வலதுசாரிய தமிழ் தேசியம் எப்போதும் எதிரிக்கு ஆள்பிடித்து கொடுக்கின்றது. அதன் எதிர்ப்பு அரசியல் இதைத்தாண்டி மக்கள் சார்ந்ததல்ல. கலை கலைக்காக என்று எழுதும், எந்த சமூக உணர்வுமற்ற எழுத்தாளர் கூட்டத்தை, அரசின் பக்கம் செல்லுமாறு இன்று வலிந்து தூண்டுகின்றது. வலதுசாரி தமிழ் தேசியம், குறிப்பாக புலிகள் கடந்த காலத்தில் எதைச் செய்தனரோ, அதையே தான் அது தொடருகின்றது.

2011 ஐனவரி மாதம் இலங்கை நடத்தவுள்ள எழுத்தாளர் மாநாடு குறித்து, புலம்பெயர் மற்றும் தமிழகத் தமிழ் தேசியவாதிகள் கட்டமைத்து வெளியிடும் கருத்துகள் தொடர்ந்தும் புலிப் பாணியிலானது. இந்த மாநாடு இலங்கையில் நடப்பதால், அது மகிந்தா அரசின் உதவியுடன் தான் நடப்பதாக கூறுகின்ற அரசியல், ஆதாரமற்றது, வக்கிரமானது. இந்த எல்லைக்குள், குறுகிய தமிழ் தேசிய எதிர்ப்பு அரசியல் செய்யப்படுகின்றது.

மகிந்த அரசு பணம் கொடுத்து இது நடப்பதாக வலதுசாரிய எஸ்.பொவால் முத்திரை குத்தப்பட்ட நிலையில், இந்த சர்ச்சை ஆரம்பமானது. இதற்கு காதும் மூக்கும் வைத்து,  மகிந்த அரசின் தமிழ் எடுபிடிகளின் துணையுடன் நடப்பதாக வேறு கூறப்பட்டது. இப்படி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம், இதற்குள் எதிர்ப்பு அரசியல் கட்டப்பட்டது. இதற்கு தமிழ் தேசியம் எந்த ஆதாரத்தையும் இதுவரை முன்வைக்கவில்லை.

இலங்கையில் நடந்தால் அது மகிந்தா அரசின் துணையுடன் தான் என்ற அரசியல் அளவு கோல் கொண்டு, தமிழ்தேசியம் கூச்சல் போடுகின்றது. புலிகள் தம்முடன் அல்லாத அனைவரையும் துரோகியாகவும், அரச எடுபிடிகளாகவும் காட்டி அரசியல் செய்தது  போன்றது தான் இதுவும். புலிகள் தங்கள் இந்த அரசியல் மூலம், அரசுக்கு ஆட்கள் சேர்த்துக் கொடுத்தனர். இதுதான் இந்த எழுத்தாளர் மாநாட்டிக்கு எதிரான அவதூறுகள் மூலம்  நடக்கின்றது.

இந்த எழுத்தாளர்களை அரசின் எடுபிடிகளாக வலிந்து காட்டி, அவர்களை அரசின் பின் தள்ளிவிடுகின்ற தமிழ்தேசியத்தின் வக்கற்ற அரசியலே இங்கு மீண்டும் அரங்கேறுகின்றது.

எழுத்துக்காக எழுத்தாளர்கள், அதாவது கலை கலைக்காக என்ற கூட்டம், சமூகம் பற்றி எந்த அக்கறையுமற்றது. இது அரச, புலி, தேசியம், மக்கள் என்று எதிலும் அக்கறையற்றது.  அன்றும் சரி இன்றும் சரி, எந்த சமூக அக்கறையுமற்ற எழுத்தாளர் கூட்டமாகவே இது இருந்து வந்துள்ளது. இவர்கள் நடத்த உள்ள இந்தக் கூட்டம் கூட, சமூகம் பற்றிய அக்கறையின் பாலானதல்ல. கலை கலைக்காக என்பதுதான் இவர்களின் அரசியல் அளவீடு. இந்த வகையில் தான், இந்த எழுத்தாளர்கள் கூடுகின்றனர். அது இலங்கையில் ஊடகவியலும், எழுத்து சுதந்திரமும் சந்திக்கின்ற அரசியல் நெருக்கடிகள் பற்றி, எந்த சமூக அக்கறையுமற்றது.

இந்த வகையில் இது மறைமுகமாக, மகிந்த அரசுக்கு சார்பான ஒரு அரசியல் விளைவைக் கொடுக்கும். இதுபற்றி அவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது. விமர்சனத்தை இந்த அரசியல் அடிப்படையில் இருந்து தான் முன்வைக்கவேண்டும். இலங்கையில் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரம் இல்லாத நிலையில், இந்த மாநாடு யாருக்காக நடத்தப்படுகின்றது என்ற கேள்வியையும் விமர்சனத்தையும் முன்வைக்கவேண்டும். கலை கலைக்காக என்ற அரசியலை விமர்சிக்க வேண்டும். 

இதற்கு மாறாக மகிந்த அரசிடம் பணம் பெற்ற நடத்துவதாக (ஆதாரமற்ற) கூறுவதன் மூலம், உண்மையில் மகிந்த அரசைத்தான் அது பலப்படுத்துகின்றது. இல்லாத இட்டுக்கட்டிய பொய் மூலம், அவர்களை முத்திரை குத்தி தனிமைப்படுத்தும் அரசியல் நடைமுறை, இவர்களுக்குள் புலியெதிர்ப்பு எழுத்தாளர்களின் ஆதிக்கம் ஏற்படவும் அதேநேரம் உள்ளிருந்து அரசு ஆள் பிடிக்கவும் வழி செய்கின்றது. புலிகள் தாம் அல்லாதவர்களை துரோகி என்று கூறி  கடந்தகாலத்தில் நடத்திய அதே அரசியல் தான், புலி அல்லாதவர்களை அரசின் பின் அணிதிரள வைத்;தது.

இன்று இலங்கையில் நடக்கும் இந்த நிகழ்வையும், மகிந்தா நடத்தும் நிகழ்வாக காட்டுகின்ற தமிழ் குறுந்தேசியவாதம், உண்மையில் ஆதாரமற்ற வெற்றுப் புனைவுகளின் பாலானது. வலதுசாரிய தமிழ்தேசியத்தின் கையாலாகாத்தனத்தில் நின்று, முத்திரை குத்தும் அரசியலாகும்.

நடக்கவுள்ள அந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்கவும், விமர்சிக்கவும் நியாயமான அரசியல் காரணங்கள் உண்டு. அது தமிழ்தேசியம் கட்டமைத்து கூறுகின்ற அடிப்படையில் இருந்தல்ல. மாறாக இலங்கையில் கருத்து எழுத்து பேசு;சு சுதந்திரம் மறுக்கப்பட்ட (தமிழ்-சிங்கள) நிலையில், அங்கு நடக்கின்ற மாநாட்டு உள்ளடக்கம் என்ன என்பதையும், கலை கலைக்காக என்ற சமூக அக்கறையற்ற தன்மைக்கு எதிராகவும் குரல்கொடுக்க முடியும். குறிப்பாக இந்த இரண்டு காரணத்தினால், இலங்கையின் பாசிச சூழல் சர்hந்தும், இது மகிந்த அரசுக்கு சார்பானதாக மாறும் என்ற மறைமுக அரசியல் உள்ளடக்கத்தில் இருந்தும், இதை விமர்சிக்கவும் புறக்கணிக்கவும் முடியும்.

ஆனால் தமிழ்தேசிய கூட்டம் இந்த வகையில் இதை அணுகவில்லை. இந்தக் கூட்டம் என்றும் புலிகள் மறுத்த, கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை எதிர்த்த போராடிய ஒரு கூட்டமல்ல. அதை இன்றுவரை சுயவிமர்சனம் செய்த கூட்டமல்ல. இவர்கள் தான் முத்திரை குத்தி, இதை பிரச்சாரம் செய்கின்றனர். இந்த தமிழ்தேசியத்தின் பின், சந்தர்ப்பவாத அரசியல் தான் முகிழ்ந்து எழுகின்றது.

எழுத்தாளர் மாநாட்டை நடத்துபவர்கள் சமூகத்துக்கு வெளியில் அன்று எந்த ஒரு நிலையில் எழுத்தாளராக இருந்தனரோ, அதே நிலையில்தான் இன்றும் உள்ளனர். அன்றும் சரி இன்றும் சரி, சமூகம் பற்றிய எந்த அக்கறையுமற்றவர்கள். புலிகளும், அரசும் எழுத்துச் சுதந்திரத்தை மறுத்த போது, அதற்காக அவர்கள் அன்று கவலைப்படாதவர்கள். இன்றும் அப்படித்தான். ஆனால் இன்று திடீரென அவர்களை அரசின் எடுபிடிகளாக காட்டி, அரசியல் சாயம் ப+சுவது, அவர்களை வலிந்து அரசின் பக்கம் தள்ளுவது தான். புலியின் அதே அரசியல் இன்று தொடருகின்றது.

வலதுசாரி தமிழ்தேசியம் இதன் பால் கொள்ளும் கருதுகோள்களும் அதன் நோக்கமும், இடதுசாரியத்தின் கருதுகோளும் நோக்கமும் அடிப்படையில் முற்றாக வேறுபட்டது. ஆனால் வலதுசாரியத்தின் கருதுகோள் மேல் இடதுசாரியம் ஊர்வது தான், தேசிய அரசியலாக தொடருகின்றது. வலதுசாரி கருதுகோளை, இடதுசாரியம் கேள்விக்குள்ளாக்குவதில்லை. இதன் பின்னணியில் தான், மூடிமறைத்த இடது சந்தர்ப்பவாத தேசியவாத அரசியலும் கூட முகிழ்கின்றது.

பி.இரயாகரன்
18.10.2010