மதுரை அவனியாபுரம் மண்டேலா நகர் பகுதியில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதியன்று கண்மாயில் தண்ணீர் குடித்த 100க்கும் மேற்பட்ட மாடுகள் வாயில்நுரை தள்ள துடிதுடித்து மாண்டு போயுள்ளன. கிடைபோட்ட இடத்திலிருந்து ஏறத்தாழ 2 கி.மீ. தொலைவுக்கு மாடுகள் இறந்து கிடந்த கோரமான காட்சி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்பகுதியிலுள்ள லேன்செஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் பெனார் ஸ்பெஷாலிட்டி புரொடெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் எனுமிரு இரசாயனத் தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகள் இக்கோரக் கொலைகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று பிரேதப் பரிசோதனை நடத்திய கால்நடை மருத்துவர்கள் ஊகங்களைத் தெரிவித்துள்ளனர்.

 

1977ஆம் ஆண்டு சதர்ன் சின்டான்ஸ் என்ற பெயரில் குடிசைத் தொழிலாக ஆரம்பிக்கப்பட்ட பெனார் ஆலை இன்று 130 தொழிலாளர்களுடன் பல கோடி சொத்துக்களைக் கொண்ட நிறுவனமாக மாறி லேன்செஸ் என்ற பன்னாட்டு கம்பெனியின் கூட்டோடு இயங்கி வருகிறது. லேன்செஸ் என்ற ஜெர்மானிய நிறுவனத்தின் பெயரால் ஆலை இருந்தாலும், குத்தகை ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்வது பெனார் நிறுவனம்தான். இந்நிறுவனம் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த ஊரான கானாடுகாத்தானுக்கு அருகிலுள்ள கோட்டையூரைச் சேர்ந்த நாராயணன் செட்டியாருக்குச் சொந்தமானது.

 

அசிடோன், காஸ்டிக் பொட்டாஷ், எதிலீன் கிளைகோல், குளோரோ பென்சீன் முதலான ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள கொடிய ஆபத்தான வேதிப்பொருட்கள் இந்த ஆலையில் இரகசியமாகத் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. எவ்விதப் பாதுகாப்புச் சாதனங்களும் தரப்படாததால் பல தொழிலாளர்கள் காசநோய், புற்றுநோய், தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொழிற்சாலையின் அபாயகரமான நச்சுக் கழிவுகளை அகற்றும் பணி ஒரு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அந்த நபர் அவற்றைக் கண்மாய் அருகே கொட்டிவிட்டுச் செல்வதாலும், இரசாயனக் கழிவுகளைச் சட்டவிரோதமாக நிலத்தில் புதைப்பதா

லும், இந்த ஆலைக்கு அருகிலுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டுப் போயுள்ளது. இதுதவிர, நள்ளிரவில் ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுவாயுக்களால் சுற்றுப்புற கிராம மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதோடு, கண்மாயில் மீன்கள் செத்து மிதப்பதும், அத்தண்ணீரைக் குடிக்கும் ஆடுமாடுகள் நோய்வாய்ப்படுவதும் தொடர்கிறது. இவற்றுக்கெதிராக அவ்வப்போது போராடும் மக்களை அதிகார வர்க்கம் மற்றும் போலீசின் துணையோடு ஆலை நிர்வாகம் மிரட்டியும் சமரசப்படுத்தியும் வந்துள்ளது.

 

லேன்செஸ் நிறுவனம், தமிழ்நாட்டிலிருந்து குஜராத்துக்கு மாறப் போகிறது. இதனால், வரும் ஜூன்மாதத்துடன் ஆலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு, ஆலை மூடலுக்கு எதிராகத் தொழிலாளர்கள் தங்களுக்குச் சட்டப்படி அளிக்க வேண்டிய இழப்பீட்டைக் கோரி போராடி வருகின்றனர். ஆலை முதலாளி நாராயணன் செட்டியாரும், கழிவுகளை அகற்றப்பொறுப்பேற்றுள்ள நபரும், துணை நின்ற அதிகாரிகளும் கொலைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுக் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும்; மாண்டு போன மாடுகளுக்கு மட்டுமின்றி, ஆலையில் இரகசியமாக புதைக்கப்பட்டுள்ள நச்சுக் கழிவுகளை அகற்றவும் அம்முதலாளியிடமிருந்து இழப்பீடு தொகை பெற்று அப்பகுதியைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் போராட்டத்தைக் கட்டியமைத்து முன்னெடுத்துச் செல்ல விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தொழிலாளர் விடுதலை முன்னணி, ம.க.இ.க, பு.மா.இ.மு, மனிதஉரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் பிற உள்ளூர் சங்கங்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்று போராட்டங்களைநடத்தி வருகின்றன.

 

தகவல்: மனித உரிமைப்பாதுகாப்பு மையம்,