கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதியன்று, விழுப்புரத்திலுள்ள இ.சாமிக்கண்ணு என்ற கல்வி வியாபாபாரியின் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஏழுமலை பாலிடெக்னிக்கில் இரண்டாமாண்டு ஆட்டோமொபைல் படித்து வந்த மாணவரான பிரபாகரன், அந்நிறுவனத்தின் ஆசிரியரான குணசேகரன் என்பவரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இத்தகவல் அறிந்த பு.மா.இ.மு. தோழர்கள் அப்பாலிடெக்னிக் மாணவர்களை ஒருங்கிணைத்து "கொலைகார குணசேகரனுக்குப்பிணை வழங்காதே! உரிய விசாரணை நடத்தி கொல்லப்பட்ட மாணவர் குடும்பத்துக்கு நட்ட ஈடு வழங்கு!' எனும் கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடியவர்கள் மீது தடியடித் தாக்குதல் நடத்திய போலீசு, பு.மா.இ.மு.வினர் 8 பேர் மீது ய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தது.

கொல்லப்பட்ட மாணவர் பிரபாகரனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பு.மா.இ.மு.வினர், தொடரும் இப்படுகொலைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து இ.எஸ். கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களைத் திரட்டினர். அதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்த போலீசிடம் அனுமதிக்கு விண்ணப்பித்த போது, கல்வி வியாபாரிக்கு ஆதரவாக நின்ற விழுப்புரம் போலீசு ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதித்தது. தடையை மீறி நாங்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்று பு.மா.இ.மு.வினர் எச்சரித்த பின்னர், இறுதியில் போலீசு அனுமதி வழங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.மா.இ.மு. மற்றும் தோழமை அமைப்பினர் பெருந்திரளாகப் பங்கேற்ற போதிலும், இ.எஸ். கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்கக் கூடாது என்று அந்நிறுவனமும் போலீசும் மிரட்டியதால், அந்நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க இயலவில்லை.

தனியார் கல்வி நிறுவனங்களின் பகற்கொள்ளையையும் கொலைகளையும் தோலுரித்துக் காட்டி, இ.எஸ். கல்வி நிறுவனத்தை அரசே ஏற்று நடத்தக் கோரி விண்ணதிரும் முழக்கங்களுடனும், பு.மா.இ.மு. மாநில அமைப்பாளர் தோழர் கணேசனின் சிறப்புரையுடனும் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் பகுதி வாழ் உழைக்கும் மக்களிடம் தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராகப் போராட அறைகூவுவதாக அமைந்தது.

தகவல்:

புரட்சிகர மாணவர்  இளைஞர் முன்னணி,

விழுப்புரம்.