இதுவரை வெளிவந்த ஊழல்களிலேயே தொகையில் மிகப்பெரிய ஊழலாக வெளிவந்திருக்கிறது அலைக்கற்றை ஊழல். ஒரு வாரமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கி, கூச்சலிட்டு, நெருக்கடி கொடுத்து ஒரு வழியாக ராஜா பதவி விலகிவிட்டார். 2008 லிருந்து ஸ்பெக்ட்ரம் எனும் இந்த அலைக்கற்றை ஊழல் பேசப்பட்டு வந்தாலும் ஒரு எல்லையைத்தாண்டி இதில் மக்கள் கவனம் பதிந்துவிடாதபடி தேசிய அளவில் காங்கிரசும், தமிழக அளவில் திமுகவும் பார்த்துக்கொண்டன. இடையில் திமுகவில் ஏற்பட்ட குடும்பச்சண்டையில் இந்த ஊழல் பரவலாக பேசப்பட்டாலும் சமாதானத்தின் பின் ஈரத்துணியில் மூடப்பட்டது. இதனிடையே நீதிமன்றம் இந்த ஊழல் தொடர்பாக புலனாய்வு அமைப்புக்கு விடுத்த கண்டனங்களைத் தொடர்ந்து பரபரப்பாகி ராஜா விலகல்வரை வந்திருக்கிறது.

 


1990 நரசிம்மராவ் காலத்தில் தொலைத்தொடர்புத்துறையில் தனியாருக்கு அனுமதியளிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் பணங்காய்ச்சி மரமாகவே அந்தத்துறை இருந்து வந்திருக்கிறது. கம்பிகளில் கடந்து கொண்டிருந்த தொலைபேசி சேவை மின்காந்த அலைகளுக்கு தாவிய போது; அரசிடம் மட்டுமே இருந்த இதில் தனியாரை அனுமதிக்க வேண்டும் எனும் நிர்ப்பந்தம் வந்தபோது, அலைக்கற்றையை தனியாருக்கு ஒதுக்கிக்கொடுக்க கட்டணம் நிர்ணயிக்கபட்டதில் அன்றிலிருந்து இன்றுவரை இருந்த அத்தனை அரசுகளுமே அடிமாட்டுவிலைக்கு தனியாரிடம் தள்ளிவிட்டு பணத்தில் குளித்துள்ளன. அந்த வகையில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையான 2ஜி ஒதுக்கீட்டில் அந்தத் துறையின் அமைச்சரான‌ ராஜா தனியார் நிறுவனங்களுக்கு செய்த ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நினைத்துப்பார்க்கவே மலைப்பை ஏற்படுத்தும் இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்திவிட்டு சட்டபூர்வமாகத்தான் நான் செய்தேன், நான் குற்றமற்றவன் என கடைசி நிமிடம்வரை கூறிக்கொண்டிருக்க முடிகிறதே, இதில்தான் மக்கள் குறித்து இந்த ஓட்டுப்பொறுக்கிகள் கொண்டிருக்கும் கருத்து குறியீடாக வெளிப்படுகிறது.


இந்த ஊழல் வெளியானதிலிருந்து நான் முன்னர் இருந்த அமைச்சர்கள் பின்பற்றிய அதே வழிமுறைகளைத்தான் நானும் பின்பற்றியிருக்கிறேன் என்றும் பிரதமருக்கு தெரிவித்துவிட்டே ஒவ்வொன்றையும் செய்திருக்கிறேன் என்றும் கூறி வருகிறார் ராஜா. 2008ல் ஒதுக்கீடு தொடங்கியதிலிருந்தே அதன் வழிமுறைகள் குறித்து விமர்சனம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. தணிக்கைச் செயலர் கூட என்னுடைய யோசனைகள் புறந்தள்ளப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். என்றால் மன்மோகன் சிங்கிற்கு தெரிந்தே தான் எல்லாம் நடந்திருக்கிறது. அதையும் அவர் ஆமோதிக்கிறார், இல்லையென்றால் பிரதம‌ரிடம் தெரிவித்துவிட்டே செய்திருக்கிறேன் என கூறியதை மன்மோகன் சிங் மறுக்கவில்லையே.


தலித் என்பதால் என்னைக் குறிவைக்கிறார்கள், தணிக்கை அறிக்கையில் அரசுக்கு இழப்பு என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது கையாடல் செய்ததாக கூறப்படவில்லை, தணிக்கை அறிக்கையை கணக்கிலெடுத்தால் எந்த அமைச்சரும் பணி செய்யமுடியாது, குற்றச்சாட்டுதான் கூறப்படுகிறதே ஒழிய நிருபணமாகவில்லை என ஆயிரம் சப்பைக்கட்டுகள் கூறினாலும் ராஜாவின் கைவரிசை வெளிப்படவே செய்திருக்கிறது. இதில் ராஜாவின் பங்கு என்ன? ௧) 2001ல் விற்க்கப்பட்டபோதே குறைவான மதிப்பீடு என விமர்சனம் எழுந்த அதே விலையை 2008லும் எந்த மாற்றமும் செய்யாமல் தீர்மானித்தது, ௨) வெளிப்படியான ஏல முறையை பின்பற்றாமல் முதலில் வந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்தது, ௩) தொலைத்தொடர்புத்துறையில் எந்த முன் அனுபவமும் இல்லாத டப்பா நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தது, ௪) அலைக்கற்றை பெற்ற நிறுவனங்களை உடனேயே வேறு நிறுவனங்களுக்கு விற்றுக்கொள்ள அனுமதித்தது. இந்த‌ குற்றச்சாட்டுகளுக்கு எந்தப் பதிலும் கூறப்படவில்லை.


அறிவியல் பூர்வமாக ஊழல் செய்வதில் நிபுணர்கள் என்று பெயரெடுத்த திமுகவினரின் முத்திரை இந்த ஊழலிலும் பதியப்பட்டிருக்கிறது. தொலைத்தொடர்புத்துறையில் எந்த அனுபவமும் இல்லாத ஸ்வான், யுனிடெக் போன்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் ஒதுக்கப்படுகின்றன. ஸ்வான் நிறுவனத்தை 2006ல் ராஜாவின் ஆலோசனையின் பெயரில் அம்பானியின் கிளை நிறுவனம் ஒன்றிடமிருந்து ஷாகித் பால்வா என்பவர் வாங்கியிருக்கிறார். இதன் பங்குதாரர்களாக மொரீஷியஷில் உள்ள பாரத் இன்வெஸ்ட்மெண்ட்ஸின் உரிமையாளர்கள் டைகர் டிரஸ்டீஸ் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் இந்தியப் பெருங்கடல் தீவு ஒன்றில் உள்ள ஸீப்ரா இன்வெஸ்ட்மெண்ட்ஸையும் நடத்துகிறார்கள். இப்படி இந்த நிறுவனங்கள் உரிமையாளர்கள் ஒன்றைத்தொட்டு ஒன்று என நீண்டுகொண்டே போகிறது, பல்வேறு நிறுவனங்கள், பலப்பல ஆட்கள் மூலமாக இந்நிறுவனங்கள் ராஜாவுக்கு வேண்டியவர்கள் வழியாக கருணாநிதி குடும்பத்தினர்களுக்கு உரிமையானதாக இருக்கும் என நாம் நம்பலாம். சரி, இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டை வாங்கிய நிறுவனம் அதை துபாயிலுள்ள எடிசலாத் எனும் நிறுவனத்திற்கு விற்கிறது. இந்த எடிசலாத்தின் பங்குதாரர்கள் கீழக்கரையைச் சேர்ந்தவர்கள், இவர்கள் ஈடிஏ எனும் நிறுவனத்தை நடத்துகிறார்கள். இந்த ஈடிஏ நிறுவனத்திற்கு தமிழகத்தில் நடக்கும் கட்டுமான ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. அரசியலில் இவர்கள் வகிக்கும் கூட்டணி நிர்பந்தங்களை தாண்டி இவைகளை முனைப்புடன் கண்டுபிடித்து வழக்குகள் பதிவு செய்து தண்டிக்கவேண்டுமென்றால் சம்மந்தப்பட்ட இவர்கள் மட்டுமல்ல இவர்களின் பேரன்களின் தலைமுறையும் கடந்திருக்கும்.



இந்த ஊழலின் மொத்தக் கனத்தையும் ராஜாவோ, திமுகவோ மட்டும்தான் சுமக்கிறதா? நிச்சயம் இல்லை. காங்கிரசுக்கு இதில் பங்கு இல்லாவிட்டால் இதுவரை இவர்களைக் காத்து காப்பாற்றியிருக்க வேண்டியதில்லை. பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தொலைத்தொடர்புத்துறையின் மடுவில் வேண்டியமட்டும் கறந்திருக்கின்றன. இந்த ஊழல் மட்டுமல்ல எந்த‌ ஊழலிலும் கட்சி பேதம் கடந்த பிணைப்பு இல்லாமலில்லை. இந்தவகையில் குவிக்கும் பணத்தில் ஒருபகுதியை தேர்தலின் போது மக்களிடம் விட்டெறிவதன் மூலம் வாக்காளர்களையும் இதுபோன்ற ஊழல்களுக்குள் இணைத்துக்கொள்கிறார்கள். தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை என்ன? நான்கு கோடியா? ஐந்து கோடியா? ஒரு ஓட்டுக்கு ஆயிரம் வீதம் கொடுத்தாலும் ஐந்தாயிரம் கோடிதான் ஆனால் ஊழலோ லட்சக்கணக்கான கோடிகள். ஓட்டுக்கு ஆயிரம் ரூபாயும், கறி பிரியாணியும், டாஸ்மார்க் சரக்கும் தந்து ஓட்டு வாங்குவது அவர்களுக்கு மலிவானதுதான். திமுகவை தவிர்த்து அதிமுகவை தேர்ந்தெடுத்தால்; இரண்டையும் ஒதுக்கி மூன்றாம் அணியை தேர்ந்தெடுத்தால்; காங்கிரஸை விடுத்து பாஜகவை தேர்ந்தெடுத்தால்; இருவரையும் தள்ளிவிட்டு போலி கம்யூனிஸ்ட்களையே தேர்ந்தெடுத்தால், யாரைத் தேர்ந்தெடுத்தாலும் கட்சிப் பெயர்களைத் தவிர வேறேதும் மாற்ற‌ம் இருக்குமா?


ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளே இப்படியென்றால் அவர்களை ஆட்டிவைக்கும் பெருமுதலாளிகளை இந்த அமைப்பில் என்ன செய்துவிடமுடியும்? சிந்திக்க வேண்டிய நேரம் இது. புரட்சிகர இயக்கங்களின் கீழ் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் தனியார்மய தாரளமய உலகமய அமைப்புகளை தூக்கி எறிவதைத்தவிர வேறு வழியேதும் இருக்கிறதா?