புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சேர்ந்த அலாவுதீனுக்கும் சப்னா ஆஸ்மிக்கும் 10.7.2010 அன்று திருமணம் நடந்தது.  இதிலென்ன முக்கியத்துவம் உள்ளது என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம்.  மணமகன் அலாவுதீன் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்.  மணமகளோ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் உள்ளூர் கிளை செயலாளரின் மகள்.  பு.மா.இ.மு. அமைப்புத் தோழர்களின் தலைமையில் முசுலீம் மதச் சடங்குகளின்றி சீர்திருத்த முறையில் நடந்த திருமணம் இது என்பதுதான் இதன் சிறப்பு.

இத்திருமணம் உள்ளூர் ஜமாத்தாருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் நடந்தது.  பொதுவாகப் பச்சைக் கொடி பறக்கும் இம்மண்டபத்தில் திருமண நாளன்று அம்மண்டபத்தை சிவப்புக் கொடிகளும் தோரணங்களும் அலங்கரித்தன.  முசுலீம் சமுதாய மக்கள் உருவ வழிபாட்டை மறுப்பவர்கள் என்பதும் அவர்களின் மத மற்றும் குடும்ப விழாக்களில் முசுலீம் மதத்தைச் சேர்ந்த ஞானிகளின் படங்களைக்கூட அனுமதிக்கமாட்டார்கள் என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று.  ஆனால், இத்திருமண நிகழ்ச்சியில் அம்மண்டபத்தில் கம்யூனிச ஆசான்கள் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அலங்கரித்தன.  திருமண நாளன்று முழுவதும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகரப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

மனிதர்களது வாழ்க்கையில் இன்பம்-துன்பம் உள்ளிட்டு அனைத்தும் ஆண்டவனால் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒன்று என்பது முசுலீம் மதத்தினரின் ஆழ்ந்த மத நம்பிக்கை.  இத்திருமணத்தின்பொழுதோ அம்மத நம்பிக்கைக்கு மாறாக, “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை; வர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்ற கம்யூனிஸ்டுகளின் நம்பிக்கை அனைவரையும் வரவேற்றது.  முசுலீம் சமுதாயத் திருமணங்கள், அச்சமுதாயத்தைச் சேர்ந்த மௌல்வி மற்றும் பெரியவர்கள் தலைமையில்தான் நடைபெறும்.  இத்திருமணமோ, பு.மா.இ.மு. அமைப்பாளர் தோழர் கணேசன் தலைமையேற்க, பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பரமானந்தம், புதுக்கோட்டை மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் அமைப்பாளர் வழக்குரைஞர் ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க நடைபெற்றது.

‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாவின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்” என்ற குரான் வாசகத்தைச் சொல்லிய பிறகுதான் முசுலீம் திருமணங்கள் நடைபெறும். இத்திருமணமோ தோழர்களின் புரட்சிகர உரையோடு திருமணம் நடைபெற்றது.  இப்படி நடைபெற்ற திருமணத்தில் மணமக்களின் பெற்றோர்-உறவினர்கள், அமைப்புத் தோழர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, பகுதியில் வாழும் பெருவாரியான முசுலீம் மக்களும், உள்ளூர் ஜமாத் மற்றும் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டோரும் சுயவிருப்பத்தோடு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

மணமேல்குடியில் வசிக்கும் முசுலீம் மக்களிடம் ஒரு சீர்திருத்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் மன மாற்றம் எப்படி சாத்தியமானது?  இத்திருமணத்தை மதச் சடங்குகளின்றி சீர்திருத்த முறையில் நடத்துவது என முடிவெடுத்தவுடனேயே, பு.மா.இ.மு. தோழர்கள் முசுலீம் மக்களிடமும், ஜமாத்தாரிடமும் திருமணத்தைச் சீர்திருத்த முறையில் நடத்த வேண்டிய அவசியம் குறித்து விளக்கியுள்ளனர்.  இந்த விளக்கமும், பு.மா.இ.மு.வின் புரட்சிகர அரசியல் மீதும், அமைப்பு நடவடிக்கைகள் மீதும் பகுதி முசுலீம் மக்களிடம் இருந்துவரும் நம்பிக்கையும் நன்மதிப்பும் – இவையெல்லாம் சேர்ந்துதான் இம்மன மாற்றத்தை உருவாக்கின.  கம்யூனிசப் புரட்சிகர அரசியல் மற்றும் நடைமுறை மூலம், முசுலீம் மதத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களைக்கூடப் பிடித்தாட்டும் மதக் கடுங்கோட்பாட்டு வாழ்க்கை முறையில் உடைப்பை ஏற்படுத்த முடியும் என்பதை இத்திருமண நிகழ்ச்சி நிரூபித்துக் காட்டியுள்ளது.

வினவு குறிப்பு: புதிய ஜனநாயகம் இதழில் மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் என்று வந்திருப்பது தவறான செய்தியாகும். இது குறித்து புதிய ஜனநாயகம் அடுத்த இதழில் மறுப்பு வெளியிடும் என்று ஆசிரியர் குழு தோழர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மணமகளின் தந்தை தவ்ஹீத் ஜமாஅத்தின் உள்ளூர் கிளை செயலாளராக முன்னர் பொறுப்பு வகித்துள்ளார் என்பதும் தற்போது பொறுப்பிலின்றி வெறும் உறுப்பினராக இருக்கிறார் என்றும் அந்த பகுதி தோழர்கள் கூறுகின்றனர். மற்றபடி இந்த திருமணத்திற்கு வந்திருந்த இசுலாமிய மக்களில் ஒருவர் கூட தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என அந்த இயக்கத்தினர் வேறு வழியின்றி வாதிடுகிறார்கள். அது உண்மையாயின் அந்த பகுதியில் இந்த கடுங்கோட்பாட்டு மத அமைப்புக்கு கிஞ்சித்தும் செல்வாக்கு இல்லை என்று தெரிகிறது.