புலிகளை மட்டும் இராணுவம் ஊடுருவித் தாக்கவில்லை. இன்று மக்களையும் தான் ஊடுருவித் தாக்குகின்றது. அன்று தம்மை உருமறைப்பு செய்து புலிகள் பிரதேசத்தில் ஊடுருவிய படையணி தான், இன்று மக்களை ஊடுருவித் தாக்குகின்றது. குறிப்பாக தமிழர் அல்லாத மற்றைய சிறுபான்மை இன மக்கள் வாழும் பிரதேசங்கள் எங்கும் பொதுவான அச்சமும் பீதியும். குறிப்பாக பெண்கள் கடுமையான உளவியல் தாக்குதலுக்கும் உள்ளாகி இருக்கின்றனர். இந்த வகையில் மலையகம், முஸ்லீம் மக்கள் வாழும் பிரதேசங்கள், தமிழரின் எல்லையோர கிராமங்கள் எங்கும் ஒரேவிதமான விடையங்கள், செய்திகளும் வெளியாகின்றது. அரசோ இதை வதந்தி என்கின்றது. போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை என்று கூறும் அரசு அல்லவா இது.

 

 

 

இங்கு தாக்குதலுக்கு உள்ளானவர்கள் உள்ளதுடன், மருத்துவரீதியாக சிகிச்சை பெற்ற ஆதாரங்களும் உள்ளது. இப்படி இருக்க, அரசோ இதை கட்டுக்கதை என்கின்றது. இதற்கு எதிராக எழும் மக்களைத் தாக்குகின்றது. மறுபக்கத்தில் அரசு மூடிமறைத்துப் பாதுகாக்க, மக்கள் அதிகாரத்தை தங்களை கையில் எடுத்துக் கண்காணிக்கின்றனர். இப்படி அரசும் மக்களும் பிரிந்து, எதிர் எதிர் திசையில் பயணிக்கின்றனர். மறுதளத்தில் மக்களால் கைது செய்யப்பட்டவர்களை, அரசு பாதுகாத்து உடன் விடுதலை செய்கின்றது. இப்படி மக்களிடம் பிடிபட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏதோ ஒருவகையில் அரச படையுடன் தொடர்புபட்டவர்கள். மக்கள் துரத்திச் சென்ற சந்தர்ப்பங்களில், அவர்கள் அரச படை முகாங்களுக்கு சென்று ஓடியொழிக்கின்றனர். இதன்போது மக்களை அரச படைகள் தாக்குகின்றது.

இப்படியாக இதன் பின்னணியில் அரசு இருப்பது மிகத் தெளிவாகின்றது. வெவ்வேறு பிரதேசத்தில் ஒரேமாதிரியான திட்டமிட்ட இந்தச் செயல்கள் இந்த உண்மையை வலுப்படுத்துகின்றது. மக்களுக்கு எதிராக இதைப் பாதுகாக்கின்ற அரசின் செயல்பாடு, இதை மேலும் உறுதி செய்கின்றது.

மக்களின் அச்சம், அரசின் அலட்சியமான மக்கள் மேலான வன்முறையால் வதந்திகளும், இனம் காண முடியாத அப்பாவிகள் மேலான வன்முறையும் ஆங்காங்கே அரங்கேறுகின்றது.

இதன் பின்னணியில் அரசு படிப்படியாக திணிக்கின்ற இராணுவ ஆட்சிக்கான முன்தயாரிப்புக்கான மற்றொரு வடிவம் தான் இவை. வடக்கு கிழக்கில் நிலவும் இராணுவ ஆட்சி வடிவத்தை மேலும் இறுக்கவும், மற்றைய சிறுபான்மை மக்களின் பிரதேசத்துக்கு இதை உடனடியாக விரிவாக்கும் திட்டமும் தான், மக்களை ஊடுருவிய தாக்குதலாகும். சிறுபான்மை இனங்கள் மேலான அரசின் இனவழிப்பு திட்டத்தை மேலும் விரிவுபடுத்த, அரசபடைகளையும் அதை ஒட்டிய இனக் குடியிருப்புகளையும் கொண்ட திட்டமும் உள்ளடங்கியது தான் இந்த கிறிஸ் மனிதர்கள் வன்முறை.

இந்தக் கிறிஸ் மனிதர்கள் ஏற்கனவே தம்மை மூடிமறைப்பு செய்தபடி, அதாவது தம்மை கறுப்பாக்கிக் கொண்டு புலிகள் பிரதேசத்தில் ஆள ஊடுருவிய அதே படையணிதான். இதன் பின்னணியில் பாரிய போர்க்குற்றத்தில் ஈடுபட்ட உளவுப்பிரிவு வழிகாட்டுகின்றது.

இலங்கையை ஆளும் பாசிட்டுகள் உருவாக்குகின்ற இராணுவ ஆட்சி, மக்களைக் கண்டு அஞ்சுகின்றது. அவர்களை ஒடுக்க புதிய புதிய வழிகளைத் தேடுகின்றது. பயங்கரவாத சட்டத்தை நீக்கக் கோரும் சர்வதேச அழுத்தத்தைத் தடுக்க, இது போன்ற வன்முறையை திணிக்கின்றனர். பொது மக்கள் அச்சத்துக்குரிய சூழலில் வாழ்வதால், அவர்களைப் பாதுக்காக தமக்கு அடக்குமுறை சட்டங்கள் தேவை என்பதைக் கூற, அரசு இது போன்ற சூழலை உருவாக்குகின்றது.

இப்படி மக்களைக் கண்டு அஞ்சும் மக்கள் விரோத ஆட்சிகள் பற்றி மார்க்ஸ் "கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்." என்றார். இங்கு மக்கள் விரோத சட்டத்தை பாதுகாக்க அல்லது உருவாக்க, மக்களை இரக்கமின்றி அச்சம் பீதிக்கூடாக அடக்கியாள வன்முறையை ஏவுகின்றது. இதன் பின்னணியில் நாடு முழுக்க இராணுவ மயமாகின்றது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சியை திணித்த கூட்டம் தான், இராணுவத்தை முன்னிறுத்தி மக்களை ஒடுக்க அச்சமூட்டும் வண்ணம் பொதுச் சூழலை உருவாக்குகின்றது.

ஆனால் பாசிட்டுகள் நினைப்பது ஒன்று. நடப்பது வேறு. மக்கள் இதை அரசுக்கு எதிராக இனம் கண்டு போராடுவதும், தங்களைத் தாங்கள் அணிதிரட்டிக்கொண்டு இதை எதிர் கொள்வதும் அரசு எதிர்பாராத ஒன்று. அரச உளவுப் பிரிவு கூட கிராமங்களுக்குள் செல்ல முடியாத வண்ணம் மக்கள் கண்காணிப்பு என்பது, பாசிட்டுக்களை எதிர்காலத்தில் முறியடிக்கும் அரசியல் முன்முயற்சிக்கு உரிய அரசியல் ரீதியான முன்னோடிச் செயல்பாடாகும். இதை மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்;டிய நிலையில் நாம் அனைவரும் இருக்கின்றோம்.

ஒரு கிராமத்தில் இருந்து அடுத்த கிராமம் என்று ஒரு தொடர் மக்கள் கண்காணிப்பு, இணைப்பு விரிவாகின்றது. இதை அரசியல் ரீதியாக வழிநடத்த முன்வராத அரசியல் வெற்றிடத்தில், புதிய சக்திகள் அரசியல் விழிப்புணர்வு பெற்று இங்கிருந்து உருவாகும் சாத்தியப்பாட்டை இது உருவாக்குகின்றது. இதுபோன்ற சூழலில் வர்க்க சக்திகள் இதை தலைமை தாங்கத் தவறும் போது, வலதுசாரிய இன, மத, சாதிய குழுக்கள் தலைமைதாங்கி அரசுக்கு சார்பான அரசியலாக அதை மாற்றிவிடும். இந்த அபாயத்தை இலங்கை இடதுசாரி சக்திகள் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டிய வரலாற்று காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம். எங்கும் பல முனைகளில் முரண்பாடுகள் கூர்மையாகி வருகின்றது. இடதுசாரிகள் இதை இன்னும் வழிநடத்த அரசியல் ரீதியாக முனையவில்லை. இதனால் இடதுசாரியல்லாத வலதுசாரிய தலைமைகளின் கையில் தவிர்க்க முடியாது இது செல்லுகின்றது அல்லது இயல்பாக தன்னெழுச்சியாக வெளிப்படுகின்றது. அரசு இதை ஒடுக்க, வேகமாக தன்னை மேலும் மேலும் இராணுவமயமாக்குகின்றது. இதை எதிர்கொள்ளும் இடதுசாரிய முயற்சிகள் எதுவும் நடைமுறையில் மக்கள் மத்தியில் தோன்றவில்லை என்பது எம்மீதான கூர்மையான அரசியல் விமர்சனமாகும்.

 

பி.இரயாகரன்

18.08.2011