சமூகத்தை வியாக்கியானம் செய்யும் அறிவுப்புலமை சார்ந்த பிழைப்புவாத பிரமுகர் லும்பன் அரசியலா அல்லது சமூகத்தை தலைகீழாகப் புரட்டிப் போடும் புரட்சியாளர்களின் நடைமுறை அரசியலா என்பதை அடிப்படையாகக் கொண்டு, அரசியல் - இலக்கிய சமூகக் கூறுகளை குறிப்பாகவும் நுட்பமாகவும் ஆராய்ந்து தெளிவுபெற்று நாம் அணி திரள வேண்டும். எது போலி எது உண்மை என்பது, மக்களுடன் அவர்கள் கொண்டுள்ள ஈடுபாடும் அதன்பாலான அவர்களின் நடைமுறையும்தான் தீர்மானிக்கின்றது. நடைமுறையைக் கோராத, நடைமுறையில் பங்குகொள்ளாத வெளியில், தனிப்பட்ட கருத்துகள் வியாக்கியானங்கள் தனிநபர் பிழைப்புவாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் தான் அரசியல் விளைவாக தருகின்றது.

சொந்த மக்களைச் சார்ந்து நின்று, தங்கள் கடந்தகால மக்கள் விரோத அரசியலை மறுதலிக்காத அனைத்தும் மீண்டும் போலியானது புரட்டுத்தனமானது. சொந்த மக்களைச் சாராது, அன்னிய சக்திகளை சார்ந்து நின்று முன்வைக்கும் அரசியல் போக்கிலித்தனமானது. இதை அம்பலப்படுத்தாத, பரஸ்பர கூட்டு அரசியல் மனித விரோதத்துடன் கூடிய வக்கிரத்தன்மை கொண்டது. ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்ரீதியாக சார்ந்து நின்று, அதற்காக தன்னை அந்த மக்களுடன் அமைப்பாக்க முனையாத பிரமுகர் அரசியல், மீண்டும் அந்த மக்களுக்கு எதிரான பிழைப்புவாத அரசியலாகும்;. இந்த வகையில் இதை விரிவாக நாம் ஆராய்வோம்;

1. புலியை விமர்சித்தால் அது சுயவிமர்சனமாகி விடாது. புலி மீதான அரசியல் விமர்சனமாகி அது ஆகிவிடாது.

1.1.புலியின் (தேசிய) அரசியலை விமர்சிக்க வேண்டும். இந்த வகையில் புலியின் பாசிச அரசியலை, அதன் ஆரம்பம் முதல் விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும். இதற்கு வெளியில் புலி மீதான விமர்சனம், சம்பவங்கள் மீதான விமர்சனம், அரசு சார்பு விமர்சனமாகவும் இன்று உள்ளது.

இந்த புலி அரசியல் மீதான விமர்சனம், அரசுக்கு எதிராகவே செய்யப்பட வேண்டும். இன்று புலி மீதான விமர்சனம், செத்த பாம்மை அடிக்கும் போலித்தனத்தையும் அடிப்படையையும் கொண்டு தொடர்ச்சியாக வெளிவருகின்றது. ஆக இங்கு இதற்கு மாறாக அரசியல் ரீதியான விமர்சனமும், சுயவிமர்சனமுமே அடிப்படையானது. அதாவது புலி மீதான விமர்சனத்துக்கு அப்பால், அரசியல் ரீதியான விமர்சனமாக, சுயவிமர்சனமாக இருக்கவேண்டும்;. இல்லாத அனைத்துப் போக்கையும் நாம் அம்பலப்படுத்த வேண்டும்.

1.2.பாசிச அரசியலுடன் கொண்டிருந்த அரசியல் உடன்பாட்டையும், அதன் மூலம் மனித இனத்துக்கு இழைத்த குற்றத்தையும் அரசியல் ரீதியாக பொறுப்பேற்று சுயவிமர்சனம் செய்ய வேண்டும். இதைச் செய்யாத அரசியலை அம்பலப்படுத்த வேண்டும்.

1.3. புலிப் பாசிசத்தை எதிர்த்தும் அரச பாசிசத்தை எதிர்த்தும், 1980களில் தொடங்கி 2009 வரை தொடர்ந்த போராட்டத்தை அங்கீகரித்து, அதை அடையாளப்படுத்தாத அரசியல் பம்மாத்தானது.

அதாவது நேர்மையான உண்மையான அரசியல் - இலக்கிய பாத்திரத்தை, இவர்கள் சமூகத்துக்கு ஆற்ற முடியாது. இது பொய்யானது போலியானது. புலிகள்; மீதான விமர்சனம் ஏற்கனவே செய்யப்பட்டிருப்பதை மூடிமறைத்துக் கொண்டு, செய்யும் விமர்சனம் திருட்டு மட்டுமின்றி முடிச்சுமாற்றித்தனமுமாகும். இது செய்யவேண்டிய அரசியல் விமர்சனத்துக்கு பதில், அதே அரசியலை பாதுகாத்துக் கொண்டு புலி நடத்தையை விமர்சிக்கும் புலமைசார் அரசியல் மோசடியாகும். இதை நாம் அனுமதிக்க முடியாது.

2.அரசின் கைது மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகாத பின்னணியில் இருந்து கொண்டு, தொடரும் அரசியல்

2.1.இந்தியா- இலங்கை அரசுடன் அரசியல் ரீதியாக கொண்டிருந்த உறவின் பின்னணியில் இருந்து அரசியல் செய்யும் போக்கை நாம் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும்.

2.2.இந்தியா- இலங்கை அரசுடன் அரசியல் ரீதியாக உறவு கொண்டிராத, ஆனால் அதன் பின்புலத்தில் தொடர்ந்து வாழ்ந்;தபடி செய்யும் அரசியலை அம்பலப்படுத்த வேண்டும்.

இவ்விரண்டில் ஏதோ ஒன்றின் பின்னணியில் இருந்தபடி, அரசியல் இலக்கியம் செய்வதை நாம் எதிர்நிலையில் வைத்துதான் அணுகவேண்டும். இதில் இருந்து விடுபடாமல், இதை விமர்சிக்காமல் செய்யும் அரசியல் அபத்தமானதும், அருவருக்கத்தக்கதுமாகும். இந்த அரசியல் பின்னணியில் இருந்து செய்யும் அரசியல், அதற்கு உதவுவதுடன் உள்நோக்கமும் கொண்டதுமாகும்.

3.தம்மை அரசுக்கு வெளியில் சுயாதீனமான சுதந்திரமான இருப்பாக, சுதந்திரமான கருத்தாக காட்டிக் கொண்டு, அரசுக்கு சேவைசெய்தல்

3.1.அரசுக்கு தம்மை தெரியாது என்றும், தம்மை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று கூறியபடி, அரசுக்கு தெரியும் வண்ணம், அதன் துணையுடன் தங்கள் முன்னைய புலி பிரமுகர் அடிப்படையை முன்னிலைப்படுத்தி செய்யும் அரசியல் போலியானது, புரட்டுத்தனமானது.

3.2.நிர்ப்பந்தம் மற்றும் சூழல் காரணமாக தாம் விரும்பாத சக்திகளின் பின் நிற்பதாக கூறிக்கொண்டு, தொடரும் அரசியல் மோசடி.

புலிக்கு பின் நின்றதற்கும், அரசுக்கு பின் நின்றதற்கும், தொடர்ச்சியாக பலரும் சொல்லுகின்ற அதே அரசியலின் தர்க்கத்தின் தொடர்ச்சியாகும். இப்படி இருந்தபடி அரசியல் செய்யமுடியாது. நேர்மையானவர்கள் இப்படி இருந்தபடி அரசியல் செய்யமாட்டார்கள். நாளை கருணாவும், டக்கிளஸ்சும், கேபியும் கூட இதைத்தான் சொல்வார்கள். அரசியல் செய்தபடி, இதைச் சொல்வது மோசடியானது, புரட்டுத்தனமானது.

4. இவர்கள் முன்வைக்கும் அரசியல் - இலக்கிய உள்ளடக்கம் தொடர்பாக

இது ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து, ஓடுக்குமுறையாளர்களுக்கு எதிராக முன்வைக்கப்படாத அனைத்தும், ஒன்றில் ஒடுக்குமுறையாளர்களை சார்ந்து அல்லது தங்களை பிரமுகராக்கும் அரசியல் தளத்தில் வைத்து இவைகளை அரங்கேற்றுகின்றனர். இந்த அரசியல் பின்னணியில் அரசியல்மயமாகாத படைப்பு குறித்து அரசியல் வேஷங்கள், தொடர்ச்சியாக அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

5. இவர்கள் எதனை யாரை முதன்மைப்படுத்தி, யாரைச் சார்ந்து நிற்கின்றனர் என்பது தொடர்பாக

ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டுவதை முதன்மைப்படுத்தாத, பிரமுகர்களை முதன்மைப்படுத்தி செய்யும் அரசியல் போக்கிலித்தனமானது. சமூகத்துக்கு கேடு செய்வதாகும்.

தம்மை முன்னிலைப்படுத்த, இவர்கள் முன்னிறுத்திக் காட்டும் அரசியல்-இலக்கிய பிரமுகர்கள் கடந்த காலத்தில் என்ன செய்தார்கள்? புலமை சார்ந்த மோசடி மூலம், தம்மைத்தாம் பிரமுகராக்கினர். மக்களை அணிதிரட்டும் அரசிலை முன்வைத்து, அதை இவர்கள் செய்தது கிடையாது. அந்தப் பிரமுகர் வழியில் தாங்களும் மக்களை வைத்து பிழைக்க அவர்களை முன்னுதாரணம் காட்டுகின்றனர்.

பிரமுகர்களை முன்னிலைப்படுத்தி முன்வைக்கும் அரசியல், மக்களை முன்னிலைப்படுத்துவது கிடையாது. வில்லங்கமாக பிரமுகரை அறிமுகப்படுத்தும் புலமை சார்ந்த அறிவுப் புலம்பல் போலியானது, மக்களுக்கு எதிரானது. இங்கு பிரமுகர்களை முன்னிலைப்படுத்தாத அரசியல்தான், குறைந்த பட்சம் மக்கள் சார்ந்த நேர்மையான அரசியலாகும்.

மற்றும் இவர்களும், இவர்கள் காட்டும் பிரமுகர்களும் கடந்த மற்றும் நிகழ்கால பாசிசத்தை எப்படி எதிர்கொண்டனர்? எதிர்கொள்கின்றனர்? பாசிசத்தை எதிர்த்து மக்களை அணிதிரட்டினரா?, அணிதிரட்டுகின்றனரா? சொல்லுங்கள். சமூகத்தைப் பற்றி பேசும் நீங்கள் செய்யாது யார் செய்வது? சொல்லுங்கள். நீங்கள் செய்யத் தேவையில்லை என்றால், எதற்காக சமூகத்தைப்பற்றி கதைக்கி;றீர்கள்? சொல்லுங்கள். சமூகத்தை இவ்வகையில் வியாக்கியானம் செய்வது, தனிநபர் பிழைப்பு சார்ந்தது. சமூகத்தை மாற்றுவதற்காக உழைப்பது தான், சமூகம் சார்ந்த உண்மையானது நேர்மையானது.

இவர்கள் முன்னிறுத்தும் பிரமுகர்கள், கடந்தகாலத்தில் உண்மைகளை எப்படி சமூகத்தின் முன் நிலைநாட்டினர்? சொல்லுங்கள். யார் எவர் உண்மையாக சமூகத்துக்கு நேர்மையாக இருந்தனர்? சொல்லுங்கள். ஆக இவர்கள் தாம் தம் பிரமுகர்தனத்தை நிலைநிறுத்த, கடந்தகாலத்தில் மக்களை அணிதிரட்ட முனையாத பிரமுகர்களையும், மக்களின் எதார்த்தம் மீது கருத்துச் சொல்லாத பச்சோந்தி பிரமுகர்களையும் சார்ந்து நின்று, தம்மை அதேபோல் இன்று முன்னிறுத்துகின்றனர்.

குறிப்பாக இவர்கள் முன்னிறுத்தும் பிரமுகர்களின் கடந்தகால அரசியல் மற்றும் நடைமுறை மீதான விமர்சனம் இன்றி செய்யும் அரசியல் போலித்தனமானது, புரட்டுத்தனமானது, அயோக்கியத்தனமானது அவர்களை அரசியல் ரீதியாக பாதுகாத்தபடி, அவர்களை வில்லங்கமாக முன்னிறுத்திக் காட்டுவதன் மூலம், தம்மை முன்னிறுத்தி அதே வழியில் மக்கள் விரோத அரசியலையும் இலக்கியத்தையும் மோசடி செய்கின்றனர்.

6. எந்த தளத்தில் நின்று, யாரின் துணையுடன் தமது அரசியலை முன்வைக்கின்றனர் என்பது தொடர்பாக

சமூகத்தை அணிதிரட்டாத, அதைக் கோராத அரசியல் - இலக்கிய தளத்தில், பிரபலங்கள் சார்ந்தும், பிரமுகர்களைச் சார்ந்தும், அரசியல் - இலக்கிய வர்த்தகம் சார்ந்தும் முன்வைக்கும் அரசியல் இலக்கியம் மக்கள் சார்ந்ததல்ல. அது மோசடித்தனமானது. மக்களை சார்ந்து நின்று, அவர்களில் தங்கி நின்று செய்யும் மக்கள் அரசியலுக்கு, இவர்களது அரசியல் நேர் எதிரான பிழைப்பு அரசியலாகும்.

இப்படி சமூகத்தை வியாக்கியானம் செய்யும் அறிவுசார்ந்த புலமை மூலம், சமூகத்தை மாற்றுவதற்கு எதிரான திசையில் பிரமுகர் அரசியல் மூலம் தன்னை முன்னிறுத்தி தன்னை ஒருங்கிணைக்க முனைகின்றது. இதற்காக அது பலவிதமான வேஷம் போட முனைகின்றது. இதை நாம் அனுமதிக்க முடியாது. சமூகத்தைப் புரட்டிப் போடும் அரசியல் அல்லாத அனைத்தும், கேள்விக்கு இடமின்றி அம்பலப்படுத்த வேண்டும்.

பி.இரயாகரன்

10.03.2012