கோவை மாவட்டம், உடுமலை வட்டாரத்திலுள்ள இலட்சக்கணக்கான ஏக்கர் பாசனத்துக்கும் குடிநீருக்கும் உயிராதாரமாக உள்ள அமராவதி ஆற்றின் பிரதான கிளை வாய்க்காலான ஐயர் வாய்க்காலின் அருகே, அமராவதி அணையை ஒட்டி காக்டஸ் என்ற தனியார் நிறுவனம், உரிய அனுமதியின்றி அரசு அதிகாரிகளின் துணையோடு கடந்த ஆறு மாத காலமாக நாளொன்றுக்குப் பத்து இலட்சம் லிட்டர் அளவுக்குத் தண்ணீரை உறிஞ்சிப் புட்டிகளில் அடைத்து வியாபாரம் செய்து வருகிறது.

கடந்த ஏப்ரல்மே மாதங்களில் அமராவதி அணையைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்ட போதிலும், காக்டஸ் நிறுவனம் எந்தக் கட்டுப்பாடுமின்றித் தண்ணீரை உறிஞ்சி வறட்சியைத் தீவிரமாக்கியது. தண்ணீரைத் தூய்மைப்படுத்தக் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் இரசாயனங்களை இந்நிறுவனம் பயன்படுத்துவதால், அதன் கழிவுகளால் இப்பகுதி நிலத்தடி நீர் தொடர்ந்து நஞ்சாகி வருகிறது. இந்நிறுவனம் மேலும் இரு கிளைகளைத் தொடங்குவது மட்டுமின்றி, அமராவதி மினரல்ஸ் என்ற பெயரில் இன்னுமொரு நிறுவனமும் தண்ணீர்க் கொள்ளையில் இறங்கக் கிளம்பியுள்ளது.

பல்வேறு விவசாய சங்கங்களும் சில இயற்கை ஆர்வலர்களும் இத்தண்ணீர் கொள்ளைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அமராவதி அணைக்கு அருகிலேயே நடக்கும் இத்தீவட்டிக் கொள்ளையை எதிர்த்தும், இத்தண்ணீர் கொள்ளையால் வரப்போகும் பேரழிவை விளக்கியும் கிராமங்கள்தோறும் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட பு.ஜ.தொ.மு., அதன் தொடர்ச்சியாக 10.8.2011 அன்று உடுமலையை அடுத்துள்ள கொழுமம் கிராமப் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. தோழர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற   இந்த ஆர்ப்பாட்டத்தில்,கோவை மாவட்ட பு.ஜ.தொ.மு. செயலர் தோழர் விளவை இராமசாமி மற்றும் முன்னணியாளர்கள் உரையாற்றினர். விவசாயிகளும் உழைக்கும் மக்களும் திரளாகப் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம்,  இவ்வட்டாரமெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

பு.ஜ. செய்தியாளர், உடுமலை.