கடந்த மார்ச் மாதம் 25  ஆம் தேதி 72 பேர் கொண்ட அகதிகள் குழு லிபியாவின் தலைநகர் திரிபோலியிலிருந்து "பூலோக சொர்க்கமாம்' ஐரோப்பாவை அடையும் நோக்கத்துடன் தமது கடல் பயணத்தைத் தொடங்கியது. 47 எத்தியோப்பியர்கள், 7 நைஜீரியர்கள், 7 எரிட்ரீயர்கள், 5 ‹டானியர்கள் மற்றும் கானா நாட்டைச் சேர்ந்த 6 பேர் அடங்கிய இக்குழு மத்தியத்தரைக் கடலைக் கடந்து இத்தாலியைச் சேர்ந்த லம் பேடுஸா தீவை அடைந்து ஐரோப்பாவில் காலடி எடுத்துவைக்கத் திட்டமிட்டிருந்தது. எனினும், திரிபோலியை விட்டுக் கிளம்பிய சிறிது நேரத்திலேயே நடுக்கடலில் மாட்டிக் கொண்ட இக்குழுவினர், உடனடியாக செய்மதி தொலைபேசி மூலம் (சேட்டிலைட் போன் மூலம்) இத்தாலி கடற்படையினரிடம் உதவி கேட்டு தொடர்பு கொண்டுள்ளனர். கடலில் தத்தளித்த 16 நாட்களில் ஒருமுறை நேடோ போர்க் கப்பலுடனும், ராணுவ ஹெலிகாப்டருடனும் இவர்கள் தொடர்பு கொண்டு உதவி கேட்டு கூக்குரலிட்டுள்ளனர். ஆயினும், எந்த உதவியுமின்றி தாகத்திலும், பசியிலுமாக சிறுகச் சிறுக ஒவ்வொருவராக  பச்சிளம் குழந்தைகளையும், பெண்களையும் கொண்ட இக்குழுவினரில் 63 பேர் பரிதவித்துச் சாகவிடப்பட்டுள்ளனர்.

 

 

கடற்பரப்பில் ஆபத்தில் இருக்கும் எவருக்கும் உதவி செய்வது முதன்மையானதும், கட்டாயமானதும் ஆகும் என்று சர்வதேச கடல் சட்டவிதிகள் வலியுறுத்துகின்றன. இத்தாலி கடற்படையினரும், நேடோ படை யினரும் இச்சர்வதேச சட்டவிதிகளை வேண்டுமென்றே காற்றில் பறக்கவிட்டுள்ளனர். இந்த 63 அகதிகள் நடுக்கடலில் பரிதாபகரமான இறந்து போயிருப்பது தனிப்பட்ட சம்பவம் அல்ல. துனிசியா, லிபியா நாடுகளில் நடக்கும் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாகவும், அமெரிக்க ஐரோப்பிய அரசுகளின் இராணுவத் தலையீடுகள் காரணமாகவும் வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேறி, கடல் வழியே உயிரையே பணயம் வைத்து ஐரோப்பாவிற்குச் செல்லத் துணிகிறார்கள். கடந்த நான்கு மாதங்களில் ஏறத்தாழ 30,000 பேர் மத்தியதரைக் கடலை கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்றுள்ளனர். இந்த அபாயகரமான பயணத்தில் பலர் நடுக்கடலிலேயே இறந்து போசூவிடுகின்றனர். குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் வட ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 800 பேர் லிபியாவிலிருந்து கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்றதாகவும், எனினும் அவர்கள் அனைவருமே ஐரோப்பாவிற்குள் நுழைய முடியாமல், நடுக்கடலிலேயே பரிதவித்து இறந்து போயிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.  கடலைக் கடப்பவர்களில் 10சதவீதம்  பேர் இவ்வாறு சாகடிக்கப்படுவதாக ஐ.நா. மன்றத்தின் புள்ளிவிவரக் கணக்கு காட்டுகிறது.

லிபியா மீது ஏகாதிபத்திய நாடுகள் தொடுத்துள்ள போரின் உடனடி விளைவாக, அந்நாட்டிலுள்ள வறிய உழைப்பாளர்களான கறுப்பின மக்கள் இனவெறி தாக்குதலாலும், வேலையின்மையாலும் தமது வாழ்வை இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். வட ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலையின்மையின் பலன்களை நக்கிப்பருகப் போட்டி போடும் ஐரோப்பிய நாடுகள், அதன் உடன் விளைவாக நிகழும் இவ்வகதிகளின் வெளியேற்றத்திற்குப் பொறுப்பேற்பதில்லை. ஐரோப்பாவின் கொழுத்த பணக்காரநாடுகள் அனைத்தும் அகதிகளை உள்ளே நுழைய விடாமல் தமது கதவை இழுத்து அறைந்து சாத்துகின்றன. லிபியாவிலிருந்து

வெளியேறும் அகதிகள் இத்தாலியின் லம்பேடுஸா வழியாகவும், பிரான்சின் காலாய்ஸ் நகரம் வழியாகவும் ஐரோப்பாவுக்குள் நுழைகிறார்கள். இப்பயணத்தின்போது இறந்து போகாமல் தப்பும் "அதிருஷ்டக் கட்டைகள்' அகதிகளாக காலாய்ஸ் நகரின் எல்லையில் கடும் குளிரில் தத்தளிக்கின்றனர். எந்த அடிப்படை வசதியுமற்ற வெட்டவெளி நரகமான இம்முகாமிற்கு "ஆப்பிரிக்க வீடு' என்று நயமாகப் பெயர் சூட்டியுள்ளது, ஐரோப்பிய "நாகரிக'ச் சமூகம்.

அகதிகளைக் கையாளும் சுமையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிரான்சும் இத்தாலியும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டதால், அகதிகளைச் சித்திரவதை செய்து பிற ஐரோப்பிய நாடுகளுக்கு விரட்டிவிடும் வேலையைச் செய்கின்றன, இந்நாட்டு அரசுப்படைகள். தினசரி "ரெய்டு'கள் நடத்துவது, குளிர் காயும் போர்வைகளிலும், சமைத்த உணவுகளிலும் தண்ணீரை ஊற்றி வீணாக்குவது, கைது செய்து எல்லையில் கொண்டு போய் விட்டுவிடுவதன் மூலம் முகாமிற்கு மீண்டும் நடக்க விடுவது  என்பன இச்சித்திரவதைகளில் சில.

"ஐரோப்பா என்றாலே மனித உரிமைகள் மிகவும் மதிக்கப்படும் என்று நான் நினைத்தது பொய். பிரிட்டனும், பிரான்சும் லிபியா மீது போட்ட குண்டுகளால்தான் நாங்கள் வெளியேறினோம். பிறகு, ஏன் எங்களை இவ்வளவு கொடூரமாக நடத்துகிறார்கள்?' என்று கேட்கிறாள், 8 வயது சிறுமியான டெரெபா கிரோவ். "லிபியாவில் வாழ்வது விருப்பமானதாக இல்லையெனினும், வாழ்க்கை என்ற ஒன்றாவது அங்கு இருந்தது. ஆனால், போர் தொடங்கியவுடன் லிபியக் கொடுமையிலிருந்து தப்பி ஐரோப்பியக் கொடுமையில் மாட்டிக் கொண்டோம்' என்கிறார், 17 வயதான செனேய்.

மத்தியத்தரைக் கடலில் பரிதவித்து மாண்டுபோன 63 பேரின் சாவுக்குக் காரணமானவர்களைத் தண்டனையிலிருந்து தப்பவிடக் கூடாது என்கிறார், அகதிகளைக் கையாளும் ஐ.நா. நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரான லரா போல்டிரினி. மாண்டுபோன அகதிகளுடன் கடைசி நிமிடங்களில் தொடர்பு கொண்டவரும், ரோம் நகரில் அகதிகள் உரிமைக்கான அமைப்பை நடத்தி வருபவருமான பாதிரியார் மோசஸ் செராய், குழந்தைகளையும் பெண்களையும் கொன்ற இக்கிரிமினல் செயல் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும் என்கிறார்.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் உன்னதத்திற்கு உதாரணமாகக் காட்டப்படுகின்றன, மேற்கு ஐரோப்பிய நாடுகள். மனித நாகரிகமும், மனிதாபிமானமும், மனித உரிமைகளும் உயிரினும் மேலாக இந்நாடுகளில் மதிக்கப்படுவதாக பரவலானதொரு மூடநம்பிக்கை உள்ளது. ஆனால், இந்தப் பிரமைகளை உடைத்தெறிகின்ற ரத்தமும் சதையுமான உண்மைகளை வட ஆப்பிரக்க நாடுகளிலிருந்து வெளியேறியுள்ள அகதிகளின் கதைகள் சொல்லுகின்றன. ஜனநாயகத்தை காப்பது, மக்களைக் காப்பது என்ற பெயரில் ஏகாதிபத்தியங்கள் நடத்தும் போர்களின் உண்மையான நோக்கம் என்னவென்பதையும் இப்படுகொலைகள் காட்டுகின்றன. லிபியா மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வைத்துள்ள பெயர்  "விடியலுக்கான நீண்ட பயணம்' (ஆபரேசன் ஒடிசி டான்). விடியலுக்கான நீண்ட பயணத்தின் முடிவில் லிபியாவிலிருந்து கிளம்பிய அகதிகள் சந்தித்ததோ இன்னொரு நரகம். அமெரிக்க ஐரோப்பிய கூட்டு நரகமே அது!

• அப்துல்