கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி நடந்து வரும் மக்கள் போராட்டத்தை ஆதரித்தும், பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்காக நாட்டு மக்களைப் பலியிடத் துடிக்கும் ஆட்சியாளர்களை எதிர்த்தும், தமிழகமெங்கும் மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, "3 சதவீத அணு மின்சாரத்திற்காக எதிர்காலச் சந்ததியினரைப் பலியிடாதே! பன்னாட்டுக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்காக இந்தியக் கடற்கரை முழுவதும் 36 அணு உலைகளை நிறுவத் துடிக்கும் மன்மோகன் சிங் கும்பல் ஒழிக! வல்லரசுக் கனவுக்கு நாட்டு மக்களைப் பணயம் வைக்காதே! இந்திய அரசு, இந்துவெறி பா.ஜ.க., காங்கிரசு கும்பலின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிப்போம்! கூடங்குளம்  இடிந்தகரை மக்கள் போராட்டத்தில் ஒன்றிணைவோம்!' என முழக்கங்கள் எதிரொலிக்க  மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி 16.11.2011 அன்று காலை 10 மணியளவில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் குணசேகர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர் புஷ்பதேவன், செல்வகுமார், கதிர்வேல் பாலாஜி, செந்தாமரைக் கந்தன் ஆகியோரும் ம.உ.பா. மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜுவும் சிறப்புரையாற்றினார்.

திருவண்ணாமலையில் துண்டுப் பிரசுரங்களுடன் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட ம.உ.பா.மையம், அதன் தொடர்ச்சியாக 23.11.2011 அன்று மாலை காந்தி சிலை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. வழக்குரைஞர் கண்ணன் தலைமையில், மாவட்டத் தலைவர் தோழர் பொன்.சுப்பிரமணியன், வழக்குரைஞர் சேகர், புவியன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு ஆகியோர் கண்டன உரையாற்றினர். திரளான உழைக்கும் மக்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டங்கள், அப்துல் கலாம் உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஏகாதிபத்தியங்களின் அடியாட்களாக பொய்ப்பிரச்சாரம் நடத்திவருவதைத் திரைகிழித்துக் காட்டி உழைக்கும் மக்களைப் போராட அறைகூவியழைப்பதாக அமைந்தது.

. பு.ஜ. செய்தியாளர்கள்