இன்று லிபியாவில் நேற்று ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் என எல்லாவற்றிலிலும் “சர்வதேசச் சமூகம்” எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதைப் பற்றி வியப்பதற்கு எதுவுமில்லை. அது எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படித்தான் நடந்து கொள்கிறது. இதற்கிடையில் லிபியாவில் பொதுமக்களைக் காப்பாற்ற தலையிட்ட ஐ.நாவும் சர்வதேசச் சமூகமும் இலங்கைத் தமிழர் விடயத்தில் அவ்வாறு நடந்துகொள்ளாமல் தமிழர்களை ஏமாற்றிவிட்டதாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. நாங்கள் வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இற்றைக்குப் பதினேழு ஆண்டுகளுக்கு முன் ருவாண்டாவில் நூறு நாட்களில் எட்டு இலட்சம் டுட்சி சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்ட போது ஐ.நாவும் சர்வதேசச் சமூகமும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. இக் காலப்பகுதியில் ஐ.நாவின் அமைதிகாக்கும் படைகளுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் ரோமியோ டிலார் (Romeo Delaire) தனது ‘பிசாசுடன் கை குலுக்குதல்” (Shaking Hands with the Devil) என்ற நூலிற் பின்வருமாறு எழுதுகிறார்:

 

“மேற்குலகுக்கும் ஐ.நாவிற்கும் ருவாண்டாவில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று படுகொலைகள் தொடங்கிய போதே தெரியும். ஆனால் யாருக்கும் ஆபிரிக்கக் கண்டத்தின் ஒரு மூலையில் உள்ள நாடு பற்றி அக்கறை இல்லை. மூலோபாய ரீதியில் தேவைப்படாத கறுப்பர்களைக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இனப் படுகொலைகளைப் பற்றிக் கவலைப்பட யாரும் தயாராக இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில், ருவாண்டாவில் நடந்து கொண்டிருந்ததெல்லாம் நாகரீகமற்ற பழங்குடி இனக் குழுமங்களுக்கிடையிலான சண்டை மட்டுமே”.

இது ருவாண்டாவிற்கு மட்டுமல்ல, இலங்கை உட்பட்ட பல நாடுகளிலும் “சர்வதேசச் சமூகம்” எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது, இனியும் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதற்கான வரலாற்றின் சாட்சியாக இருக்கிறது. அடக்குமுறையாளர்களும் ஆளும் வர்க்கங்களும் சர்வதேசச் சமூகம் பற்றி அதிகமாகவே பேசுவதைக் கேட்கிறோம். தங்களின் அடக்குமுறைகளையும் அராஜகங்களையும் கேள்விக்கு உட்படுத்தாத வரை, சர்வதேசச் சமூகம் பற்றி மகிழ்ச்சி உடையவர்களாகவே ஆளும் வர்க்கத்தினரும் அடக்குமுறையாளர்களும் இருப்பர்.

அடக்குமுறைகளினதும் ஆதிக்கங்களினதும் ஒட்டு மொத்த வடிவமாக இருக்கும் சர்வதேசச் சமூகம் எனப்படுகின்ற ஏகாதிபத்தியத்தின் தலையீட்டின் மூலம் அடக்கி ஆளப்படும் மக்களினது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று நம்புவது இன்றைய பொதுவான போக்காக இருக்கிறது. அடக்குமுறை அரசு யந்திரத்திற்கு எதிராக மக்களின் போராட்ட சக்தியைப் புதிய போக்கிற்கு ஏற்பக் கட்டி வளர்க்க முடியாத ஜனநாயக இடதுசாரிச் சக்திகளும் சர்வதேசத் தலையீடுகளைத் தத்தம் நிலையில் நின்று வரவேற்பவர்களாகவே இருக்கின்றனர்.

அதேபோல, முரண்பாடுகளை ஊக்குவித்து மோதல்களை உருவாக்கி யுத்தங்களைத் திணித்து அதிற் பாதிக்கப்படுவர்களுக்கும், அதே வேளை, அடக்குமுறை அரசாங்கங்களுக்கும் மனிதாபிமான ரீதியாக உதவுவதாகக் கூறி உலக மேலாதிக்க சக்திகள் செயலாற்றுகின்றன. மேலும், இயற்கை அனர்த்தங்களின் போதும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் எனவும் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்க எனவும் மேலாதிக்கச் சக்திகள் நாடுகளில் தலையிடு கின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சர்வதேசச் சமூகம் என்ற போர்வைக்கு உள்ளிருக்கும் ஏகாதிபத்தியத்தை வரவேற்று உபசரிக்கும் நிலையில் பல்வேறு பிரிவினர் இருக்கின்றனர்.

இதன் பின்ணணியிலேயே விடுதலை பற்றியும் விடுதலைக்கான போராட்டம் பற்றியும் பேச முடிகிறது. விடுதலைப் போராட்டம் தேசிய வாதத்துடன் நெருங்கிய தொடர்புடையது. பல சந்தர்ப்பங்களில் தேசியவாதம் சர்வதேசச் சமூகத்துடன் ஒட்டி உறவாடுகிறது. அந்நியத் தலையீட்டைக் கூவி அழைக்கிறது. விடுதலைப் போராட்டத்திற்கு குழி பறிக்கிறது. இவை வரலாற்று நோக்கில் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவை.

ஏனெனில் தேசியத்தின் திசைவழியானது வரலாறு பற்றிய புனைவுகளாலும் நம்பிக்கைகளாலுமே கட்டியமைக்கப் படுகிறது.  நம்மிடம் வந்து நாம் பழங்காலத்தில் நாகரீகச் சிகரங்களை தொட்டுக் கொண்டு இருந்தோம் என்று யாராவது சொல்லிவிட்டால், நாம் புளகாங்கிதம் அடைகிறோம். நாம் தற்போது எவ்வளவு தூரம் முன்னேறியிருக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் முன்னேறாமல் பின் தங்கி இருந்திருந்தால் உடனே அதற்கான காரணத்தை குறிப்பிட்ட உள்நாட்டு, வெளிநாட்டுச் சதிகாரர்களிடம் நாம் தேட ஆரம்பித்து விடுகிறோம். பெனடிக்ற் அன்டர்சனின் (Benedict Anderson)கற்பனையான சமூகங்கள் (Imagined Communities) என்ற நூல், தற்போதைய நவீன யுகத்தில் புதிதாக நாம் சுவீகரித்த தேசிய விருப்பின் அடிப்படையில் நமது கடந்த காலத்தை கற்பனையில் மீளக் கட்டமைப்பது குறித்து நமது கவனத்தை ஈர்க்கிறது. உண்மையில் இந்த குறுகிய வாதம் வெறுமனே திரிந்து போன தேசியவாதம் மட்டும் அல்ல. சொல்லப்போனால், மதம், இனம், சாதி என்பது போன்ற ஒரு கற்பனை விசித்திரம் தான். இதுபோன்ற பல்வேறு அடையாளங்கள் கலந்தும் முரண்பட்டும் உள்ளார்ந்து வினை புரிந்தும் இருக்கும் ஆசிய மற்றும் ஆபிரிக்க சமூகங்களில் நீண்ட நெடுங்காலமாகத் தமது சார்புநிலைக்கு தகுந்தாற் போல் வரலாற்றை மீளக் கட்டமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன.

வரலாற்றின் ஆபத்துக் குறித்து வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் (Irfan Habib) பின்வருமாறு சொல்கிறார்:

“கடந்த கால மோகம் என்பது ஒரு தனிமனிருக்கு எப்படியோ அது போலத் தான் வரலாறு என்பது நாட்டு மக்களுக்கு என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ‘சிலரது சதிகாரர்களின் சதி காரணமாய் என்னை நான் உணர்ந்து கொள்வது தவறிவிட்டது’ என எனது மனதுக்குள் முடிவு செய்தால் அது என்னை எங்கு கொண்டுபோய் விடும்? இந்த மாதிரியான தவறான எண்ணங்கள் நான் எனது சக மனிதர்களுடன் சுமுகமான உறவு கொண்டிருப்பதைப் பாதிப்பதோடு மட்டுமன்றிக் கடைசியில் எனக்குள் புதைந்து கிடக்கும் ஊனங்களையும் துகிலுரிந்து காட்டிவிடும். இப்படியாகத் தனி யொருவருக்கு நடப்பதே, கண்டிப்பாகக் கற்பனை வரலாறு தந்த போதையில் மிதக்கும் நாட்டு மக்களுக்கும் நடக்கும். பொய் வரலாறு எவ்வளவுதான் உடனடி, குறுகிய காலப் புகழாரங்களைச் சூட்டிய போதிலும், அது, மக்களுடைய ஒழுக்கநெறி எனும் உயிர் நரம்பைக் கத்தரித்து, முன்னேறுவதற்கான அவர்களுடைய திறனை அறுத்து எறிந்து விடும். ஆகவே இந்த மாதிரியான கதையளக்கும் வரலாறுகளை எந்த விதத்திலும் நாம் நியாயப்படுத்தி விடமுடியாது”.

வரலாற்றின் கைதியாக ஒரு சமூகம் இருக்கும்வரை, அச் சமூகம் தனது முன்னேற்றத்திற்கான தடையைத் தானே இட்டுக் கொள்கிறது. இன்றைய நவகொலனித்துவ உலக ஒழுங்கில், தேசியம் பல புதிய வடிவங்களை எடுக்கிறது. எல்லோரும் உலகமயமாகி இருக்கிறோம். ஆனால் எம் நினைவுகளையும் பூர்வீக வீரப்பிரதாபங்களையுஞ் சுமந்தபடி தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம். வரலாற்றைச் சரியாக விளங்கிக்கொள்ள முடியாதபடி நம் முன்முடிவுகளோடு நாம் கட்டுண்டிருக்கிறோம். உரிமைகட்கான அவாவும் ஜனநாயகத்திற்கான தேவையும் விடுதலைக்கான போராட்டங்களும் வரலாறு முழுவதிலும் நிறைந்து இருக்கிறது. இனிவரும் வரலாற்றிலும் அவ்வாறே இருக்கும். அதனடிப்படையில் விடுதலைக்கான போராட்டங்களில் சர்வதேசச் சமூகம் எவ்வாறு நடந்துகொண் டிருக்கிறது என்பதையும் வரலாற்று நோக்கிலும் போக்கிலும் பார்க்கும் முயற்சியே இக் கட்டுரை.

நன்றி: செம்பதாகை

தொடரும்