சென்னையிலிருந்த செயலதிபர் சுழிபுரத்துக்கு வருகை

தள இராணுவப் பொறுப்பாளர் ரமணன், யாழ் மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் சின்னமென்டிஸ் ஆகியோர் தளநிர்வாகத்துடனும் மக்கள் அமைப்பினருடனும் முரண்பாடுகளைக்கொண்டவர்களாக செயற்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை ,எஸ்.ஆர் என்று அழைக்கப்பட்ட புவிராஜகீர்த்தி சிவராம் தனது கவர்ச்சிகரமான சிலவேளைகளில் நகைப்புக்கிடமான பேச்சுக்களால் தன்னைச்சுற்றி ஒரு கூட்டத்தை உருவாக்கி அவர்களை தவறான பாதையில் இட்டுச்செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தான். தளத்தில் தங்கியிருந்த படைத்துறைச் செயலர் கண்ணன் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேசங்களையும் சேர்ந்த அமைப்பாளர்களையும், மகளிர் அமைப்பு, மாணவர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்பு போன்றவற்றில் செயற்படுபவர்களுடனும் சந்திப்புக்களை நிகழ்த்தி ஈழவிடுதலைப் போராட்டத்தில் புளொட்டின் தலைமைப் பாத்திரம் குறித்தும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் புளொட் மட்டும் தான் சரியான கொள்கை, நடைமுறை மற்றும் வேலைத்திட்டங்களுடன் செயற்படுவதாகக் குறிப்பிட்டு அமைப்பில் உள்ளவர்களுக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்தார்.

 

ஆனால், தளநிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்குக்கோ, மக்கள் அமைப்பில் முன்னணியில் நின்று செயற்பட்ட எமக்கோ எமது அமைப்பின் கொள்கைக்கும் நடைமுறைக்குமிடையிலான, சொற்களுக்கும் செயல்களுக்குமிடையிலான பாரிய இடைவெளி அதிகரித்துக் கொண்டிருப்பதையே அவதானிக்கக்கூடியதாக இருந்தது மட்டுமல்லாமல், எமது அமைப்பு ஒரு புரட்சிகர அமைப்பு என்று சொல்வதற்கு பொருத்தாமானதா என்ற கேள்வியும் கூட எழத்தொடங்கியிருந்தது. எமது அமைப்புப்பற்றிய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் கூட தகர்ந்து கொண்டிருந்தன.

(செயலதிபர் உமாமகேஸ்வரன்)

இத்தகையதொரு சூழலில் செயலதிபர் உமாமகேஸ்வரன் தளம் வந்திருப்பதான செய்தியை படைத்துறைச் செயலர் கண்ணன் எமக்குத் தெரியப்படுத்தினார். செயலதிபர் உமாமகேஸ்வரன் தளம் வந்திருக்கும் செய்தியை மிகவும் இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்ற விடயத்தையும் கூடவே படைத்துறைச் செயலர் கண்ணன் எம்மிடம் வலியுறுத்தினார். இதற்குக் காரணம் உமாமகேஸ்வரன் இலங்கை அரசபடைகளால் தேடப்படும் நபராக இருந்ததும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உமாமகேஸ்வரனுக்கு ஏற்கனவே மரணதண்டனை விதித்திருந்ததுடன் 1982ம் ஆண்டு சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரன் உமாமகேஸ்வரன் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தவேளை அருகிலிருந்த கண்ணன் காயமடைந்தமையும் ஆகும்

.

(படைத்துறைச் செயலர் கண்ணன்)

(செயலதிபர் உமாமகேஸ்வரன்)

தளநிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்கைச் சந்தித்துப் பேசிய உமாமகேஸ்வரன் யாழ் மாவட்ட அமைப்புக்குழுவையும்,ஏனைய மாவட்ட அமைப்புக்குழுக்களையும், மகளிர் அமைப்பு, மாணவர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்புக் குழுக்களையும் சந்தித்துப் பேச விருப்பம் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் உமாமகேஸ்வரனுடனான எமது சந்திப்புக்கள் ஒழுங்கு செய்யப்பட்டன. புளொட்டின் இராணுவப் பிரிவினர் பயன்படுத்தும் வாகனமொன்றில் யாழ் மாவட்ட மக்கள் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் அனைவரும் உமாமகேஸ்வரனைச் சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டோம். நாம் சென்றுகொண்டிருந்த வாகனம் சித்தங்கேணிச் சந்தியை அண்மித்தபோது கைகளில் பளிச்சிடும் புதிய ஆயுதங்களுடன் எமது இராணுவத்தினர் கூட்டம் கூட்டமாக வீதியோரங்களில் நிற்பதும், மோட்டார் சைக்கிள்களிலும் வான்களிலும் ஆயுதங்களுடன் அங்குமிங்குமாகத் திரிவதுமாக இருந்தமை செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திய அதேவேளை இத்தகைய பகிரங்கமான செயற்பாடுகள் மூலம் அரசபடைகள் தகவல்களைப் பெற்று உமாமகேஸ்வரனைக் கைது செய்ய உதவும் என்பதும் அதன் மறுபக்கமாக இருந்தது. ஏற்கனவே எமது அமைப்பின் மீதும், அதன் செயற்பாடுகள் மீதுமான நம்பிக்கைகள் தளர்ந்து கொண்டிருக்கும் போது செயலதிபர் உமாமகேஸ்வரனுடனான சந்திப்பு இதில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பது என் அடிமனதில் ஒரு கேள்வியாக எழுந்தது.

 

உமாமகேஸ்வரனுடனான எமது சந்திப்பு சுழிபுரத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்றது. தனது சுருண்ட தலைமுடியை ஒருபக்கமாக வாரிவிட்டிருந்த, எளிமையாக உடையணிந்திருந்த, சற்றே குறைவான உயரத்தைக் கொண்ட உமாமகேஸ்வரன் தனது கூர்ந்த பார்வையை யாழ் மாவட்ட அமைப்பில் செயற்பட்ட அனைவரின் மீதும் படரவிட்டவாறு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நாம் ஒவ்வொருவரும் எம்மையும் உமாமகேஸ்வரனுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டோம். யாழ் மாவட்ட அமைப்பாளர் குழுக்கூட்டங்களில் அமைப்பாளர்கள் எப்படி தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் முன்வைத்து விவாதிப்பார்களோ அதேபோலவே உமா மகேஸ்வரனுடனான சந்திப்பின் போதும் அமைப்பாளர்கள் தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் முன்வைத்தனர். விமர்சனங்களாலும் கேள்விகளாலும் எமது சந்திப்பு சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது.

உமா மகேஸ்வரன் மத்திய குழு கூட்டங்களில் இதே போன்ற விமர்சனங்களையும் கேள்விகளையும் முகம் கொடுத்திருந்தாரோ இல்லையோ யாழ்ப்பாண மாவட்ட அமைப்பு குழுவை சந்தித்ததில் அவர் வெளிப்படையான விமர்சனங்களையும் கேள்விகளையும் முகம் கொடுத்திருந்தார். அமைப்பின் நடைமுறைப் பிரச்சனைகளான செயலதிபர் மீதான தலைமை வழிபாடு பற்றிய விமர்சனங்களிலிருந்து சோவியத் யூனியன் குறித்த எமது பார்வை என்ன, இந்தியா பற்றிய எமது நிலைப்பாடு என்ன என்பன போன்ற சர்வதேச விவகாரங்கள் வரை கேள்விகள் உமாமகேஸ்வரனை நோக்கி முன்வைக்கப்பட்டன; இவை குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

(அரசியல் செயலர் சந்ததியார் )

சோவியத் யூனியன் குறித்து ரஞ்சனால் செயலதிபரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் அதற்கான பதிலை சொல்லுமாறு ஜீவன், இளவாலை பத்தர் போன்றவர்களை கேட்டு தான் நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்துக் கொண்டார். புளொட்டின் ஆரம்பகால உறுப்பினர்களான அரசியல் செயலர் சந்ததியார், உடுவில் சிவனேஸ்வரன் போன்றோர் அமைப்பிலிருந்து ஒதுங்கியிருப்பதாக, ஏனைய இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்கள் கூட அதன் உண்மைநிலையை நாம் அறிந்துகொள்ளும் பொருட்டு உமாமகேஸ்வரனிடம் கேள்விகளாக எழுப்பப்பட்டன. தோழர் தங்கராஜாஅரசியல் வகுப்புகளால் அமைப்புக்குள் குழப்பம் விளைவிக்கக் முற்பட்டார் எனக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வந்துள்ளதே என கேள்வி எழுப்பி தோழர் தங்கராஜாவை நாம் பார்க்க முடியுமா அல்லது சந்தித்து பேச முடியுமா என ஜீவன் கேட்டதற்கு நேரடியாக பதிலளிக்க தவறிய உமா மகேஸ்வரன் அவரைப் பார்த்தால்தான் அல்லது அவருடன் பேசினால்தான் நம்புவீர்களா என ஜீவனை நோக்கி கேள்வி எழுப்பினார்.

(தோழர் தங்கராஜா)

எமது கருத்துக்கள், விமர்சனங்கள், கேள்விகள் அனைத்தையும் மிகவும் சிரத்தையுடனும் பொறுமையோடும் செவிமடுத்த செயலதிபர் உமாமகேஸ்வரன் இவை அனைத்தையும் தன் கையில் வைத்திருந்த நாட்குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். அரசியல் செயலர் சந்ததியார், உடுவில் சிவனேஸ்வரன், தோழர் தங்கராஜா போன்றோர் பற்றி ஏனைய இயக்கத்தவர்களால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் வெறும் பிரச்சாரம் மட்டுமே என உறுதியாகக் கூறிய செயலதிபர் உமாமகேஸ்வரன் அரசியல் செயலர் சந்ததியாரும், உடுவில் சிவனேஸ்வரனும், தோழர் தங்கராஜாவும் அமைப்புடனேயே உள்ளனர் என்ற கருத்தையும் உறுதியாகத் தெரிவித்திருந்தார். இந்தச் சந்திப்பின் போது யாழ் மாவட்டத்தில் செயற்பட்ட அமைப்பாளர்கள் அனைவரும் தமது கருத்துக்களையும், விமர்சனங்களையும் கேள்விகளாகவும் முன்வைத்திருந்தபோதும் கூட, குறிப்பாக ஜீவன், விபுல், சிவானந்தி போன்றோரே கூடுதலான நேரத்தை உமாமகேஸ்வரனுடனான சந்திப்பின் போது எடுத்து தமது கருத்துக்களையும், விமர்சனங்களையும், கேள்விகளையும் முன்வைத்திருந்தனர். தொடர்ந்து பேசுவதற்கு நேரம் போதாமையால் செயலதிபருடனான அன்றைய சந்திப்பு முடித்துக் கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட அமைப்புக் குழுவினருடனான நீண்ட நேர சந்திப்பின் முடிவில் முப்பத்தைந்து இலட்சம் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதியுடையவர் எனப் பெருமைப்பட்டுக்கொண்டவராய் நிறைந்த திருப்தியுடனும் முகமலர்ச்சியுடனும் செயலதிபர் உமாமகேஸ்வரன் காணப்பட்டார். செயலதிபர் உமாமகேஸ்வரனைச் சந்தித்ததில் பெரும்பாலான யாழ் மாவட்ட அமைப்புக்குழுவைச் சேர்ந்தவர்கள் அவரது பதில்களிலும் அவர் விமர்சனங்களை எதிர்கொண்ட விதத்திலும் திருப்திபடாதவர்களாக காணப்பட்ட போதிலும் கூட செயலதிபர் உமாமகேஸ்வரனை சந்தித்தோம் என்ற விடயத்தில் ஓரளவு திருப்தி கொண்டவர்களாகக் காணப்பட்டனர்.

ஆனால் ஜீவன், விபுல், சிவானந்தி போன்றோர் உமாமகேஸ்வரனின் பதில்களில் முழுமையான திருப்தி கொள்ளாதலால் மீண்டும் ஒருதடவை செயலதிபரைச் சந்தித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டிருந்தனர். அதற்குச் சம்மதம் தெரிவித்திருந்த உமாமகேஸ்வரன் பின்பு தனக்கு நேரமின்மையால் சந்திக்க முடியாதிருப்பதாகவும் அதற்காக தான் மனம் வருந்துவதாகவும் டொமினிக்குக்கு தகவல் அனுப்பியிருந்தார். என்னைப் பொறுத்தவரை உமாமகேஸ்வரனுடைய சந்திப்பு பெருமளவுக்கு வெறும் சம்பிரதாய பூர்வமானதொன்றாகவும், எமக்கிருந்த பல கேள்விகளை, மாற்று இயக்கத்தவர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்களை தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பானதொன்றாகவே கருதவேண்டி இருந்தது.

நாம் தளத்தில் நடைமுறையில் முகம் கொடுத்துக் கொண்டிருந்த பிரச்சனைகளான தள இராணுவப் பொறுப்பாளருக்கும் தள நிர்வாகத்துக்கும் இடையிலான முரண்பாடோ அல்லது இராணுவப் பிரிவுக்கும் மக்கள் அமைப்புக்கும் இடையேயான முரண்பாடோ தீர்வில்லாமலேயே நாளுக்கு நாள் கூர்மை அடைந்து கொண்டிருந்ததையோ, உமாமகேஸ்வரனுடனான சில மணி நேர சம்பிரதாயபூர்வமான சந்திப்பு எந்த வகையிலும் மாற்றியமைத்து விடப் போவதில்லை என்பதையும் நான் உணர்ந்து கொண்டிருந்தேன்.

இருந்தபோதிலும், எத்தகைய முரண்பாடுகள் எமது அமைப்புக்குள் நிலவியபோதும், எவ்வளவுதான் அமைப்பின் மீதான நம்பிக்கைகள் தளர்ந்து கொண்டிருந்தபோதும், நாம் எமது செயற்பாடுகளிலிருந்து பின்வாங்கத் தயாராக இருக்கவில்லை. காரணம், இன ஒடுக்குமுறைக்கெதிராக புளொட்டுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட எமது நட்புக்கும் மதிப்புக்கும் உரிய பல தோழர்கள் போராட்டத்துக்காக தமது உயிரையே தியாகம் செய்துவிட்டிருந்தனர். நூற்றுக்கணக்கான எமது அமைப்பு உறுப்பினர்கள் இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகவே சிறைகளில் சித்திரவதைகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகிக் கொண்டிருந்தனர். ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் யுவதிகளையும் இராணுவப் பயிற்சிக்கென இந்தியாவுக்கு அனுப்பி விட்டிருந்தோம்.

இந்த நிலையில் எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும், எத்தகைய முரண்பாடுகளாக இருந்தாலும் அமைப்புக்குள்ளேயே தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் தீர்க்கப்படலாம்; தீர்க்கப்படவும் வேண்டும் என்ற நிலையே எம்மிடம் இருந்தது. எமது மக்கள் அமைப்பு ஓரளவு பலம் பெற்றிருந்ததால் தொழிற்சங்க அமைப்புக்களை பலப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுத்து செல்லப்பட்டன. தீவுப் பகுதிக்கு பொறுப்பாளராகவும் பின்னர் யாழ் மாவட்ட பொறுப்பாளராகவும் செயற்பட்டுவந்த ஜீவன் கடற் தொழிலாளர் சங்கத்தை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். ஜீவன் கவனித்து வந்த தீவுப் பகுதி அமைப்பு வேலைகளை சபேசன் பொறுப்பேற்றிருந்தார். தொழிற்சங்க அமைப்பு வேலைகளில் ஏற்கனவே செயற்பட்டுக் கொண்டிருந்த நீர்வேலி ராஜன், சுரேன், இடிஅமீன், கண்ணாடி நாதன், சிறீ போன்றவர்களுடன் இணைந்து ஜீவன் தொழிற்சங்க வேலைகளை கவனிக்க தொடங்கினார்.

டொமினிக் மீதான விசாரணை

டொமினிக்(கேசவன் -புதியதோர் உலகம் ஆசிரியர்)

டொமினிக்கை உரும்பிராயில் சந்தித்து பேசிய தள இராணுவப் பொறுப்பாளரான ரமணன், டொமினிக்கையும் என்னையும் மறுநாள் சித்தங்கேணிக்கு வரும்படியும், சில விசாரணைகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மறுநாள் டொமினிக்கும் நானும் சித்தங்கேணி சனசமூக நிலையத்துக்கு சென்றிருந்தோம். உமாமகேஸ்வரன் சுழிபுரத்தில் தங்கியிருந்ததால் ஆயுதம் தாங்கிய புளொட் இராணுவப் பிரிவினர் வீதியோரங்களில் கூட்டம் கூட்டமாக நிற்பதும், மோட்டார் சைக்கிள்களிலும் வாகனங்களிலும் வீதிகளில் புழுதி கிளம்பும் வண்ணம் ஆயுதங்களுடன் அங்கும் இங்குமாக போய் வந்து கொண்டிருந்தனர். சன சமூக நிலையத்திலிருந்த சின்ன மெண்டிசை சந்தித்த நாம் ரமணனை சந்திக்க வந்திருந்த விடயத்தை தெரியப்படுத்தினோம். சற்று நேரத்தில் வெங்கட்டுடன் அவ்விடத்துக்கு வந்த ரமணன் எம்மை ஒரு வானில் அழைத்துக் கொண்டு ஒரு வீட்டிற்கு சென்றார். அவ்வீட்டிற்கு சென்றதும் ரமணனும் அவருடன் சில இராணுவப் பிரிவை சேர்ந்தவர்களும் ஒருபுறமும் டொமினிக்கும் நானும் எதிர்ப்புறமுமாக அமர்ந்து கொண்டோம். தனது சிறிது நேர மௌனத்தை கலைத்துக்கொண்டு ரமணன் பேச ஆரம்பித்தார்.

சுந்தரம் படைப்பிரிவினர் என செயற்பட்டவர்கள் விடயத்தில் டொமினிக்கும் நானும் மோசமான முறையில் நடந்து கொண்டதாக சுந்தரம் படைப்பிரிவினர் முறைப்பாடு செய்திருப்பதாகவும் அவை பற்றி டொமினிக்கையும் என்னையும் விசாரணை செய்ய வேண்டும் எனவும் ரமணன் தெரிவித்தார். ரமணனின் இத்தகைய பேச்சு எனக்கு பெரும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் கூட இருந்தது. ஏனெனில் சுந்தரம் படைப் பிரிவினரின் தவறான செயற்பாடுகளுக்கெதிராக நாம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்திருந்தோம். டொமினிக் தள நிர்வாகப் பொறுப்பாளராக செயற்பட்டபோது அவரும் கூட சுந்தரம் படைப்பிரிவினர் என்று சொல்லப்பட்டவர்களுடன் சந்திப்பை நிகழ்த்தியிருந்தார். சுந்தரம் படைப்பிரிவினர் மீதான எமது நடவடிக்கைகள் அனைத்தும் அமைப்பின் நலன் சார்ந்ததாக இருந்ததேயன்றி தனிப்பட்ட குரோதத்தின்பாலானதல்ல. ஆனால் மத்தியகுழு உறுப்பினரான தள நிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்கை விசாரணை செய்ய ரமணனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ரமணன் ஒரு மத்தியகுழு உறுப்பினரும் கூட அல்ல. அத்துடன் செயலதிபர் உமாமகேஸ்வரனும் படைத்துறை செயலர் கண்ணனும் அப்போது தளத்திலேயே தங்கியிருக்கையில் ரமணன் இப்படி நடந்து கொள்கிறார் என்றால் உமாமகேஸ்வரனினதும் கண்ணனினதும் அனுசரணையுடன் தானா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ரமணனின் விசாரணையின் போது டொமினிக்கும் நானும் எமது அனைத்து நடவடிக்கைகளுக்கும் விளக்கம் கொடுத்ததோடு சுந்தரம் படைப்பிரிவினர் மீது நாம் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் சரியானவை என வாதிட்டோம். டொமினிக்கை பொறுத்தவரை சற்று உணர்ச்சிவசப்பட்டவர் போல, ஆனால் மிகுந்த பொறுமையுடன் ரமணனின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார். நான்கு மணிநேரம் நடைபெற்ற இந்த விசாரணையின்போது தனது விசாரணையில் நன்கு திருப்திப்பட்டுக்கொண்டவராக, தன்னுடைய அறிவுக்கு எட்டியவரை அல்லது அவர் விளங்கிக் கொண்டவரை குறிப்பெடுத்துக் கொண்டார்.

ரமணனின் விசாரணை முடிந்த பின்னர் டொமினுக்கும் நானும் உரும்பிராய் நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம். நடந்து முடிந்த விசாரணை பற்றி எதுவுமே அலட்டிக் கொள்ளாதவராக வெவ்வேறு விடயங்களை பற்றி பேசிக் கொண்டுவந்த டொமினிக்கின் பேச்சின் சாரம், விடயங்கள் அனைத்தும் தள நிர்வாகப் பொறுப்பாளரின் கைக்கு வெளியே நடந்து கொண்டிருப்பதற்கான தொனியை கொடுத்த அதேவேளை அவநம்பிக்கையின் ஒரு வெளிப்பாடாகவும் இருந்தது. இதுவே அன்றைய உண்மை நிலையும் கூட.

(தொடரும்)

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17