புலிக்கு "விசுவாச"மாக இருத்தலே போராட்டம் என்று கருதி தங்களை அர்ப்பணித்தவர்கள், இன்று அரசியல் அனாதைகளாகியுள்ளனர். மிகப்பெரிய அமைப்பு எப்படி தம் கண் முன்னாலேயே காணாமல் போனது என்று திகைத்து நிற்கின்றனர்.

"ஏதோ நடந்திருக்கு எண்டது மட்டும் உண்மை. இல்லையெண்டால், இந்தப் பெரிய அமைப்பும் போராட்டமும் இப்பிடிச் சட்டெண்டு முடிஞ்சு போகுமா?" என்று கேட்கின்றனர். ஆனால் பதில் சொல்லத்தான் யாருமில்லை. புலியைக் கடந்த சிந்தனையை, சமூகத்தின் முன் கொண்டு செல்ல எம்மைச் சுற்றி எவரும் கிடையாது. இந்த உண்மை, எம்மைச் சுற்றிய சமூக அறியாமையாகின்றது.

"சரணடையும்போது இருந்த மனநிலையைச் சொல்ல முடியாது..!"

என்ற தலைப்பில், மறுஆய்வு இணையத்தளத்தில் இப்பேட்டி வெளியாகியது. புலிக்காக சண்டை செய்தவர்களும், இந்த புலிப் போராட்டத்தை சுற்றி கற்பனையில் வாழ்ந்தவர்களும், புலி எதிர்ப்பு அரசியல் செய்தவர்களின் முன், புலிகள் இப்படி தோற்ற காரணத்தை அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளவும் விளங்கிக் கொள்ளவும் முடியாது உள்ளது.

 

 

 

தங்கள் அரசியல் சரியானதா என்ற கேள்வியை எழுப்பி சுயவிமர்சனத்தை செய்யாத வரை, சமூகம் இருட்டில் தான் தொடர்ந்து விடப்படும். 22 வருடமாக புலியில் இருந்த ஒருவரின்

" அதிகம் பேச விரும்பாத – ஏன் பேசவே விரும்பாத – பேசி என்னதான் பயன் " என்ற கருதிய ஒருவரின் பேட்டி இது. இருந்தும் சொல்ல விரும்புகின்ற நிலையில் "விருப்பமில்லாத நிலையிலும் நான் இங்கே பேசுவதன் மூலமாக சில விசயங்களை வெளியே தெளிவுபடுத்த முடியும். உள்ள நிலைமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக பேசுகிறேன்" என்று கூறி இந்த பேட்டியை வழங்கியுள்ளார்.

அனுபவம் சார்ந்த தன் புலி அறிவுக்கு உட்பட்ட உண்மைகள் மூலம் விடைகாண முற்படுகின்றார். அது விடைதராத போது, சமூகத்திடம் அதை கோரி நிற்கின்றார்." "ஏதோ நடந்திருக்கு எண்டது மட்டும் உண்மை." அது என்ன என்பதே அவரின் கேள்வி? யாரும் பதிலளிக்காத வலது இடது அரசியல்.

தங்கள் சயனைட்டை குடிக்காது இறுதி சரணடைவு நடந்த விதத்தைப் பற்றிக் கூறும் போது "இயக்கத்தையும் தலைமைப்பீடத்தையும் இயக்கத்தின்ர ஆயுதங்களையும் பாதுகாக்க வேணும் எதிரியிடம் இரகசியங்கள் எதுவும் போய்ச் சேரக்கூடாது. ஆயுதங்களை எதிரி எடுக்கக் கூடாது எண்டதுக்காகத்தானே சயனைட் குடிக்க வேணும்? அப்படித்தானே இயக்கத்தின்ர விதியும் எதிர்பார்ப்பும் இருந்தன. ஆனால், அந்த இயக்கமும் ஆயுதங்களும் தலைமையும் எதிரியிடம் சிக்கிய பிறகு எல்லாமே முடிஞ்சிட்டுது எண்ட பிறகு நாங்கள் சயனைட் கடிக்கிறதால என்ன பிரயோசனம்? எதிரிகள் கூட இப்படியொரு நிலையில் புலிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. கடைசி நாட்களில் சாவதா சரணடைவதா எண்ட போராட்டம் எனக்கு வந்தது. என்னை மாதிரித்தான் பல ஆயிரக்கணக்கான போராளிகள் அந்த வெட்டையில கொதிக்கிற மணற்குவியல்களுக்கு மேல நிண்டார்கள். ஒருவராலயும் ஒரு முடிவையும் எடுக்கேலாமல் இருந்திது. பிறகு நடக்கிறது நடக்கட்டும் எண்டு சனங்களோட ஆமியிட்ட போனதுதான். ஆனால், அப்பிடிப் போகேக்க இருந்த மன நிலையைச் சொல்லேலாது. அது பெரிய கொடுமை." ஒரு உண்மையின் பின்னால் செய்யப்பட்ட தியாகங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் " "ஏதோ நடந்திருக்கு எண்டது மட்டும் உண்மை." மேலானது. ஆம் "தவறுகள் பிழைகள்" "ஏதோ இருந்துதானே நாங்கள் தோற்றுப் போயிருக்கிறம்." என்ற பட்டறிவு சார்ந்த உண்மை "ஏதோ" என்பதை மட்டும் இனம் காணமுடியாத பொது சமூக சிந்தனை முறைக்குள் வாழ்விழந்து முடங்கிப்போகின்றது.

யார் இதை வெளிச்சமிட்டுக் காட்டுவது? இதைச் செய்ய மறுக்கின்ற அரசியல் தான், இதைப் பேண விரும்புகின்ற குறுந்தேசிய அரசியல்தான், வலது இடதாக எங்கும் நஞ்சைக் கக்குகின்றது.

இந்தத் தோல்வியைப் புரிந்துகொள்ள முடியாத மனம், தன் அறியாமை சாhந்த அறிவில் வெளிப்படையாக இருக்கின்றது. "ஆனா ஒண்டு மட்டும் உண்மை, நாங்கள் எங்களால முடிஞ்ச அளவுக்கு விசுவாசமாகச் செயற்பட்டிருக்கிறம். அதாவது போராட்டத்தில தவறுகள் பிழைகள் இருக்கலாம். போராளிகளிலயும் அந்தப் பலவீனங்கள் இருக்கலாம். அப்பிடி ஏதோ இருந்துதானே நாங்கள் தோற்றுப் போயிருக்கிறம்." என்று பச்சையாகவே அப்பழுக்கற்றவகையில் கூறவைக்கின்றது. இப்படிப் போராடியவர்கள் "விசுவாசம்" தான் போராட்டம் என்ற கருதுகின்ற எல்லையைக் கடந்து, போராட்டத்தை இவர்கள் நடத்தவில்லை. ஆம் மன்னர்கள் ஆண்ட காலத்தில், மன்னருக்கு விசுவாசமாக இருத்தல் தான் அன்று யுத்தம் செய்பவனின் அறமாக இருந்தது. இதைத் தாண்டி புலி உறுப்பினர்களிடம், எந்த மனித அறமும் இருக்கவில்லை. இதுதான் இந்த போராட்டத்தின் தோல்விக்கான முதற்படி.

இன்று தோற்ற பின்னான கேள்வி, பகுத்தறியும் ஆற்றல் அற்ற முண்டமாக முடங்கிகிடக்கும் எல்லையில் இருந்து எழுகின்றது. "தவறுகள் பிழைகள் இருக்கலாம். போராளிகளிலயும் அந்தப் பலவீனங்கள் இருக்கலாம்." என்று கருதுகின்ற சுய தேடுதல், அதற்கான விடையைக் காணவில்லை. பகுத்தறியும் அறிவை புலிகள் அவர்களிடம் இல்லாதாக்கியிருந்தனர். இது தான் புலி. ஆனால் "ஏதோ இருந்துதானே நாங்கள் தோற்றுப் போயிருக்கிறம்." என்ற உண்மையை உணருகின்ற நிலைக்குள், விடை காண முடியாத சுயஅறியாமை என்னும் வெற்றிடத்தில் போராடியவர்கள் தங்கள் நம்பிக்கையை இழந்து சிதைந்து போகின்றனர்.

"ஏதோ இருந்துதானே நாங்கள் தோற்றுப் போயிருக்கிறம்." இல்லையெண்டால் எப்பிடித் தோற்க முடியும். அதுவும் உயிரையே ஆயுதமாக்கிய ஒரு அமைப்புத் தோற்கிறது எண்டால் என்ன சாதாரண சங்கதியா? ஆகவே எங்கோ குறைபாடு இருக்கு." என்று புலம்பி அங்கலாய்க்கும் மனநிலையில் 22 வருடமாக புலியில் இருந்த ஒருவரின் மனநிலை காணப்படுகின்றது. புலியை விமர்சித்து, உண்மையைத் தெளிவுபடுத்தி வழிநடத்தும் போராட்டத்தை நடத்துபவர்கள் இன்று எவரும் கிடையாது. மாறாக புலியைச் சுற்றி பிள்ளையார் சுழிபோட்டு இடதுசாரிய புரட்டுத்தான், தொடர்ந்து அரங்கேறுகின்றது. "எங்கோ குறைபாடு இருக்கு" என்று தேடும் ஒருவனின் உண்மைக்கும் நேர்மைக்கும் உள்ள புரிதல், இடதுசாரிய சந்தர்ப்பவாதிகளிடம் ஒரு துளிதனும் இருப்பதில்லை.

உண்மையைத் தேட விரும்பும் அந்த மனிதன் "இப்ப எங்கட போராட்டத்தின்ர சரி பிழைகளைக் காணக்கூடியதாக இருக்கு. இதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேணும். என்னைப் பொறுத்தவரை எல்லாம் ஒரு படிப்பினைதான். ஆனால், மனிசன் எவ்வளவைப் படிச்சாலும் திருந்தவே மாட்டான்." என்று அனுபவரீதியாக தவறுகள் உண்டு என்று உணர்ந்து கூறுகின்றான். பகுத்தறிவால் இதுதான் பிழை என்று கண்டு அல்ல. அவன் வாழ்வின் படிப்பினையாக காண்கின்றான். ஆனால் "மனிசன் எவ்வளவைப் படிச்சாலும் திருந்தவே மாட்டான்" என்று, உண்மைகளைக் காணமறுக்கின்ற இந்த உலகத்தை சாடுகின்றான். ஆனால் உண்மையைக் காணவிடாத சந்தர்ப்பவாத அரசியலும், பிழைப்புவாத அரசியலும், மனிதனை படிக்கவிடவில்லை. இதுதானே இன்று வரையான அரசியல் உண்மை.

இந்த உலகம் பற்றிக் கூறும் போது "கண்ணைக் கட்டிக் காட்டில விட்டது எண்டு சொல்லுவினம். நாங்கள் காட்டில கைவிடப்படேல்லை. முள்ளுக்கு மேல நெருப்பைப் பரவி விட்டு, அதுக்கு மேல நிக்கச் சொன்னதைப் போல இப்ப இருக்கிறம்." என்று இந்த சமூகத்தை சரியாக சாடுகின்ற அனுபவம் வெளிப்படுகின்றது. எந்த அரசியல் இதைக் கண்டு கொண்டுள்ளது? அவன் புலியின் (இதைவிட அவனுக்கு உலகம் தெரியாது) விசுவாசமாக இருந்தபடி கூறுகின்ற எல்லையில் தான், அறிவு முடக்கப்பட்டு இருக்கின்றது. இன்று வரை புலியல்லாத ஒரு பார்வை முன்வைக்கப்படவில்லை. அதை அவர்கள் தரிசிக்காத சூழல். அவர்கள் தரிசிப்பது

1.பேரினவாதம்

2.குறுந்தேசிய புலியிசம். இதைத்தாண்டி சமூகத்தை நோக்கி யார் எதைத்தான் முன்வைத்துள்ளனர்.

இதுதான் போராட்டம், இதுதான் வாழ்க்கை என்று முழுமையாக நம்பிப் போராடிய பின் அதுபற்றி கூறும் போது "நாங்கள் பட்ட கஸ்ரங்களுக்கான பயன் கிடைக்கயில்லை எண்டதும் சனங்களின்ரை சாவு அநியாயமாகப் போயிட்டுது எண்டுந்தான் எனக்குக் கவலை. மற்றப்படி நான் என்னைப் பற்றிக் கவலைப்படேல்ல. எவ்வளவோ எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலயும் வளர்த்தெடுத்த அமைப்பின்ர தோல்வியைத் தாங்க முடியாது." என்று புலம்பும் ஒரு அப்பாவியின் மன நிலையாகும். இதுதான் போராட்டம் என்று நம்பி சென்றவர்களின் இன்றைய நிலை இது. நாங்கள் "விசுவாச"மாக இருந்தோம். இதைத் தான் தலைமை எதிர்பார்த்து, இதையே கற்றுக்கொடுத்தது. சொல்வதை செய்யும் முட்டாள்களை உருவாக்கியது. சரிபிழைகளை சீர்தூக்கி பார்க்கும் பகுத்தறிவுள்ள மனிதர்களை உருவாக்கவில்லை.

பகுத்தறிவற்ற விசுவாசமுள்ள புலியாக இருந்தவர்கள், தவறை தன் தலைமையின் சில நடத்தைகள் ஊடாகப் பார்க்க தூண்டுகின்றது. இது கண் முன் நடந்தது. "என்னைப் பொறுத்தவரை வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில இருந்த வேறுபாட்டைச் சரியாகக் கணக்கெடுக்கத் தவறியிட்டம் எண்டுதான் சொல்லுவன்." அதாவது "தோல்வியில் கிடைக்கிற அனுபவங்கள் வேற. வெற்றியில கிடைக்கிற அனுபவங்கள் வேற. போராட்டத்தில ஒரு போதும் தோல்வி எண்ட சொல்லையே பாவிக்கக்கூடாது. அதைப் பின்னடைவு எண்டுதான் சொல்ல வேணும். அப்ப, பின்னடைவில நாங்கள் ஒரு நெருக்கடியைச் சந்திப்பம். அந்த நெருக்கடியில இருந்து மீளுறதுக்காக எல்லாரும் ஒண்டாக நிற்பினம். ஆனால் வெற்றியில் ஆளாளுக்குப் போட்டி வந்திடும். பங்கைப் பகிர்வதில், சுகங்களையும் வசதிகளையும் அனுபவிக்கிறதில போட்டிகள் வரும். இந்தப் போட்டியில இடைவெளிகளும் பகைமையும் தானாகவே வரும். இதை என்ரை கண்ணால பார்த்திருக்கிறன்." இப்படி அனுபவம் சார்ந்த காரணங்கள், நெறிமுறை தவறிய தலைமையின் முரண்பாடுகளும் வாழ்க்கையும் தான் போராட்டத்தை தோற்கடித்தது என்று கருதுகின்ற எல்iயைத் தாண்டி, இதை புரிந்து கொள்ள முடியாத வண்ணம் புலிச் சிந்தனையால் முடக்கப்பட்டு இருக்கின்றது.

மக்களுக்கும் தமக்குமான முரண்பாட்டை புரிந்து கொள்ளக் கூடிய நிலையில் அவர்களுக்கு அறிவில்லை. இதைச் சொல்லும் நிலையில் சமூகமில்லை. வலது - இடது அரசியலைக் கூட இதை சொல்லாத சந்தர்ப்பவாதத்திலும், பிழைப்புவாதத்திலும் மூழ்கிக் கிடக்கின்றது.

இன்றைய வாழ்வை அவர்கள் அனுபவிக்கின்ற கோணத்தில் மிகத்தெளிவாக "இப்ப வெளியாலே விடப்பட்டிருக்கிறம். இது பேரளவிலதான். ஆனால் சுயாதீனமாக நாங்கள் வாழ முடியேல்ல. நாங்கள் முயன்றாலும் சூழல் அதுக்கு முழுக்க இடந்தராது. சிலவேளை சிலபேருக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினை மாதிரித் தெரியாமலிருக்கலாம். அவையள் எந்தச் சூழலுக்கையும் வாழக்கூடியமாதிரி தங்களை மாத்தியும் கொள்ளலாம். ஆனால் என்னால அங்காலயும் போக முடியவில்லை. இங்காலையும் போக முடியேல்ல. ஏதோ மனதுக்குள்ள கிடந்து உருட்டிக் கொண்டிருக்கு. நாங்கள் எங்கேயோ பிழைவிட்டிருக்கிறம். கனக்கப் பிழையள். அதுதான் இப்ப எனக்குப் பிரச்சினை. நாங்கள் பிடிபட்டுக் காம்பில இருக்கேக்க இதை உணர்ந்திருக்கிறன். பலரிட்டயும் இந்த மாதிரியான ஒரு, ஒரு நிலைமையைப் பாத்திருக்கிறன். பொதுவாகக் கனபேர் கவலைப்பட்டார்கள். நாங்கள் கன இடத்தில பிழை விட்டிட்டம் எண்டதை வாய்விட்டே சொன்னார்கள். ஆனால் இனிப் பழைய இடத்துக்குத் திரும்பிப் போக முடியாது. ஆனால் நாங்கள் இப்பிடியே இருக்கவும் ஏலாது. இதைத்தான் நான் திரும்ப திரும்பச் சொல்லுவன்."

ஆம் இந்த உண்மையை உணர்ந்து வழிகாட்ட வேண்டிய சமூகப்பொறுப்பு எம்முன் விடப்பட்டுள்ளது. மாபெரும் சவால். அவர்களுக்கு உள்ள சவால் போல், எம்முன்னுள்ள சவாலும்.

 

பி.இரயாகரன்

23.01.2011