""விலைவாசி உயர்வு, பன்னாட்டுத் தொழில் கழகங்களின் ஆலைகளில் தொழிற்சங்கங்கள் நிறுவும் உரிமை, 8 மணி நேர வேலை, பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு போன்ற உரிமைகள், ஒப்பந்த வேலைமுறை ஒழிப்பு, ஊக வாணிபத்துக்குத் தடை, தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கலைக் கைவிடுதல்'' முதலான கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு.; எச்.எம்.எஸ்., உள்ளிட்ட எட்டு மையத் தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 7ந் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

 

 

 

இக்கோரிக்கைகள் எழுவதற்கு மூலகாரணமான மறுகாலனியாதிக்க நடவடிக்கைகளை எதிர்த்தும், அதனால் பாதிக்கப்படும் அனைத்துப் பிரிவு மக்களுடன் ஐக்கியப்பட்டுப் போராட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தும் செப்டம்பர் 7 பொது வேலை நிறுத்தத்தினை ஆதரிப்பது, பங்கேற்று, அதற்கு ஆதரவு திரட்டுவது எனப் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி முடிவு செய்து, அதன்படி கீழ்க்காணும் இடங்களில் செப்.7 பொது வேலைநிறுத்த ஆதரவுக் கூட்டங்களும் மறியலும் நடத்தியது.

 

சென்னையில்

 

சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த குமணன் சாவடி பேருந்து நிலையத்தில் செப்.4 அன்று பொது வேலை நிறுத்தப் பிரச்சாரத் தெரு முனைக் கூட்டம் நடந்தது. பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் தோழர் அ.முகுந்தன் தலைமையில் மாநிலப் பொருளாளர் தோழர் பா.விஜயக்குமார் சிறப்புரையாற்றினார். பெருந்திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஆதரவளித்தனர்.

 

செப்.7 அன்று பொது வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக, பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் அருகே, மதியம் 1 மணிக்கு தோழர் முகுந்தன் தலைமையில் சாலை மறியல் நடந்தது. சுமார் அரைமணி நேரம் திடீரென்று நடத்தப்பட்ட சாலை மறியலின்போது தோழர்களது ஆவேச முழக்கங்களும், போலீசின் மிரட்டலுக்கும் மறியலைக் கலைக்கும் முயற்சிக்கும் அஞ்சாமல் தோழர்கள் போர்க்குணத்துடனும் உறுதியுடனும் போராடியதும் பகுதி மக்களையும் தொழிலாளர்களையும் ஈர்த்தன. கைது செய்யப்பட்ட தோழர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

 

ஓசூரில்

 

செப். 7 பொது வேலைநிறுத்த ஆதரவுப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அதேநோளில் ஓசூர் முக்கொண்டப்பள்ளி, பாகலூர் ஆகிய இடங்களில் பு.ஜ.தொ.மு. தெருமுனைக் கூட்டங்களை நடத்தியது. முக்கொண்டப்பள்ளி தெருமுனைக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தோழர் இரா. சங்கரும்; பாகலூரில் பகுதிப் பொறுப்பாளர் தோழர் இரவிச்சந்திரனும் தலைமை தாங்கினர். இரு இடங்களிலும் தோழர் பரராமன் சிறப்புரையாற்றினார். திரளான பொதுமக்களும் தொழிலாளர்களும் கலந்து கொண்டு நிதியும் ஆதரவும் வழங்கினர்.

 

புதுச்சேரியில்

 

பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு திரட்டும் தெருமுனைக் கூட்டத்திற்கு செப். 7 அன்று போலீசு அனுமதி மறுத்து விட்டது. என்றாலும் செப். 6 அன்றே புதுச்சேரி திருப்புவனையில் இக்கூட்டம் நடத்தப்பட்ட போதும், பேருந்து பிரச்சாரத்தின் போதும் பிழைப்புவாதச் சங்கங்களின் துரோகத்தனம் அம்பலப்படுத்தப்பட்டு மக்களின் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றது.

பு.ஜ.செய்தியாளர்கள்.