புலியை தேசியமாக பார்ப்பவர்கள், தேசம் தேசியம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை காணமுடியாதவர்களாவே உள்ளனர். புலியெதிர்ப்புக்கு தேசிய மறுப்பு தத்துவம் வழங்க முனையும் ராகவனாக இருக்கலாம், ஸ்ராலினை மறுக்கும் திரோஸ்க்கியம் பேசுகின்றவர்களாக இருக்கலாம், சாராம்சத்தில் அவர்களின் அரசியல் ஒத்துப் போகின்றது.

 

தேசம், தேசியம் என்பது கற்பனையான பொருளற்ற வெறும் சிந்தனையல்ல. அதாவது கருத்துமுதல்வாதக் கற்பனையல்ல. மாறாக பொருள் வகைப்பட்ட ஒன்றின் மீதான சிந்தனை. இதை திரொஸ்கிகள் தேசிய மறுப்பின் ஊடாக மறுக்கின்றனர். ராகவன் கருத்தமுதல்வாதமாகவே பாhக்கின்ற அளவுக்கு, புலியெதிர்ப்புவாதம் அவரின் கண்ணை மூடிநிற்கின்றது.

 

தேசம் என்பது பொருள் வகைப்பட்டது என்ற எதார்த்ததை மறுக்கவே, ஸ்ராலினை மறுப்பது அவசியமாகின்றது. தேசத்தின் பொருள் வகைப்பட்ட எதார்த்தத்தின் குறைந்தபட்ச வரையறை இருப்பதை, புரட்சிக்கு தலைமை தாங்கி ஸ்ராலின் தான் முதன் முதலில் வரையறுத்துக் காட்டுகின்றார். இதனால் தத்தவமேதையான லெனின் அதை மிகச் சிறந்த மார்க்சிய வரையறையாக, உலகம் முன் அங்கீகரித்தார். வர்க்கப் போராட்டத்தை நடத்துவதில் இருந்து ஒரு சமூகப் பிரச்சனையை, ஸ்ராலின் மார்க்கிச வரையறை நேராக்கிவிடுகின்றது. லெனின் - ஸ்ராலின் தேசம் பற்றி மார்க்சிய அடிப்டையிலான இந்த நிலையை, திரோஸ்கி அன்று ஏற்றுக்கொண்டது கிடையாது. இன்றுவரை அது தான் அவர்களின் நிலை. லெனின் - ஸ்ராலின் தேசம் பற்றி மார்க்சிய அடிப்டையில் தான், அங்கு வர்க்கப் புரட்சியே நடந்தது. திரோக்சிய வரையறையிலல்ல. சோவியத்துகளின் உள் உருவாக்கம் கூட, இதனடிப்படையில் தான் நடந்தது. இது போல் தான் சீனாவிலும் நடந்தது.

 

இதை வழிகாட்டிய ஸ்ராலின் வரையறை என்பது தெளிவானது. தேசம் என்பது தனக்கான ஒரு தேசிய பொருளாதார கட்டுமானத்தை, தனக்கான ஒரு மொழியையும், இதை கொண்டிருக்க கூடிய ஒரு பிரதேசத்தையும், இதனடிப்படையிலான ஒரு பண்பாட்டையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் கொண்டது தான் தேசம் என்றார். இதற்கு வெளியில் தேசம் என்பது பொருள் வகைப்பட்டதல்ல. தேசங்களாக இருக்கும் எந்த நாடும், குறைந்த பட்சம் இதைக் கொண்டிருக்க வேண்டும். இதுவல்லாத தேசம் எதார்த்தத்தில் கிடையாது, உருவாகவும் முடியாதது. பொருள் அல்லாத எதுவும், இருக்கவோ உருவாகவோ முடியாது.

 

குறைந்தபட்சமான இந்த நிபந்தனை என்பது அடிப்படையானது. இதற்கு மேல் பல பண்பாடுகள், பல மொழி கொண்டவை கூட ஒருங்கிணைந்த தேசமாக ஒன்றி இருக்க முடியும்.

 

இப்படி பொருள் வகைப்பட்ட ஒன்றை மறுப்பது, அதை தமது கற்பனையில் கற்பிதமாக காட்டுவது சுத்த அபத்தம். இதையே திரோஸ்க்கியம் முதல் புலியெதிர்ப்பு வரை செய்கின்றது. தமிழ்மக்கள் தேசிய இனமா இல்லையா என்ற விவாதத்துக்கு முன், தேசம் தேசியம் பற்றிய இவர்களின் பார்வையே குருட்டுத்தனமானது. இவர்கள் பார்வை உலகளவிலானதாக, பார்க்கவும் காட்டவும் முனைகின்றது. அது உலகத்தில் உள்ள தேசங்களை, தேசியத்தை எல்லாம் மறுக்கின்ற போது, எதார்த்தத்தில் உலகமயமாதலை ஆதரிக்கின்றது. இன்று நிலவும் தேசங்களையும், தேசியத்தையும் அழிப்பதே உலகமயமாதல் தத்துவம். அதாவது தேசங்கள் உள்ளான சுரண்டலுக்கு பதில், உலகளாவிய சுரண்டல்.

 

தேசம் இல்லாத தளத்தில், பாட்டாளி வர்க்க தலையீடு அல்லாத ஒரு தளத்தில், அதை பிரதி செய்வது உலகமயமாதல் தான். பாட்டாளி வர்க்கம் மட்டும் தேசியத்திலும் பிற்போக்கு நிலப்பிரபுத்துவ கூறுகளை மறுத்து, முற்போக்கு கூறுகளை உள்வாங்கி போராடுகின்றது. நிலபிரபுத்துவ கூறுகளை எதிர்க்கின்ற வர்க்கக் கூறுகளையும் அது ஆதரிக்கின்றது.

 

பாட்டாளி வர்க்கத்துக்கு தனக்கென்ற சர்வதேச பார்வை உண்டு. தேசத்தை ஆதரிப்பது, அதை முன்னெடுப்பதன் சாரம் என்பது, தேசம் பற்றிய அதன் சொந்த வரையறையில் கொண்டிருக்க கூடிய முற்போக்கு தன்மையைத் தான்.

 

தேசம் கொணடுள்ள தேசிய பொருளாதாரத்தை அழிப்பதை, அதன் மொழியை அழிப்பதை, அதன் நிலத் தொடரை இல்லாததாக்குவதை, அதன் பண்பாட்டை அழிப்பதை பாட்டாளி வர்க்கம் அனுமதிக்காது எதிர்த்துப் போராடுகின்றது. பிற்போக்கு ஏகாதிபத்தியம் இதை அழிப்பதை அனுமதிப்பதில்லை. இந்த வகையில் பாட்டாளி வர்க்கம் அதை எதிர்க்கின்றது.

 

உண்மையில் உலகமயமாதல் இவை அனைத்தையும் சுவடு கூடத் தெரியாது அழிக்கின்றது. பாட்டாளி வர்க்கம் செய்வது இது கொண்டுள்ள பிற்போக்கு நிலப்பிரபுத்துவ கூறுகளை மட்டும் தான், பாட்டாளி வர்க்கம் அழிக்க முனைகின்றது. அதன் முற்போக்கான சமூகக் கூறுகளையும் பாதுகாத்து, தேசத்தை தேசியத்தை உயர்த்துகின்றது. பல்வேறு வர்க்கங்கள் கொண்ட இந்த நாடுகளின், ஆக பிற்போக்கான வர்க்கத்தை எதிர்த்த போராட்டத்தை தேசியத்துக்கு ஊடாக பாட்டாளி வர்க்கம் முன்னிறுத்துகின்றது. அதாவது இன்று முதலாளித்துவ புரட்சி நடைபெறாத நாடுகளின் வாக்கப் போராட்டம் என்பது, சாராம்சத்தில் தேசிய போராட்டத்தையும் உள்ளடக்கியது தான்.

 

தேசமும், தேசிய மக்களும் ஸ்ராலின் வரையறைக்குள் உள்ளாக அதைப் பாதுகாக்க நாளாந்தம் உலமயமாதலுக்கு எதிராகப் போராடுகின்றனர். தேசத்தின் அறிவை, அதன் வளத்தையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. உதாரணமான பன்மையான விதைகள், பன்மையான உணவு வகைகள், பன்மையான உற்பத்தி முறைகள், தனி ஆற்றல் வாய்ந்த உற்பத்திகள், மரபு சார்ந்த சமூகக் கூறுகள், சமூக ஆற்றல்கள், உடல் சார்ந்த உயிரியில் எதிர்பாற்றல்கள், தான் பேசும் மொழியை, தனது சொத்தை, தனது உழைப்பை, தனது பொருளாதாரத்தை என்ற அனைத்தையும் தேசம் பாதுகாக்க வேண்டியுள்ளது.

 

இதற்கு மாறாக ஒரு தேசத்தின் அழிவில், தேசத்தின் சிதைவில் வித்திடப்படுவது எது.? இயற்கையான மனிதக் கூறுகள் தங்கியுள்ள இயற்கையின் அழிவு தான். தேசத்தை மறுப்பதும், தேசியத்தை மறுப்பதும், உள்ளடக்க ரீதியாக சந்தை பற்றிய பொருள் வகைப்பட்ட ஒன்று தான்.

 

தேசத்துக்கு பதிலாக பிரதியிடப்படுவதோ உலகமயமாதல். அது தனிமனித ஒண்டிக் கலாச்சாரத்தை, நுகர்வு கலாச்சாரத்தையும், அதை ஒட்டிய ஒற்றைப் பண்பாட்டையும், தனிமனித நலனில் இருந்து முன்னிறுத்துகின்றது. உதாரணமாக அரிசியை எடுத்தால் பாஸ்மதி மட்டும் தான் சந்தையில் இருக்கவேண்டும், ஒரு உருளைக்கிழங்கு வகை தான் இருக்க வேண்டும். இப்படி ஒற்றைத் தன்மையில் மனித உணவே மாற்றப்படுகின்றது. புண்ணாக்கு உணவை உண்ண மக்டோனால் போகவேண்டும். கழிநீரைக் குடிக்க கொக்கோகோலா மட்டும் சார்ந்து இருக்க வேண்டும். இப்படி வகை தொகை தெரியாத தேசிய பொருளாதார அழித்தொழிப்பில் எஞ்சுவது, மிருகப் பண்ணைக்குரிய உலமயமாதலின் நுகர்வு மரபு தான். தேச மக்களின் வாழ்வுக்கு எதிராக வைக்கப்படும் உலகமயமாதலின் எதார்த்தம் இதுதான்.

 

தேசத்தை அழித்து உருவாகும் பூமியில் பல லட்சக்கணக்கான நெல் இனங்கள், ஆயிரக்கணக்காக இருந்த உருளைக் கிழங்கு வகைள், கோதுமை வகைகள், மரக்கறி உணவு வகைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாது அழிக்கப்பட்டு வருகின்றது. இப்படி பற்பல. எங்கு தேசத்தின் உண்மையான குரல்கள் எழுகின்றதோ, அங்கு அவை பாதுகாக்கப்படுகின்றது. மறுபக்கத்தில் எல்லாம் ஒற்றைத்தன்மையாகி, அதுவே இயல்பான ஜனநாயக மறுப்பாகி, சுதந்திரமான மனித உழைப்பு மற்றும் மனித தேர்வுகள் எல்லாம் மறுக்கப்படுகின்றன. முற்போக்கான தேசமும் தேசியமும் தான், குறைந்த பட்சம் இதைப் பாதுகாக்க முனைகின்றது.

 

பி.இரயாகரன்
29.11.2007