பிரிட்டிஸ் அரச குடும்பத்தைப் பார்த்து பண்பாட்டை வளர்க்கின்ற நாகரீக சீமான்களும் சீமாட்டிகளும், நேரெதிரான ஒரு காட்சியை காணும் வண்ணம் தன்னைச் சுற்றி ஒரு அராஜக சூழலை உருவாக்கி வைத்திருப்பதை கனவில் கூட எண்ணியிருக்கமாட்டார்கள். பணக்காரக் கூட்டம் மட்டும் வாழமுடியும் என்று நம்பி வாழும் நாகரீக சமூகம், ஏழைகளின் அராஜகத்தை நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார்கள். தன்னைச் சுற்றி நாகரீக சேரிகளை உருவாக்கி வைத்திருப்பது, தனது நாகரீகத்துக்கான கல்லறைகள் என்பதை எண்ணிக் கூட பார்த்திருக்கமாட்டர்கள்.

 

இன்று அடக்குமுறை இயந்திரம் போதியளவில் தங்களைக் காப்பாற்ற போதவில்லை என்பது பற்றியும், ஆளுக்காள் தன்னைச் சுற்றிய தனிமனித உலக கனவுகளின் பின்னணியில் குறுக்கிய குப்பை விளக்கங்கள்.

இந்த சமூக அமைப்பில் வாழ வழியற்றுப் போன இளைஞர் சமூகத்தின் அராஜகம் தான், லண்டனை நிலைகுலைய வைத்துள்ளது. இனரீதியாக, நிறரீதியாக, மத ரீதியாக ஓடுக்கப்பட்டு, சமூகத்தில் மிகமிக ஏழைகளான பிரிவுகள் படிப்படியாக ஒதுக்கப்பட பிரதேசத்தில் வாழ்வது தான் மேற்கின் நவீன சேரிகளாகின்றது.

இங்கு உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது கிடையாது. மேட்டுக்குடி சமூகத்தின் திட்டமிட்ட ஓதுக்கும் கொள்கையால், இது மேலும் வீரியமாகின்றது. இங்கு இன நிற மத வாதம், மேலும் அவர்களைத் தனிமைப்படுத்துகின்றது. இங்குள்ளவர்கள் பொதுவான சமூகத்தில் இருந்து விலத்தி வைக்கப்படுகின்றனர். இதுவே மகாராணி பூசிக்கும் பிரிட்டனின் பண்பாடாகின்றது. பணக்காரர்கள் பணத்தை மேலும் குவிக்க, தொடர்ச்சியாக நடைமுறைக்கு வரும் சமூகநலவெட்டுக்கள், ஏழ்மையை மேலும் பல மடங்காக்குகின்றது. இதன் விளைவு தான், சமூகம் மேலான வரைமுறையற்ற அராஜகமும் சூறையாடலும்.

இந்தச் சமூக அமைப்பு உருவாக்கியுள்ள இந்தச் சூழலை இனம் காட்டி, இதற்கு எதிராக போராடக் கூடிய அரசியல் மற்றும் மக்கள்திரள் அமைப்புகள் இன்மை தான், வரைமுறையற்ற அராஜகத்தின் பொது வெளிப்பாடு. இதற்குரிய கூறாக இருப்பது நுகர்வு பற்றிய விளம்பரங்களும், அதை நுகரக் கோரும் உளவியல் வன்முறையுமாகும். இதை அடைய முடியாத போது, எதிர்வன்முறை மூலம் நுகருகின்ற உளவியல் பண்பாடாக மாறுகின்றது. இதைத்தான் லண்டல் வீதிகளில் பொருட்களை சூறையாடிய காட்சிகள் எடுத்துக் காட்டுகின்றது. ஆடம்பரப் பொருட்களை விதம்விதமாக நுகரக் கோரும் உளவியல் மூலமான வன்முறை, நுகர முடியாத போது எதிர் வன்முறையாகின்றது. அதை சூறையாடி நுகரக்கோருகின்றது.

இதையெல்லாம் வீரியமாக்குவது தனி மனிதர்களை முதன்மைப்படுத்தி சமூகத்தில், சிலரை வாழ வைக்கும் சமூக அறநெறிகள் தான். அதை ஓட்டிய சட்டங்கள் தான். இது ஏழ்மையை சமூகத்துக்கு பரிசாகக் கொடுக்கின்றது. இதனால் இங்கு வளரும் குழந்தைகள் சமூகத்தில் விலகி விடுகின்ற, லும்பன் குழுக்காக மாறுகின்றனர்.

சகலவிதமான சட்டவிரோதமான நடத்தைகளையும்;, ஏழைகளின் குழந்தைகளுக்கு இந்தச் சமூகம் பரிசாகக் கொடுக்கின்றது. இதனால் இங்கு சட்டத்தின் ஆட்சி என்பது செல்லுபடியாவதில்லை. இங்கு எந்த சமூக அறநெறியும் இயல்பில் இருப்பதில்லை. இது தன் குழுவுக்கு வெளியில் யாரையும் நேசிப்பது கிடையாது.

தன் குழுவை ஒத்த ஒருவனை சட்டவிரோதமாக சுட்டுக் கொன்றதாக கருதும் பொதுச்சூழலை தனக்கு சாதகமாக கொண்டு, சட்டத்தின் அமைப்பிலான சமூக கட்டுமானங்கள் மேலான அராஜகத்தை தன்னியல்பாகவே அலையலையாக உருவாக்கியுள்ளது. ஏழை முதல் பணக்காரன் வரை, இதன் பாதிப்பை உணரும் வண்ணம், வன்முறை வீறிட்டு வெளிப்பட்டது.

இதை ஓட்டிய பொதுப் பார்வைகள், கருத்துகள் இந்த நிலையை உருவாக்கிய கூட்டத்தின் அடக்குமுறைக்கு சாதகமாக வெளிப்படுகின்றது. மேலிருந்து சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கூறும் அளவுக்கு, தமிழனின் பொதுத் தீர்ப்பாக உள்ளது. மகிந்தா அரசு மேல் இருந்து மக்களைக் கொன்ற அதே வக்கிரத்தை தான் பிரிட்டிஸ் செய்ய வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்து அலசுகின்ற தமிழன் பார்வைகள். இப்படி இதிலும் தமிழன் குறுகிக் கிடப்பதை, இந்த இடத்தில் நாம் காணமுடிகின்றது.

இந்தச் சமூக அமைப்பின் ஊடாக இந்த மாதிரியான சூழலுக்குரிய நிலைமைகளை உருவாக்கியவர்கள் தான், இங்கு முதன்மையான குற்றவாளிகள்;. இவர்கள் தான் அவர்களை உருவாக்கினர். உதாரணமாக இலங்கை அரசு தான் இனப்பிரச்சனையையும், அதனடிப்படையில் புலியையும் உருவாக்கினர். இதே போன்று தான், லண்டன் கலவரத்தை பிரிட்டிஸ் ஆளும் வர்க்கம் தான் உருவாக்கியது. இப்படி தன் சமூக பொருளாதார பண்பாட்டால் உருவாக்கப்பட்டவர்கள், கும்பல் கும்பலாக வீதிகளில் இறங்கினர். கண்ணில் காண்பதை எல்லாம் அடித்து நொருக்கி, தீயிட்டு, கொள்ளையிட்ட செயல் தற்செயலானதல்ல. இந்த அமைப்பின் விளவுதான் இது. ஏன் இந்த சமூகத்தில் இது உருவானது? யார் இதற்கு பொறுப்பு?

இதை இன நிற மத மூலமாக பார்ப்பதாலோ, சட்டத்தின் மூலம் தண்டிப்பதாலோ, அடக்குமுறையை ஏவுவதாலோ, இது இல்லாமல் போய்விடாது. மீளவும் ஒருமுறை இது நடக்காது என்பதல்ல. சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவராத வரை, இதற்கான காரணத்தை கண்டு தீர்க்காத வரை, ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறையிலான கூச்சல்கள் ஒப்பாரிகள் இதை மேலும் வன்முறை கொண்ட கூறாக வளர்ச்சிபெற வழிகாட்டுகின்றது.

பி.இரயாகரன்

10.08.2011