இனவொடுக்குமுறைக்கு எதிரான சுயநிர்ணயம் என்பது, சுரண்டும் வர்க்கத்தின் (பூர்சுவா வர்க்கத்தின்) பிரிவினையையோ, ஐக்கியத்தையோ குறிப்பதில்லை. அதனால்தான் அதை சுயநிர்ணய கோட்பாடாக மார்க்சியம் முன்வைக்கின்றது. இதன் வர்க்க சாரம், சுரண்டும் வர்க்க பிரிவினையையும், ஐக்கியத்தையும் மறுக்கின்றது.

சுரண்டும் வர்க்க பிரிவினையையும், ஐக்கியத்தையும் மறுக்கும் சுயநிர்ணயம், பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியத்தைக் கோருகின்றது. பாட்டாளி வர்க்கத்தின் பிரிவினையையல்ல. இது சர்வதேசியத்தின் உள்ளார்ந்த அரசியல் ஒருமைப்பாட்டைக் குறிக்கின்றது. இப்படியிருக்க ஒடுக்கப்பட்ட இரண்டு இன வர்க்கங்களுக்குள் பிளவை விதைப்பது, அதை நியாயப்படுத்துவது பாட்டாளி வர்க்க அரசியலல்ல. அது மார்க்சியமுமல்ல. பாட்டாளி வர்க்க ஐக்கியத்தை மறுப்பது என்பது, மார்க்சியத்தின் பெயரிலும், இடதுசாரியத்தின் பெயரிலும்; சுரண்டும் வர்க்கம் தன்னை மூடிமறைத்துக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களை பிளக்கும் பிளவுவாதமாகும். இந்த பிளவுவாதம் தான் "தேசிய விடுதலைக்கான, தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான, பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் முதன்மையானது" என்று கூறுகின்றது. இனங்கள் மத்தியில் பிளவுவாதத்தை முன்தள்ளிய சுரண்டும் வர்க்கத்தின் ஒடுக்கும் அதே அரசியலை, மீள முன்னெடுத்து பிளவுவாதத்தை அகலமாக்குவதாகும்;. இதற்கு எதிரான போராட்டத்தை மறுத்தலாகும்.

 

பாட்டாளி வர்க்க ஐக்கியம் தான், சுரண்டும் வர்க்க ஐக்கியத்துக்கு எதிராக பிரிந்து செல்லும் உரிமையையும், சுரண்டும் வர்க்கப் பிரிவினைக்கு எதிரான ஐக்கியத்தையும் முன்னிறுத்தி கிளர்ச்சி செய்கின்றது.

இந்தக் கிளர்ச்சிதான் பாட்டாளி வர்க்கத்தை ஐக்கியப்படுத்துகின்றது. பொது எதிரியை இனம் காண வைக்கின்றது.

இதற்கு மாறாக இனியொருவும் புதியதிசையும் குறுகிய பிரிவினை மூலம், தமிழ் தேசியத்தை குறுந்தேசியத்துடன் (புலியுடன்) சேர்ந்து முன்தள்ளுகின்றது. தங்களை இடதுசாரியாகவும் காட்டி மக்களை ஏமாற்ற, சுயநிர்ணயத்தை தமது சந்தர்ப்பவாதத்துக்கு ஏற்ப திரித்துப் புரட்டுகின்றனர். இப்படி திடீர் அரசியலுக்கு மீண்டும் வந்த பழைய பெருச்சாளிக் கூட்டங்கள், அரசியலை தமக்கு ஏற்ப திரிக்கின்றனர். கடந்தகாலத்தில் எதை தங்கள் மக்கள் விரோத அரசியலாக செய்து மக்களின் முதுகில் குத்தி வரலாற்றில் காணாமல் போனார்களோ, அவர்களில் சிலர் இடதுசாரிய வேசம் போட்டுக் கொண்டு வருகின்றனர். அவர்கள் இன்றைய அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்திக்கொண்டு, திடீரென இடதுசாரிகளாக மீண்டும் அரசியலுக்கு வருகின்றனர்.

வந்ததும் வராததுமாக மார்க்சியத்தை திரித்துப் புரட்டுகின்றனர். சுயநிர்ணயம் என்றால் "முதன்மையானது" பிரிவினை தான் என்கின்றனர். இந்த வகையில் தான் புதியதிசைகளும் இனியொருவும் சுயநிர்ணயத்தையே திரித்து, தங்கள் குறுகிய தமிழ் தேசிய புலித்திட்டத்தை மீள முன்வைக்கின்றனர்.

புதிய திசைகள் இப்படி முள்தள்ளுகின்ற அரசியல் உள்ளடக்கம், அரசியல் ரீதியாக கபடம் நிறைந்தது. அரசியல் சுத்துமாத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் உள்ள அடிப்படையான கேள்வி, ஒரு பாட்டாளி வர்க்கத்தின் அரசியல்; கடமை என்ன என்பது தான்?

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கடமை, ஒடுக்கப்பட்ட மக்களிடையேயான பிரிவினையையும், ஒடுக்கும் பிளவுவாதத்தையும் களைவதற்காகப் போராடுவது தான். இதை களைவதன் மூலம் தான், இனவொடுக்குமுறைக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்துவதுதான் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியக் கடமையாகும். அதாவது சுரண்டும் வர்க்கம் முன்தள்ளும் பிரிவினையையும், ஒடுக்கும் ஐக்கியத்தையும் எதிர்த்து போராடுவதுதான். இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை, ஒடுக்கப்பட்ட இன மக்கள் மட்டும் நடத்துவதில்லை, ஒடுக்கும் இனத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்றிணைந்து நடத்துவதுதான் சரியான யுத்ததந்திரம். இதைத்தான் பாட்டாளி வர்க்கம் சுயநிர்ணயம் ஊடாக வழிகாட்டுகின்றது. பாட்டாளி வர்க்கம் பிரிவினையையும், ஐக்கியத்தையும் தன் அரசியல் கோசமாக வைப்பதில்லை, மாறாக சுயநிர்ணயத்தை முன்வைக்கின்றது. பாட்டாளி வர்க்க ஐக்கியத்தை முன்வைக்கின்றது. இதுவல்லாத பிரிவினை மற்றும் ஐக்கியம் என்ற எந்த அரசியல் தளத்திலும், சுயநிர்ணயம் என்பது சந்தர்ப்பவாதத்தின் அரசியல் உள்ளடக்கமாகிவிடுகின்றது.

மக்களிடையே ஒடுக்கும் ஐக்கியம் மூலமான பிளவையும், பிரிவினைவாதத்தையும் விதைத்து பிரித்தாளும் சுரண்டும் வர்க்கங்களை முறியடித்து, அவர்களை ஒன்றிணைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிரானதாக போராடும் அரசியல் பணிதான் பாட்டாளி வர்க்கத்தின் மையமான அரசியல் கிளர்ச்சியாகும். இதற்கு மாறாக பிரிவினையை முன்தள்ளும் தேசியம், சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது. இனவொடுக்குமுறை மூலம் ஒடுக்கி பிளவுவாதத்தை திணிக்கும் பேரினவாதத்தை சார்ந்ததுதான், இதற்கு எதிரான பிரிவினை வாதமும். இது ஒன்றையொன்று சார்ந்து இயங்குகின்றது. தேசியம் என்பது, எப்போதும் முதலாளித்துவக் கோரிக்கை தான். இந்த வகையிலும், தேசியம் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கையல்ல. அது சுரண்டும் வர்க்கத்தின் கோரிக்கையாகும். பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கை சர்வதேசியம் தான். இதைத்தான் லெனின் 'பூர்சுவா தேசியவாதமும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும் இணக்கம் காண முடியாத பகைமை கொண்ட இருவேறு கோசங்களாகும்." என்றார். இதைத்தான் இனியொரு உள்ளடங்கிய புதிய திசை மறுக்கின்றது.

தேசியத்தையும், சர்வதேசியத்தையும் ஒன்றாக காட்ட முனைகின்றனர். அது பகை முரண்பாடு கொண்ட, இரு வேறுபட்ட வர்க்கங்களின் கோட்பாடல்ல என்று காட்ட முனைகின்றனர். சர்வதேசியம் முன்னிறுத்தும் சுயநிர்ணயத்தை மறுத்து, தேசியத்துக்கு ஏற்ற சுயநிர்ணயமாக திரிக்கின்றனர்.

சுயநிர்ணயம் பிரிவினைக்கு பதில் ஐக்கியத்தை முன்வைக்கின்றது என்பது, சுரண்டப்படும் மக்களின் ஐக்கியம் பற்றியதுதான். சுரண்டும் வர்க்கத்தின் ஐக்கியம் பற்றியதல்ல. இங்கு பாட்டாளி வர்க்கத்தின் கடமை மிகத் தெளிவானது.

நிலவுகின்ற ஒடுக்குமுறையும், முரண்படும், தப்பபிப்பிராயங்களும் களையப்போராடுவது தான், பாட்டாளி வர்க்கத்தின் அரசியலாகும்;. இதை வளர்ப்பதல்ல. மாறாக இதை மேலும் வளர்ப்பது சுரண்டும் வர்க்கத்தின் குறுகிய இனவாத அரசியலாகும்.

தொடரும்

பி.இரயாகரன்

25.02.2011

1. இனியொருவும் புதிய திசையும் முன்வைக்கும் சுயநிர்ணயக் கோட்பாடு இனவாதமாகும்-பகுதி 1