புதிய தாராளவாதக் கொள்கைகளைத் திணித்துவரும் ஏகாதிபத்திய வல்லரசுகளாலும் சர்வதேச நிதிநிறுவனங்களாலும் முன்தள்ளப்படும் "ஊழல் ஒழிப்பு', "சிறந்த அரசாளுமை' போன்ற முழக்கங்களை வைத்துக் கொண்டு ஊழல் எதிர்ப்பு நாடகமாடும் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலிதான் அன்னா ஹசாரே. பல இலட்சம் கோடிகளாக  ஊழல் பெருத்துப் போனதற்கு தனியார்மயக் கொள்கைதான் காரணம் என்ற உண்மையை மறைத்து, பெருமுதலாளிகளின் நன்கொடையில் ஊழல் எதிர்ப்பு சவடால் அடிக்கும் அயோக்கிய சிகாமணிதான் அன்னா. இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பனக் கைக்கூலியான இவர், டெல்லியில் நடத்தப் போகும் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக கடந்த டிசம்பர் 18ஆம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வந்தார்.

 

 

தனியார்மயதாராளமயத்தால் வாழ்விழந்த மக்களின் கோபத்தைத் திசைதிருப்பிவரும் இந்த காந்திக்குல்லாய் கிழவரின் யோக்கியதையை அம்பலப்படுத்தி, "கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரேவை விரட்டியடிப்போம்!' என்ற முழக்கத்துடன் பு.மா.இ.மு. நகரெங்கும் சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டதோடு, டிசம்.18 அன்று மாலை 3 மணியளவில் பு.மா.இ.மு. சென்னைக்கிளை இணைச் செயலர் தோழர் நெடுஞ்செழியன் தலைமையில் பச்சையப்பன் கல்லூரி வாயிலருகே முன்னறிவிப்பின்றி திடீரெனக் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. முன்னணித் தோழர்களை அடையாளங்கண்டு போலீசு அடித்து இழுத்துச் செல்லத் தொடங்கியதும், அலையலையாக  மற்ற இடங்களிலிருந்து தோழர்கள் கருப்புக் கொடியுடன் திரண்டு முழக்கமிடவே அனைவரையும் சுற்றிவளைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலீசு,  13 தோழர்களைக் கைது செய்து சிறையிலடைத்தது.

ஊழலின் ஊற்றுக் கண்ணாக உள்ள கார்ப்பரேட் முதலாளிகளை எதிர்க்காமல், ஊழல் எதிர்ப்பு சவடால் அடிக்கும் அன்னாவை அம்பலப்படுத்தி நடந்த இந்த திடீர் போராட்டம், இளைஞர்களிடமும் உழைக்கும் மக்களிடமும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

பு.ஜ.செய்தியாளர், சென்னை.