மகிந்தவின் குடும்ப சர்வாதிகாரம் மூலம் தன் குழந்தைகள், தன் சகோதரர்கள், தன் உற்றார் உறவினர்களை நாட்டின் முன் அடையாளப்படுத்தி, அவர்களை ஆட்சியாளராக்கியுள்ளார். மறுபக்கம் இவர்களால் அடையாளம் இழந்து காணாமல் போனவர்களைத் தேடி அலைகின்றது மக்கள் கூட்டம்.

மகிந்த குடும்ப சர்வாதிகாரத்தின் விளைவு இப்படித் தான் பிரதிபலிக்கின்றது. ஒருபுறம் தம்மை முன்னிலைப்படுத்திய குடும்பப் பின்னணி, மறுபக்கம் குடும்ப உறவுகளைத் தேடியலையும் பின்னணி. இப்படித்தான் இலங்கையின் எதார்த்தம் இருக்கின்றது. நேரெதிரான காட்சிகள். நாட்டை ஆள்பவனுக்கும் ஆளப்படுபவனுக்கும் இடையில் உள்ள வேறுபாடு துல்லியமானது, இணக்கம் காண முடியாதவை.

 

கண்மூடித்தனமாக இனப்படுகொலையை நடத்திய இந்த அரசு தான், யுத்தத்தின் பின் பாரிய கொலைகளை செய்திருக்கின்றது. நம்பி சரணடைந்தவர்களையும், கைது செய்தவர்களையும் கொன்று, அவர்களை காணாமல் போகச் செய்துள்ளனர். இப்படி சொந்த மக்களை கொன்ற கூட்டம் தான், இன்று நாட்டை ஆளுகின்றது. இதை மூடிமறைக்க தொடர்ந்தும் குற்றங்கள் மேல் குற்றங்களாக அது செய்கின்றது. எங்கும் பொதுவான கண்காணிப்பு, வடக்குகிழக்கிலோ இராணுவ ஆட்சி. தொடரும் இரகசிய கைதுகள், இனம் தெரியாத கடத்தல்கள் முதல் அச்சமூட்டும் வண்ணம் அரச இயந்திரம் தனிப்பட்ட வாழ்வில் கூட புகுந்து நிற்கின்றது.

இதன் பின்னணியில் சோரம் போன கூட்டத்தின் அடாவடித்தனங்கள். அதைச் சார்ந்து ஜனநாயகம் பற்றிய வீம்புத்தனங்கள். இதை எல்லாம்; மூடிமறைக்க, சமூகத்தின் மற்றைய முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தி பேசுகின்ற வம்புத்தனங்கள். யாழ் இராணுவத் தளபதி சாதியம் பற்றிப் பேசுகின்ற அளவுக்கு, அரசு தன்னைத்தான் மூடிமறைக்க பலவழிகளில் சுத்துமாத்துகளிலும் முனைகின்றது. கட்சியைப் பிளப்பது போல், மக்களை முரண்பாடுகளின் பின் பிளந்து மோத வைக்க முனைகின்றது. இனவாத முரண்பாடுகளை தீர்க்க வக்கற்றுக் போன இனவாத அரசு, அதில் குளிர் காய்ந்தபடி இருக்க சாதிய முரண்பாடு பற்றி பேசுகின்றது.

இந்த அரசின் கோர இழிவான யுத்த முகத்தை யாரும் மூடிமறைக்க முடியாது. யுத்தத்தின் பின்னான இரண்டு வருடங்களில் காணாமல் போன, தம் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது ஊனமாகிப்போகும் சமூகத்தை உருவாக்கியுள்ளது. கண்ணீரே வாழ்வாக, ஊன் உறக்கமின்றி, அதற்கும் வழியின்றி, அங்குமிங்குமாக தேடியலையும் ஒருபகுதி மக்கள் கூட்டத்தை இந்த அரசு உருவாக்கியுள்ளது. இதற்குள் புகுந்த பொறுக்கித்தின்னும் கூட்டம் இதை வைத்து ஏய்த்துப்பிழைக்க, அவர்களிடம் பறிகொடுத்த உணர்வுகள், உணர்ச்சிகளைக் கடந்து எந்தனை எத்தனை துயரங்கள். அவை சொல்லிமாளாது. யாரிடம் சொல்லி அழவும் முடியாத அளவுக்கு, அதையும் இந்த அரசு கொடூரமாக கண்காணிக்கின்றது.

இப்படி தம் உறவுகள் எங்கே என்று தேடுகின்றனர் இலங்கையின் ஒரு பகுதி மக்கள். ஒரு ஜனநாயக நாட்டில், இதுதான் யுத்தத்தின் பின்னான அந்த மக்களின் விடிவாகிப் போனது. இப்படித்தான் மக்கள் அங்குமிங்குமாக, வாய் பேச முடியாத ஊமையாக ஊன் உறக்கமின்றி வாழ்கின்றனர்.

பேரினவாத பாசிட்டுகள். தாங்கள் யார் யாரை எல்லாம் உயிருடன் வைத்திருக்கின்றோம் என்பதை சொல்ல முடியாத அளவுக்கு, அவர்களை கொன்று பாரிய போர்க்குற்றத்தை இழைத்துள்ளது.

இதுவொன்று போதும், கைதான பின் கைதிகளை கொன்று குவித்ததை நிறுவ. இப்படியும் பாரிய போர்க்குற்றத்தை செய்துள்ளதையும் மூடிமறைக்க, கைதிகள் பட்டியலை வெளியிடாது இருக்கிறது. ஒரு நாட்டின் சட்டம், நீதி போர்க்குற்ற கிரிமினல்தனத்துக்கு ஏற்ப அவை இயங்குவதை நாம் காண்கின்றோம். இதுதான் இலங்கையின் ஜனநாயகம்.

ஒரு இலங்கைப் பிரஜை தான் இருக்கின்றேன் என்பதை சமூகத்துக்கு தெரிவிக்க முடியாத நிலையில், உறவினர்கள் அவர்களை தேடுகின்ற நிலையில் இலங்கை மனிதர்கள் மனிதனாக வாழத் தகுதியற்ற நாடாக தொடர்ந்தும் இருக்கின்றது. இப்படி யுத்தத்தின் பின்னான சமதானம் அமைதி என்பது, கேலிக்குரியதாகின்றது.

இந்த நிலையில் தமிழ் கட்சிகள் புளுத்துக் போன ஜனநாயக அரசியல் செய்கின்றனர். தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக பேசுபவர்கள் கூட, இந்தக் கைதிகள் பட்டியலை முன்வைக்கக் கோரி பேசும் அளவுக்கு, இந்த பாசிச பேரினவாத கொலைகார அரசு கொட்டமடித்து நிற்கின்றது.

தன் கொலைகார கிரிமினல் தனத்தை பாதுகாக்க, மேலும் மேலும் தன்னை பாசிசமயமாக்கி செல்லுகின்றது. உலக ஒழுங்கில் தன்னை ஒரு பக்கத்தில் நிறுத்தி, தற்காத்துக் கொள்ளும் கூட்டாளிகளைத் தேடுகின்றது. அதற்கு ஏற்ப நாட்டை விற்பதன் (தாமும் பொறுக்கித் தின்றபடி) மூலம்தான், தன்னைப் பாதுகாக்க முனைகின்றது. இதைத்தான் இலங்கை அரசு தன் கொள்கையாகக் கொண்டியங்குகின்றது.

 

பி.இரயாகரன்

17.04.2011