எல்லையைத் தாண்டிச் செல்வது எல்லை தெரியாததாலும், நீரோட்டத்தினாலும் தான் என்ற தர்க்கத்தை முன்தள்ளியவர்கள், விரித்த வலையை இழுத்துச்செல்லுதல் இந்தியாவில் நடப்பதுதான் என்று மற்றொரு தர்க்கத்தையும் முன்வைக்கின்றனர்.

உண்மையில் இதன் பின்னுள்ள பல வர்க்க சமூகக் கூறுகளை, இந்தத் தவறான தர்க்கங்கள் மூலம் தவிர்த்துச் செல்ல விரும்புகின்றனர். இதுவே தவறான அரசியலாக மாறுகின்றது.

1. வலையை விரித்து வைத்து மீன்பிடிக்கும் மீனவனுக்கும், வலையை இழுத்துச் செல்லும் மீனவனுக்கும் உள்ள அடிப்படையான வர்க்க முரண்பாட்டை, முதலில் இனம் காணத் தவறுகின்றனர். இது இரண்டு வர்க்கங்கள் கையாளும், வேறுபட்ட மீன்பிடி முறைமையுமாகும்.

2. இலங்கை மீன்பிடியில் மீன்வலையை இழுத்துச் செல்லும் ரோலர் வகைகள் உள்ளிட்ட மீன்பிடி முறைமை தடை செய்யப்பட்டு இருக்கின்றது. அவர்கள் வலையை விரித்து வைக்கும் மீன்பிடி முறைமையையே கையாளுகின்றனர். ஆயிரக்கணக்கில் உட்புகும் இந்திய ரோலர்கள், விரித்த வலைகளை இழுத்து செல்லும் மீன்பிடி மூலம், இலங்கை மீனவர்களின் வலைகளை அழித்துச் செல்லுகின்றனர். திரும்பி வரும்போது வள்ளத்தில் பிடித்த மீனின் பாரத்துக்கு ஏற்ப வள்ளம் கடல்நீரில் தாழப்பதிகின்ற போது, விரித்து வைத்த வலைகளை வள்ளமும் வெட்டியபடியும் திரும்புகின்றது. இப்படி இலங்கை மீனவர்களின் மீன்பிடி முறைமைக்கு எதிரான மற்றொரு மீன்பிடி முறைமை. இதனால் கூட, ஓரே கடலில் இரண்டு மீனவர்களும் மீன்பிடிக்க முடியாது. இதுவும் கூட அடிப்படையான முரண்பாடு. இது இரண்டு வர்க்கங்கள் கையாளும் மீன்பிடி முறைமைசார் முரண்பாடு கூட. இலங்கைக் கடலில் விரித்து வைத்து இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதில்லை. விரித்துவைத்து இலங்கைக் கடலில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதை நாங்களும், இலங்கை மீனவர்களும் எதிர்க்கவில்லை.

 

 

3. விரித்து வைத்து மீன்பிடிக்கும் முறைமை, கடலின் வௌ;வேறு ஆழத்தில் உள்ள மீன்களை தெரிவு செய்து வலைவிரிக்கும் முறைமையும் கூட. இது கடலின் இயற்கை வளத்தையும், உயிரினத் தொகுதியையும் கூட பாதுகாக்கின்ற, சுற்றுச்சூழல் சார்பானது. இதற்கு மாறானது, இழுத்துச் செல்லும் ரோலர் வகை மீன்பிடிமுறைமை. இது கடலில் உள்ள அனைத்தையும் விராண்டி அள்ளி அழிக்கின்ற, இயற்கைக்கு எதிரான மீன்பிடி முறைமை. இந்த வகையில் படுகொலைக்கு எதிரான போராட்டம், இயற்கையை அழிப்பதை ஆதரிக்கின்ற வரையறையை உள்ளடக்கியும் வெளிப்பட்டுள்ளது.

இந்த அம்சங்கள் சார்ந்துதான் இலங்கை மீனவர்களின் சரியான கோரிக்கை அமைகின்றது. இந்தவகை மீன்பிடியை நிறுத்தக் கோருகின்றனர். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவது, இந்த வகையான மீன்பிடியை செய்யத்தான். இந்தியக் கரையில் விரித்து வைத்து மீன்பிடி செய்யும் மீனவர்கள் இதை எதிர்ப்பதால், இலங்கை மீனவர்களை சுரண்டி அழிக்க வருகின்றனர். இலங்கை மீனவர்களின் இந்தக் கோரிக்கையை, இந்திய மீனவர்கள் ஏற்றால் இந்திய மீனவர்கள் இலங்கையில் மீன்பிடிக்க முடியும். இதை இந்திய மார்க்சிய லெனினிய கட்சிகள் ஏற்றால், இலங்கை மார்க்சிய லெனினியவாதிகள் முரண்பட இதில் எதுவுமில்லை.

இந்தியக்கடலில் விரித்து வைத்த மீன்பிடியை, இழுத்துச் செல்லும் மீன்பிடி மூலம் அழிப்பதற்கு எதிரான இந்திய சிறு மீன்பிடி மீனவர்களின் நிலை, அங்கு மீன்பிடிக்க ரோலரை அனுமதிப்பதில்லை. இதனை மீறும் போது அங்கும் போராட்டம் தான். இது வலைவெட்டு நிகழ்வுகள் அல்ல. இரண்டு வர்க்கங்களின் போராட்டம். எல்லை தெரியாது, நீர் ஓட்டத்தில் செல்லுதல் பற்றியதாக இதைக் குறுக்கிக் காட்டவும் ஆராயவும் நாம் விரும்பவில்லை. அவை விதி விலக்கானவை. இது புரிந்து கொள்ளக் கூடியவை. மீனவர் சமூகம் அதை நன்கு புரிந்து வைத்திருக்கின்றது. நாங்களும் தான்.

ரோலர் வகை மீன்பிடி முறைமை, அடிப்படையில் தவறான உள்ளடக்கத்தைக் கொண்டது. இந்த ரோலரும், அதற்கான வலையம் பெருமூலதனத்தைக் கொண்டது. அதாவது வர்க்க ரீதியானது கூட. சுரண்டலையும், மூலதனத்தையும் திரட்டும் அடிப்படையிலானது. இந்த மீன்பிடியில் உள்ள நோக்கம், மூலதனத்தைக் குவிப்பதுதான்.

இந்திய மார்க்சிய லெனினிய கட்சிகள், இந்த ரோலரையும், இழுத்துச்செல்லும் மீன்பிடி முறைமையையும் தடைசெய்யவும், அதில் கூலிக்கு மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மாற்று ஏற்பாட்டை செய்யும்படி கோரி போராடுது அவசியமானது. இதை புரிந்து கொள்ள திருப்பூர் சாயப்பட்டறை கழிவு சுற்றுச்சூழல் அழிப்புக்கு எதிரான போராட்டம் ஆலையை முடக்கின்ற, மூடுகின்ற அதேநேரம், அந்த ஆலைத் தொழிலாளர்கள் வாழ்வை பாதுகாக்கின்ற வகையில் போராட்டத்தை ஓருங்கிணைக்கின்ற அதே உத்திதான் இங்கும் அவசியம்.

மீனவர் படுகொலைக்கு எதிரான சரியான போராட்டம், இலங்கை மீனவர்களின் கோரிக்கையை மறுப்பதாக அமைந்துவிடக் கூடாது. இலங்கை மீனவர்கள் கோருவது ரோலரையும் அது இழுத்துச்செல்லும் மீன்பிடி முறையையும் இலங்கையில் செய்ய வேண்டாம் என்றுதான். மற்றும்படி மீன்பிடிக்க வேண்டாம் என்று அவர்கள் சொல்லவில்லை. நாங்களும் சொல்லவில்லை.

இந்தியாவில் மடி வலை தடைசெய்திருக்கின்றது என்ற சொல்வதல்ல இங்கு விவகாரம். ரோலர் மூலம் இழுத்துச் செல்லும் மீன்வலை கொண்ட மீன்பிடி மூலம் தான், ஆயிரக்கணக்கில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலில் புகுகின்றனர். இது தான் இலங்கை மீனவர்களின் பிரச்சனை. இதைப் புரிய மறுப்பது ஏன்? இதை விதண்டாவாதம் செய்வது ஏன்?

இதனால் இந்திய மீனவர்கள் படுகொலை என்பது பிரச்சனையல்ல என்று அர்த்தமல்ல. இதுபோல் பன்நாட்டு மீன்பிடி, மற்றும் கடல் வளத்தை நாசமாக்கி கொள்ளையடிக்க (உதாரணமாக எண்ணை அகழ்வு) புகுகின்ற மூலதனங்கள் பிரச்சனை இல்லை என்று அர்த்தமல்ல. இதுவல்ல இங்கு விவாதம்.

இலங்கை மீனவர்கள் உடனடியாக எதிர்கொள்வது, இந்திய ரோலர்கள் இழுத்துச் செல்லும் மீன்பிடி மூலம் மீன்பிடிப்பது தான். இதை நாம் முன்னிறுத்துவதால், இலங்கையின் இறையாண்மையை முன்னிறுத்துவதாக கூறுவது அபத்தம். இலங்கை மீனவர்கள் உள்ளிட நாங்களும் கூறுவதும் கோருவதும் என்ன? ரோலரை பயன்படுத்தி மீன்பிடிப்பதையும், இழுத்துச்செல்லும் மீன்பிடியை நிறுத்தும்படியும். இதுவல்லாத மீன்பிடி மூலம் இலங்கையில் இந்திய மீனவர்களும் மீன்;பிடிக்க முடியும் என்பது தான். ஆம் சிங்கள மீனவர்களும் தான். ஈழ தமிழினவாதிகள் மறுக்கும் இந்த உரிமையும் உள்ளடங்கியது தான்.

இலங்கையில் தடைசெய்த மீன்பிடியை, இந்தியா தடைசெய்யாத முரண்பாட்டையும் உள்ளடக்கியது இது. சுற்றுச்சூழலை பாதுகாக்க மறுக்கும், இந்திய மூலதனத்தின் அடாவடித்தனத்தை சார்ந்தது கூட.

இப்படி இருக்க இங்கு ரோலர் வகை மீன்பிடியையும், இழுத்துச் செல்லும் மீன் வலையையும் பயன்படுத்தி மீன்பிடிப்பதை எதிர்க்காத மார்க்சிய லெனினியம், இந்திய இறையாண்மை சார்ந்ததாக மாறிவிடுகின்றது. சரி இலங்கை உட்பட பல நாடுகளில் இந்த ரோலர் வகை மீன்பிடி தடை செய்யப்பட்டு இருக்கின்றதே, ஏன்? இந்தியாவில் ஏன் இன்னும் தடை செய்யவில்லை. இதனால் இதன் மீன்பிடித்திறன் இந்திய மூலதனத்தின் விஸ்தரிப்புவாத நோக்குடன் உள்ளடங்கிய கூறாக மாறிவிடுகின்றது.

இதை மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்து தங்கள் கையில் எடுப்பதன் மூலம்தான், மீனவர் சமூகத்தையும் மக்களையும் வழிநடத்த முடியும். இதுதான் இலங்கை மார்க்சிய லெனினிய வாதிகளின் கோரிக்கையாகும்.

 

பி.இரயாகரன்

20.02.2011