எங்கட ஊரில் ஒரு மனிதம் தனது செயல்பாடு ஒன்றை நிகழ்த்தும் போது, அச் செயலை  பாவித்து தன்னை மற்றவர் மத்தியில் பிரபலமாக்குவதற்கு முயற்சிப்பதை, "போட்டாராம்  காத்திகேசு கூத்து, இடுப்பில சலங்கை  கட்டி" என்ற சொற்பதம் மூலம் விமர்சிப்பர்.  கூத்து ஆடும்போது காலில்  சலங்கை, கட்டுவது தான் வழமை. அப்போது தான் ஆட்டத்தின்   லயதிற்கேற்ப சலங்கை ஒலி எழுப்பும்.  அதற்கு மாறாக    இடிப்பில் சலங்கை   கட்டினால் சலங்கையின் ஒலி ஆட்டத்திற்கேற்ற ஒலி எழுப்பாது. லயமும் தாளமும் முரண்படும் போது கூத்து சிறக்காது. ஆனால் அதை ஆடுபவர் இதை திட்டமிட்ட முறையில் வழமைக்கு மாறாக லயமும் தாளமும் முரண்படும் வகையில் இடிப்பில சதங்கை கட்டினால், கூத்து பார்ப்பவர்  கவனம் கூத்தில் இருக்காது, அதை நடிப்பவன் மீது திரும்பும். இதன் மூலம் தன்னை எவ்வழியிலாவது சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட  முனைபவர், அதை நிறைவேற்றிக் கொள்கிறான். இங்கு கூத்து  ஆடுவது என்ற செயல் ஒரு மனிதம் தன் மீது பார்வையாளரின்   கவனத்தை, மேலதிகமாக ஈர்க்க  பாவிக்கும் கருவியாக  பயன்படுகிறது.

ஆனால் ஒரு மனிதம் கூத்தை காலின் சலங்கை கட்டி, லயமும் தாளமும் ஒன்றிணைய சரியாக ஆடுவதன் மூலமும் தன் திறமையை காட்டி புகழ் பெறலாம். ஆனால் அதற்கு ஆழ்ந்த பயிற்சியும், கடுமையான உழைப்பும் தேவை. குறுகிய காலத்தில் புகழ் பெறவோ, பார்வையாளரின் கவனத்தை தன் மீது திருப்பவோ முடியாது. ஆகவோ இடுப்பில் சலங்கை கட்டுவதென்பது, ஒரு குறுக்குவழி. புகழ்பெற முடியாவிட்டாலும் எல்லோரின் கவனத்தையும் ஈர்க்க முடியும்.

தனிமனித தேவைகளும் அரசியல் கூத்தும்

இதேபோன்று இன்று புலம்பெயர் தமிழ் அரசியல் தளத்தில் மார்க்சிச தத்துவம், புரட்சிகர அரசியல் இயக்க உருவாக்கம், இலக்கியம், பெண்ணுரிமை போராட்டம் போன்ற சமூக மாற்றதிற்கான முன்னெடுப்புகளை   குறுக்குவழியில் புகழ், பணம், பதவி, கவுரவம், சமூக அந்தஸ்து, சமுகத்தின் கவனம் போன்றவற்றை பெற்றுக்கொள்ள தனிமனிதங்களாலும், சிறுகுழுக்களாலும் தவறாக பாவிக்கப்படுகிறது.

புலிகளின் அழிவுக்குப் பின்னான இந்தத் திடீர்  அரசியல் கூத்தின் உள்ளடக்கத்தை கீழ்கண்டவாறு வகுக்கலாம்.

1. குறுகிய காலத்தில் ஒரு இரகசிய இயக்கத்தை கட்டுவதாக பாவ்லா காட்டுதல்

2. எந்தவித விமர்சனத்திற்கும் உட்படுத்தாமல் எல்லாவகையான ஊடக தளங்களையும், பாவித்து தனிமனிதர்கள், தமது இருப்பை வெளிப்படுத்த முயற்சிப்பது.

3. ”தத்துவரீதியாக வளராதவர்கள்”, ”அடிப்படைவாதிகள்” என சிலரை முத்திரை குத்தி வில்லன்களாக காட்டுவதன் மூலம்; தம்மை கதாநாயகர்களாக வெளிச்சம் போட்டு காட்டுதல்.

4. அதே போன்று  புலிகளின் எச்சசொச்ச புலிப்பினாமி "முற்போக்குகளை"  பாவித்து இலங்கையின் மூத்த புரட்சியாளர்கள், மரணித்த இடதுசாரி தலைவர்கள் மீது  அடிப்படை இன்றி, விமர்சனம் என்ற பெயரில் தூற்றுதல்

5. மார்க்சியத்திரிபுகளை நவீனசிந்தனை என்ற பெயரில் பிரச்சாரம் செய்தல்

6. பெண்ணியம் என்ற பெயரில் பூர்சூவா வர்க்க பெண்ணியசிந்தனையின் சீரழிந்த கோசங்களை பாட்டாளி வர்க்கப் பெண்ணியம் என்ற பெயரில் பறைசாற்றுதல்.

7. புலியுடன் இறந்துபோன தமிழ் குறுந்தேசிய வெறியை, இந்திய இடதுகளுடன் சேர்ந்து இடதுசாரி வர்ணம் பூசி நவீன தேசியவாதிகளாக வலம் வரல்.

இப்போக்கை விளங்கப்படுத்த நல்ல உதாரணம் கடந்த சில வாரங்களாக இணையத்தளங்களில் விவாதிக்கப்படும் கடத்தல் விவகாரம்.

ஆள்கடத்தலும், பணம்பறிப்பும், தீர்ப்பும்

இக்கடத்தல்  விவகார நாடகத்தில் இப்போது நடைபெறுவது தீர்ப்பு வழங்கும் காட்சியாகும்.  இந்தியாவில் மார்க்சிய இயக்கமான மக்கள் கலை இலக்கிய கழகம், (மகஇக) இலங்கை சேர்ந்த குகநாதனை கடத்தி பணம்  வசூலித்ததாக அறியப்பட்ட நாவலன், அருள்எழிலன்,  அருள்செழியன் ஆகியோர் குற்றமற்றவர்கள் என தனது அறிக்கையில் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அவர்களின் தீர்ப்பில்:

"நாவலன், அருள் எழிலன், பிறகு அருள் செழியன் ஆகியோர் எங்களது தோழர்களைத் தொடர்பு கொண்டு நடந்த விசயங்கள் குறித்த தமது விளக்கத்தை அளித்தனர். அவர்களது விளக்கங்கள் மற்றும் தமிழரங்கம், தேசம்நெற்றில் வெளியாகியிருக்கும் கட்டுரைகள் ஆகியவற்றை பரிசீலித்ததன் அடிப்படையில், நாவலன், அருள் எழிலன் ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுளை நாங்கள் நிராகரிக்கிறோம" என்று கூறுகின்றனர்.

மேலும் தனது தீர்ப்பில் மகஇக இதை புலம்பெயர் தளத்தில் அம்பலப்படுத்திய  ராஜாஹரன், மற்றும் ஜெயபாலனை இந்தியாவுக்கு விசாரணைக்கு வருமாறும், இவர்களுடன் ராஜாஹரன் குகனாதனையும் கூட்டி வரவேண்டும் என்று கீழ்கண்டவாறு  தெரிவித்திருந்தது.

"எமது தரப்பில் நாவலன், அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோரிடம் இதனைக் கூறிவிட்டோம். குற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் சென்னை நகரத்தில் ஒரு பகிரங்க விசாரணைக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.
..............குகநாதனை அழைத்து வரவேண்டியது, அவரது குற்றச்சாட்டை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கிய இரயாகரனின் பொறுப்பு."

இந்த பெரியண்ணன் தனமான அழைப்புக்கும் தீர்ப்புக்கும் இடையில் "எல்லோர் மீதும் எல்லோரும் காறி உமிழ்ந்து கொள்ளும் இத்தகைய விசாரணை முறையிலிருந்து புலம்பெயர் தமிழ் மக்களின் இணைய உலகத்தை விடுவிப்பதற்கான சிறிய முயற்சியாகவும் நாங்கள் தலையிடுகிறோம். அங்கே காறி உமிழ்ந்த எச்சில் எங்கள் மீதும் பட்டுத் தெறிக்கின்ற காரணத்தினாலும் தலையிடுகிறோம்." என்றும் தமது தலையீட்டுக்கான  புரட்சிகர காரணத்தை கூறுகிறது மகஇக. இதற்கு ஜெயபாலன் பதிலளிக்கவில்லை.

ஆனால் ராஜாஹரன்; இந்தக் கடத்தல் நாடகத்தில் நாவலனும் ஏதோ விதத்தில் பங்ககெடுத்துள்ளார்  என்றும், அதை நாவலனும், அக்கடத்தலில் பங்கு கொண்டோரும் பகிரங்கமாக அவர்கள் எழுதிய கட்டுரைகளில் உறுதிப்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்தார். அத்துடன் தான் இந்தியா வர முடியாதநிலை தெரிந்திருந்தும் மகஇக இவ்வாறு அழைப்புவிடுவது யதார்த்த சூழ்நிலைக்கு மாறான "தன்னிச்சையான எம் அபிப்பிராயமின்றி வரைமுறை மீறிய தீர்ப்பு. நாங்கள் இதில் பங்குபற்றுவதாக இருந்தால் கூட, நான் அங்கு வரமுடியுமா என்ற எதார்த்தத்தை, இந்த விசாரணை அரசியல் கருத்தில் எடுக்கவில்லை" என ராஜாஹரன்  பதிலளித்தார்.

இந்நிலையில் தற்போது மகஇகவின் இரண்டாவது தீர்ப்பு வெளிவந்துள்ளது. அதில் "நேர்மையான முறையில் ஒரு தீர்வை முன்வைத்தோம். அதை ரயாகரன் ஏற்கவில்லை. அவர் தன் சொந்த வழிமுறையைப் பின்பற்றட்டும். அவரிடருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம்." என தெரிவித்துள்ளனர்.

மகஇகவும், தனிமனிதர்களும் புரட்சி அரசியலும்

இந்தக் கடத்தல் விவகாரத்தில் நடந்துள்ளதென்னவென்றால், இந்தியாவை சேர்ந்த மக்கள் பேரியக்கமான மகஇக, தனிமனிதர்களான அருள் சகோதரர்கள்; குகனாதனிடமிருந்து பணத்தைப் பெற இந்தியப் போலிசின் உதவியுடனும் நாவலன் மற்றும் அசோக் உதவியுடனும் நடத்திய தர்பாரை நியாயப்படுத்தி அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என அவர்களுக்கு  பகிரங்க அங்கீகாரம் கொடுத்ததுடன், இதை அம்பலப்படுத்திய ராஜஹரன் உடன் தமக்கு இனி எது வித உறவுமில்லை என அறிவித்துள்ளனர்.

நான் ஒரு சாராசரி தமிழ் பேசும் மனிதன் என்ற அளவில் சிலவற்றை விளங்கி கொள்ள முடிந்தாலும், இந்தியாவை சேர்ந்த மக்கள் பேரியக்கமான மகஇக ஏன் சில தனிநபர்களுக்கு வக்காலத்து வாங்கியபடி, தம்முடன் நீண்ட கால உறவில் இருந்த மற்றுமொரு தனிமனிதருடன் பகிரங்கமாக உறவை முறித்து கொள்கிறது என்ற விபரத்தையும், அதன் உள்ளடக்கத்தையும் என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை.

ரஜாவாக இருந்தால் என்ன, நாவலனாக இருந்தால் என்ன இந்த தனிமனிதர்கள் ஒரு மாபெரும் இயக்கம் தலையிடும் அளவுக்கு என்ன முக்கியமானவர்களோ??? எனக்கு தெரிந்த தற்போதைய இலங்கை அரசியல் சூழ்நிலையில்  தனிமனிதன்  ராஜஹரன் எந்தவிதத்திலும்  முக்கியமான ஒருவரல்ல. அவரது முக்கியத்துவம் அவர் சார்ந்த அரசியல் நடத்தை, அதன் அடிப்படையிலான தனிமனித வாழ்வு, இவையிரண்டும் இணைந்த கட்சி அல்லது அமைப்பு சார்ந்த செயற்பாடு போன்றவை ஊடாகவே வெளிப்படுகின்றது. இதன் அடிப்படையில் அரசியல் நடத்தை, அதன் அடிப்படையிலான தனிமனித வாழ்வு, இவையிரண்டும் இணைந்த கட்சி அல்லது அமைப்பு சார்ந்த செயற்பாடு போன்றவற்றில் அவர் என்.எல்.எப்.ரி யில் இருந்தகாலத்தில் இருந்து இன்றுவரை இடதுசாரி அரசியல் தர்மத்துக்கு தக்கதாகவே நடந்து வருகிறார்.

ரஜாவை சேர்ப்பதும், விலகுவதும் மகஇகவின் தெரிவு. ஆனால் ராஜஹரனை தமது அரசியல் உறவில் இருந்து விலக்கி விட்டோம் என மகஇக சொன்னாலும், யதார்த்தத்தில் இதன் அர்த்தம், வேலைத் திட்டத்தில் செயற்படும் பல தோழர்களையும், வளர்ந்து வரும் ஒரு இடதுசாரி முன்னணியையும் அரசியல் ரீதியாக வெட்டி விடும் வேலையையே மகஇக செய்துள்ளது. ஆனால் நாவலனின் செயல்பாட்டை அப்படி கூற முடியாது.

இலங்கையில் அவர் சார்ந்த அரசியல், சமூக தனிமனித நடத்தையை, விட்டு விட்டு புலத்தில் எவ்வாறு அவர் அரசியல் நடத்தை, அதன் அடிப்படையிலான தனிமனித வாழ்வு, இவையிரண்டும் இணைந்த கட்சி அல்லது அமைப்பு சார்ந்த செயற்பாடு இருந்து வருகிறது என்று பார்த்தால், நான் ஆரம்பத்தில் எழுதியது போல இடுப்பில் சலங்கைகளை கட்டி கூத்தாடுபவன்  நிலை போலவே உள்ளது.  இதன் அடிப்படையில் பலகாலமாக அவர் மீது ஆதாரத்துடன் கூடிய விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தன்னை ஜனநாயகவாதி என்றும், புதிய அமைப்பை உருவாக்கி இலங்கையில் தேசிய மற்றும் வர்க்க விடுதலையை பெற போராடுவதாகவும், கடந்த இருவருடங்களாக எழுத்து மூலமும்; ரேடியோ, தொலைக்காட்சி மூலமும் தன்னை பிரபலப்படுத்திய நாவலனை பற்றி புலம்பெயர்ந்த மக்களாகிய நாங்களும், எமது இலங்கை உறவுகளும் தெரிந்திருக்க வேண்டுமென்பது தவறான எதிர்பார்ப்பல்ல.

ஒரு சமூக இயக்கத்துக்கு தனிநபர்கள் தம்மை முக்கியமானவர்கள் என காட்டியபடி சமூக தளத்தில் வலம்  வரும்போது அவர்கள் பற்றி மக்களும் சமூகமும் கட்டாயம்  தெரிந்திருக்க   வேண்டுமென்பது  குறைந்த பட்ச  ஜனநாயக விதி.

இதன் அடிப்படையில் தமிழ்அரங்கத்தில், ராஜஹரன் இந்த கடத்தல் விவகாரத்தை வெளி கொணர்ந்தது தவறல்ல.

ராஜஹரன் பல தடவைகள் இலங்கை அரசியல்தளத்தில் இயங்கியவர்கள் சிலரை பகிரங்கமாக விமர்சித்துள்ளார். அப்போதெல்லாம்  காரசாரமான விமர்சனங்கள், அவதூறுகள் கலந்த தாக்குதல்கள் அவர் மீது நிகழ்த்தப்பட்டது. முக்கியமாக தனிமனிதர்களை அவர் விமர்சிக்கிறார் என்ற விமர்சனம் அவர் மீது  செய்யப்ப்பட்டது. அதற்கு அவர் இன்றைய இலங்கை தமிழ்  அரசியல் சூழ்நிலை பலம் வாய்ந்த அமைப்புகள் இல்லாத நிலையில் பணம், பதவி, கல்வி, சமுக அந்தஸ்தை கொண்ட தனிநபர்களாலேயே தீர்மானிக்கப்படுவதால்  தனது விமர்சனம் சரியானதென பதில் அளித்தார்.

ஆனால் இன்று “எது தனிப்பட்ட வன்மம்-எது அரசியல் விமரிசனம், எது அம்பலப்படுத்தல்-எது ஆள்காட்டி வேலை, எது புத்தாக்கம்-எது சீர்குலைவு” என்று தெரியாமல் தனிமனிதர்களை அவர் விமர்சிக்கிறார் என்று விமர்சனம் செய்யும் மகஇக, அருள்-சகோதரர்கள், நாவலன் போன்ற  தனிமனிதர்களை பாதுகாக்க முயற்சிகளை செய்துவருகின்றது. ஆகவே இவர்களின்  அரசியல் ரீதியான சமூக செயற்பாடு மகஇக வுக்கு முக்கியமானதென தெரிகின்றது. இதன் அடிப்படையில் ரஜா சொல்வது போன்று இன்றைய இலங்கை தமிழ்அரசியல் சூழ்நிலை பலம்வாய்த்த அமைப்புகள் இல்லாத நிலையில் பணம், பதவி, கல்வி, சமுக அந்தஸ்தை கொண்ட தனிநபர்களாலேயே தீர்மானிக்கப்படுவதால் அவர்கள் மீது விமர்சனம் வைப்பது தவறல்ல.

மேலும் இன்று “ரயாகரனின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அபாண்டமானவை” என்று அருள் எழிலன், அருள் செழியன், சபா நாவலன் ஆகியோர் கூறுகின்றனர். ரயாகரன் எழுப்பியிருப்பது பொய்க்குற்றச்சாட்டு என்றும் அது தங்களது தொழில், சமூக வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு ஆகியவற்றை பாதித்திருக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்"  என்று மகஇக தனது இரண்டாவது தீர்ப்பு மடலில் குறிப்பிட்டுள்ளது. அப்படியாயின் கடந்த பலவருடங்களாகவும், குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாகவும்; ராஜஹரன் வங்கிக்கொள்ளை பணத்தை அபகரித்தார் என்ற அவதூறை பின்னூட்டங்கள் மூலமும்,  புனைபெயரில் கட்டுரைகள் வழியாகவும்; பலர் எழுதிய கட்டுரைகளுக்கு தகவல் வழங்கியாகவும் சபாநாவலன் செயற்பட்டுள்ளார். இதற்கும் ஆதாரம் உள்ளது. அப்படியானால் ராஜஹரனுடன் பல வருட உறவை கொண்டிருத்த மகஇக  ஏன் ராஜஹரன் மீதான நாவலின் அவதூறை தட்டிக் கேட்கவில்லை???

ஒரு சமூகத்தின் பணத்தை, ஒரு இயக்கத்தின் பெயரால் ஒருவர் அபகரிப்பாரானால் ஒப்பீட்டளவில், ஒருவரை சட்டத்திற்கு வெளியில் கடத்தி பணம் வசூலிப்பது பெரிய தவறல்ல.  அப்படி இருக்க அவதூறுக்கு உள்ளாக்கப்பட்ட ராஜாவுடன் மகஇக உறவாடும் போதும், அவ் அவதூறை  காவித்திரிந்த நாவலனுடன் நெருக்கமாக இருந்தபோதும் எந்தவித நடவடிக்கையும் மகஇக எடுக்கவில்லை. நாவலன், வங்கிப் பணம்                           சம்பந்தமான  ராஜஹரன் மீதான அவதூறை, இணையத்திலும், தனிப்பட்ட முறையிலும்  காவிய போது, அன்று பின்னூட்டத்திலும், தனிப்பட்ட உரையாடல்களிலும் , ராஜாவுடன் மகஇக உறவாக இருந்ததாலும், தமிழ் அரங்கம் மகஇகவின் வெளியீடுகளை பிரசுரித்தாலும்   மகஇக பற்றியும் சில புறம்போக்குகள் பின்னூட்டம் விட்டார்கள் அவதூறு கதைத்தார்கள்.  அப்போது ஏன் மகஇக விசாரணைக்கு அழைப்பு விடவில்லை!!!! அப்படியானால் ஒரு சமூகத்தின் பணத்தை, ஒரு இயக்கத்தின் பெயரால் ஒருவர் அபகரித்தார் என்ற விடயத்தை பொருட்படுத்தமுடியாத விடயமாகவும், ஒருவரை சட்டத்திற்கு வெளியில் கடத்தி பணம்  வசூலிப்பது பாரதூரமான விடயமாகவும் பார்க்கின்றதா மகஇக? இதன் அடிப்படையில் தமது கூட்டாளிகளின் மீது கடத்தல் பழி விழுந்துள்ளபடியால், அவர்களை பாதுகாக்க முயல்கின்றதா  மகஇக????

மேலும் "அங்கே காறி உமிழ்ந்த எச்சில் எங்கள் மீதும் பட்டுத் தெறிக்கின்ற காரணத்தினாலும் தலையிடுகிறோம்" எனவும்  தாம் தலையிட்ட காரணத்தை மகஇக கூறுகிறது. ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் தமிழ் அரங்கத்தில் வெளிவந்த ஒரு பின்னூட்டத்தினாலும், தேசத்தில் வெளிவந்த மூன்று பின்னூட்டத்தினாலும் இக்கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படும் நபர்களுக்கு வக்காலத்து வாங்குவதென்பது ஒரு சாதாரண அரசியல் தெரியாத மனிதத்தாலேயே நம்ப முடியாதது. ஆகவே இங்கு மகஇகவின் அரசியல், பொருளாதார, பிரச்சார தேவையே, இவர்கள் இக்கடத்தல் நாடகத்தில் தீர்ப்பு கூறி சில தனி நபர்களை தப்பவைக்க முக்கிய காரணியாக உள்ளது. அதாவது ஒரு வகை சந்தர்ப்பவாத அரசியலே இன்று மகஇகவை இந்த ஆள்கடத்தல் விவகாரத்தில் தலையிட வைத்துள்ளது.

மகஇக வுக்கு புலிகளின் சாவின் முன் ராஜஹரனின் அரசியல் போக்கு சரியாக இருந்தது. அத்துடன் சில தேவைகளுக்கு அவர் தேவைப்பட்டார். ஆனால் இன்று மகஇக வின் இலங்கை சார்ந்த அரசியல்பார்வை மாறியுள்ளது. அதன் அடிப்படையில்; ராஜாவின் நிலைப்பாட்டுடன் மகஇக வின் அரசியல் நிலைப்பாடு முரண்படுகின்றது. அதேவேளை புலியில் அழிவின் பின் அரசியலில் ஸ்டார் அந்தஸ்துடன் இலங்கை அரசியல்மேடைக்கு வந்துள்ள நாவலனின் அரசியல் நிலைப்பாடும், அவரின் "சேவையும்" மகஇக வின் அரசியல் மற்றும் பிரச்சார தேவையை பூர்த்தி செய்வதாகவுள்ளது. இந் நிலையில்   அரசியல்விவாதங்கள் இல்லாமல் ராஜஹரனுடன், அவர் சார்ந்த அமைப்பு, மற்றும் தோழர்களுடன்,  உறவை முறித்துக் கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பமாக இந்தக் கடத்தல் கூத்தை பாவித்துள்ளது மகஇக.

தனி மனிதர்களின் இயங்கு சக்தி இல்லாமல் சமூகம் இயங்க முடியாது. ஆனால்  அந்த  தனிமனிதர்களின் சுயநல தேவைகளே சமூகத்தின் தேவையாக மாற்றப்படும் போது பாசிசத்திற்கு வழிபிறக்கின்றது. செத்துப்போன தமிழ் குறும்தேசியத்தின் கல்லறையில் இருந்து இடதுசாரி முகமூடியுடன் இன்று சில தனிமனிதர்கள் தமது  தேவைகளை பூர்த்தி செய்ய அரசியல் நாடகம் நடத்த தொடங்கியுள்ளனர். இதன் வெளிப்பாடுதான் நாவலன், அருள்-சகோதரர்கள், மகஇக கூட்டு. இந்த கூட்டின் அரசியல் சதிக்கு நமது தேசத்தில் மக்கள் விடுதலையில் நம்பிக்கையுள்ள சக்திகள் அடி பணியாது, ஒன்று சேர்ந்து நிற்பதே இன்றைய தேவை.