சட்டம், நீதி, ஒழுங்கு என்பது, மக்கள் சார்ந்ததல்ல, அதிகாரம், பணப்பலம், செல்வாக்கு முதல் வர்க்கம், இனம், அரசியல் என்பதற்கு உட்பட்டது என்பதையே, இந்த நிகழ்வு மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது.

அண்மையில் வெளியாகிய செய்தி ஒன்று "வவுனியா அருணாச்சலம் முகாமில் தங்கியிருந்தபோது இராணுவத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்த இராணுவவீரர் ஒருவர் என்னுடன் உடலுறவு கொள்ளுமாறும் இல்லையெனில் எனது குடும்பத்தையே அழித்து விடுவேன் எனவும் என்னைப் பயமுறுத்தினார். புலனாய்வாளரின் மிரட்டலுக்கு அஞ்சி அடிபணிந்ததால் நான் ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டியநிலை ஏற்பட்டது." இப்படி திருமணமாகாத 20 வயது பெண் எப்படி குழந்தைக்கு தாயானாள் என்ற சமூகக் கண்காணிப்பு பொதுத் தளத்தில் தான், நடந்த கொடுமை வெளிவருகின்றது. அந்தப் பெண் "அந்தக் குழந்தையை வளர்க்க தனக்கு விருப்பமில்லையென்றும் அதனைச் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்க விரும்புவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலைக்கும் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்துக்கும் அப்பெண் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்த" போது இந்தச் சம்பவம் வெளி உலகுக்கு முன் வருகின்றது. இதற்கு முன் இதை தெரிந்திருந்தும்,  சொல்ல முடியாது. நடந்ததைச் சொல்லச் சாட்சியங்கள் இருப்பதில்லை. சொன்னால் அதை அவர் நிறுவவேண்டும், இல்லையென்றால் தண்டனை.

இந்தப் பெண்ணின் கதை போன்று எத்தனையோ சம்பவங்கள், நடந்தன, நடக்கின்றன. இந்த பொது உண்மைகளை சமூகத்தின் முன் கொண்டு வந்தால், அதை அவதூறு என்றும். பொய் என்றும் பூச்சூடுகின்ற அதேகணம், செய்தியைக் கொண்டு வருபவர்களையே குற்றவாளியாக்குகின்ற அரசியல் எதார்த்தம் இன்று எங்கும் புரையோடிக் காணப்படுகின்றது. குற்றங்களின் மூலம் என்பது கட்டைப்பஞ்சாயத்து எல்லைக்குள், சாட்சியங்களற்ற ஒரு இணக்கப்பாட்டுக்குள், பாதிக்கப்பட்ட தரப்பின் உடன்பாட்டுக்குள் தான் திணிக்கப்படுகின்றன.

இதுபோன்ற திட்டமிட்ட குற்றங்கள், பாதிக்கப்பட்டவர்களின் உடன்பாட்டுக்குள் வைத்துத்தான் செய்யப்படுகின்றது. அந்த எல்லைக்குள் தான் மூடிமறைக்கப்படுகின்றது. இதை சமூகத்தின் முன்; கொண்டுவருவது என்பது, சூழல்நிலை சார்ந்ததாக, கிடைக்கின்ற குறைந்தபட்ச தகவல்களை அடிப்படையாக கொண்டு தான் சாத்தியம். ஆனால் அம்பலப்படுத்தியவர்களை மிக இலகுவாக குற்றவாளியாக நிறுத்தி விடுகின்றனர். அரசியல் சாயம் முதல் நீதிமன்றங்கள் வரை அதற்கு உதவுகின்றது.

அண்மையில் பணம் அறவிட்ட ஒரு கட்டைப்பஞ்சாயத்து முறையொன்றை பற்றிய குறைந்தபட்ச தகவலுடன் நாம் வெளிக்கொண்டு வந்த போது, அதை அரசியல் சாயமடித்து "தனிப்பட்ட முரண்பாடாக" திரித்தவர்கள், அதை "அவதூது பரப்பும்" செய்தியாக புரட்டிப் போட்டனர்.  "அவதூறு பரப்பும்" செய்தியாகிய அரசியல் தீர்ப்பு, கட்டைப் பஞ்சாயத்து செய்தவர்களுடன் சேர்ந்து அவர்கள் எடுத்த ஒரு வழிமுறையை ஏற்கக் கோரியவர்கள், அதை ஏற்க மறுத்ததும் அதை "அவதூது பரப்பும்" செய்தியாக அதற்கு அரசியல் விளக்கம் கொடுத்தனர்.  

இப்படி எங்கும் குற்றங்கள் சாட்சியமற்ற, பாதிக்கப்பட்டவரின் இணக்கப்பாட்டுடன் இன்று அரங்கேறுகின்றது. குற்றங்கள் கூட இந்த அமைப்பின் எல்லைக்குள், சட்டத்தின்  வரையறைக்குள், சமூக பொது ஒழுங்கின் எல்லைக்குள் தகவமைத்துக் கொள்கின்றது. சாட்சிகளற்ற, முறைபாடற்ற ஒன்றாக, சமூகத்தில் குற்றங்கள் புரையோடி நிற்கின்றது. கடத்தல், கப்பம், பழிவாங்கல் முதல் பாலியல் வன்முறை வரை, அவை இணக்கமாக இணங்கி உடன்பட வைக்கும் எல்லைக்குள் இவை பொதுவில் இன்று அரங்கேறுகின்றது. குற்றங்கள் தகவமைந்த சமூக ஒழுங்குக்குள், தன்னை நியாயப்படுத்தி நிலைநிறுத்துகின்றது.

சூழல் சார்ந்தும், சில தரவுகளைக் கொண்டும் இதை அம்பலப்படுத்த முனையும் போது, அம்பலப்படுத்தியவர் சந்திக்கும் விளைவு பாரதூரமானதாக உள்ளது. படுகொலை செய்யப்படுவது முதல் அதில் அரசியல் கலந்துவிட்டால் அதை "அவதூறு" என்று சொல்லும் எல்லை வரை, ஒரு விரிவான அரசியல் தளத்தில் இந்தக் குற்றங்கள் எங்கும் மூடிமறைத்து அரங்கேறுகின்றது.

நடந்த குற்றத்தின் மேலான சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடுகின்றது. கிடைக்கின்ற சிறு துரும்பில் இருந்துதான், இவை அம்பலமாக்கப்படுகின்றது. இன்று அம்பலப்படுத்தல்கள் பெரும்பாலானவை, இந்த அடிப்படையில் தான் வெளியுலகுக்கு முன் வருகின்றது. இதை சம்பந்தபட்ட தரப்பு மூடிமறைக்க, இதை அம்பலப்படுத்திய தரப்பு மீதான எதிர்வினையை அவர்களின் கிரிமினல் மூளைக்கு ஏற்ப பல தளத்தில் ஆற்றுகின்றனர்.

இங்கு குறித்த பெண் இராணுவப் புலானாய்வு ஆணினால் பாலியல் வன்முறைக்கு உள்ளானது என்பது, சூழல் சார்ந்த ஒரு பொது உண்மை. இதை முன் கூட்டியே தகவலாக தெரிந்து கொண்டு எழுதினால் அதற்கு சாட்சியங்கள் கோருவது அபத்தம். இதைக் குற்றமாக சாட்டியவர் நிறுவ வேண்டும் என்பது அதைவிட அபத்;தம். இன்று குற்றங்கள் இப்படித்தான் தன்னை தக்கவைக்கின்றது.

இங்கு குறித்த பெண் கூட சூழலைக் காட்டியும், சாட்சிகளற்ற இந்தக் குற்றத்தை நிறுவுவது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாது. இப்;படி எத்தனையோ பெண்களுக்கு நடந்தது, நடக்கின்றது.

இன்று வெளியுலகுக்கு முன் குறித்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்பது ஒரு செய்தியாகியுள்ளது. எப்படி? அந்த வன்முறை மூலம் பிறந்த ஒரு குழந்தை தான், இதை அம்பலமாக்கியிருக்கின்றது. இனி இதன் மேல் பிரேத பரிசோதனை நடக்கும். குழந்தை மரபணு முதல் அனைத்து கூத்தும் நடக்கும். இங்கு இந்தப் பாலியல் வன்முறை, கட்டைப்பஞ்சாயத்து மூலம் நடந்திருகின்றது. இந்தப் பெண் ஏன் இதற்கு உடன்பட்டாள்? பெண் என்றால், இந்த ஆணாதிக்க அமைப்பில் உடன்பட வேண்டும் என்பது ஒரு பொது நியதி. அதுவும் அதிகாரம், பணம் இருக்கும் போது, அது அவர்களின் உரிமையாகி தங்கள் மேலாண்மையுடன் நடந்தேறுகின்றது. இதை மூடிமறைக்க அரசியல் விளக்கம் சொல்லி, இதை திசைதிருப்ப ஆயிரம் காரணங்கள் இல்லாமல் போய்விடுமா!? உதாரணத்துக்கு 

1. அந்தப் பெண் புலி என்பதால், இதை மறைக்க விரும்பி இதற்கு உடன்பட்டார்     

2. தன் குடும்பம் அல்லது குடும்ப உறுப்பினர் புலி என்பதால், அதை பாதுகாக்க விரும்பி உடன்பட்டார்

3. ஏன் இதை முன் கூட்டியே முறையிடவில்லை, ஆகவே விரும்பியே உறவு கொண்டார்.

4. அந்தப் பெண் இதை முறையிடவில்லை. அரசு எதிர்ப்பாளர்கள், தமிழர்கள் தான் இதை ஊதிப் பெருக்கிவிட்டனர்

இப்படி இன்னும் எத்தனையோ காரணத்தை வைத்து, இது பூசி மெழுகப்படலாம். பாதிக்கப்பட்டவரே (குற்றம் சாட்டியவரே) நிறுவ வேண்டும் என்பது, இங்கு அபத்தமாக போகின்றது. இது வெளியில் அம்பலமான பின் தான், பாதிக்கப்பட்ட பெண் பாத்திரம் முன்னிலைக்கு வருகின்றது. நாளை இந்தப் பெண் இதில் பின்வாங்கினால், இதை முதலில் எழுதியவர்கள் நிறுவ வேண்டும் என்று கூறி தண்டிக்கப்படலாம்.

இதை குற்றம் நடந்த காலத்தில் ஒரு செய்தியாக முன் கூட்டியே எழுதியிருந்தால், அதை அவரே நிறுவ வேண்டும் என்று கோரித் தண்டித்தால் உண்மைகள் பொய்யாகிவிடுவதில்லை. உண்மையை கொண்டு வந்தவர்களை, குற்றவாளியாக்குகின்ற கூத்தை நாம் பார்க்கின்றோம். அரசியல் முதல் நீதி மன்றங்ங்கள் வரை இதைத்தான் இன்று செய்கின்றது. 

பாதிக்கப்பட்ட பெண்கள் தன் சொந்த சாட்சியங்கள் மூலம் கூட இதை நிறுவ முடியாத எல்லைக்குள் தான், இவை சமூகத்தில் புரையோடிக் காணப்படுகின்றது. இது கிரிமினல் மயமானது. கட்டைப் பஞ்சாயத்து செய்யும் முறையில் நடைபெறும் கப்பம், கடத்தல், கொலை, பாலியல் வன்முறைகள் … அனைத்தும், இன்று தங்களை குற்றமற்றதாக நிறுவமுனையும் எல்லைக்குள் வைத்துத்தான் அரங்கேறுகின்றது. அவர்களே சாட்சியங்களை முன் கூட்டியே திட்டமிட்டு தயாரிக்கின்றனர்.

இதை சமூகத்தின் முன் வெளிக் கொண்டுவருவது என்பது, நடந்ததை படம் பிடித்து வைத்துக் கொண்ட சாட்சியங்கள் மூலம்தான் செய்ய வேண்டும் என்பது, அரசியலாகும் போது இதுவே சட்டம் நீதியாகும் போது, இவை சமூகத்தில் புரையோடிவிடுகின்றது.    

பொலிஸ் நிலையத்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் ஒரு பெண், இதை பல்வேறு காரணத்தினால் வெளியில் சொல்வதை மறைக்கும் போது, அதை ஒரு தகவலாக தெரிந்து வெளியிட்டால் அது குற்றமா? இது போன்ற கடந்தகால அடிப்படைகளை வைத்து, குற்றஞ்சாட்டினால் அது குற்றமா? இதைக் குற்றம் சாட்டியவர் தான் நிருபிக்க வேண்டும் என்று கூறினால், அது பொய்யாகிவிடுமா? இருக்கின்ற முதல் தரவுகளை அடிப்படையாக கொண்டு தான், அதை விசாரணை செய்ய வேண்டும். இதற்கு இது போன்ற குற்றங்கள் பொதுவில் நடக்கின்றதா என்ற அரசியல் மூலத்தை அடிப்படையாகக் கொண்டுதான் தொடங்க வேண்டும். சம்மந்தப்பட்டவர்கள் கடந்தகாலத்தில் இது போன்றவற்றில் ஈடுபட்டார்களா என்ன பொது விசாரணையில் இருந்து, இதில் என்ன நடந்தது என்பதை ஆராய வேண்டும். இது போன்ற குற்றங்கள் வெளிவரும் போது, குறைந்தபட்ச ஆதாரங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் வெளிவருகின்றது. 

அண்மையில் நடக்கும் வழக்கு ஒன்று. வெள்ளைக் கொடியுடன் புலிகள் சரணடைந்தது என்பது பொது உண்மையாக இருக்க, அதை "அவதூறு" என்று கூறி சரத்பொன்சேகா மீது முன் கூட்யே தீர்ப்பு எழுதி வைத்துக் கொண்டு ஒரு வழக்கு நடக்;கின்றது. இதனால் அப்படி அது நடக்கவில்லை என்பது, உண்மையாகிவிடுமா? இருக்கின்ற தகவல்கள் பொய்யானதா? வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை அரசு கொன்றனர் என்பதை குற்றம் சாட்டுபவர் தான் நிரூபிக்க வேண்டும் என்பது தான் இன்றைய வழக்கு. அதை அவர் நிறுவ முடியாது. பழிவாங்கும் அரசியல் அவரை இதில் குற்றவாளியாக்குகின்றது. இந்த நிலையில் அவர் குற்றமிழைத்தவர்களின் எல்லைக்குள் நின்று, தான் அப்படி எதுவும் கூறவில்லை என்று இன்று மறுக்கின்றார். இதன் மூலம் தான் அவர் குற்றஞ் சாட்டிய ஒரு உண்மையில் இருந்து, அதை "அவதூறு" என்று கூறுகின்ற அரசியல் பிரசாரத்தில் இருந்து, மீளமுடியும் என்ற நிலை. சரபொன்சேகா அரசுக்கு எதிராக "அவதூறு" செய்தார் என்பதே வழக்கு. வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொன்றனர் என்பதை அவர் நிறுவா விட்;டால், சிறை என்பது இங்கு தீர்ப்பாக உள்ளது. சரத்பொன்சேகாவே நடந்த உண்மையை ஆதாரங்களுடன் நிறுவ முடியாது. நடந்த சூழல், கிடைக்கின்ற முதல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை செய்வது கிடையாது. மாறாக நடந்ததை சொன்னவர், அதை நிறுவ வேண்டும் என்பது இங்கு முதலில் தீர்ப்பாகின்றது. இதற்குள் தண்டிக்கப்படுகின்றனர். இச் சம்பவம் பற்றி பொதுவான பலதரப்பு வாக்குமூலங்கள், அங்கு என்ன நடந்து என்பதை தெளிவாக்குகின்றது. ஆனால் இதற்கு வெளியில்தான் தீர்ப்புகள் வருகின்றது. நடந்ததை விசாரணை செய்வது கிடையாது. நடந்த உள்ளடக்கத்தை தமக்கு ஏற்ப சுருக்கி, தமது வரைமுறைக்குள் திணித்து, அதற்குள் தீர்ப்புகள் புனையப்படுகின்றது.

குறித்த பெண் மட்டுமல்ல, இது போன்ற சம்பவங்கள் நூற்றுக்கணக்கில் நடத்தது என்பது ஒரு பொதுவான உண்மை. இதை அரச புலனாய்வுப் பிரிவும் தமிழ் குழுக்களைச் சேர்ந்தவர்களும் செய்தார்கள் என்று நாம் பொதுவில் எழுதினால், அது அவதூறு என்றும், அரசைப் பற்றிய இழிவுபடுத்தல் என்றும் கூறினால், அந்த உண்மை பொய்யாகிவிடுமா? இதற்காக நாம் தண்டிக்கப்பட்டால், இது இல்லை என்று ஆகிவிடுமா!?

பொதுச் சூழலும், பொது உண்மையும், சம்மந்தப்பட்டவர்களின் கடந்தகால நடத்தைகள் சார்ந்து தான், இதை அணுகவேண்டும். இந்தக் குற்றங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்படுபவை.  குற்றத்தின் சிறு மூலத்தில் இருந்து தான் விசாரணையை தொடங்க வேண்டும். குற்றத்தின் சிறு மூலத்தை அடிப்படையாக கொண்டு, இதை வெளிக்கொண்டு வந்தவர்களை குற்றவாளியாக்குகின்ற அரசியல் முதல் நீதிமன்றங்கள் வரை வழங்கும் தீர்ப்புகள், நடந்ததை பொய்யாக்கிவிடாது. கிடைத்த தகவல்கள் போதுமானதல்ல என்றால், அதை குறுக்கு விசாரணை  செய்ய விரும்பாத அரசியல் எல்லையில் நடந்த உண்மைகளைப் பொய்யாக்கி தீர்ப்புக்குள்ளாகின்றது. இதுதான் இன்று அரசியல் முதல் நீதிமன்றங்கள் என்று பல தளத்தில் அரங்கேறுகின்றது.

பி.இரயாகரன்
10.10.2010