எழுத்து அதை பிரதிபலிக்கவில்லை. இருந்தும் இனியும் கற்றுக்கொள்ள முடியும்.

"ஒடுக்குபவர்" என்பது ஒடுக்கும் வர்க்கம் சார்ந்தது. ஒடுக்கும் வர்க்கம் சார்ந்த ஒன்றை "ஒடுக்குபவர்" என்று வகைப்படுத்துவது அதற்குள்ளான ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை இல்லாதாக்கி எதிரியாக்குவதாகும். உதாரணமாக "ஒடுக்குபவர்" சிங்களவனாகவும், "ஒடுக்கப்படுபவர்" தமிழனாக காட்டும், அதே புலிப் பாசிச அரசியல் தான் இது. "ஒடுக்குபவர்" வரையறைக்குள் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள் இருப்பதையும், "ஒடுக்கப்படுபவர்" வரையறைக்குள் ஒடுக்கும் தமிழன் இருப்பதையும் மறுக்கின்ற அரசியல் தான், இதை மூடிமறைத்து சமாந்தரமாக இதை அங்கீகரிக்கக் கோருகின்றது.

"நவீன சமூகக்கட்டமைப்பு ஒடுக்குபவர் - ஒடுக்கப்படுபவர் என்ற மிகச்சிக்கலான வரைபடத்தை எமக்களித்துள்ளது." என்ற உங்கள் கூற்று "நவீன" அமைப்புக்கு என்று காட்டுவது இங்கு மற்றொரு திரிபு. வர்க்க அமைப்பு எங்கும் வர்க்கப் போராட்டம் இருந்து வருவதையும், இதனடிப்படையில் சமூகப் போராட்டங்கள் நடந்து வருவதை மார்க்சியம் கூறி வந்திருக்கின்றது. மனிதர்களுக்கு இடையிலான வரலாற்றை, வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகக் கூறி இருக்கின்றது. இங்கு இதை வர்க்கமற்ற ஒன்றாக, அதுவும் "நவீன" அமைப்பில் "ஒடுக்குபவர் - ஒடுக்கப்படுபவர்" தோன்றி உள்ளதாக கூறி திரிக்கின்றது. "நவீன சமூகக்கட்டமைப்பில்" விசேடமாக தோன்றியது கிடையாது. இங்கு மார்க்சியத்தை மறுதலிக்கவும், வர்க்கமற்ற போராட்டங்கள் பற்றிய திரிபையும் தான், இந்த அரசியல் முன்னிறுத்துகின்றது. வர்க்கமற்ற "ஒடுக்குபவர் - ஒடுக்கப்படுபவர்" போராட்டத்தின் வரலாறாக "நவீன" சமூகம் இருப்பதாக திரிக்கின்றது.

இங்கு "ஒடுக்கப்படுபவர்" வர்க்கமற்ற ஒடுக்குமுறையை எதிர்கொள்வதால், வர்க்கரீதியான பிளவை முன்வைக்கக் கூடாது என்பதுதான், இந்த வர்க்கமற்ற அரசியல் சாரம். இது ஒடுக்கும் வர்க்கத்தின் அரசியல். சமுதாயத்தில் பொது இயல்பை, ஆளும் வர்க்கம் சார்ந்து அப்படியே பிரதிபலித்தல்;. அந்தப் பிரதிபலிப்பை செய்யத்தவறினால் "அதிகார வர்க்கம் பிரித்தாள்வதற்கே" பயன்பட்டதாக கூறுகின்ற அரசியல் கபடங்களாலானது. "அடையாள அரசிய"லை பயன்படுத்தல், தக்கவைத்தல் என்ற ஆளும்வர்க்க கோட்பாடு இது. சாராம்சத்தில் தமிழீழத்தைப் பெற இந்தியாவையும், போர்க்குற்றத்துக்கு தண்டிக்க அமெரிக்காவையும் பயன்படுத்தும் "ஒடுக்கப்படுபவர்" கோட்பாடாக இது பிரதிபலிக்கின்றது. மறுதளத்தில் அமெரிக்க எதிர்ப்பு ஏகாதிபத்தியத்தை பயன்படுத்தும் "ஒடுக்குபவர்" கோட்பாடாக இது பிரதிபலிக்கின்றது.

மேலெழுந்தரீதியாகப் பார்த்தால் நியாயமாகப்படும் இந்தக் கூற்றுக்கு பின்னால், அவர்கள் ஒடுக்கும் வர்க்கமாக மக்களை ஒடுக்கும் பிரிவாக தொடர்ந்தும் இருக்கின்றனர். இதனைத்தான் "அடையாள அரசியல்" பிரதிபலிக்கின்றது. இதை மூடிமறைப்பதும் மறுப்பதும்தான் சமாந்தர கோட்பாடு. இங்கு "ஒடுக்குபவர்" ரை வர்க்கமாகப் பார்க்கக் கூடாது, அதுபோல் "ஒடுக்கப்படுபவர்"ரையும் பார்க்கக் கூடாது. தனித்தனி நேர்கோடாக்கி சமாந்தரமாக விட வேண்டும். வர்க்கரீதியாக பார்த்து, இரண்டில் இருந்து பிரிந்த ஒன்றுபட்ட கூறுகள் ஒன்றில் சந்திப்பதை போராட்டத்துக்கு எதிரானதாக பலவீனமானதாக காட்ட முனைகின்றனர்.

தொடரும்

பி.இரயாகரன்

27.03.2012

1.வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் "சமாந்தரக்" கோட்பாடு பற்றி - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 01