உமாமகேஸ்வரனால் யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்ட கொக்குவில் ரவிமூர்த்தி

உமாமகேஸ்வரனால் கொக்குவிலைச் சேர்ந்த ரவிமூர்த்தி இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ரவிமூர்த்திக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்குமாறு கண்ணாடிச் சந்திரனுக்கு உமாமகேஸ்வரன் மடல் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். கண்ணாடிச் சந்திரனைச் சந்தித்துப் பேசிய ரவிமூர்த்தி என்னைச் சந்தித்துப் பேசவிரும்புவதாக தெரிவித்திருந்தார்.

(ஜே.ஆர் ஜெயவர்த்தனா)

(1983 யூலை-இனக்கலவரம்)

1983 யூலை ஜே.ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான அரசினால் திட்டமிடப்பட்டு தமிழ், முஸ்லீம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையும் அதைத் தொடர்ந்த இனக்கலவரமும் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழ்ந்துவந்த இலங்கைத் தமிழர்கள்- குறிப்பாக இளைஞர்கள்-மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழ் இளைஞர்கள் இன ஒடுக்குமுறைக்கெதிராக போராடுவததொன்றே ஒரே வழி எனக் கண்டனர்.

ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்கள் இந்தியாவில் தமது செயற்பாடுகளை விஸ்தரித்து இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்திருந்தவேளை உண்மையான விடுதலை உணர்வோடு,  போராட்ட உணர்வோடு மேற்கு ஜரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து இந்தியா சென்று விடுதலை இயக்கங்களுடன் இணைந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களில் ரவிமூர்த்தியும் ஒருவர். ரவிமூர்த்தி சிறுவயதிலிருந்தே எனது சகோதரனின் நெருங்கிய நண்பனாக இருந்தமையால் ரவிமூர்த்தியை நன்கு அறிந்தவனாகவும் பரிட்சயமுள்ளவனாகவும் நானிருந்தேன். புளொட் அமைப்பின் ஆரம்பகாலங்களில் கொக்குவில் பகுதியில் நடைபெற்ற உமாமகேஸ்வரனுடனான கலந்துரையாடலில் ரவிமூர்த்தியும் எனது சகோதரனும் பங்குபற்றியிருந்ததால் ரவிமூர்த்திக்கு உமாமகேஸ்வரன் ஏற்கனவே அறிமுகமானவராக ஒருவராக இருந்தார். இதனால் உமாமகேஸ்வரன் ரவிமூர்த்தியிடம் சில பொறுப்புக்களை ஒப்படைத்து யாழ்ப்பாணம் அனுப்பியிருந்தார்.

(உமாமகேஸ்வரன்)

நான் ரவிமூர்த்தியைச் சந்திப்பதற்கு அவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். என்னைச் சந்தித்த ரவிமூர்த்தி என்னுடன் சில விடயங்கள் பேச வேண்டும் என்றார். நான் தாராளமாகப் பேசலாம் என்று கூறினேன். சுவிற்சலாந்திலிருந்து இந்தியா சென்று புளொட் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாகவும், பின்னர் ”பெரிசு”(உமாமகேஸ்வரன்) தன்னிடம் சில பொறுப்புகளை ஒப்படைத்து யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார் என்றும் ரவிமூர்த்தி கூறினார். தனது வேலைகள் கொழும்பை மையப்படுத்தியவை என்று கூறிய ரவிமூர்த்தி இன்னொரு விடயத்தையும் என்னிடம் தெரிவித்தார். ”பெரிசு” (உமாமகேஸ்வரன்) உன்னில் நல்ல மதிப்பு வைத்திருக்கு, அதற்கேற்றால் போல் ஒழுங்காக வேலை செய்” என்று சூட்சுமமாகப் பேசினார் ரவிமூர்த்தி. நான் என்ன பிரச்சனை என்று வெளிப்படையாகப் பேசுமாறு கேட்டேன். ”சந்ததியின் ஆட்களின் பேச்சைக் கேட்காமல் ஒழுங்காக வேலை செய்” என்றார் ரவிமூர்த்தி. பிரச்சனை என்னவென்று விளக்கமாக கூறும்படி ரவிமூர்த்தியை நான் கேட்டேன். ”ஒழுங்காக வேலை செய்” என்று மட்டும் கூறி ரவிமூர்த்தி தான் மிகவிரைவிலேயே கொழும்பு சென்றுவிடுவேன் என்று கூறி என்னிடம் இருந்து விடைபெற்றார்.

(சந்ததியார்)

ரவிமூர்த்தி கூறிய இந்த விடயம்  நான் எதிர்பார்த்திராத, புதிய விடயமாக இருந்தது. தளத்தில் செயற்பட்ட எம்மைப் பொறுத்தவரை நாம் புளொட் என்ற ஒரு அமைப்புக்காகவே, அமைப்பை முதன்மைப்படுத்தியே எமது செயற்பாடுகள் அனைத்தும் இருந்து வந்தது. தனிநபர் வழிபாட்டையும், தனிநபர்களை முதன்மைப்படுத்திய அமைப்புக்களையும் நாம் தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளோம். தளத்தில் செயற்பட்ட மக்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உமாமகேஸ்வரனைக் கூட ”பெரிசு” என்றோ ”பெரியய்யா” என்றோ ஒருபோதும் விழித்தது கிடையாது. இதனால் ரவிமூர்த்தி கூறிய விடயம் என்னை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அத்துடன் அன்று எமக்கு முன்னால் இருந்த வேலைப்பழு, தளத்தில் அன்றிருந்த பாதுகாப்பற்ற நிலை போன்றவற்றால் ரவிமூர்த்தி கூறியவை பற்றி சிந்திக்கக்கூட முடியாத அளவுக்கு இருந்தது.புளொட்டின் ஆரம்பகாலங்களில் புளொட்டுடன் தொடர்பில் இருந்த ரவிமூர்த்தி பின்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பணியாற்றி அதன்பின் சுவிஸ்சலாந்து சென்றிருந்தார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பேசக்கூடிய காரணத்தால் ரவிமூர்த்தியை உமாமகேஸ்வரன் கொழும்பில் சிலவேலைகளை பொறுப்பாக கொடுத்தனுப்பியிருந்தார் என எண்ணினேன்.


படகில் வந்த "பொதி"


இந்தியாவிலிருந்து பயிற்சி பெற்றவர்களை தளத்துக்கு கொண்டுவரும் படகிலேயே இந்தியாவிலிருந்து “புதிய பாதை” பத்திரிகை, சஞ்சிகைகள், துண்டுப்பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இவற்றை “செய்தி மக்கள் தொடர்புத் திணைக்கள” ப் பொறுப்பாளர் விபுல் கடற்கரையிலிருந்து பொறுப்பெடுத்துக் கொண்டு வருவார். இந்தியாவிலிருந்து வந்த பத்திரிகை மற்றும் சஞ்சிகைகளுடன் தெல்லிப்பளையைச் சேர்ந்த ஒருவரின் முகவரிக்கு பொதி ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அந்தப் பொதி பிரச்சார சம்பந்தமானதாக இல்லாததால் அதை விபுல் கண்ணாடிச் சந்திரனிடம் ஒப்படைத்தார். அந்தப் பொதியை கண்ணாடிச் சந்திரன் திறந்து பார்த்ததில் அதற்குள் பட்டுச்சேலைகள் இருப்பதைக் கண்டார். விடுதலைப் போராட்ட இயக்கமான புளொட்டினுடைய படகில் இத்தகைய பொருட்களை அனுப்பி வைப்பது தவறென்று கூறிய கண்ணாடிச் சந்திரனின் கருத்தில் நாமும் உடன்பட்டோம்.

புளொட்டின் படகில் இத்தகைய பொருட்கள் வரும்போது இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டால் ஈழவிடுதலை இயக்கங்கள் கள்ளக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் என இலங்கை அரசால் பிரச்சாரம் மேற்கொள்ள வாய்ப்பளிக்கும் என்பதோடு இது ஒரு தவறான செயலுமாகும் எனக் கருதினோம். எனவே இத்தகைய பொதியை புளொட்டின் படகில் அனுப்பிவைப்பதை அனுமதிக்க முடியாது என எம்மால் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்தப் பட்டுச்சேலைகள் அடங்கிய பொதியை குறிப்பிட்டிருந்த முகவரியில் கொடுப்பதில்லை எனவும், அதை விற்று அதிலிருந்து பெறும் பணத்தை அமைப்பு செலவுகளுக்கு எடுப்பது எனவும் முடிவானது.இதனடிப்படையில் அச்சேலைகள் எம்மால் விற்கப்பட்டு அந்தப் பணம் புளொட்டின் நிதிப் பொறுப்பாளர் சிவானந்தியிடம் கொடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நடைபெற்று சில நாட்களில் உமாமகேஸ்வரனிடமிருந்து கண்ணாடிச் சந்திரனுக்கு மடல் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அந்த மடலில் புளொட்டின் படகில் தன்னால் அனுப்பிவைக்கப்பட்ட பார்சல் உரிய நபருக்கு சென்றடையவில்லை என்றும், அதற்கான காரணம் என்ன என்றும், உமாமகேஸ்வரனால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதன் பின்னர் தான் அந்தப் பொதி உமாமகேஸ்வரனால் தளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது என்பதை நாம் அறிந்து கொண்டோம்.

அந்தப் பொதியை யார் அனுப்பி வைத்திருந்தாலும் அதை புளொட்டின் படகில் அனுப்பி வைத்தது தவறான செயலாகும். அதேவேளை புளொட்டின் ஆரம்பகாலங்களில் படகுக்குப் பொறுப்பான இருந்த வதிரியைச் சேர்ந்த சதீஸ் இந்தியாவிலிருந்து புளொட்டின் படகில் இத்தகைய பொருட்களை கொண்டுவந்ததால் யாழ் மாவட்ட அமைப்பாளர் கூட்டத்தில் இவ்விடயம் கடுமையான விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் உள்ளானது. இதுபற்றி உமாமகேஸ்வரனுக்கும் கூட யாழ் மாவட்ட அமைப்பால் அறிக்கை அனுப்பிவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவிலிருந்து வந்து தளநிர்வாகத்தை பொறுப்பெடுத்த டொமினிக்! (கேசவன்- புதியதோர் உலகம் ஆசிரியர்)

டொமினிக்(கேசவன்)


1984 ம் ஆண்டு பங்குனி மாதம் தளநிர்வாகப் பொறுப்பாளராக செயற்பட்ட சலீம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார். சலீம் கைது செய்யப்பட்டு பல மாதங்களின் பின்னர் டொமினிக் (கேசவன்) இந்தியாவிலிருந்து தளம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். . டொமினிக் (கேசவன்) தளம் வரும்போது உமாமகேஸ்வரனால் கண்ணாடிச் சந்திரனுக்கு மடல் ஒன்று கொடுத்துவிடப்பட்டிருந்தது. அந்த மடலில், தளத்தின் அனைத்து அரசியல் சம்பந்தமான விடயங்களுக்கும் டொமினிக்கே(கேசவன்) பொறுப்பாக இருப்பார் என்றும், சில தினங்களில் கண்ணன் (ஜோதீஸ்வரன்)  தளத்திற்கு வர இருப்பதாகவும் தளத்தின் அனைத்து இராணுவம்  சம்பந்தமான விடயங்களுக்கும் கண்ணன் பொறுப்பாக இருப்பார் என்றும், இந்த இருவரிடமும் சகல பொறுப்புக்களையும் கையளித்து விட்டு,  உடனடியாக சென்னைக்கு வருமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் அனைத்து மாவட்ட அமைப்பாளர்களையும் டொமினிக்குக்கு (கேசவன்) அறிமுகம் செய்து வைக்குமாறும் சகல ஆயுதங்களையும் கண்ணனிடம் கையளிக்குமாறும் பணிக்கப்பட்டிருந்தது.

கண்ணன் (ஜோதீஸ்வரன்)

அனைத்து மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட மகளிர் அமைப்பு, மாணவர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்பு பொறுப்பாளர்களும் கண்ணாடிச் சந்திரனால் டொமினிக்குக்கு(கேசவன்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். யாழ் மாவட்ட அமைப்பாளர் கூட்டத்திலும் டொமினிக்(கேசவன்) கலந்துகொண்டு, அமைப்பாளரின் கருத்துக்களை செவிமடுத்ததுடன், அமைப்பாளர்களின் விமர்சனங்களுக்கும் பதிலளித்தார். அம்பாறை சென்றல்காம்ப் பொலிஸ் நிலைய தாக்குதல் ஒட்டுசுட்டான் பொலிஸ் அதிகாரி சுந்தரலிங்கம் கொலை சம்பந்தமாக காரசாரமான விவாதங்கள் யாழ் மாவட்ட அமைப்பாளர் கூட்டத்தில் நடந்தன. டொமினிக்(கேசவன்) தளநிர்வாகப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற பின்னர், அவர் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்கள், பாசறைகள், நிர்வாகக் கூட்டங்கள் போன்றவற்றில் கலந்துகொண்டு, அங்கே தெரிவிக்கப்பட்ட கருத்துக்களும்,  பிரச்சனைகளை ஆழமாகவும் அரசியல்ரீதியாகவும் அதேவேளை வர்க்கக் கண்ணோட்டத்தில் அணுகுதலும், அவர் கருத்துக்களில் இருந்த தெளிவும் அமைப்பில் செயற்பட்டவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதாக அமைந்தன.

(தோழர் தங்கராசா)

தோழர் தங்கராசா இந்தியா சென்றபின், பெரிய அளவில் அரசியல் பாசறைகளை நடத்துவது நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. டொமினிக்கின் (கேசவன்) தளவருகையுடன் மீண்டும் அரசியல் பாசறைகளும் அரசியல் வகுப்புகளும் தொடங்கப்பட்டன. டொமினிக்(கேசவன்) தளம் வரும்வரை எமது செயற்பாடுகளையும், சந்திப்புக்களையும் கோண்டாவிலையும் அதைச் சுற்றிய இடங்களிலுமே மேற்கொண்டு வந்தோம். இதற்கு கோண்டாவில் விக்கி, ரஞ்சன், சிவா போன்றோரின் உதவியும் கொக்குவில் ஜெகன், நாதன், செல்வன்  போன்றோரின் உதவியும் எமக்கு பெருமளவுக்கு இருந்தது. இராணுவத்தின் கெடுபிடிகளும், சுற்றிவளைப்புக்களும் தொடர்ந்த வண்ணமாயிருந்தன.

தகவல்துறைக்குப் பொறுப்பாக செயற்பட்டுவந்த ரமணன் யாழ்நகரத்தில் தகவல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதற்கு சில வாரங்களுக்கு முன் இரகசிய தகவலின் அடிப்படையில் நல்லூர் பிரதேசத்தை இராணுவத்தினர் சுற்றிவளைத்தபோது அந்தச் சுற்றிவளைப்பிலிருந்து ரமணனால் தப்பிக்க முடிந்தபோதிலும் யாழ்நகர் சுற்றிவளைப்பிலிருந்து தப்பிக்க முடியவில்லை. புளொட்டின் ஆரம்பகாலங்களில் உரும்பிராய் ராசா, சத்தியமூர்த்தி, சிவா, சுண்ணாகம் அகிலன் (ஜயர்), அற்புதன், யக்கடையா ராமசாமி, போன்றோருடன் செயற்பட்டுவந்த ரமணன் பின்பு பார்த்தனின் கீழ் தகவல் சேகரிப்புத் துறைக்கு பொறுப்பாக செயற்பட்டு வந்தார். ரமணனின் கைதையடுத்து எமது சந்திப்புக்கான இடங்களையும் செயற்பாட்டுக்கான இடங்களையும் உரும்பராய், நீர்வேலி பகுதிக்கு மாற்றிக் கொண்டோம். உரும்பிராய், நீர்வேலிப் பகுதியில் எமது செயற்பாடுகளுக்கான அனைத்து உதவிகளையும் உரும்பிராய் ராசா, குமார், சீலன், ராஜன் போன்ற புளொட் உறுப்பினர்கள் கவனித்து வந்தனர்.

தொடரும்.

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13