கல்விக் கொள்ளையர்களுக்கு தமிழகத்தை மொத்தமாகத் திறந்துவிட ஏதுவாக சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்துள்ள பாசிச ஜெயா கும்பலுக்கு எதிராகவும், தனியார்மயத்தினால் கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் தமிழகமெங்கும்   மனித உரிமை பாதுகாப்பு மையமும், புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியும்  தோழமை அமைப்புகளுடன் இணைந்து பிரச்சாரத்தையும் ஆர்ப்பாட்டங்களையும் போர்க்குணத்தோடு நடத்தி வருகின்றன.

 

 

சமச்சீர் கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும், தனியார் கல்வி நிறுவனங்களின்  கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் கடந்த மே மாத இறுதியிலிருந்தே தாங்கள் செயல்படும் பகுதிகளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், வீடுகளிலும் வேலைசெய்யும் இடங்களிலும் நேரில் சந்தித்து விளக்கியும் இவ்வமைப்பினர் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, தெருமுனைப் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், பாசிச ஜெயாவின் கொடும்பாவி எரிப்பு, கட்டணக் கொள்ளையடிக்கும் பள்ளிகளின் வாயில்களில் பிரச்சாரம், பெற்றோர்களைத் திரட்டி அத்தகைய பள்ளிகளை முற்றுகையிட்டு போராட்டம்  என பல வடிவங்களில் இப்பிரச்சார இயக்கமும் போராட்டங்களும் வீச்சாக நடந்துள்ளன.

மதுரை யில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் 23.5.2011 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சமச்சீர் கல்வியை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டமும், 6.6.2011 அன்று மாவட்ட நீதிமன்றம் முன்பாக மறியல் போராட்டமும் நடத்தினர். ம.உ.பா. மையத்தின் மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழக்குரைஞர்கள் ஜூன் 13 அன்று நீதிமன்ற வளாகத்துக்குள் காந்தி சிலை அருகிலும், மறுநாள்  ஜூன் 14 அன்று  மாவட்ட நீதிமன்றம் முன்பாகவும் தொடர் உண்ணாநிலை போராட்டத்தை நடத்தினர்.  திருவண்ணாமலையில் 8.6.2011 அன்று மனித உரிமை பாதுகாப்பு மையம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. 14.6.2011 அன்று தருமபுரியிலும் கோவையிலும் ம.உ.பா. மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.

10.6.2011 அன்று சென்னை மெமோரியல் ஹால் அருகிலும், திருச்சி புத்தூர் நாலு ரோட்டிலும் பெற்றோர்களும் மாணவர்களும்  திரண்டு சமச்சீர் கல்வியை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி பு.மா.இ.மு. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சியில் ஜூன் 13 அன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகே  ம.க.இ.க. தோழர்கள் ஜெயலலிதாவின் கொடும் பாவி எரிப்புப் போரதட்டத்தை நடத்தி கைதாகினர்.  14.6.2011  அன்று சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தை (டி.பி.ஐ.) முற்றுகையிட்டு ம.க. இ.க, பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு, பெ.வி.மு; ஆகிய அமைப்புகள் பெருந்திரளாக மாணவர்களுடன் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ஜெயலலிதாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஜூன் 14 அன்று மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக

ம.க.இ.க் பு.ஜ.தொ.மு; ஆகிய அமைப்புகள் இணைந்தும், ஓசூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பு.ஜ.தொ.மு; வி.வி.மு; ஆகிய  அமைப்புகள்  இணைந்தும் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

தனியார் பள்ளிகளின் பகற்கொள்ளையை கட்டண நிர்ணயக் கமிட்டிகளோ, அரசோ, ஓட்டுக் கட்சிகளோ கண்டு கொள்வதில்லை. இக் கொள்ளையால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மாணவர்களைத் திரட்டி ம.உ.பா.மையம், பு.மா.இ.மு. தலைமையில் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்துள்ளன. இதுதவிர, தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி; யு.கே.ஜி; முதல் வகுப்பு ஆகியவற்றில் கல்வி உரிமைச் சட்டம்2009 இன் படி, 25 சதவீத இடங்கள் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதியை நடைமுறைப்படுத்தக் கோரி பெற்றோர்களை அணிதிரட்டி இவ்வமைப்புகள் போராட்டங்களை நடத்தியுள்ளன. சென்னையில் 20.3.2011 அன்று  லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் கட்டணக் கொள்ளை  அட்டூழியங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், 22.6.2011 அன்று வில்லிவாக்கம் பத்மசாரங்கபாணி மெட்ரிக்குலேசன் பள்ளியின் பகற்கொள்ளைக்கு எதிரான ஆர்ப்பாட்டம், 23.6.2011 அன்று மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்கள் படித்துவந்த வரலாறு மற்றும் கணக்குப் பதிவியல் பாடப்பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக மாணவர்களைத் திரட்டிமுற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம், சிதம்பரத்தில் காமராஜர் மெட்ரிகுலேசன் பள்ளியின் கட்டணக் கொள்ளைக்கும் அட்டூழியங்களுக்கும் எதிரான போராட்டம், மாவட்ட ஆட்சியரை நிர்பந்தித்து முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் ஆய்வாளர் மூலம் இப்பள்ளியில் விசாரணை நடத்த ஏற்பாடு செய்தது என தொடர்ச்சியாக இவ்வமைப்புகள் போராட்டங்களை நடத்தி, அவற்றில் முதற்கட்ட வெற்றியைச் சாதித்து, பெற்றோர்கள் மாணவர்களிடம் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளன.

குறிப்பாக, கடலூர் மாவட்டதின் பல பகுதிகளில் தொடர் பிரச்சாரமும் போராட்டங்களும் ம.உ.பா.மையத்தால் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக, பெற்றோர்கள் தாங்களேகல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தினை உருவாக்கிக் கொண்டு போராடி வருகின்றனர். ஜூன் 6ஆம் தேதியன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும், ஜூன் 13ஆம் தேதியன்று விருத்தாசலத்திலும் ம.உ.பா.மையத்துடன் இணைந்து மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் உண்ணாநிலை போராட்டத்தை நடத்தியது.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி  அறிக்கை  விடுத்துவிட்டு முடங்கிவிட்ட நிலையில், முன்னணி என்ற பெயருக்கேற்ப களத்தில் இறங்கிப் போராடும் தகுதியுடைய  அமைப்பாக பு.மா.இ.மு. தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளது. கைது, பொய் வழக்கு, போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, அச்சுறுத்தல் என போலீசு பல வழிகளில் தொல்லைப்படுத்தியபோதிலும், இவற்றைத் துச்சமாக மதித்து இவ்வமைப்புகள் போராட்டப் பாதையில் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. தனியார்மயதாராளமயக் கொள்கைகளையும் அவற்றின் கொடிய விளைவுகளையும் எதிர்த்த பல போராட்டங்களில், மக்கள் நெருக்கமாக உணரும் பிரச்சினையாக இக்கல்விப் பிரச்சினை மாறியுள்ளதால், அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் இப் போராட்டங்ளை  வரவேற்று   ஆதரிப்பதோடு தாமும் ஊக்கமுடன்  பங்கேற்றும் வருகின்றனர். தமிழகமெங்கும் இப்புரட்சிகர அமைப்புகளின் வீச்சான பிரச்சாரமும் போர்க்குண மிக்க போராட்டங்களும் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

பு.ஜ.செய்தியாளர்கள்.