தென்கொரியாவைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகமான போஸ்கோ நிறுவனம், ஒரிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள உருக்காலை மற்றும் அவ்வுருக்காலையோடு சேர்ந்து அமையவுள்ள மின் உற்பத்தி நிலையம், துறைமுகம் ஆகியவற்றுக்காக விவசாய, வன நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் விலக்கிக் கொண்டுவிட்டது. இதனையடுத்து, இக்கையகப்படுத்தலுக்கு எதிராக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், பழங்குடியின மக்களும், மீனவர்களும் நடத்தி வரும் போராட்டமும் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசை போஸ்கோவின் கூலிப் படையெனச் சாடியுள்ள அம்மக்கள், "தங்கள் பிணங்களின் மீதேறிப் போய்தான் நிலங்களைக் கையகப்படுத்த முடியும்' எனச் சூளுரைத்துள்ளனர்.

சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனச் சூழலைப் பாதுகாக்க ஏற்கெனவே இருந்து வரும் பல விதிகளையும ;சட்டங்களையும் போஸ்கோ மீறியிருப்பதைக் காட்டித்தான், அத்திட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்த சுற்றுப்புறச் சூழல் அனுமதிக்கும், நிலம் கையகப்படுத்துவதற்கும் இடைக்கால தடையை விதித்தது, சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம். போஸ்கோவின் அத்துமீறல்களை விசாரிக்க சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் ஜெசூராம் ர@மஷால் நியமிக்கப்பட்ட மீனாகுப்தா கமிட்டியின் பெரும்பான்மை உறுப்பினர்கள், போஸ்கோவிற்கு வழங்கப்பட்டுள்ள சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனச் சூழல் அனுமதியை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் எனப் பரிந்துரைத்தனர். அதே சமயம் அக்கமிட்டியின் தலைவரான மீனா குப்தா, கூடுதலாக நிபந்தனைகள் விதித்து போஸ்கோவிற்கு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார். மீனா குப்தா, சுற்றுப்புறச் சூழல் அமைச்சகச் செயலராக இருந்த பொழுதுதான் போஸ்கோவிற்குச் சுற்றுப்புறச் சூழல் அனுமதி வழங்கப்பட்டது என்ற ஒற்றை வரி உண்மையே ஜெய்ராம் ரமேஷின் கபடத்தனத்தைப் புரிய வைத்துவிடும். போஸ்கோ ஆலை அமையவுள்ள வனப் பகுதியின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கக் கூடுதலாக 60 புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதைக் காட்டி போஸ்கோ ஆலைக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை நியாயப்படுத்தியிருக்கிறார், சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

 

ஏற்கெனவே இருந்து வரும் விதிகளை மதிக்காத போஸ்கோ, தனக்குப் புதிதாக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை இம்மி பிசகாமல் கடைப்பிடிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. போஸ்கோவின் அத்தனை அத்துமீறல்களுக்கும் துணையாக நின்று, அத்திட்டத்திற்குச் சுற்றுப்புறச் சூழல் மற்றும் வன அனுமதியை அளித்த அதிகார வர்க்கக் கும்பல், போஸ்கோ மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டால், அதனைத் தட்டிக் கேட்பார்கள் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது.

 

இவ்வுருக்காலை அமையவுள்ள மொத்த நிலப்பரப்பில்  1,620 ஹெக்டேரில் 1,253 ஹெக்டேர் நிலப்பரப்பு வனப்பகுதியாகும். வன உரிமைச் சட்டத்தின்படி, கிராமசபைகளிடமிருந்துதான் வன அனுமதியைப் பெறுவதற்கான சான்றிதழைப் பெற வேண்டும். போஸ்கோவிற்கு ஏற்கெனவே வன அனுமதி வழங்கப்பட்டபொழுது, இச்சட்ட விதி அப்பட்டமாகவே மீறப்பட்டது. ஒரிசா மாநில அரசு இவ்விதிக்குப் புறம்பாக, சம்பந்தப்பட்ட கிராமசபைகள் போஸ்கோவிற்கு அனுமதி வழங்கத் தெரிவித்த எதிர்ப்புகளை மறைத்துவிட்டு, இவ்வனப்பரப்பில் வசிக்கும் பழங்குடியின மக்களும் பழங்குடியினர் அல்லாத விவசாயிகளும் வன உரிமைச் சட்டத்தின் கீழ் வரமாட்டார்கள் என்ற மோசடியான சான்றிதழைத் தானே தயாரித்துக்கொடுத்து, போஸ்கோ வன அனுமதியைப் பெறுவதற்கு உதவியது.

 

ஜெய்ராம் ரமேஷ் விதித்துள்ள புதிய நிபந்தனைகளின்படி, போஸ்கோவிற்கு வன அனுமதி வழங்குவதற்குத் தேவையான சான்றிதழை வழங்க வேண்டிய பொறுப்பு, ஏற்கெனவே மோசடிச் சான்றிதழ் வழங்கிய ஒரிசா மாநில அரசிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. போஸ்கோ தனது வருடாந்திர நிகர இலாபத்தில் 2 சதவீதத்தைச் சமூக மேம்பாட்டுக்குப் பயன்படுத்தவேண்டும் என்பது இன்னொரு விதி. இதிலிருந்தே இந்தப் புதிய விதிகளின் "கடுமையை'ப் புரிந்து கொண்டு விடலாம்.

 

பொருளாதார வளர்ச்சியையும் சுற்றுப்புறச் சூழலையும் ஒரு சேரக் காப்பாற்றுபவர் போலக் காட்டிக் கொள்ளும் ஜெய்ராம் ரமேஷின் கபடத்தனம், போஸ்கோவோடு மட்டும் நின்றுவிடவில்லை. மக்களின் எதிர்ப்பையும் மீறி, ஆந்திராவில் அமையவுள்ள பொலாவரம் அணைக்கட்டுத் திட்டம், மகாராஷ்டிராவில் அமையவுள்ள ஜெய்தாபூர் அணுமின் திட்டம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கியிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகருக்கு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தனியார் நகரத்தை அமைத்துவரும் லாவாசா கார்ப்பரேஷனின் சுற்றுப்புறச் சூழல் விதி மீறல்களை, அந்நிறுவனத்திற்கு அபராதம் விதித்ததன் மூலம் சட்டபூர்வமாக்கிவிட்டார்; வேதாந்தா நிறுவனம் ஒரிசாவின் நியம்கிரி மலைப்பகுதியில் அலுமினியத் தாதுவை வெட்டியெடுப்பதற்குத் தடைவிதித்த அவர், இன்னொருபுறமோ, வேதாந்தா தனது அலுமினிய ஆலையின் உற்பத்தித் திறனை தற்போது இருப்பதைவிட ஆறு மடங்கு அதிகமாக்கிக் கொள்ளஅனுமதி அளித்திருக்கிறார்.

 

சுற்றுப் புறச்சூழல் விதிகளைக் காட்டி, தமதுதொழில் திட்டங்களுக்குத் தடை விதிக்கக் கூடாது என்பதுதான் கார்ப்பரேட் முதலாளிகளின் வாதம். அவர்கள் போஸகோவிற்கு விதிக்கப்பட்ட இடைக் காலத்தடையை நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மீதுவிதிக்கப்பட்ட தடையெனப் பிரச்சாரம் செய்தார்கள். "சுற்றுப்புறச் சூழல் விதிகள், அனுமதி போன்றவை லைசென்ஸ்பர்மிட் ராஜ்ஜியத்திற்கு அழைத்துச் சென்றுவிடக் கூடாது' எனக் கூறி, மன்மோகன் சிங்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் குரலை எதிரொலித்தார். இதற்கு ஏற்ப சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டு ம்  போஸ்கோ வேதாந்தா, பொலாவரம், ஜெசூதாபூர் உள்ளிட்டு 535 திட்டங்களுக்கு அனுமதியை வாரி வழங்கியிருக்கிறார். போஸ்கோ மீதான இடைக் காலத் தடையை நீக்கியுள்ள ஜெய்ராம் ரமேஷ், "நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் நுட்பத் தேவைகளின் முக்கியத்துவம் கருதியே போஸ்கோவிற்கு அனுமதி அளித்ததாக'க் குறிப்பிட்டுள்ளார்.

 

போஸ்கோ கொண்டு வரவுள்ள அந்நிய மூலதனத்தாலும், தொழில்நுட்பத்தாலும் பின்தங்கிய ஒரிசா மாநிலத்தின் முகவிலாசமே மாறிப் போய்விடும் என இவர்கள் கூறுவதெல்லாம் முழுப் பொய். போஸ்கோ ஆலைக்காக 11 கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும்; தற்பொழுது ஓரளவு பொருளாதாரத் தன்னிறைவோடு வாழ்ந்து வரும் 4,000க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.  இவ்வாலையால் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை இப்பொழுது அறுதியிட்டுக் கூற முடியாது எனக் கூறுகிறார்கள், அத்துறை சார்ந்த நிபுணர்கள்.

 

இந்தப் பாதிப்புகளைவிட,  போஸ்கோ வோடு போடப்பட்டுள்ள தொழில் ஒப்பந்தமே சமூக விரோதமானது என்பதுதான் முக்கியமானது. ஒரிசாவின் உயர்ரக இரும்புக் கனிமத்தை வெட்டி  யெடுப்பதற்கு போஸ்கோ நிறுவனம் இந்திய அரசிற்குத் தரவுள்ள உரிமத் தொகை ஒரு டன்னுக்கு ரூ.27ஃதான். அதேசமயம், இன்றுள்ள நிலவரப்படி சர்வதேசச் சந்தையில் ஒரு டன் இரும்புக் கனிமத்தை ரூ.10,000 க்குக் குறையாமல் போஸ்கோவால் விற்க முடியும். இதன் மூலம் இந்நிறுவனம் அடையப் போகும் இலாபத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் மலைத்துத்தான் போவோம். போஸ்கோ இந்தியாவிற்குக் கொண்டுவரவுள்ள அந்நிய மூலதனத்தை விட, அது எடுத்துச் செல்லப் போகும் இலாபம் பலமடங்கு அதிகமாகும்.

 

2ஜி அலைக்கற்றை அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டிருப்பதைப் போல, ஒரிசாவின் உயர்ரக இரும்புக்கனிம வளம் போஸ்கோவிற்குத் தாரை வார்த்துக்கொடுக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள பழங்குடியின மக்களின் நிலங்களையும், அங்குள்ள  நீரைரோடைகளையும் லாவாசா அபகரித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொதுச்

சொத்தாகிய இந்த இயற்கை வளங்களை கார்ப்பரேட் முதலாளித்துவக் கும்பல் அபகரித்துக் கொள்ளும் இந்தப் பகற்கொள்ளை, ஊழலாகக் காட்டப்படுவதில்லை மாறாக, வளர்ச்சி என்ற பெயரில் நியாயப்படுத்தி வருகிறது, ஆளும் கும்பல்.

• திப்பு