காணாமல் போன ஆண்களில் இருந்தும் இது வேறுபட்டது. பெண்கள் பாலியல் ரீதியாக காணாமல் போனார்கள். இதுவொரு கவனம் பெறாத புதிய போர்க்குற்றம்;. யுத்த காலத்திலும், யுத்தம் முடிந்த பின்னும், பாலியல் ரீதியான நோக்கத்தில் பெண்கள் பலர் காணாமல் போனார்கள். புலிகளுடன் எந்தத் தொடர்புமற்ற பெண்களுக்கு நடந்த கதி இது. புலியின் பெயரால் இவை பரவலாக அரங்கேறின. யுத்தத்தின் வெற்றி என்பது பெண்களை பாலியல் ரீதியாக குதறியும் அனுபவிக்கப்பட்டது.

ஊர் உலகத்தை ஏமாற்ற அரசு அமைத்த விசாரனையின் போது, யுத்தத்தின் பின் காணாமல் போன பெண்கள் பற்றிய தனித் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளது. இவை கூட பலத்த கண்காணிப்பு, மிரட்டல்களைக் கடந்து பதிவாகியுள்ளது. யுத்தத்தில் காயமடைந்த அப்பாவிப் பெண்கள் முதல் புலி அல்லாத இளம்பெண்கள் வரை, இராணுவத்தின் கண்காணிப்பில் காணாமல் போய் உள்ளார்கள். இதைச் சாட்சியங்கள் நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளனர். 

அந்தப் பெண்களைத் தேடும் போராட்டம் என்பது கடுiமான மன அழுத்தத்துக்குள் நடக்கின்ற அதே தளத்தில், அவை அரசால் திட்டமிட்டு ஒடுக்கப்படுகின்றது. எங்கும் மனித அவலம் நிறைந்து போனதால், அரசு மற்றம் கூலிக் குழுக்களின் கண்காணிப்பையும் மிரட்டலையும் கடந்து இவை வெளிவருகின்றது.

இந்தப் பெண்களுக்கு என்ன நடந்து? ஏன் காணாமல் போனார்கள்? இதை யார் செய்தது? ஆம்   யுத்தத்தைப் பயன்படுத்தி பெண்களை கடத்தி சென்று, அவர்களை பாலியல் ரீதியாக நுகர்ந்திருப்பதைத்தான் இந்த ஆணாதிக்க சமூக அமைப்பில் நாம் அனுமானிக்க முடியும். அரச கெடுபிடிகளையும் தாண்டி, யுத்த ஆவண அழிப்பையும் மீறி வெளிவந்த,  பெண்கள் சார்ந்த யுத்தப் படங்கள் இதை தெளிவாக்குகின்றது. கொல்லப்பட்ட பெண்களை நிர்வாணமாக்கி, அதை வக்கிரமாக ரசித்த பேரினவாத இராணுவத்தின் ஆணாதிக்க குற்றத்தை அவை அம்பலமாக்கியது. ஒரு இறந்த பெண்ணை நிர்வாணமாக்கி, அந்த உடலை வைத்து கொண்டாடி கூச்சலிடும் வீடியோ ஒன்றை நாம் முன்பு வெளியிட்டு இருந்தோம்;. கொல்லப்பட்ட பெண்களின் நிர்வாணமான உடல்கள் எமக்கு உயிருடன் காணாமல் போன பெண்களின் கதையைச் சொல்லுகின்றது. உயிருடன் பிடித்து காணாமல் போன பெண்களுக்கு பாலியல் ரீதியாக என்ன நடத்திருக்கும் என்பதை, நாம் அனுமானிக்க முடியும்;.

அகதி முகாமில் வைத்தே புலனாய்வுத்துறையைச் சேர்ந்த ஒருவர் ஒரு பெண்ணை மிரட்டி, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதன் மூலம் பெற்ற குழந்தையை, யாழ் போதனாவைத்தியசாலையில் கைவிட்ட நிகழ்வும், அதில் நீதிமன்றம் தலையிட்ட செய்தியும் கூட அண்மையில் வெளியாகியது. ஒரு வருடம் கழிந்த பின், யுத்தத்தின் ஒரு சின்னமாக அந்தக் குழந்தை பிறந்தது. இது போன்ற குற்றங்கள் பல பெண்களுக்கு நடந்திருக்கும் என்பது வெளிப்படையான உண்மை. பெண்கள் மேலான யுத்தக்குற்றங்கள், பல முனையில் வரைமுறையின்றி நடந்திருக்கின்றது. கிழக்கில் பெண்கள் மேலான குற்றங்கள், அரசியல் பின்புலத்தில் நடந்தவை பதிவாகியிருக்கின்றன. 

புலியைச் சேர்ந்த பெண்களின் கைது கடத்தல் காணாமல் போதலுக்கு வெளியில், பல பெண்கள் காணாமல் போய் உள்ளனர். அத்துடன் பெண்கள் மேலான வன்முறை, பொதுத் தளத்தில் மிக பரவலாக யுத்தப் பின்னனியில் நடந்துள்ளது. போர்க்குற்றம் என்பது கொல்லுதல், சித்திரவதை, சொத்து அழித்தல் .. என்பது மட்டுமல்ல, பெண்கள் மேலான திட்டமிட்ட பாலியல் குற்றமும் கூட அடங்கும்.

இவை விரிவான தளத்தில் நடந்துள்ளது. ஆனால் சமூகத்தின் முன் இவை பாரிய குற்றமாக வரவில்லை. பெண்கள் அமைப்புகள் கூட இதை சரியாக முன்னிறுத்தி, இதை மையப்படுத்தி  முன்னனெடுக்கவில்லை.

மறுதளத்தில் இதே போன்ற குற்றங்கள் புலி ஆதரவு அதிகாரத்தைச் சார்ந்து நடந்துள்ளது. புலிக்கு ஆதரவாக இருந்த புத்திஜீவிக் கூட்டத்தின் ஒரு பகுதியினர், இளம் பெண்களை பாலியல் ரீதியாக வன்முறைக்குள்ளாகியுள்ளனர். இவை புலித்தேசியத்தின் பின்புலத்தில், அந்த அரசியல் பலத்தில் நடந்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் ஊமையாகி, அடங்கிப் போனார்கள். தெரிய வந்த குற்றங்கள் கூட, புலி அரசியல் பின்புலத்தின் மூலம் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டனர்.  இப்படிப்பட்ட குற்றங்கள் புலிதரப்பு சார்ந்த போர்க் குற்றங்களில் அடங்கும்;.

இப்படி பெண்கள் மேலான போர்க்குற்றங்கள், அரசியல் ர்Pதியாக இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. காணாமல் போன பெண்களைத் தேடி உற்றார் உறவினர் கதறுகின்ற பொது அவலம், உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்படுவதில்லை. ஆணாதிக்க எல்லைக்குள் இவை சிறுமைப்படுத்தப்பட்டு அணுகப்படுகின்றது. இவை ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணியக் குரலாக மாற்றப்படுவதன் மூலம் தான், போர்க்குற்றத்தினை சரியான அரசியல் தளத்தில் முன்னெடுக்க முடியும்.               

1.சிங்கள இராணுவம் பெண்களை நிர்வாணப்படுத்தி குதறுவதை, மூடிமறைக்கும் புலித் தேசியம்

 

2..பெண்களை நிர்வாணப்படுத்தியது புலியென்று, அரச ஆதரவாக ஆய்வு செய்கின்றனர்

 

3.பெண்கள் மேலான பாரிய பாலியல் போர் குற்றங்கள் (படங்கள் இணைப்பு)

 

4. மண்ணுக்குள் தலையைப் புதைக்கும் பெண்ணியல்வாதிகள்

 

5. ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்

 

6. பெண்ணை நிர்வாணமாக்கும் பேரினவாதக் கொடுமையை, தமிழ்மக்களுக்கு மூடிமறைக்க கோருகின்றனர்?

 

7. சிறுமி வர்ஷாவின் படுகொலைக்கான அரசியல் எது?

 

8.கிழக்கின் 'உதயமாக" உருவான 'விடிவெள்ளிகளும்", தினுஷிகாவின் படுகொலையும்

 

9. அதிகாரம் மூலம் பெண்களைக் குதறும் யாழ் உயர் வர்க்கம்

 

10. தீர்ப்புகளும், புலியின் பெயரால் பெண் உடலை குதறிய கொடுமையும்

பி.இரயாகரன்
17.11.2010