இதற்கான காரணத்தை எப்படி, அதை எந்த நோக்கில் இருந்து பார்க்கின்றார்கள் என்பது, அரசியல் ரீதியான அவர்களின் நேர்மைக்கு மற்றொரு எடுத்துக் காட்டாக மாறிவிடுகின்றது. நாங்கள் ஒவ்வொருவரும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தோற்றது ஏன் என்றும், புலிகள் அழிக்கப்பட்டது ஏன் என்ற சுய விசாரணையை செய்ய முடிந்திருக்கின்றதா? சொல்லுங்கள். முதலில் நாங்கள் தான் தோற்கடிக்க காரணமாக இருந்திருக்கின்றோம், மற்றவர்கள் அல்ல. மற்றவர்கள் இதை தமக்கு சாதகமாக கொண்டு வென்றவர்கள்.

இப்படி உண்மையிருக்க இதை மறுப்பது தீபச்செல்வனின் அரசியலாகின்றது. இவர் கூறுவது போல் அரசும் உலகமும் தான் இதற்கு காரணமென்றால், போராட்டத்தை நடத்தியே இருக்கவே கூடாது. இனி நடத்தவும் கூடாது. இது என்றும் இருப்பது மட்டுமல்ல, அன்;றும் இருந்தது, இன்று இருக்கின்றது. நாளையும் இருக்கும்;. அவர்கள் மக்களின் பொது எதிரிகள். இந்த உண்மை இப்படியிருக்க, அதைக் காரணமாக கூறுபவர்கள் யார்? இந்தப் போராட்டத்தை அழித்தவர்கள் தான். தீபச்செல்வனும் அதைத்தான் இங்கு கூறுகின்றார். "விடுதலைப் புலிகள் எமது மக்களை அழிக்கவில்லை. அரசும் உலகமும்தான் எமது மக்களைக் கொன்று குவித்தது. விடுதலைப் புலிகள் அந்த அநீதிக்கு எதிராகப் போராடியவர்கள். தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் நான் வேறுபடுத்திப் பார்க்கவில்லை." என்கின்றார். எதிரி மக்களை கொல்வது என்பது, தெரிந்த உண்மை. அதை மீளச் சொல்லிவிடுவதால், தமிழ் மக்களின் அழிவுக்கு அவர்களை பொறுப்பாக்கிவிடுவது கடைந்தெடுத்த வலதுசாரிய பொறுக்கித்தனமாகும். எதிரி கொல்வதையும், போராட்டத்தை அழிப்பதையும் தெரியாமலா போராடினீர்கள்? இதை காரணமாக கூறுவது என்றால்,

1. அப்படியாயின் எதற்காக போராடினீர்கள்?

2. உங்கள் தவறான போராட்டத்தை மூடிமறைக்க, எதிரியை சார்ந்து நிற்கின்ற இழிவரசியலாகின்றது.

எதிரியிடமிருந்து தங்;களை காப்பாற்ற, மக்கள் நடத்தும் போராட்டம் தான் விடுதலைப் போராட்டம். இதை விடுதலைப்புலிகள் மறுத்து, மக்களுக்காக தாங்கள் போராடுவதாக கூறி மக்கள் போராட்டத்தையே அழித்தனர். மக்களின் கருத்து எழுத்து பேச்சுரிமையை புலிகள் மறுத்ததன் மூலம், மக்களை அடிமைப்படுத்தி அவர்களின் போராட்டத்தை தோற்கடித்தனர். இதன் விளைவு தான், மக்கள் புலிகளை தோற்கடித்தனர். மக்கள் வேறு, புலிகள் வேறு என்ற பிளவு மட்டுமின்றி, தங்கள் உழைப்பு முதல் குழந்தைகளை காப்பாற்ற புலிக்கு எதிராக மக்கள் போராடினர். உண்மையில் யுத்தம் மக்கள் மேல் புலிகளால் திணிக்கப்பட்டது. இதன் மூலம் எதிரி மக்களை கொல்வது காண்பிக்கப்பட்டது. இதன் மூலம் தான், புலிகள் தங்கள் அரசியல் இருப்பை தக்கவைக்க முனைந்தனர். இதை செய்த புலிகள், தங்களை  "அநீதிக்கு எதிராகப் போராடியவராக" காட்ட முனைந்தனர். இதையே தீபச்செல்வன் ஒப்புவிக்க முனைகின்றார். பேரினவாதம் தன் இன ஒடுக்குமுறை மூலம் கட்டமைத்த அரச பயங்கர வாதத்தை எதிர்த்து போராடுவதாக கூறிய புலிகள், இதன் மூலம் உருவாக்கிய தியாகம் சார்ந்த விம்பம், மக்கள் தாம் தமக்காக போராடுவதை அனுமதிக்கவில்லை. புலிகள் மக்களுக்காக போராடுபவர்கள் என்ற வலதுசாரிய அரசியல் மூலம், மக்கள் போராட்டம் அழிக்கப்பட்டது. இப்படி அழிக்கப்பட்ட போராட்டத்தை நியாயப்படுத்தி தீபச்செல்வன் அதை "நாங்கள்" எங்கள் மக்களுக்காக நடத்திய போராட்டம்" என்கின்றார். இங்கு நாங்கள் என்பது மக்களை ஒடுக்கி போராட்டத்தை குத்தகைக்கு எடுத்த புலிகள், "எங்கள் மக்களுக்காக" என்பது விடுதலைப் போராட்டத்தில் இருந்து புலிகள் அன்னியமாக்கிய மக்கள். இப்படி இருக்க "தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் நான் வேறுபடுத்திப் பார்க்கவில்லை" என்று கூறுகின்ற தீபச்செல்வனின் கவிதைகள் முதல் அரசியல் வரை, அந்த மக்களுக்கு எதிரானதாகவே இருந்தது, இருக்கின்றது.

இப்படி போராட்டத்தையும் மக்களையும் தோற்கடித்த புலிகளின் சர்வாதிகாரத்தின் கீழ் திணிக்கப்பட்ட யுத்த சூழலில் வாழ்ந்த மக்கள், இயல்பாகவே புலிகளில் இருந்து அன்னியமாகியதன் மூலம் புலிகளைத் தோற்கடித்தனர். இதன் மேல் தான் பேரினவாதமும் உலகமும், தங்கள் வெற்றியை நிறுவினர். ஆம் புலிகள் யுத்தத்தில் தோற்ற நிலையில், மக்களை வெளியேற விடாது தங்கள் யுத்த பூமியில் முடக்கிய நிலையில்தான், எதிரி மக்களை கொல்வது என்பது வரைமுறையின்றி பெருமெடுப்பிலானது. இப்படி இனவழிப்பு என்பது மிக இலகுவாகியது. புலிக்கு எதிரான தாக்குதல் என்ற போர்வையில், இனவழிப்பு மிக இலகுவாகியது. இந்த மக்களை காப்பாற்ற, புலிகள் மாற்று வழியைக் கூட முன்வைக்கவில்லை. மாறாக மக்களை பலியிட்டததன் மூலம், தங்களை பாதுகாக்கவே முனைந்தனர். தமிழ்மக்களின் பிணத்தை உற்பத்தி செய்து, தங்களை பாதுகாக்கும் இனவழிவு அரசியலைச் செய்தனர்.

இப்படிப்பட்ட அரசியல் அம்பலமாகும் போது, அது தலைமைக்கு தெரியாது என்ற குதர்க்க வாதம், இங்கு கிளிப்பிள்ளைத் தனமான வலதுசாரிய புரட்டாகிவிடுகின்றது. தீபச்செல்வன் அதையே இங்கு மீண்டும் செய்கின்றார். "சம்பவங்கள் தலைமைக்குத் தெரியாமல் நடந்திருக்கின்றன. போராளிகளுக்கும் போராட்டத்திற்கும் களங்கம் ஏற்படும் விதமாகக் குறித்த காரியங்களில் ஈடுபட்டவர்கள் இன்று இராணுவத்தினருடன் நிற்கிறார்கள்." என்கின்றார் தீபச்செல்வன். தலைமையல்ல, அமைப்பல்ல, நானுமல்ல சிலர் என்கின்றார். இப்படி தவறுகளை நியாயப்படுத்துகின்ற வக்கிரம். தவறுகள் எதுவும் தலைமைக்கு ஏன் எனக்கும்  தெரியாது என்கின்றார். இன்றும் கூட அதைத் தெரியாமல் தான், அதை நியாயப்படுத்துகின்றரோ!? இப்படிப் புரட்டுவதுதான், வலதுசாரியத்தின் தொடர்சியான மக்கள் விரோத அரசியலின் சிறப்பான எடுப்பான கூறு. விடுதலைப்புலிகள் இயக்கம் தவறுகளை அடிப்படையாக கொண்ட, ஒரு மக்கள் விரோத இயக்கம். மக்களின் அடிப்படையான எந்த உரிமையையும், புலிகள் அனுமதிக்கவில்லை. தவறே அமைப்பாக இருக்கும் போது, அதை தெரியாது என்பது கேலிக்குரியது. எந்த மக்கள் நலனும் அரசியல் ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் புலிகளிடம் இருந்தது கிடையாது. அரசுக்கு எதிராக போராடுதல், தியாகம் என்ற கூறு மட்டும், மக்கள் நலன்கொண்டது என்றால்,  போராடுதல், தியாகம் இதைத்தான் இலங்கை இராணுவம் முதல் உலக இராணுவங்கள் அனைத்தும் செய்கின்றன. ஒரு விடுதலைப் போராட்டம் இதற்குள் தான் என்றால், அது அழிவதும் அழிக்கப்படுவதும் இயற்கை. இதை மூடிமறைக்கவே இனம் காணும் தவறுகளை, தலைமைக்கு தெரியாது என்று கூறும் வக்கிரம் தான் மிஞ்சுகின்றது. 30-35 வருட தவறுகள் அனைத்தும், தலைமைக்குத் தெரியாது போனது என்பது கேலிக்குரியது. இதில் தலைமைக்குத் தெரியாது தவறுகளை இழைத்தவர்கள் "இன்று இராணுவத்தினருடன் நிற்கிறார்கள்" என்பது வலதுசாரிய புலி அரசியலின் "துரோகம்" என்று கூறி சில ஆயிரம் பேரை கொன்று போட்ட அதே அரசியல் பிதற்றல். சரி இப்படி இதில் ஈடுபட்டவர்கள், புலிகளின் தியாகியாகவில்லையா!? இராணுவத்துடன் நிற்கின்றனர் என்ற அளவுகோள், பொய்யானது புரட்டுத்தனமானது. இதில் சிலர் இராணுவத்துடன் வெளிப்படையாக நிற்கின்றனர் என்பது, அவர்களைப் பொறுத்த வரையில் எங்கே அதிகாரம் இருக்கின்றதோ எங்கே பொறுக்கித் தின்ன வழியிருக்கிறதோ அங்கே நிற்பார்கள். இதைத்தான் புலிகள் தங்கள் பின் உருவாக்கி, அதை ஒரு அரசியல் நடைமுறையாக வைத்திருந்தனர். இப்படி புலிகள் எந்த அரசியலுமற்ற லும்பன்களை உருவாக்கி, தலைமைக்கு விசுவாசமாக இரு என்றுதான் உத்தரவிட்டனர். இன்று அவர்கள் பேரினவாத தலைமைக்கு விசுவாசமாக இடம்மாறி பொறுக்கித் தின்னுகின்றனர். இது சரியா பிழையா என்பதை உணரும் அரசியல் எதுவும், பகுத்தறியும் அறிவு எதையும், அவனிடம் புலிகள் விட்டுவைக்கவில்லை. இது கடுகளவு கூட கிடையாது. மக்களை மேய்க்க, அவர்களை அடக்கியொடுக்க புலிகளால் நன்கு பயிற்றப்பட்ட ஈவிரக்கமற்ற லும்பன்கள். அதை இலங்கை அரசு தனக்கு ஏற்ப பயன்படுத்துகின்றது, எனவே உங்களால், அவர்கள் அங்கே நிற்கின்றார்கள். இதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது. இதை மூடிமறைத்து குற்றம் சாட்டுவதுதான், இதில் ஆச்சரியமானது.

தொடரும்
பி.இரயாகரன்

1.புலி அரசியலுக்கு மக்களின் பிணம் தேவைப்பட்டது. தீபச்செல்வனின் அரசியலுக்கு எது!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 01)

2.வர்க்கம் கடந்து இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கான குரல்கள், வர்க்கம் கடந்ததா!? மக்கள் சார்பானதா!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 02)

3.கடந்தகால விமர்சனம், சுயவிமர்சனமற்ற சாக்கடையில் தான் அரசியல் மிதக்கின்றது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 03)

4.தீபச்செல்வன் பற்றிய பொதுமதிப்பீடு மீதான அரசியல் திரிபு (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 04)

 

05.இனம் வர்க்கம் சார்ந்து குறுகிய வலதுசாரிய எதார்த்தம் தான் தீபச்செல்வனின் படைப்புகள் (தீபச்;செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 05)