மேற்கு சார்பாக இந்திய மேலாதிக்கத்தை இலங்கையில் நிறுவுவதில் ஏற்பட்ட தோல்விதான், அமெரிக்காவை நேரடியாகக் களத்தில் இறக்கியிருக்கின்றது. இந்தியாவின் இழுபடும் நழுவல் ராஜதந்திரத்துக்குப் பதில், வெளிப்படையான மிரட்டலை இலங்கையில் வைத்தே அமெரிக்கா விட்டிருக்கின்றது.

தென்னாசியாவில் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கமே மேற்கின் உலக மேலாதிக்கத்துடன் இணைந்துதான் இயங்குகின்றது. ஒன்றையொன்று சார்ந்தது. இந்த நிலையில் இலங்கை அரசு மேற்குக்கு எதிரான ஏகாதிபத்தியங்களான ருசியா, சீனா முதல் ஈரான் வரை இலங்கையில் முன்னிறுத்திய, அதன் அணுகுமுறை அமெரிக்காவின் வெளிப்படையான எதிர் தன்மை கொண்ட தலையீடாக மாறுகின்றது.

இதற்காக தன்னை ஒடுக்கப்பட்ட மக்களின் நண்பனாகவும், அநியாயத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பதும் போன்று வேஷம் போட்டுக்கொண்டு அமெரிக்கா களமிறங்கியுள்ளது. அது இலங்கை மண்ணில் நின்று, ஆட்சியாளர்களையே மிரட்டுகின்றது. பேரினவாத தேசியத்தை வைத்து வீரம் பேசி வந்த ஆளும் கூட்டமோ, பெட்டிப் பாம்பாக அடங்கியொடுங்கி சுருண்டு கிடக்கின்றது.

இந்த அமெரிக்காவின் உலக மேலாதிக்க அரசியல் பின்னணியில், அரசுக்கு எதிராக கூத்தடிக்கும் அரசியல் பிழைப்புகளும் கூடிக் கும்மியடித்து அரங்கேறுகின்றது. இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களுக்கு, அமெரிக்காவின் இந்த மேலாதிக்க நலன்கள் உதவுவதாக கூறி நடத்தும் "விடிவு" அரசியல், ஒட்டுமொத்த மனித இனத்துக்கே எதிரானது.

இது புலிகளின் கொடுமைக்கு எதிராக பேரினவாத அரசை ஆதரித்த புலியெதிர்ப்புக் கூட்ட அரசியல் போல், அரசின் கொடுமைகளுக்கு எதிராக உலக மேலாதிக்க அமெரிக்காவை ஆதரிக்கும் மனிதவிரோத அரசியலாகவே அரங்கேறுகின்றது.

உலகை மேலாதிக்கம் செய்யும் அமெரிக்காவும், சிறுபான்மை இனங்கள் மீது மேலாதிக்கம் செய்யும் பேரினவாத சிறிலங்கா அரசும், மக்கள் மேல் குறுந்தேசிய மேலாதிக்கத்தைச் செய்யும் தமிழ் தேசியவாதிகளும், ஒரே குட்டையில் ஊறிய மனிதவிரோத மட்டைகள் தான். இங்கு மக்கள் மேல் மேலாதிக்கம் செய்யும் நோக்கத்துடன், மக்கள் பிரச்சனைகளில் தமக்கு அக்கறை இருப்பதாக காட்டி தலையிடுகின்றனர்.

இந்த வகையில் இனவொடுக்குமுறையை முன்னிறுத்தி, தென்னாசியாவின் பிராந்திய நலனை இலங்கையில் இந்தியா நிறுவ முனைந்தது. இது உலக மேலாதிக்கம் செய்யும் அமெரிக்க நலனுடன் ஒன்றுபட்டது. இந்தவகையில் தென்னாசியாவில் இந்தியாவின் ஊடான அமெரிக்காவின் மேலாதிக்க யுத்ததந்திரத்தின் தோல்வியை அடுத்து, அமெரிக்கா நேரடியாக களம் இறங்கி இருக்கின்றது. அது இலங்கையில் வைத்து, தனது நிலையை பிரகடனம் செய்ததன் மூலம், இந்தியாவின் நழுவும் ராஜதந்திரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

இலங்கை, ஏகாதிபத்தியத்துக்குள்ளான முரண்பாட்டைக் கொண்டு மேற்கு மற்றும் இந்தியாவுக்கு எதிராக நடத்திய அரசியலை முடிவுக்கு கொண்டு வருமாறு, அமெரிக்கா வெளிப்படையாக மிரட்டுகின்றது. ருசியா, சீனாவைச் சார்ந்தும், மேற்குடன் முரண்பட்ட ஈரான் முதல் கொண்ட நாடுகளின் பின்பலத்திலும் மேற்குக்கு எதிரான அரசியல் பின்புலத்தில் தான், அமெரிக்கா உலக மேலாதிக்க நோக்குடன் இலங்கைக்குள் மூக்கை நுழைக்கின்றது.

இதற்காகவே இது இலங்கை அரசின் யுத்தக்குற்றங்கள் பற்றியும், இனப்பிரச்சனைக்கான தீர்வு சார்ந்த விடையங்களையும் முன்னிறுத்தி, தன் மேலாதிக்க எல்லைக்குள் இலங்கையை அடங்கிப் போகக் கோருகின்றது.

அமெரிக்காவே சரணம், இந்தியாவே சரணம் என்று இலங்கை கூறுமாயின், அமெரிக்க மற்றும் மேற்கின் இன்றைய அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். இந்தப் பின்னணியில் ஏற்கனவே இந்தியா இலங்கையை ஆக்கிரமித்துத் திணித்த 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதை தீர்வாக முன்வைக்கின்றனர். இதைத்தான் இன்று குறுந்தேசியத்துக்கு தலைமை தாங்கும் கூட்டமைப்பும் கேட்கின்றது. இப்படி இதற்குள் காய்நகர்த்தல்களும், அரசியல் கூத்தாடல்களும் கூடி அரங்கேறுகின்றது. தீர்வு என்பது ஏற்கனவே உள்ள சட்டத்தை, நடைமுறைப்படுத்தக் கோருவதாகத்தான் உள்ளது. இதற்குத்தான் பேச்சுவார்த்தை முதல் சர்வதேச நகர்வுகள் வரையான வெளி வேஷங்கள் அரங்கேற்றப்படுகின்றது.

மறுதளத்தில் இலங்கை இடதுசாரிய அரசியல் சக்திகள், இனபிரச்சனைக்கான தீர்வை முன்வைத்துப் போராடாத அரசியல் வெற்றிடத்தில் தான், படுபிற்போக்கான வலதுசாரிய கூட்டமைப்பு முதல் இந்தியா அமெரிக்கா வரை அவற்றை தன் கையில் எடுக்கின்றது. தன்னை மக்களின் நண்பனாகக் காட்டி வேஷம் போட முடிகின்றது. எப்படி இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டான யுத்தக்குற்றம், மற்றும் தீர்வை முன்வைத்து இலங்கை மீது மேலாதிக்க அரசியலை நடத்துகின்றதோ, அதுபோல் இடதுசாரிய அரசியலும் இனப்பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்காத மக்களை ஏய்க்கும் அரசியலை நடத்துகின்றனர்.

இப்படி அடிப்படை முரண்பாட்டுக்கான அரசியல் தீர்வை நிராகரித்தபடி, அடிப்படை முரண்பாட்டினால் சமூகம் சந்திக்கும் நெருக்கடிகள் மீதான தீவிரமான செயல்பாடுகள் மூலம் அரசியல் நடத்த முற்படுகின்றனர். இது மக்களை ஏய்த்தபடி, ஆள்பிடிக்கும் அரசியலையே முன் நகர்த்துகின்றனர்.

இந்தியாவும் அமெரிக்காவும் யுத்தக்குற்றம் மற்றும் இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று கூறி மேலாதிக்க அரசியல் நடத்துவது போல், காணாமல் போனவர்களை முன்னிறுத்தி குறுகிய இடதுசாரிய அரசியலை முன்தள்ளுகின்றனர். இது வெளிப்படையற்ற மூடிமறைத்த மக்களை ஏமாற்றும் அரசியலாகும். இது சாராம்சத்தில் இனப்பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்காது, மூடிமறைத்த பேரினவாதத்தை தக்கவைத்துக் கொண்ட இடதுசாரியத்தை முன்தள்ளுகின்றனர்.

இப்படி இடதுசாரிகள் முதல்கொண்டு வலதுசாரிய கூட்டணி வரை மக்களை ஏய்க்கின்ற பித்தலாட்ட அரசியலை இன்று நடத்துகின்றனர். இதைத்தான் இந்தியா முதல் அமெரிக்கா வரை தங்கள் மேலாதிக்க நலனுடன் செய்கின்றனர். இதற்கு வெளியில் மக்களைச் சார்ந்து, வெளிப்படையான அரசியல் மட்டும்தான், மக்களை அவர்களின் உண்மையான விடுதலைக்கு வழிநடத்தும். இன்று இதை நோக்கிய கவனமும் அக்கறையும் தான், புரட்சியாளர்களின் குறிப்பான மையமான நடைமுறையாக அமைய வேண்டும். வெளிவேஷங்களில் மயங்கிவிடுவது, அதை நம்பி கிடப்பது, மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

பி.இரயாகரன்

16.02.2012