சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவது மற்றும் 13,500 மக்கள் நலப் பணியாளர்களைத் தடாலடியாக வேலை நீக்கம் செய்தது என்ற அ.தி.மு.க. அரசின் சமீபத்திய இரண்டு முடிவுகளும் ஜெயாவின் பார்ப்பன பாசிச வக்கிரபுத்தியை மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளன.  "அவர் திருந்திவிட்டார்; அவரிடம் நிறைய மாற்றங்கள் தென்படுகின்றன' எனப் பார்ப்பன பத்திரிக்கைகளும் அவரின் துதிபாடிகளும் கூறி வந்ததெல்லாம், தமிழக மக்களை ஏய்ப்பதற்காகச் செய்யப்பட்ட மோசடிப் பிரச்சாரம் என்பதையும் இவ்விரு நடவடிக்கைகளும் அம்பலப்படுத்திவிட்டன.

 

 

கடந்த தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தைக் கைகழுவியதைப் போலவே, அதே ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் கைகழுவிவிட முடியாது என ஜெயா கும்பல் உணர்ந்தே இருந்தது.  அந்நூலகம் குழந்தைகள், பார்வையற்றோர் உள்ளிட்டு அனைவருக்கும் பயன்படத்தக்க வகையில் சிறந்த முறையில் நவீன வசதிகளோடு கட்டப்பட்டுள்ளது என்ற அங்கீகாரத்தை ஏற்கெனவே பொதுமக்கள் மத்தியில் பெற்றிருந்தது.  அதனால்தான், இந்நூலகத்தை சென்னையில் தனது ஆட்சி அமைக்கவுள்ள ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்காவில் இன்னும் நவீன வசதிகளோடு அமைக்கப் போவதாகவும்; தற்பொழுதுள்ள கட்டிடத்தை ஆசியாவிலேயே சிறந்த குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்போவதெனவும் அறிவித்தது, அ.தி.மு.க. அரசு.

சென்னை  எழும்பூரில் செயல்பட்டு வரும் அரசு குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை, அங்கு பிறக்கும் சிசுக்களை நாய்கள் உள்ளே நுழைந்து தூக்கிச் சென்று விடும் அளவிற்குச் சீரழிந்து போயிருக்கிறது.  போதியமருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன்உள்ளிட்ட நவீன கருவிகள், வசதிகளின்றி அம்மருத்துவமனை முடங்கிப்போய்க் கிடக்கிறது.  "இம்மருத்துவ மனையின் வசதிகளை மேம்படுத்துவதோடு, புதிதாகக் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையை அமைக்கவேண்டும் என்றால், அதைத் தமிழகத்தின் தென்பகுதியில் அமைத்தால்தான் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்' என மருத்துவர் கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.  ஏற்கெனவே இயங்கிவரும் இம்மருத்துவ மனையைச் சீரமைப்பதைப் புறக்கணித்து வரும் அ.தி.மு.க. அரசு, புதிதாக ஒரு மிகச் சிறந்த குழந்தைகள் மருத்துவமனையை நூலகக் கட்டிடத்தில் அமைக்கப் போவதாக அறிக்கை விடுவது, கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம் என்பதைத்தான் நினைவுபடுத்துகிறது.

எனவே, ஜெயாவின் இந்த அறிவிப்பு, அவரது காழ்ப்புணர்ச்சியை, வக்கிரத்தை மறைத்துக் கொள்ளும் மூடுதிரை தவிர வேறில்லை. ஜெயா கும்பலின் கபடம் நிறைந்த இந்த நொண்டிச் சமாதானத்தைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதோடு, அந்நூலகத்தை இடம் மாற்றம் செய்வதற்கும் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.  இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில்,  நூலக இடமாற்றத்திற்கு இடைக்காலத் தடையுத்தரவு அளித்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம்.

அரசு மருத்துவமனைகளின் மீது ஜெயா கொண்டுள்ள அக்கறைக்கு மேலும் பல எடுத்துக்காட்டுகளைத் தர முடியும். ஜெயா பதவியேற்றவுடனேயே, சேலத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை அம் மருத்துவமனை பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் மைய சுகாதார அமைச்சராக இருந்தபொழுது, மைய அரசின் உதவியோடு தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காகவே இழுத்து மூடினார்.  தற்பொழுது அம்மருத்துவமனை சீரழிந்துபோய்க் கிடப்பதாக ஜெயாவின் ஆதரவு ஏடான இந்தியா டுடே எழுதுகிறது.

சென்னையிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அருகில் அமைந்திருந்த மைய சிறைச்சாலை புழலுக்கு இட மாற்றம் செய்யப்பட்டவுடனேயே, அரசு பொது மருத்துவமனையை விரிவாக்குவதற்கு அந்த இடத்தைப் பயன்படுத்தப் போகும் திட்டத்தை தி.மு.க.அரசு அறிவித்தது. ஆட்சியைப் பிடித்த ஜெயா அத்திட்டத்தைக் கண்டு கொள்ளாததோடு, தலைமைச்  செயலகத்திற்காகத் திட்டமிட்டு கட்டப்பட்ட கட்டிடத்தைச் சிறப்பு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றும் குதர்க்கமான அறிவிப்பை வெளியிட்டார்.

தி.மு.க. ஆட்சியின்பொழுது பழைய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் இயங்கிவந்த செம்மொழித் தமிழ் நூலகத்தை, ஜெயா ஆட்சியைப் பிடித்தவுடனேயே அங்கிருந்து காலிசெய்து துரத்தியடித்துவிட்டார்.  அந்நூலகத்திலிருந்த நூல்களெல்லாம் தற்போதைய ஆட்சியில் கரையான் தின்னுமாறு மூட்டைகளாகக் கட்டிக் கிடப்பதாகக் கூறப்படுகிறது.  தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட 12,620 அண்ணா கிராம மறுமலர்ச்சி நூலகங்களையும் அனாதைகளைப் போலக் கைகழுவிவிட்டது, ஜெயா ஆட்சி.   இப்படிபட்ட ஆட்சி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை வேறு இடத்தில் சீரும் சிறப்புமாக அமைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவது, மக்கள் நலப் பணியாளர்களை வேலை நீக்கம் செய்தது இவ்விரண்டு பிரச்சினையிலும் ஜெயாவின் பார்ப்பனக் கொழுப்பு, மேட்டுக்குடி திமிர், ஆணவம், பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணும் குரூரப் புத்தி, காழ்ப்புணர்ச்சி ஆகிய கல்யாண குணங்களைத் தவிர வேறெதையும் காண முடியாது.  ஆனால், அவரை ஆதரிக்கும் பார்ப்பன ஏடுகளோ இவ்விரண்டு நடவடிக்கைகளுக்கும் வேறு நியாயங்களைக் கற்பித்து அவரைக் காப்பாற்ற முயலுகின்றன.

அண்ணா  நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யத் தேவையில்லை எனத் தனது தலையங்கத்தில் ஒரு புறம் முதலைக் கண்ணீர் வடிக்கும் தினமணி நாளிதழ் (நவம்பர் 4) இன்னொருபுறம், "அண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் மிகப்பெரிய அடையாளச் சின்னம் என்பதை முதல்வருக்கு ஏன் அவரது ஆலோசகர்கள் சுட்டிக்காட்டாமல் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை' எனப் போட்டுக் கொடுக்கும் வேலையைச் செய்கிறது. அதாவது, நூலகத்தைக் கட்டுவதில் நடந்துள்ள ஊழலை விசாரிக்க உத்தரவிட்டுவிட்டு, அதன் பின் நூலகத்தை இடமாற்றம் செய்யும் அறிவிப்பைச் செய்திருக்கலாம். இந்த ராஜதந்திரத்தைக் கடைப்பிடிக்க ஜெயா தவறிவிட்டார் என அலுத்துக் கொள்கிறது, தினமணி. ஆமையைத் திருப்பிப் போட்டு அடிக்க வேண்டும் எனச்சிறுவர்களுக்குச் சொல்லிவிட்டுப் போன பார்ப்பன நரித்தனம் இதுதான்.

ஜூனியர் விகடன் இதழ் (13.11.11) கழுகார் பதிலில் ஜெயாவின் வக்கிரப் புத்தியைச் சாடுவதற்குப் பதிலாக, "அவருக்கு (ஜெயாவிற்கு) கோபம் புத்தகங்களின் மீது அல்ல.  ஜெயலலிதா தனது வேதா இல்லம் வீட்டிலேயே பிரமாண்டமான நூலகத்தை முன்பு வைத்திருந்தார். எனவே, முதல்வருக்குப் புத்தகங்களின் மீது கோபம் வரவாய்ப்பு இல்லை.  கருணாநிதி மீதான கோபம்தான் அண்ணா நூலகத்தின் மீது காட்டப்பட்டுள்ளது' என ஜெயாவின் வாசிக்கும் பழக்கத்தை வியந்தோதுகிறது.

13,500 மக்கள் நலப் பணியாளர்களை ஒரே நாளில் தடாலடியாகத் துரத்தியடித்த ஜெயாவின் குரூரத்தை, சென்னை உயர் நீதிமன்றம் இவ்வேலை நீக்கத்திற்கு இடைக்காலத் தடைவிதித்து, அவர்களைப் பணியில் சேர்த்துக் கொள்ளும்படி இரண்டு முறை போட்ட உத்தரவுகளையும் ஒரு பொருட்டாக மதிக்காத ஜெயாவின் ஆணவத்தைக் கண்டிக்க முன்வராத பார்ப்பன பத்திரிக்கைகள், இப்பணியாளர்கள் அனைவரும் தி.மு.க.காரனைப் போலச் செயல்பட்டு வந்ததாகவும், பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் பழிபோட்டு ஜெயாவின் தொழிலாளர் வர்க்க விரோதப்போக்கிற்கு முட்டுக் கொடுக்கின்றன.

தமிழக அரசிற்குப் புதிதாகச் சட்டசபை கட்டுவதற்குத் தனது கடந்த ஆட்சியின்பொழுதே (200106) திட்டம் போட்டவர்தான் ஜெயா.  அதனை நிறைவேற்றிக் கொள்ள அவர் எடுத்த அடாவடித்தனமான நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியிலிருந்து எழுந்த எதிர்ப்பின் காரணமாக

அவரது ஆசை நிராசையாகிப் போனது.  தான் எண்ணியதை கருணா நிதி முடித்துவிட்டாரே  என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தைக் கைகழுவினார், ஜெயா. அதுபோல, தான் தலைமைச் செயலகம் கட்டத் தேர்ந்தெடுத்த இடத்தில் கருணாநிதி அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டிடத்தை அமைத்துவிட்டார் என்ற வயிற்றெரிச்சல் காரணமாகத்தான் அந்நூலகக் கட்டிடத்தையும் இழுத்து மூடிவிட முயன்று வருகிறார். ஆனால், தினமணியோ (நவம்பர் 4) இவ்விசயத்தில் கருணாநிதி காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொண்டிருப்பதாக இட்டுக்கட்டி எழுதுகிறது.

மக்கள் நலப் பணியாளர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் வேலை நீக்கம் செய்யப்படுவதையும், தி.மு.க. ஆட்சியில் பணியமர்த்தப்படுவதையும் ஒப்பிட்டு, இரண்டு கழக ஆட்சிகளுமே அப்பணியாளர்களைப் பந்தாடுவதாக எழுதி, பிரச்சினையை நியாயமற்ற முறையில் முன்வைக்கிறது, ஜூனியர் விகடன் (16.11.11).

இது மட்டுமின்றி, ஜெயா ஆட்சியின் அதிகாரமுறைகேடுகளைப் பூசிமெழுகுவதையும் சிரமேற்கொண்டு செய்து வருகின்றன ஜெயா ஆதரவு ஏடுகள்.  சென்னையில் அண்ணா மேம்பாலத்தை ஒட்டி அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்பில் அமைந்துள்ள 114 கிரவுண்ட் நிலம், தற்பொழுது அ.தி.மு.க. அரசில் அமைச்சராகவுள்ள அக்ரி கிருஷ்ண மூர்த்திக்கு நெருக்கமான தமிழ்நாடு தோட்டக்கலை சங்கம் என்ற தனியார் அமைப்பின் வசம் பல ஆண்டுகளாக இருந்து வந்தது.  கடந்த தி.மு.க. ஆட்சியில் அந்நிலத்தைத் தமிழக அரசு தன் வசம் எடுத்துக் கொண்டது. இதனை எதிர்த்து அச்சங்கம் தொடுத்த வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் இது பற்றி முடிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், சென்னை மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்த மாவட்ட வருவாய் அதிகாரி, அந்நிலத்தை மீண்டும் தமிழ்நாடு தோட்டக்கலை சங்கத்திடம் ஒப்படைத்து உத்தரவிட்டார்.  இது முறைகேடான ஒதுக்கீடு என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்து தி.மு.க. சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.  இவ்வழக்கு தனக்கு எதிராகத் திரும்பும் என உணர்ந்த அ.தி.மு.க. அரசு, நிலத்தை மீண்டும் தன்வசம் எடுத்துக்கொண்டது.  இதன்பின், தி.மு.க. தொடுத்த வழக்கை, மனுதாரரின் கோரிக்கை நிறைவேறி வருகிறது என்ற அடிப்படையில் தள்ளுபடி செய்தது, உயர் நீதிமன்றம்.

200 கோடி ரூபாய் பெறுமான பொது நிலத்தை அ.தி.மு.க. அரசே அபகரித்துத் தனியாரிடம் தாரை வார்த்த இந்த முறைகேட்டை எந்தவொரு பத்திரிகையும் அம்பலப்படுத்தி எழுதவில்லை என்பதோடு, "முதல்வருக்கே தெரியாமல் இது நடந்துவிட்டது; அம்மாவின் கவனத்துக்குத் தடங்கல் இல்லாமல் ஒரு விஷயம் போய்ச்சேர்ந்தால், நிச்சயம் நடவடிக்கை இருக்கும் என்பதற்கு நிலத்தை மீண்டும் அரசு எடுத்துக்கொண்டது ஒரு உதாரணம்' என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்து எழுதுகிறது, ஜூனியர் விகடன் (30.11.11).

பொதுப் பாடத்திட்டத்தை ரத்து செய்ய முயன்றது தொடங்கி பால் மற்றும் பேருந்து கட்டண உயர்வை அறிவித்திருப்பது வரை, கடந்த ஆறு மாத கால ஜெயாவின் ஆட்சியில் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள் தமிழக மக்களுக்கு எதிரானதாகவே அமைந்துள்ளன.  மேலும், மின்வெட்டு, மணற் கொள்ளை, நில அபகரிப்பு, நகை பறிப்பு, சீமைச் சாராயத்தின் அமோக விற்பனை என கடந்த தி.மு.க. ஆட்சியில் காணப்பட்ட அனைத்து நிர்வாகச் சீர்கேடுகளும் அதிகார முறைகேடுகளும் அ.தி.மு.க. ஆட்சியிலும் தொடர்கின்றன. ஆனாலும், பார்ப்பன ஏடுகளும், ஜெயாவின் துதிபாடிகளும் நரகலில் நல்லரிசி தேடுவதையே தமது தர்மமாகக் கொண்டு செயல்படுகின்றன.  நரகல் என்றாலும், அது ஒரு பாப்பாத்தியின் நரகல் அல்லவோ!

. திப்பு