நீதிபதி கோவிந்தராசன் கமிட்டி நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தைத்தான் தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பைக் குப்பையில் வீசிவிட்டு, பெற்றோர்களையும் மாணவர்களையும் மனரீதியாக வதைத்து மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகிலுள்ள பூதங்குடி எஸ்.டி.எஸ். மெட்ரிக் பள்ளி நிர்வாகம். கூடுதல் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து இப்பகுதிவாழ் மக்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தி வட்டாட்சியர், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் முன்னிலையில் அத்தனியார் பள்ளி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, இனி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் எழுதிக் கொடுக்கப்பட்ட பின்னரும், பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதாகக் கூறி ரூ. 2,500ஃவீதம் ஒவ்வொரு மாணவரிடமும் கட்டாயக் கூடுதல் கட்டணம் கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.

 

 

இதை எதிர்த்து மனித உரிமை பாதுகாப்பு மையமும் தனியார் பள்ளிகளின் மாணவர் நல பெற்றோர் சங்கமும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததும்,  பெற்றோர் சங்க உறுப்பினர்களிடம் பள்ளி நிர்வாகம் புரோக்கர்கள் மூலம் நைச்சியமாகப் பேரம் பேசியதோடு, உள்ளூர் ஓட்டுக்கட்சிக்காரர்களை வைத்து மிரட்டிப் பார்த்தது. இவை எதற்கும் அஞ்சாமல் மனித உரிமை பாதுகாப்பு மையமும் பெற்றோர் சங்கத்தினரும் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு 20.4.2011 அன்று சேத்தியா தோப்பு பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

மாணவர் நல பெற்றோர் சங்கத்தின் தலைவர் வை.வெங்கடேசன் தலைமையில் 400க்கும் மேற்பட்டோர் திரண்ட இந்த எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில், "கூடுதல் கட்டணம் வசூலித்து அடாவடித்தனம் செய்யும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்று அரசு சவடால் அடிக்கிறதே தவிர, இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. கல்வி வியாபாரிகள் தங்களுக்கு உரிய இலாபம் வராவிட்டால், இந்தத் தொழிலை விட்டு வேறு தொழிலுக்குத் தாவி விடுவார்கள். இக்கொள்ளையர்கள் பள்ளிகளை மூடிவிட்டால், அதில் படிக்கும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அனைத்துத் தனியார் பள்ளிகளையும் அரசே ஏற்று நடத்தும் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும். இலவச பள்ளிக் கல்வியை அரசேவழங்க வேண்டும், ஓட்டுக் கட்சிகளை நம்பி ஏமாறாமல் மக்களே அணிதிரண்டு போராட வேண்டும்' என்று வழக்குரைஞர்கள் செந்தில், செந்தில் குமார், பரமசிவம், செந்தாமரைக் கந்தன் மற்றும் ம.உ.பா.மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜு ஆகியோரும் கண்டன உரையாற்றினர். கல்விக் கொள்ளையர்களுக்கு  எதிரான இப்போராட்டம் பகுதிவாழ் மக்களிடம் விழிப்புணர்வூட்டி, பெருத்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

தகவல்:ம.உ.பா.மையம்,கடலூர்.