உலகமயமாக்கலின் கீழ் தொழிலாளி வர்க்கம் எவ்வாறு எந்தத் திசையில் போராட வேண்டுமென்பதை உணர்த்தும் வகையில், "மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டமும் வால் ஸ்ட்ரீட் முற்றுகைப் போராட்டமும் கற்றுத்தரும் பாடம்: புரட்சிகர அரசியலே தீர்வு!' என்ற தலைப்பில் திருச்சி பு.ஜ.தொ.மு. அரங்கக் கூட்டத்தை 18.12.2011 அன்று நடத்தியது.

பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கம், அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புசங்கம் ஆகிய பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த அரங்கக் கூட்டத்தை அ.த.வி.பா.சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் சேகர் தலைமையேற்று நடத்தினார். மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டத்திலிருந்து கற்றறிய வேண்டிய படிப்பினைகளை விளக்கியும், முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிரான வால் ஸ்டிரீட் போராட்டம் ஒரு கட்டத்துக்கு மேல் முன்னேற முடியாமல் தேங்கிவிட்ட நிலையில், பாட்டாளி வர்க்க அரசியல் தலைமையை நிறுவ வேண்டிய அவசியத்தை உணர்த்தியும் சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு. மாநிலப் பொதுச் செயலர் தோழர் சுப. தங்கராசு, முதலாளித்துவத்தின் முதுகெலும்பை முறிக்க கம்யூனிசக் கொடியின் கீழ் உலக மக்கள் ஒன்றிணைந்து போராட அறைகூவினார். வர்க்கப் போராட்ட உணர்வூட்டிய ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியுடன் நிறைவடைந்த இந்த அரங்கக் கூட்டம், தொழிலாளர்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

25.12.2011 அன்று ஓசூர் ஆந்திரசமிதி அரங்கில் "மாருதி கார் தொழிலாளர்களிடம் பணிந்தது நிர்வாகம்!  அனுபவம் கற்போம்! முதலாளித்துவத்துக்குச் சவக்குழி வெட்டுவோம்!' என்ற தலைப்பில் பு.ஜ.தொ.மு. கருத்தரங்கத்தை நடத்தியது. தோழர் பரசுராமன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் தொழிற்சங்க முன்னோடிகளும் உரையாற்ற,  மாருதி தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போராட்டக் காட்சிகள் திரையிடப்பட்ட பின்னர், பு.ஜ.தொ.மு. மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். இரண்டாவது அமர்வில் வால்ஸ்டிரீட் முற்றுகைப் போராட்டக் காட்சிகள் திரையிடப்பட்ட பின்னர், முதலாளித்துவத்தின் முதுகெலும்பை முறிக்க கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய அவசியத்தை விளக்கி "வால்ஸ்டிரீட் முற்றுகை: திணறும் முதலாளித்துவத் தலைமைப் பீடம்!' என்ற தலைப்பில் தோழர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். பார்வையாளர்களாக வந்திருந்த தொழிலாளர்களிடம் போராட்டப் பாதையை விளக்கி, புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இக்கருத்தரங்கம் அமைந்தது.

பு.ஜ.செய்தியாளர், திருச்சி.