யுத்தத்தின் பின் சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள தொடர் இனவொடுமுறை என்பது, மறைக்கவோ மறுக்கவோ முடியாதது. மறுபக்கத்தில் அனைத்தையும் இனவாத சாயம் பூசி, விடுகின்ற தமிழ் இடதுசாரிய அரசியலும் அரங்கேறுகின்றது. யார் அதிகம் இனவாதம் பேசி தமிழ்மக்களைக் கவருவது என்ற போட்டியில் வலதுகளும் இடதுகளும் ஈடுபடுகின்றனர். முன்பு புலிகள் செய்ததையே, இன்று பழைய இடதுசாரிய பெருச்சாளிகள் செய்கின்றனர். தமிழ் இனவாதத்தை உயர்த்துவதன் மூலம், புலிகளை நிரவ முடியும் என்பதுதான் இன்றைய இடதுசாரிய அரசியலாக உள்ளது. சொந்த இடதுசாரிய கருத்துகள் மூலம், வலதுசாரியத்தை வெல்ல முடியாது என்பது இடதுசாரி அரசியல் திரிபாகும். இனவாதத்தைக் கக்குவதன் மூலம், வலதுசாரியத்தை தமதாக்க முடியும் என்பதே, இன்றைய இடது தமிழ்தேசியமாக மாறிவருகின்றது.

அனைத்தையும் இனவாத பூதக்கண்ணாடி ஊடாக பார்த்து, அதை இனவாதமாக காட்டுகின்ற குறுந்தேசிய வக்கிரம்தான், இன்று அனைத்தையும் வரைமுறையின்றி திரிக்கின்றது. வலது இடது வேறுபாடு இன்றி, ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றனர்.

இடதுசாரியம் பேசிய இனியொருவும், உலகத்தமிழ்ச் செய்திகள் இணையம் நடத்தும் முன்னாள் இடதுசாரிகளும், செய்திகளை இனவாதம் ஊடாகவே தருகின்றனர். அண்மைய இரண்டு செய்திகளை எடுப்போம்.

1. செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய உழவு இயந்திரம் சிங்களவனுக்கு பறித்துக்கொடுத்ததாக எழுதிய செய்தி

2.மணியம்தோட்டம் நிலத்தை சிங்களவனுக்கு கொடுக்க அவர்களை குடியெழுப்புவதாக எழுதிய செய்தி

இவ்விரண்டும் இனவாத அடிப்படையில் செய்யப்பட்டதாக கூறுகின்றனர். இதற்கான அடிப்படை தகவல் ஆதாரம் எதுவும் முன்வைக்கப்படாமல், தமிழ் இனவாதம் மூலம் இது அரசியலாக்கப்படுகின்றது. இப்படி ஒருபுறம் இருக்க, இனவாத அடிப்படையில் தான் இது நடந்ததாக எடுத்துக்கொண்டாலும் கூட, அதை இந்த அரசு தான் செய்கின்றதே ஒழிய சிங்கள மக்களல்ல. இங்கு இடதுசாரிய இனவாதம் சிங்கள மக்களையும் அரசையும் ஒன்றாக காட்டி, தமிழ் இனவாதம் இன்று பேசுகின்றது. புலி அரசியல் அன்றும் இன்றும், எதை செய்;ததோ செய்கின்றதோ அதை இவர்களும் செய்கின்றனர். (புலி) வலதுசாரிய தமிழ் இனவாதத்தில் இருந்து, தாங்கள் எப்படி இதில் வேறுபடுகின்றோம் என்ற எந்த அரசியல் அடிப்படையுமின்றி, பேரினவாதம் மீது தமிழ் குறுந்தேசியத்தை கக்குகின்றனர்.

இனியொரு செய்திகளை இனவாதமாக்கி திரித்து எழுதுகின்றது "தமிழர் குடியிருப்புக்கள் அகற்றப்பட்டன : சிங்கள் மக்கள் குடியேற்றம்?" என்கின்றது. தானே கேள்விக்குறியுடன் எழுதும் விடையத்தில், இனவாதத்தைக் காக்கின்றது. ஏன் என்ற கேள்வியின்றி, சிங்கள குடியேற்றத்துக்கு என்ற கேள்வியுடன் இச்செய்தி இனவாதமாக்கப்படுகின்றது. ஒருபுறம் சிங்களப் பேரினவாதம் மறுபக்கம் தமிழ் சமூகம் இனவாதத்தில் மூழ்கியிருப்பதால், இப்படி சொல்வது தான் இன்று குறுகிய அரசியலாகின்றது.

"சிங்கள் மக்கள் குடியேற்றம்?" என்று தனக்கே கேள்விக்குள்ளான விடையத்தின் கீழ், தொடர்ந்து என்ன எழுதுகின்றனர் என்று பாருங்கள். "திடீரென இலங்கையின் பல பாகங்களிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட சிங்கள மக்கள், மணியந்தோட்டம் போன்ற இடங்களில் காணிகள் இருந்தன எனவும், ஆனால் தற்போது தமிழ் மக்கள் அங்கு தங்கியிருப்பதால், யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றம் மட்டும் செய்தால் போதும் எனவும்  கோரினர்." இப்படி இதற்குள் மூன்று ஆதாரமற்ற, இனவாத வக்கிரங்கள்  புகுத்தப்படுகின்றது.

1. "பல பாகங்களிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட சிங்கள மக்கள்." என்கின்றது. யார் ஒருங்கிணைத்து? யார் அனுப்பியது? அந்த மக்கள் அங்கு முன்பு வாழவில்லையா?

2."மணியந்தோட்டம் போன்ற இடங்களில் காணிகள் இருந்தன எனவும்"

3."தற்போது தமிழ் மக்கள் அங்கு தங்கியிருப்பதால், யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றம் மட்டும் செய்தால் போதும் எனவும்"

மூன்று தரவுகளும் ஆதாரமற்றவை, அடிப்படையற்றவை. இனவாத நோக்கில், சம்பவங்களை இணைத்து புனையப்படுகின்றது. வளமான ப+மி என்று இனவாதத்தை உசுப்பேற்ற புனைகின்றனர். தாழ்ந்த சாதிகள் வாழ, உயர்சாதிகள் அனுமதித்த வளமற்ற மணல் கொண்ட ப+மி. இப்படி திரிபுகள் பல. இதன் மேல் தொடர்ந்து எழுதும் இனியொரு "இதே வேளை புலம்பெயர் தமிழர்கள் சிலரின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்ட தமிழ் அமைப்பு ஒன்று சிங்கள மக்கள் அங்கு நீண்ட காலமாக வாழந்தவர்கள் என்றும் அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் மணியம் தோட்டம் பகுதியிலிருந்து தமிழ்க் குடும்பங்கள் இலங்கை அரச படையினரால் இரவோடிரவாக விரட்டியட்டிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன." ஒரு அவதூறின் முழு வடிவத்துடன் இனவாதம் புகுத்தப்படுகின்றது. ஆக  "தமிழ் அமைப்பு ஒன்று சிங்கள மக்கள் அங்கு நீண்ட காலமாக வாழந்தவர்கள் என்று" கூறியதால் "தமிழ்க் குடும்பங்கள் இலங்கை அரச படையினரால் இரவோடிரவாக விரட்டியட்டிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன" என்கின்றனர். அவதூறும் வக்கிரமும் கொட்டுகின்றது. அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும் கோரியது நாங்கள். இப்படி "புலம்பெயர் தமிழர்கள் சிலரின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்ட தமிழ் அமைப்பு" என்பது எம்மை குறித்து, இனவாதம் மூலம் அவதூறு செய்யப்படுகின்றது. நாம் இந்தக் குடியிருப்பு பிரச்சனை தொடர்பாக எழுதிய கட்டுரையை திரித்து, இதற்குள் இனவாதம் புகுத்தப்படுகின்றது. பார்க்க கட்டுரையை  வாழ்ந்த மண்ணில் மீள வாழக் கோரும் சிங்கள மக்களும், அதை மறுக்கும் தமிழ்தேசியமும் யாழ்குடாவில் சிங்கள மக்கள் வாழ்ந்தவர்கள் என்பதும், அவர்கள் மீள குடியேற விரும்புகின்ற  போது, குடியேறும் உரிமை அவர்களுக்கு உண்டு என்பதை ஏற்றுக்கொண்டு, தமிழ்-சிங்கள  இனவாதிகளை தனிமைப்படுத்துவது அவசியமானது. இதை நாம் மட்டும் இன்று கூறும் உண்மையை, இனியொருவின் இடதுசாரி "மார்க்சிய" இனவாதம் எடுத்துக்காட்டுகின்றது.

மீளக் குடியேற விரும்பும் சிங்கள மக்கள் பற்றி, இனியொரு மற்றும் புதிய திசைகளின் அரசியல் நிலைதான் என்ன? பச்சை இனவாதம் தான் அதன் அரசியல். அதுதான் ".. புலம்பெயர் தமிழர்கள் சிலரின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்ட தமிழ் அமைப்பு ஒன்று சிங்கள மக்கள் அங்கு நீண்ட காலமாக வாழந்தவர்கள் என்றும் அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது." என்று கூறுகின்றது. இதன் மூலம் அங்கு சிங்கள மக்கள் நீண்டகாலம் வாழவில்லை என்பதும், அந்த மக்களை அங்கு மீளக் குடியேற்ற முடியாது என்பதும் தான், இனியொரு மற்றும் புதிய திசைகளின் இன்றைய இனவாத அரசியல் நிலையாகும்.

தமழ் வலதுசாரியம் கூட இப்படி கூறவில்லை. முதலில் தமிழ்மக்கள் பிறகு என்றுதான் அது கூறுகின்றது. இடதுசாரியமோ குடியேற்றவே கூடாது என்கின்றது. இப்படி புலியை விடவும்,  யார் அதிக தமிழ் இனவாதிகள் என்பதை நிறுவ, தமிழ்மக்களை இனவாத சேற்றில் தள்ளி வெல்வது என்ற போட்டியில், இடதுசாரிய வேசம் தேவைப்படுகின்றது. அது அங்கு நீண்டகாலமாக சிங்கள மக்கள் வாழவில்லை என்றும், மீளக் குடியேற்றக் கூடாது என்றும், எமக்கு எதிராக இனவாதத்தை கையில் எடுத்து முன்னிறுத்துகின்றது.

பி.இரயாகரன்
27.10.2010