புதுவை வடமங்கலத்திலுள்ள இந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் என்ற பன்னாட்டு நிறுவனத்தில் தொடர்ந்து நிலவிவரும் தொழிலாளர் விரோதப் போக்குகளைக் கண்டித்தும், பு.ஜ.தொ.மு. இணைப்பு சங்கமான இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் தோழர் அய்யனார் 12(3) ஊதிய ஒப்பந்தத்தின் குறைகளை சுட்டிக் காட்டியதால், அவருக்கு வழங்கப்பட்ட 10 நாட்கள் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரியும் 15.09.2010 அன்று ஆலைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 


 

 

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் எழில் தலைமை உரையாற்றினார். தோழர் முத்துக்கிருஷ்ணன், தோழர் லோகநாதன் கண்டன உரையாற்றினர். பு.மா.இ.மு. புதுவை மாநில அமைப்பாளர் தோழர் கலை மற்றும் பு.ஜ.தொ.மு. புதுவை மாநிலப் பொருளாளர் செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி வருவதையும் நமது வரிப்பணத்தில் கொழுத்து வருவதையும் அதற்கு துணைநிற்கும் ஓட்டுக்கட்சித் துரோகிகளையும் அம்பலப்படுத்திப் பேசினார்கள்.

மாற்றுத் தொழிற்சங்கத்தை அம்பலப்படுத்தியும், சாதிரீதியாக தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி வைத்திருப்பதை உணர்த்தும் வகையில் தோழர்கள் பேசியதும், தொழிலாளர்கள் அனைவரும் வர்க்கமாய் அணிதிரண்டு நக்சல்பாரிப் பாதையில் போராட வேண்டும் என்று அறைகூவி அழைத்ததும் தொழிலாளர் மத்தியில் புதுத்தெம்பையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

பு.ஜ.தொ.மு., புதுவை.