உலகின் மிக அமைதியான பகுதி என அறியப்படும் ஸ்கேன்டிநேவியாவில் உள்ளதொரு ஐரோப்பிய நாடு, நார்வே. ஈழம் உள்ளிட்டு உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில், ஏகாதிபத்திய உத்தியின்படி சமரசக் கட்டப்பஞ்சாயத்து செய்வதில் இந்நாடு பிரபலமானது. அகதிகளாகக் குடியேறுபவர்களுக்கு இந்நாட்டில் வழங்கப்படும் சலுகைகள் காரணமாக, "அகதிகளின் சொர்க்கம்' என இது அழைக்கப்படுகிறது. அது மட்டுமன்றி, நிம்மதியாக வாழத் தகுந்த நகரங்கள் உள்ள நாடுகளின் பட்டியலில், இது முதலிடத்தில் உள்ளது. இதனால், நார்வேயில் 1995  க்குப் பின்னர் புதிதாகக் குடியேறுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நார்வேயில் மட்டும் நான்கரை லட்சம் பேர், புலம்பெயர்ந்தோர் ஆவர். அவர்கள் பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் இருந்தும் மேற்காசிய நாடுகளிலிருந்தும் வருபவர்கள். ஈழத் தமிழர்களும் 15 ஆயிரம் பேருக்கும் மேலாகஉள்ளனர். நார்வேயின் மக்கள் தொகையில் 11 சதவீதம் பேர் புதிதாகக் குடியேறியோரும், அவர்களின் வாரிசுகளுமே.

 

 

இப்படிப்பட்ட நார்வேயின் நிம்மதியேக் குலைக்கும் சம்பவங்கள் அண்மைக் காலமாக நடக்க ஆரம்பித்துள்ளன. அந்நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் ஜூலை 22 ஆம் நாள் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் இருவர் இறந்தனர். இச்சம்பவம் நடந்த அதே நாளில், ஓஸ்லோவிற்கு அருகிலுள்ள உத்தேயா எனும் தீவில் நடந்த தொழிலாளர் கட்சியின் இளைஞரணி நிகழ்ச்சியில் புகுந்த மர்ம நபர் ஒருவர், கண்மூடித்தனமாகச் சுட்டதில் 90 பேர் பரிதாபமாக உயிரிழந்து, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தப் படுகொலைகள், மனநிலை பாதிக்கப்பட்டவனின் வெறிச்செயல் எனச் சொல்லப்பட்டாலும், சில நாட்களிலேயே இக்கொடூரத்தைச் செய்தவன் "நியோ நாசிச' கோட்பாட்டைப்  பின்பற்றும் ஆன் டெர்ஸ் பிரேவிக் என்பது தெரியவந்தது. இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் பிரேவிக், 1500 பக்கங்கள் கொண்ட தனது செயல்திட்ட அறிக்கையை இணையதளத்தில் வெளியிட்டிருந்தான். இந்த அறிக்கை நார்வேயில் புலம்பெயர்ந்துள்ள ஆப்பிரிக்க, மேற்காசிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் திட்டமிட்டு நார்வே பெண்களை மதம் மாற்றித் திருமணம் செய்வதன் மூலம் ஐரோப்பா இஸ்லாமியமயமாக்கப்படுவதாகவும், ஐரோப்பாவின் தூய்மை கெடுவதாகவும் சொல்கிறது. இதைத் தடுப்பதற்காக, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக உள்ள தாராளவாதிகள், இடதுசாரிகள் மீது தாக்குதலைத் தொடுக்கச் சொல்லும் பிரேவிக், முதற்கட்டமாகப் புலம்பெயர்வோருக்கு ஆதரவான கொள்கைகளைக் கொண்ட தொழிலாளர் கட்சியின் மீது இந்தக் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளான்.

மதச்சார்பின்மை பேசுவோரையும், கம்யூனிஸ்டுகளையும் முதலில் குறிவைத்துத் தாக்கவேண்டும் எனும் கருத்தில் இந்து மதவெறி பாசிசத்தோடு ஒத்துப் போகிற அதேசமயம், இனிமேல் புலம்பெயர்ந்து வரும் முஸ்லீம்களைத் தடுக்க வேண்டும் என்றும் ஏற்கெனவே நார்வேயிலுள்ள முஸ்லீம்கள் 2020 ஜனவரி முதல் நாளுக்குள் கிறித்துவத்துக்கு மாறாவிட்டால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்றும் அந்த நியோ நாசிச அறிக்கை கூறுகின்றது.

இந்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை நிறைவேற்றிடப் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஒத்த கொள்கையுடைய அடியாள் படைகளைத் திரட்டும் ஆலோசனையையும் பிரேவிக் முன் வைத்துள்ளான். குறிப்பாக, சீனாவிலுள்ள புத்த மதவெறியர்களையும், இந்தியாவிலுள்ள இந்து மதவெறியர்களையும், இஸ்ரேலின் யூத இனவெறிக் குழுக்களையும் உள்ளடக்கிய அடியாள் படை உருவாக்கப்பட வேண்டுமென்றும், ஒப்பந்த அடிப்படையில் "புனிதப் போரை' நடத்திவிட்டு, வேலை முடிந்தபின் அவரவர் நாடுகளுக்கு அடியாட்கள் சென்றுவிட வேண்டும் என்றும் திட்டம் தீட்டியிருக்கிறான். இதற்காக ஐரோப்பாவில் மட்டுமல்லாமல், வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆர்மீனியா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகளில் செயல்படும் "கலாச்சார காவலர்'களின் மின்னஞ்சல் முகவரிகளையும் பிரேவிக் தொகுத்து வைத்திருக்கிறான்.

நார்வேயில் தற்போது தோன்றியிருக்கும் இந்த நியோ நாசிசக் குழுக்கள் ஐரோப்பாவிற்குப் புதிதல்ல. புனிதப்போர், இனத்தூய்மை என்கிற பெயரில் பல பயங்கரவாத அட்டூழியங்களை நடத்திக் கொண்டிருக்கும் இந்த நாசிசக் குழுக்கள் 1990களுக்குப் பின்னர் ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்சு போன்ற நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு அகதிகளாக வருபவர்களைத் தாக்குவதே அவற்றின் இலக்காக உள்ளது.

2008  இல் உருவான ஏகாதிபத்திய உலகப் பொருளாதார நெருக்கடி நார்வேயிலும் வேலையிழப்பை அதிகரிக்கச் செய்ததால், அரசின் மீதான வேலையற்ற இளைஞர்களது அதிருப்தியும் அதிகரிக்கத் தொடங்கியது. இந்நெருக்கடியைத் தீர்க்க வக்கில்லாத ஆளும்வர்க்கம், அதிருப்தியைத் திசைமாற்றிவிட, அகதிகளாகக் குடியேறுபவர்களால்தான் நார்வே நாட்டினருக்கு வேலைவாய்ப்பு குறைவதாகவும், அரசு வழங்கும் பல சலுகைகள் குறைக்கப்படுவதற்கும் இதுவே காரணமென்றும் பிரச்சாரம் செய்து மக்களிடையே வெறுப்பை விதைத்தது. இந்த வெறுப்பு ஊதிப் பெருக்கப்பட்டு "தூய ஐரோப்பா' எனும் நாசிச கருத்தியலாக வளர்ந்து, புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களாக அவ்வப்போது நடந்தன. பலரும் இத்தாக்குதல்களை "கலாச்சார பன்முகத்துக்கு எதிரான தாக்குதல்' எனக் கண்டித்தாலும், அடிமனதில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மனப்போக்கில்தான் உள்ளனர். நார்வேயில் மட்டுமல்ல, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் இதுதான் நிலைமை.

ஸ்வீடன் நாடாளுமன்றத்திற்குச் சென்ற ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நிறவெறியும், இஸ்லாமிய எதிர்ப்பும் கொண்ட ஜனநாயகக் கட்சி 20 இடங்களில் வென்றது. இக்கட்சி புலம்பெயர்ந்தோருக்கான மானியங்களை வெட்டுவதையும், தலையில் கைக்குட்டை ஃ தலைப்பாகை கட்டுதல் போன்ற பிற மத அடையாள சின்னங்கள், ஸ்வீடிஷ் பாணியல்லாத கட்டிடங்கள் போன்றவற்றைத் தடை செய்வதையும் கோருகிறது. பின்லாந்தில் இருக்கும் புலம்பெயர்வோருக்கு எதிரான "அசல் பின்லாந்தியர்கள்' எனும் தேசியவாத அமைப்பு, கடந்த ஏப்ரலில் நடந்த தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ""பின்லாந்தியம் என்பதே கிறிஸ்துவம்தான்' என்பதுதான் அக்கட்சியின் முழக்கம். குரானையும் மசூதிகளையும் தடை செய்யக் கோரும், முஸ்லிம்களுக்குத் தலைவரி வசூலிக்கக் கோரும் நெதர்லாந்தின் சுதந்திரக்கட்சி சென்ற தேர்தலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. டென்மார்க்கின் மக்கள் கட்சி "கிறித்துவமே டேனிஷ் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த கூறு' எனவும், "டென்மார்க் புலம்பெயர் வோ ருக்கான நாடல்ல' எனவும் கூறுகிறது. இவ்வாறு ஐரோப்பா முழுவதும் "நியோ நாசிச'ப் போக்குகளைக் கொண்ட கட்சிகள் அரசியல் ரீதியாக வளர்ச்சியடைந்து வருகின்றன.

இஸ்லாமியர்களுக்கும், புலம்பெயர்ந்தவர்களுக்கும் எதிரான இத்தகைய இனவெறி நியோ நாசிசப் போக்குகளின் வளர்ச்சி, அந்தந்த நாட்டு ஆளும் வர்க்கங்களின் ஆசியோடுதான் நடக்கிறது. பொருளாதார நெருக்கடிகள் சமாளிக்க முடியாத அளவிற்கு வளர்ந்து கிரீஸ், ஸ்பெயின் என அடுத்தடுத்து ஐரோப்பிய நாடுகள் திவாலாகி மஞ்சள் கடுதாசி கொடுத்துவரும் நிலையில், வேலையிழந்து வீதிக்கு வந்திருக்கும் ஐரோப்பிய மக்களின் கோபம் தங்கள் மீது திரும்பாமலிருக்க, இந்நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் புலம்பெயர்ந்த ஆசிய ஆப்பிரிக்க மக்களைப் பலிகிடாக்களாக்கி வருகின்றன.

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு இட்லரின் நாசிசத்தை ஊட்டி வளர்த்த அதே முதலாளித்துவம்தான், இன்று தனது நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ள, "நியோ நாசிசத்தை'ச் சீராட்டி வளர்க்கிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட நியோநாசிசத்தின் கோரமான விளைவுக்குச் சாட்சியம்தான், பிரேவிக் போன்ற இனவெறியர்களின் வளர்ச்சியும் அவர்களின் கொலைவெறித் தாக்குதல்களும். பிரேவிக்கின் உடன்பிறப்புகள் இந்தியாவிலும் இருக்கிறார்கள் என்பதால், உழைக்கும் மக்கள் விழிப்புடனிருந்து இத்தகைய இனவெறி பாசிசக் கும்பல்களை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்.

. அன்பு