எதையும் மறுபரிசீலனை செய்யும் அறிவு,  முடக்கப்பட்டு இருக்கின்றது. நடந்த போராட்டம் மீதான விமர்சனம், சுயவிமர்சனத்தை செய்வது, அரசியல் ரீதியாக தொடர்ந்து மறுக்கப்பட்டு இருக்கின்றது. இதுவே இடதுசாரியம் வரையான பொது அரசியலாக உள்ளது. புலியை விமர்சனம் செய்யாத அரசியல் மூலம், இலங்கை தமிழர்கள் மற்றொரு மாற்று அரசியலை ஒருநாளும் முன்னெடுக்க முடியாது. இந்த வகையில் இலங்கை, தமிழகம் புலம் என்று எங்கும் புலித்தேசிய அரசியல் முதல் அதன் தோல்விகள் வரை, விமர்சனம் செய்வது என்பது அரசியல் ரீதியாக தவறாக காட்டப்பட்டு அவை இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. இதை நாம் மட்டும் கோருவதால், எமது விமர்சனங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலித்தேசிய அரசியல் பார்வையே, தொடர்ந்தும் எங்கு ஆதிக்கம் பெற்ற ஒன்றாக நீடிக்கின்றது. இந்த அனைத்து தளுவிய உண்மை, அரசியல் ரீதியாக தொடர்ந்து புதைக்கப்படுகின்றது.        

 இந்த அரசியல் வங்குரோத்தில் தான், வலதுசாரியம் என்பது எப்போதும் எங்கும் மக்களுக்கு எதிரானது என்பதை அது துணிவுடன் மறுக்கின்றது. இந்த வகையில் தான் தீபச்செல்வன் புலிகளின் மொத்த தவறுகளையும், சிலரின் தவறாக திரித்து நியாயப்படுத்தக் கூறுவதைப் பாருங்கள். "போராட்டத்தில் இணைந்தவர்களில் சிலர் போராட்டத்தைச் சரியாக உணராமல் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களை வைத்து ஈழப் போராட்டத்தை தவறாக மதிப்பிட முடியாது." என்று கூறி புலியை நியாயப்படுத்துகின்றார். எங்கும் எப்போதும் மக்கள் போராட்டம் தவறானதல்ல. புலிகளின் போராட்டம் தான் இங்கு தவறானது. இதை இங்கு திசை திருப்ப முனைகின்றார். மக்கள் போராட்டம், புலிகள் போராட்டம் என்ற இரண்டு, வௌ;வேறு விடையத்தை ஒன்றாக்கி மிதப்பது தான் வலதுசாரிய அரசியல். 

இங்கு அதை மூடிமறைக்க, அம்பலமானவற்றை தனிப்பட்ட "சிலர்" செய்தாகத் திரிக்கின்றார்.  இது  "சிலர்" சார்ந்ததல்ல. இந்த "சிலர்" செய்ததாக கூறுவதுதான் புலிகள் அரசியல். இதற்கு வெளியில் புலிகளின் அரசியல் மற்றும் நடத்தைகள் எதுவும் இருக்கவில்லை. புலிகள் போராட்டம் அழியக் காரணம் என்ன? புலிகள் தான் காரணம். வேறு யாருமல்ல. மற்றவர்கள் போராடுவதை மறுத்து, போராட்டத்தை குத்தகைக்கு எடுத்த அவர்கள் தான் காரணம். இதை நிலைநாட்ட மக்கள் மேல் வன்முறையை ஏவிய புலிகள், சர்வாதிகாரத்தைத் திணித்தனர். பாசிசத்தை தேசியமாக்கினர். இதன் மூலம் தேசிய போராட்டத்தையும், அதன் உள்ளடக்கமான சுயநிர்ணய அரசியல் கூறுகளையே புலிகள் மறுத்தனர். மக்கள் போராட்டம் என்பது, மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அரசியல் எல்லையைக் கொண்டது. வெறுமனே சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து நிற்பதால், மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதில்லை. மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக போராடுவதை அனுமதிக்காது, அதன் மேல் புலிகள் வன்முறையை ஏவினர். (இது அன்றைய அனைத்து பெரிய இயக்கங்களுக்கும் பொருந்தும்.) 

இப்படி மக்கள் போராட்டம் வேறாகவும், புலிகள் போராட்டம் வேறாகவும் மாறியது. இதனால் மக்கள் வேறு, புலிகள் வேறாகவே இருந்து வந்தனர். புலிகள் என்றும் மக்களாகவில்லை. இதை மறுத்தது புலிகளின் அரசியல். அது "நாங்கள்" ஆக, மக்கள் "எங்கள் மக்களா"கியது. இப்படி புலிகளின் தேவைகேற்ற சொத்தாக்கினர் மக்களை. மக்களை புலிகளாக, புலிகள் காட்டினர். இப்படி மக்கள் புலிகளின் றப்பர் முத்திரையாகினர். மக்களின் மாறுபட்ட அபிப்பிராயங்களை மறுத்து, மாறுபட்ட செயற்பாடுகளை மறுத்து, ஒற்றைப் பரிணாமத்தில் அவர்களை ஒடுக்கி, அவர்களை புலிகளாக காட்டினர். இப்படி "நாங்கள்" (புலிகள்), "எங்கள்     மக்களை" அடக்கி மந்தையாக்கியவர்கள், அவர்களை மேயவிட்ட இடத்தில் நின்று மேய்ந்தனர். இதைக் காட்டி புலிகள் என்றால் மக்கள், மக்கள் என்றால் புலிகள் என்று, தீபச்செல்வன் போன்றவர்கள் பாசிசக் கவிதையை எழுதினர். இதைத் தாண்டியா தீபச்செல்வனின் கவிதைகள் உள்ளது? அது பேசும் பொருள் மனித அவலம் பற்றியது என்பது எவ்வளவு உண்மையோ, அதேயளவுக்கு அது அரசியல் ரீதியாக தங்களை "நாங்கள்" என்று கூறி "எங்கள் மக்களுக்காக" என்பதன் மூலம் அவர்களை ஒடுக்குவது தான்.   

தீபச்செல்வன் போன்றவர்கள் புலிகள் கீழ் மக்களின் அடிமைத்தனத்தை பாதுகாக்கும் வண்ணமே, எதிரியை பேயாக பிசாசாக காட்டி அழகான துயரமான சொற்கள் கொண்டு மக்களை மேலும் சிறுமைப்படுத்தினர். இங்கு எதிரி பேயாக பிசாசாக மக்களுக்கு முன் இருப்பது என்பது, சர்வவியாபகமான ஒரு உண்மை. இதை சொல்வதால் மட்டும், மக்கள் உங்களுடன் இருப்பதாக அர்த்தமா? இல்லை. மக்கள் போராட, அவர்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் வண்ணம் புலிகள் போராட்டம் இருந்தா? இ;ல்லை. இப்படியிருக்க அதைப் போற்றுவது, எதற்காக!? பாசிசத்தின் நிழலில் மக்களை இளைப்பாறும்படி கோரினர், போராடும்படியல்ல. இதுதான் நடந்தேறியது. இவர்கள் மக்களின் எதிரியைக் காட்டி, புலியைப் போற்றிய அனைத்தும் போலியானது, பொய்யானது என்பதை, மக்கள் புலிகளை தோற்கடித்ததன் மூலம் நிறுவினர். மக்கள் போராட்டத்தில் இருந்து மௌனமாக ஓதுங்கியிருப்பதும், தங்கள் நலன் சார்ந்து புலிக்கு எதிராக நிற்பதும்தான், மக்களின் குறைந்தபட்ச எதிர்ப்பரசியலாக இருந்தது. இதுதான் புலிகளின் கதையையே முடித்து வைத்தது. மக்களுடன், அவர்களின் துயரங்களுடன் தீபச்செல்வன் போன்றவர்கள் என்றும் பயணிக்கவில்லை. மாறாக புலிகளுடன் பயணித்தவர்கள், மக்களை ஊறுகாயாக்கி தொட்டுக் கொண்டனர். புலிகள் மக்களின் துயரத்தை பார்த்தவிதம், அதைக் காட்டிய விதம், தங்கள் குறுகிய அரசியல் நோக்கின் அடிப்படையில்தான். மக்களின் பிரச்சனையில் இருந்தல்ல.  இன்று மக்கள் துயரத்தைப் பற்றி பேசுவது, தொடர்ந்து தங்கள் வலதுசாரிய அரசியல் மூலம் தொடர்ந்து மக்களை ஏய்த்துப் பிழைக்கத்தான். மக்களின் அவலத்தை வலதுசாரியமும், இடதுசாரியமும் ஒரே மாதிரி பார்ப்பதில்லை. அவர்களின் அரசியல் நோக்கமும் ஒரே மாதிரி ஒன்றாக இருப்;பதில்லை. தமிழ் மக்களுக்கு நடப்பதை, ஒன்றாக காட்ட முனைகின்றனர்.     

தீபச்செல்வனின் வலதுசாரியம் எப்படிப்பட்ட சமூக கண்ணோட்டத்தை முன்தள்ளுகின்றது என்பதைப் பாருங்கள். "முற்போக்கு இயக்கமாகச் செயற்படும் வாய்ப்புகள் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அதற்கான சூழலை சர்வாதிகார அரசு இல்லாமல் செய்துவிட்டது" என்கின்றார். இப்படி கூறுவது வேடிக்கையாயில்லை. "அரசு இல்லாமல் செய்துவிட்டது" ஆகவே வலதுசாரியத்தை பின்தொடருகின்றாரோ!? சரி, அரசு பிற்போக்கு வலதுசாரிய இயக்கத்தை இல்லாமல் செய்யவில்லை. ஏன் புலியைக் கூட இல்லாமல் தான் செய்துள்ளது.

இங்கு கேள்வி, நீங்கள் ஏன் முற்போக்காக இருக்க முடியவில்லை என்பதுதான். ஏன் அந்த நோக்கில் இருந்து செயல்பட முடியாது? புலிக்கு பின் எப்படி முற்போக்கு இருக்க முடியும். புலியினை ஆதரிக்கின்ற நிலைப்பாட்டில் முற்போக்கு கடுகளவும் கூட கிடையாது. இங்கு "சர்வாதிகார அரசு இல்லாமல் செய்துவிட்டது" என்பதற்கு அப்பால், அதை நீங்கள் தான் முதல் தமிழ் பகுதியில் இல்லாது செய்தீர்கள். இதை என் வசதியாக, வசதி கருதி மறந்து விட்டீர்கள். அரசு எதைச் செய்ததாக நீங்கள் கூறுகின்றீர்களோ, அதை புலிகள் தான் முதலில் செய்தனர்.

முற்போக்கு இயக்கம் தோன்றவிடாது அதை ஒடுக்கியவர்கள் புலிகள். தமிழ் சமூகத்தில் முற்போக்காக சமூகத்தை முன்னிறுத்தியவர்கள், இப்படி நூற்றுக்கணக்கான முன்னணியாளர்களை வதைமுகாங்களிலும், வீதிகளிலும் கொன்றவர்கள் புலிகள். இப்படி செய்ததன் மூலம், தங்கள் வலது சர்வாதிகாரத்தை நிறுவியவர்கள் புலிகள். இதைத்தான் பேரினவாத தனது சர்வாதிகாரத்துக்கு இலகுவாக இன்று பயன்படுத்தியுள்ளது. எந்த எதிர்ப்புமின்றி, சமூகத்தை இலகுவாக ஆள முடிகின்றது. கடந்தகாலத்தில் முற்போக்கான சமூகப் பற்றாளர்களை பேரினவாதம் கொன்றதை விட, புலிகள் கொன்றது தான், எமது மக்கள் சந்தித்த மிகப்பெரிய அரசியல் இழப்பாகும். புலிகளின் இழப்பல்ல. மக்களை உண்மையில் நேசித்தவர்கள் புலிகளல்ல, முற்போக்காளர்கள்தான். அதனால் தான் அவர்கள் முற்போக்காளரானர்கள். புலிகள் பிற்போக்காளராக இருந்தனர். இந்த வகையில் உங்கள் நிலை முற்போக்கல்ல. உங்களைப் போன்றவர்களின் அரசியல் நிலை இடதுசாரியமுமல்ல, வலதுசாரியமாகும். இது மக்கள் சார்ந்ததா? இல்லை.

தொடரும்
பி.இரயாகரன்

1.புலி அரசியலுக்கு மக்களின் பிணம் தேவைப்பட்டது. தீபச்செல்வனின் அரசியலுக்கு எது!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 01)

 

 

2.வர்க்கம் கடந்து இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கான குரல்கள், வர்க்கம் கடந்ததா!? மக்கள் சார்பானதா!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 02)

 

 

3.கடந்தகால விமர்சனம், சுயவிமர்சனமற்ற சாக்கடையில் தான் அரசியல் மிதக்கின்றது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 03)

 

 

4.தீபச்செல்வன் பற்றிய பொதுமதிப்பீடு மீதான அரசியல் திரிபு (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 04)

 

5.இனம் வர்க்கம் சார்ந்து குறுகிய வலதுசாரிய எதார்த்தம் தான் தீபச்செல்வனின் படைப்புகள் (தீபச்;செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 05)

 

6.தமிழ் மக்கள் தோற்றது என்? புலிகள் அழிக்கப்பட்டது ஏன்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 06)