எமது சமூகம், ஏன் இந்த அவலமான அரசியல் நிலையை அடைந்தது? அதை வெறும் பேரினவாதமாக மட்டும் கூறுவது, இந்தநிலை ஏற்பட காரணமாக இருந்த தமது தரப்பு தவறுகளை மூடிமறைப்பதாகும். இதைத்தான் இங்கு தீபச்செல்வன் செய்கின்றார். தனது இனம் சார்ந்தும், தனது வர்க்கம் சார்ந்தும், எதார்த்தத்தின் ஒருபக்கத்தைச் சார்ந்து நின்று எதார்த்தத்தின் முழுமையை மறுக்கின்றார். இதைத்தான் புலிகள் கடந்தகாலத்தில் செய்து வந்தனர்.

 இப்படி சமூகத்தின் பொது அவலம் மீதான தீபச்செல்வன் பார்வை, முழுமையானதல்ல. மாறாக மனித அவலத்துக்குக்கான காரணத்தை ஒரு பக்கத்தில் மட்டும் நின்று சாடுகின்றது. இது முழுமையை திட்டமிட்டு மூடிமறைத்து, அதை மறுப்பதால் இவை சமூக நலன் கொண்டதல்ல. அது குறுகிய இனம் சார்ந்த, வர்க்கம் சார்ந்த இனவாத கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் அரசியலோ, பொது உலக கண்ணோட்டம் சார்ந்தது. அதாவது ஒடுக்கும் சுரண்டும் வர்க்கத்தின் பொது வர்க்க நலன் சார்ந்தது. படைப்பின் அரசியல் எல்லை, ஒடுக்கும் வர்க்கத்தின் பொது நலனுக்குள் இருக்கும் சுயநலனைச் சார்ந்தது. இந்த வகையில் வலதுசாரியம் எப்போதும், எங்கும் சுயநலனை அடிப்படையாக கொண்டது. 

இதுதான் புலி அரசியல் என்றால், கூட்டமைப்பின் அரசியலும் கூடத்தான். ஒட்டுமொத்த மக்களின் நலனை, அதாவது ஒடுக்கப்பட்ட சுரண்டப்படும் தமிழ் மக்களின் நலனை இது முன்னிலைப்படுத்தியதல்ல. தீபச்செல்வனின் கவிதைகளும் இது தான். புலிகள் எப்படி இதை அணுகுவார்களோ, அதையே தீபச்செல்வன் பிரதிபலிக்கின்றார். இதுதான் அவரின் அரசியல் உள்ளடக்கமாகும். இதில் உள்ள சில விதிவிலக்குகள், எதார்த்தத்தின் தனிமனித உணர்ச்சியின் எல்லைக்கு உட்பட்டது. குறித்த எதார்த்தத்தை கடக்கும் போது, இந்த உணர்ச்சி சார்ந்த உண்மை, அரசியல் ரீதியாக மறுதளிக்கப்படுகின்றது. உணர்ச்சியின்பால் தீபச்;செல்வனிடம் பிரதிபலித்த (தன் இனம் வர்க்க சார்ந்த சில கூறுகளை) விதிவிலக்கான உண்மைகள், அவரின் அறிவின்பாலானதல்ல, பகுத்தறிவின்பாலானதல்ல.

அவரின் இன வர்க்க உணர்வு, சிங்கள பேரினவாதத்தை மட்டுமே தமிழ் மக்களின் எதிரியாக காட்டுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக இருந்த புலியை, அது போற்றி நிற்கின்றது. தன் உணர்ச்சி சார்ந்த நிலையில் மட்டும், எதிர்மறையில் புலியை பட்டும்படாமல் அணுகுகின்றது. அதை தவறான அரசியலாக  குறிப்பிடவில்லை. அதை பேரினவாதத்தின் குற்றமாக, அதன் விளைவாகவே காட்டி, தமிழ்மக்களின் விதியாக்கி புலியை நியாயப்படுத்திக் காட்டுகின்றது. இது தவிர்க்க முடியாது என்று, புலியின் நடத்தைகளுக்கு எல்லாம் சப்பை கட்டுகின்றார்.  

இந்த வலதுசாரிய சுரண்டும் வர்க்கம் சார்ந்த, இனம் சார்ந்த  சுயநலம் தான் அவரின் பொது அரசியலைத் தீர்மானிக்கின்றது. குறிப்பாக புலிகளை பற்றிய முரணுடன், புலியை விமர்சிக்காது, இது தவிர்க்க முடியாது என்பதை எப்படி முன்வைக்கின்றார் என்பதை குறிப்பாக சில கவிதைகள் ஊடாக  பார்ப்போம்.

"நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு" என்ற கவிதை, தன் அண்ணாவின் நிலையையும், குடும்பத்தின் நிலையையும் சிலாகிக்கின்றது. இதில் புலியின் நடத்தையிலான பாதிப்பை, எப்படி போற்றி அணுகுகின்றது என்பதைப் பார்ப்போம்.

"பிழைத்துப்போன களம் உன்னை
கொண்டுபோய் நிறுத்தி வைத்திருக்கிறது.
நீ கொண்டு செல்ல வேண்டிய
பை கிடக்கிற கடற்கரையில் காற்று திரளுகிறது.

விளையாடுகிற முத்தமற்று
சைக்கிளில் திரிகிற ஒழுங்கையற்று
வாழ்வை யுத்தம் ஒடுக்கியிருக்க
உன்னை களம் கொண்டுபோயிற்று.
திணிக்கப்பட்டிருக்கிற துவக்கு
உன்னைத்தான் தின்றுகொண்டிருக்கிறது.

அண்ணாவின் கல்லறைதான்
ஒரு சொத்தென இருந்தது.
அண்ணாவின் கனவு கலைக்கப்பட்டிருக்க
கல்லறையும் தகர்ந்து போயிற்று.
இப்பொழுது வீடு இல்லை
எங்களில் யாரும் வாழ்வதற்கு.
அண்ணாவைப்போலவும்
அவனின் கனவைப்போலவும்
அலைந்துகொண்டிருக்கிறோம்

எல்லாவற்றையும் இழந்து
அலைந்து ஒடுங்கியிருக்கிற
அச்ச மூட்டுகிற இராத்திரிகளில்
பொத்தி வைத்திருந்த
உன்னை இழுத்துச் செல்லப்படுகிற
எங்கள் விதியை என்ன செய்வது?

எங்களை அலைத்துக்கொண்டிருக்கிற எதிரியை
நீ எப்படி சுடுவாய்?
எவற்றையும் உணர முடியாத
அறிந்திருக்காத வயதில்
உனக்கு யுத்தம் தரப்பட்டிருக்கிறது.
கையில் தரப்பட்டிருக்கிற துவக்கு
பிஞ்சு மனதை வேகவைத்துக்கொண்டிருக்கிறது.
எதியிடம் சரணடைகிறது எஞ்சிய நிலம்.

இப்படி ஒரு கவிதையும்
இப்படி அச்சம் தருகிற இராத்திரியும்
ஏன் என்னை நெருங்கின.
கடைசியில் பொய்த்துப்போய்
கிடக்கிறது எனது சொற்கள்.
இனி குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி
நான் ஒரு பரணியெழுதுகிறேன்?

செல்களின் மத்தியில் சேர்ந்துகொண்டு
நடுங்கியபடியிருக்க நீ வேண்டும்?
யார் உன்னை இழுத்துச் சென்றனர்?
அண்ணாவைப்போல அவர்கள் இருந்தனர்.
அண்ணா நமது தேசத்தைப்போலவே
உன்னையும் மிகவும் நேசித்திருந்தான்.

குழந்தைகள் துப்பாக்கிகளில் மறைந்திருந்தனர்
என்று அம்மா சொல்லுகிறாள்.

இப்பொழுது நமது நகரமும் இல்லை.
வாழ்வுமில்லை.
எதுவுமற்ற நாமும் இல்லை.
எனினும் நீ வேண்டும்
அவியாத கொஞ்ச சோற்றையும்
தண்ணிரில் அவித்த பருப்பையும் தின்பதற்கு.

விரைவாக வந்துவிடு
நாம் மேலும் நிலம் பெயர்ந்தலைவோம்."

இந்த கவிதையின் சாரம் புலியின் அரசியலைப் போல், இதுவும் தன்னைத்தான் எதிர்மறையில் அம்பலப்படுத்துகின்றது. அது தன்னை அறிவுபூர்வமாக, மக்களைச் சார்ந்து நின்று நியாயப்படுத்த முடிவதில்லை செய்ததை மறுக்கின்றவராக, மூடிமறைக்கின்றவர்களாக மாறி, ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்தது. இப்படி புலிகளின் நடத்தைகள் தான், எப்போதும் எதிர்மறையில் அவர்களை வெளிப்படையாக விமர்சனம் செய்தது. தீபச்செல்வனின் இந்தக் கவிதையிலும், அவரையும் மீறிய உணர்ச்சியின் எல்லையில், அப்படித்தான் வெளிப்படுகின்றது. புலியை விமர்சனம் செய்யவில்லை. புலியை நியாயப்படுத்திய எதிர்மறை விமர்சனம் செய்கின்றது. இதற்கு மாறான உண்மை சார்ந்த எதார்த்தம், புலிசார்ந்த பொய்மையை அம்பலமாக்குகின்றது.   

"எல்லாவற்றையும் இழந்து
அலைந்து ஒடுங்கியிருக்கிற
அச்ச மூட்டுகிற இராத்திரிகளில்
பொத்தி வைத்திருந்த
உன்னை இழுத்துச் செல்லப்படுகிற
எங்கள் விதியை என்ன செய்வது?"

என்ற வரிகளில், வெளிப்படுவது என்ன? ஒருபுறம் சுயநலமும், மறுபக்கத்தில் பொத்தி வைத்தவனை இழுத்துச் செல்வதை "எங்கள் விதி" என்கின்றார். இது விதியா? பிரச்சனையை விதிக்குள் திணிக்கின்றார். புலியை நோக்கி இந்த அநியாயத்தை கேட்க மறுத்து அதை மூடி பாதுகாக்கின்றார். இப்படி இதை விதி என்று யார் சொல்லுவார்கள்? உண்மைகளை இனம் கண்டு, அதை இனம்காணவும், இனம்காட்டவும் விரும்பாதவர்கள் தான். இதுதான் வலதுசாரிய அரசியலாக கொப்பளிக்கின்றது. சரி, யார் இழுத்துச் சென்றனர்? யுத்தமா? அல்லது புலியின் தவறான மக்கள் விரோத யுத்தமா? அல்லது விதியா? எது இழுத்துச்சென்றது? புலியா? அல்லது அரசா? சரி இது எந்த அரசியல்?

இதற்கு பதில் அளிக்காமல் தடுப்பது எது? இன வர்க்க அரசியல் உள்ளடக்கமாகும். இதன் மீதான உண்மையை மக்கள் முன் மூடிமறைத்தலாகும். இன்று இழுத்துச் செல்ல புலியில்லை. அன்று இது புலி வடிவில் வந்த அரசியலல்ல என்பதை மூடிமறைக்க, அதை விதியாக்குகின்றார். விதி என்ன புலியின் வடிவமா? இவை அனைத்தையும் பேரினவாதம் நடத்திய யுத்தத்தின் விளைவாக மட்டும் காட்ட முனைகின்றார். புலிகள் இழுத்துச் சென்றது அதனால்தான் என்று சொல்ல முனைகின்றார். ஆனால் அதை விதி என்கின்றார், எதற்கு தான் யுத்தம் செய்தனர்? மக்களை வதைக்கவா? இதனால் புலியின் அரசியல் என்று இதை பக்கச்சார்புடன் கூற முடியவில்லை. இதை அவரின் அடுத்த வரியில் இருந்து பார்ப்போம்.

"எங்களை அலைத்துக்கொண்டிருக்கிற எதிரியை
நீ எப்படி சுடுவாய்?
எவற்றையும் உணர முடியாத
அறிந்திருக்காத வயதில்
உனக்கு யுத்தம் தரப்பட்டிருக்கிறது."

என்று கூறுகின்ற போது, எல்லவற்றையும் உணர முடிந்தவர்கள் யார்? தீபச்செல்வனா!? இதை உணர முடிந்த நீ, இதைத் தடுக்க என்ன செய்தாய்? நீ அல்லாத, ஆனால் உணர முடிந்தவர்கள் எங்கே போனார்கள்? எல்லாவற்றையும் உணர முடியாதவராக, ஏன் சமூகம் மாறியது? எது மாற்றியது? அரசியலல்லவா!? இதை உருவாக்கியது யார்? பேரினவாதமா?, புலியா?

புலிகள் தான். எல்லாவற்றையும் உணர முடியாதவராக்கினர். மக்களுக்கு "கருத்து எழுத்து பேச்சு சுதந்திரம் இருந்தால், புலிகள் அரசியல் அனாதையாகிவிடுவார்கள்" என்று கூறி அதை மக்களுக்கு மறுத்தவர்கள் புலிகள். இப்படி மக்களை எல்லாவற்றையும் உணர முடியாத மந்தைகளாக்கியவர்கள் புலிகள். 

உணர முடிந்தவர்களை, உயிருடன் வாழ புலிகள் அனுமதிக்கவில்லை. சமூகத்தை உணர வைக்க, புலிகளின் சர்வாதிகாரம் இடம் தரவில்லை. இந்த புலிகள் காலத்தில், உணர முடிந்தவர்கள் என்ற யாரைத்தான் அவர்கள் விட்டுவைத்தனர்? புலம் பெயர்ந்த நாடுகள், இந்தியா, கொழும்பு என்று, 20 இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் புலிகள் பிரதேசத்தில் இருந்து தப்பி ஓடினார்களே ஏன்!? பேரினவாதத்தினால் மட்டும் தான் என்று இந்த நிலைக்கு யாராவது காரணம் கூறினால், எல்லாவற்றையும் உணர்ந்து உண்மையை பேச தயாரில்லை என்றுதான் அதற்கு அர்த்தம்;.

1983 – 1984 ஆண்டுகளில் 10000 முதல் 30000 பேர் தாமாகவே முன்வந்து யுத்தம் செய்ய சென்ற சூழலை, எந்த அரசியல் எப்படி ஏன் மறுத்தது? தமிழ் முஸ்லீம் மக்களின் ஆதரவை, தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவை எல்லாம் எந்த அரசியல் மறுத்தது. தாமாக சமூகத்தை வழிநடத்த முன் சென்றவர்களை, எல்லாவற்றையும் உணர முடியாதவர்களாக மாற்றி ஒடுக்கியது எந்த அரசியல். எவற்றையும் உணர முடியாத குழந்தைகளையும், பெண்களையும் கொண்டு மட்டும் யுத்தத்தை நடத்திய, மலட்டுக் கூட்டம் யார்? அவர்களின் தலைவன் யார்? அவர்களின் அரசியல் தான் என்ன? எல்லாவற்றையும் உணர முடிந்தவர்கள் முன், புலிக்கு இடமில்லை. ஏனெனின் அவர்கள் கூறியது போல், புலிகள் அரசியல் அனாதையாகிவிடுவார்கள்.

கவிதை வரி கூறியது போல் "உனக்கு யுத்தம் தரப்பட்டிருக்கிறது" என்றால், யுத்தம் இல்லாத இன்றைய சூழலில், இழுத்துச் செல்ல இன்று எதுவுமில்லை. இங்கு உண்மை எங்கே இருக்கின்றது? இங்கு இன்று பொத்தி வைத்திருக்க முடிகின்றது. இங்கு யுத்தம் இன்றி, இழுத்துச் செல்லாத சூழலை "விதி" என்பதா? இங்கு "எல்லாவற்றையும் உணர முடியாதவர்கள்" மேல் யுத்தம் இல்லை. அது கூட விதியா? இல்லை. இனம் சார்ந்த வர்க்க அரசியல், அரசியல் ரீதியாக தோற்றுப்போனதன் விளைவு தான் இன்றைய நிலை. இதை ஏற்க மறுப்பது, உண்மையை அரசியல் ரீதியாக தொடர்ந்து புதைப்பதாகும். அதைப் பார்ப்போம்.   

"கையில் தரப்பட்டிருக்கிற துவக்கு
பிஞ்சு மனதை வேகவைத்துக்கொண்டிருக்கிறது.
எதிரியிடம் சரணடைகிறது எஞ்சிய நிலம்"

குழந்தையின் கையில், "எவற்றையும் உணர முடியாத அறிந்திருக்காத வயதில்" துவக்கை திணித்தது குற்றம்;. இது சமூகநலனை அடிப்படையாக கொண்ட மக்;கள் அரசியலல்ல. அது சமூகவிரோத அரசிலை அடிப்படையாகக் கொண்டது. "பிஞ்சு மனதை வேகவைத்து" அதை மூலதனமாக்கி, அவர்களைத் திண்ட கூட்டம் தான் புலி. அரசு யுத்தத்தை திணித்;தது என்பது பொது உண்மை. ஆனால் அதை தவறான வழியில் நடத்தி, "எவற்றையும் உணர முடியாத அறிந்திருக்காத வயதில்" அவர்களிடம் துவக்கைத் திணித்தது புலிகள்;. முட்டாள் பிரபாகரன் நிறுவிய சர்வாதிகாரம் தான், "எவற்றையும் உணர முடியாத அறிந்திருக்காத வயதில்" உள்ளவர்களை கொண்டு, ஒரு குறுகிய இனவழிவு யுத்தத்தை நடத்த முடிந்தது. அது சுரண்டும் வர்க்க நலனை அடிப்படையாகக் கொண்டது. இந்த வகையில், சமூகத்தின் பின்தங்கிய சமூக அறிவு மறுக்கப்பட்ட  பெண்களையும் பயன்படுத்தினர். சமூகத்தை மூளைச்சலவை செய்து, அவர்களின் அறியாமையைச் சார்ந்து நின்று தான், இப்படி "எவற்றையும் உணர முடியாத"வர்களைக்  கொண்டுதான் புலிகள் யுத்தத்தைச் செய்தனர்.

தீபச்செல்வனின் கவிதைகள் எதிர்மறையில் வைத்து அணுகும் போது, அதில் இளையோடியுள்ள கூறுகள் இந்த உண்மையைப் புட்டு வைக்கின்றது. புலிகளின் நியாயப்படுத்தலை, சமூக உள்ளடத்தின் எதிர்மறையில் இருந்து அணுகும் போது, மக்கள் விரோத புலிகளின் முகம் எப்போதும் தெளிவாக அம்பலமாகி வந்தது. இதுபோல் தான் தீபச்செல்வனின் கவிதையிலும் வெளிப்படுகின்றது. 

தீபச்செல்வன் தன் கனவு உலகில் பொத்திப் பாதுகாத்த, புலி பற்றிய நம்பிக்கைகளை இழந்த தன் துயரத்துடன், தன் ஆற்றாமையுடன் எப்படி தொடருகின்றார் என்று பார்ப்போம்.  

"இப்படி ஒரு கவிதையும்
இப்படி அச்சம் தருகிற இராத்திரியும்
ஏன் என்னை நெருங்கின.
கடைசியில் பொய்த்துப்போய்
கிடக்கிறது எனது சொற்கள்.
இனி குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி
நான் ஒரு பரணியெழுதுகிறேன்?"

"கடைசியில் பொய்த்துப்போய் கிடக்கிறது எனது சொற்கள்" இது தான், கவிதைகள் சார்ந்த உண்மை முகம். அவர் புலிகள் பின்னணியில் அதன் பிரமைகளில், பொய்களின் பொய்த்துப்போன சொற்கள் கொண்டதே அவரின் கவிதை வரிகள். இதன் உள்ளடக்கம் பொய்மை என்ற உண்மையில் இருந்து தான் காண முடியும்;. கனவுகள் தகருகின்ற போது,  "சொற்கள்" "பொய்த்துப்" போன உண்மைகளைச் சார்ந்து வெளிப்படுகின்றது. அவரின் உணர்ச்சி சார்ந்த எதார்த்தம், அதையும் சொல்ல வைக்கின்றது. "இனி குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி நான் ஒரு பரணியெழுதுகிறேன்?" என்று கூறுகின்ற எல்லையில் தான், போராட்டத்தை மாபெரும் முட்டாளான பிரபாகரன் என்ற சர்வாதிகாரி நடத்தினான். ஆனால் இதை தீபச்செல்வன் "விதி" என்கின்றார். "பொய்த்துப்போய் கிடக்கிற" தனது "சொற்கள்" மூலம் எப்படி அணுகினர் என்பதை இலகுவாக அதன் பொய்மையான எதார்த்தத்;தை புரிந்து கொள்ள "போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்" என்ற தீபச்செல்வன் கவிதை எடுப்பாகவே அம்பலமாகின்றது. 

"போராளிகள் மடுவைவிட்டு
பின் வாங்கினர்."

"போராளிகள் இலுப்பைக்கடவையைவிட்டு
பின் வாங்கினர்."

"போராளிகள் விடத்தல்தீவை விட்டு
பின் வாங்கினர்."

"போராளிகள் முழங்காவிலை விட்டு
பின் வாங்கினர்."

என்று பொய்மையாக "பின் வாங்கினர்." என்ற பொய்யை, ஒரு புலி சார்ந்த எதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றார். "பொய்த்துப்போய் கிடக்கிற" தனது "சொற்கள்" கொண்டு, மற்றொரு பொய்க்காக ஒரு பரணி எழுதுகின்றார்.  தோற்று வந்ததை புலிகள் பின்வாங்கல் என்று, பொய்த்துப்போன பொய்மையை யுத்தகாலத்தில் தன் கவிதை மூலம் பிரச்சாரம் செய்கின்றார். இதைத்தான் தீபச்;செல்;வன் "பின் வாங்கினர்" என்று எழுதுகின்றார். அவரின் வலதுசாரிய இன வர்க்க அரசியலின் அவலம், "கடைசியில் பொய்த்துப்போய் கிடக்கிறது எனது சொற்கள்" என்று சொல்கின்ற அரசியல் எல்லையை தொடுகின்றது. இதை "இப்படி ஒரு கவிதை" எழுத வேண்டி நேரிட்ட அந்த "அச்சம் தருகிற இராத்திரி"யில் தான் இதை எழுத முடிகின்றது. பேரினவாதிகளால் ஏற்பட்ட ஒரு "அச்சம் தருகிற இராத்திரி" தான், தன்னைத் தொட்டு இதை எழுதுகின்றார். அவர் தன் கவிதையில் கூறுகின்றார் 

"இனி குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி
நான் ஒரு பரணியெழுதுகிறேன்?"

என்று எழுதும் போது, இதை அந்த குழந்தைகளின் விதி என்றவர். சரி இதை எதிர்மறையில்  குழந்தைகள் போராடாத ஒரு களத்தைப் பற்றி எழுத, புலிகள் அதை இன்று எதுவுமற்றதாக்கியுள்ளனர். அதாவது முட்டாள்கள் கொண்ட தலைமை, தான் நிறுவிய  சர்வாதிகாரம் மூலம், தற்கொலைக்குரிய ஒரு இனவழிவு யுத்தத்தை நடத்தினர். தங்கள் அரசியல் கூட்டாளிகளின் துணையுடன் சரணடைந்து மாண்டதன் மூலம், இதை இன்று இல்லாதாக்கினர். பேரினவாதம் இதைச் செய்யவிலலை, புலிகள் தான் இதைச் செய்தனர். குழந்தைகள் நடத்தும் யுத்தத்தை பேரினவாதம் திணிக்கவில்லை, புலிகள்தான் குழந்தைகள் மேல் யுத்தத்தைத் திணித்தனர்.       

"செல்களின் மத்தியில் சேர்ந்துகொண்டு
நடுங்கியபடியிருக்க நீ வேண்டும்?
யார் உன்னை இழுத்துச் சென்றனர்?
அண்ணாவைப்போல அவர்கள் இருந்தனர்.
அண்ணா நமது தேசத்தைப்போலவே
உன்னையும் மிகவும் நேசித்திருந்தான்."

பூசி மெழுகும் புலி வக்கிரம், இப்படி சொல்ல வைக்கின்றது. இந்த வரிகளில் "யார் உன்னை இழுத்துச் சென்றனர்?" புலிகள்தான். அதாவது "அண்ணாவைப்போல அவர்கள் இருந்த" வர்கள்தான் குழந்தைகளை இழுத்துச் சென்றனர். அண்ணா தேசத்தைப் போல், தாங்கள் இழுத்துச்சென்ற குழந்தைகளை நேசித்தான் என்று கூறுகின்ற வரிகள் மிக வக்கிரமானவை. மாறாக இழுத்துச் சென்றவர்களை அண்ணாக்கள் தமக்காக பலியிட்டனர். அண்ணாக்கள்,  குழந்தைகளுக்கு இதைத்தான் பரிசாக கொடுத்தனர். அண்ணாக்கள் குழந்தைகளை நேசிக்கவில்லை, அவர்களுக்கு மரணத்தை பரிசாகக் கொடுப்பதை நேசித்தனர். அதற்காக அவர்கள் இழுத்துச் சென்றனர். இந்த அண்ணாக்கள் தேசத்தை நேசிக்கவில்லை, தேசத்தின் பெயரில் கிடைத்த செல்வத்தையும், அதனால் கிடைத்த சொகுசு வாழ்க்கையையும், மக்களின் அடிமைத்தனம் மீதான தங்கள் அதிகாரத்தையும் நேசித்தனர். 

நாம் மற்றொரு கவிதையை எடுப்போம் "முகத்தை மூடிக்கொள்ளுகிற குழந்தை" என்ற கவிதை. இந்த கவிதைக்குரிய சூழல் பற்றி, தீபச்செல்வன் தன் குறிப்பில் கூறுவதைப் பார்ப்போம். 

"விடுதலைப் புலிகளது கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளுவதற்காக திருமணம் செய்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு - தம்பதிகளுக்குப் பிறந்த இந்தக் குழந்தை. 20.09.2009 அன்று கைதடி தடுப்பு முகாமிலிருந்து விடுவிப்பதற்கு சற்று முன்னதாக காத்துக்கொண்டிருந்தபொழுது இந்தப் புகைப்படம் பிடிக்கப்பட்டது"

இந்த குழந்தை பிறந்து வளர்ந்த சூழலுக்குரிய குறிப்பு, அவரின் கவிதைகளின் கவிப்பொருளாகவில்லை. அதை எப்போதும் அவர் கேள்விக்குள்ளாக்கவில்லை. அதை விதி என்றும், பேரினவாத யுத்தத்தின் விளைவின் தவிர்க்க முடியாத ஒன்று என்ற எல்லையைத் தாண்டி, இதை அணுகாது மூடிமறைக்கின்றார்.

"எவற்றையும் உணர முடியாத அறிந்திருக்காத வயதில்" உள்ளவர்கள் முன் யுத்தத்தை திணிக்க, "எவற்றையும் உணர" முடிந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமணத்தை திணித்தனர். இப்படி புலிகளுக்கு எதிராக, அவர்களின் நோக்கத்துக்கு எதிராக மக்கள் இயங்கினர். திருமணம் செய்தவர்களை புலிகள் இணைப்பதில்லை என்ற அளவுகோலையே, புலிக்கு எதிராக அன்று மக்கள் பயன்படுத்தினர். ஆனால் இறுதியில் திருமணம் செய்யாதவர்கள் மேலும், புலிகள் யுத்தத்தை திணித்தனர். "புலிகளது கட்டாய ஆட்சேர்ப்பி"ற்கு செல்லுமளவுக்கு, புலிகளின் யுத்தமோ மக்கள் விரோத யுத்தமாக இருந்தது. அது மக்கள் யுத்தமாக அது இருக்கவில்லை. புலிகளின் மக்கள் விரோத இனவழிவு யுத்தம் தான், கட்டாய ஆட்சேர்பாக மாறுகின்றது. அது குழந்தைகள் கொண்ட யுத்தமாக மாறியது. இந்த உண்மையை தீபச்செல்வன் கவிதைகள் பேசவில்லை. அவரின் பேட்டியோ இதை நியாயப்படுத்துகின்றது. பேட்டி மீதான விமர்சனத்தின் போது அதை விரிவாகப் பார்ப்போம். இங்கு  நாம் மற்றொரு கவிதையை எடுப்போம்.

"தோற்கடிக்கப்பட்ட மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசன்" என்ற கவிதையில்

"தன் அதிகாரம் மிகுந்த செயல்களுக்காக
நிராகரித்த சிறு மக்களை
அரசன்
தோற்கடித்து அரியணையில் ஏறியிருக்கிறான்."

"முதலில் நாங்கள் எங்களுக்குள்
பெரிய தோல்வியைச் சந்தித்திருந்தோம்."

இந்த வரிகள் தான், வலதுசாரிய அரசியலின் மற்றொரு வெட்டு முகம்;. எதையும் நேர்மையாக, வெளிப்படையாக சொல்ல முடியாத வலதுசாரியத்தின் பிழைப்புத்தனம், வெளிப்படுத்தும்  விதம் சுயநலத்தை அடிப்படையாக கொண்டவை இந்த வரிகள். இப்படி இருப்பதால் தான், புலியைப் போற்றி வலதுசாரிய சுரண்டும் வர்க்க நலன் சார்ந்த பேட்டியை வழங்க முடிகின்றது.

எதார்த்தம் மீது வெளிப்படும் கவிதை, இதைக் கடந்த புதிய சூழலில் முந்தைய எதார்த்தத்தை மறுக்கின்றது. வலதுசாரிய அரசியல் மக்களைச் சார்ந்ததல்ல. இது தன் மக்கள் விரோத அரசியலால் எதார்த்தத்தில் புலம்பும் மறுகணம், அதை மறுக்கின்றது. இதை அவரின் பேட்டி மூலமும் நாம் பார்க்க உள்ளோம்.

"முதலில் நாங்கள் எங்களுக்குள்
பெரிய தோல்வியைச் சந்திருந்தோம்." யாரால்? புலிகள் துரோகியாக்கிய, துரோகிகளாலா? இதுதான் இதில் உள்ள அரசியல் மூடு மந்திரம். நாம் தோல்வியை சந்தித்தோம் என்றால், அது  புலியால் தான். இதே தோல்வியை நியாயப்படுத்தி, அதைச் சரி என்று சொன்னவர்களில்  ஒருவர் தான் தீபச்செல்வன். "எங்களுக்குள்" இருந்தது புலி. "நாங்கள்" இதனால்தான் "பெரிய தோல்வியை சந்தி"க்க வேண்டியிருந்தது. இந்த உண்மையை தீபச்செல்வன் எதார்த்தத்தின் மேலான எதிர்மறையில் வலதுசாரியாக புலம்பும் அடுத்த கணம், இதை தன் அரசியல் நடைமுறையில் மறுக்கின்றார்.

அதே கவிதையின் தொடக்கத்தில்
 
"தன் அதிகாரம் மிகுந்த செயல்களுக்காக
நிராகரித்த சிறு மக்களை
அரசன்
தோற்கடித்து அரியணையில் ஏறியிருக்கிறான்."

என்று கூறும் போது, இதைச் செய்தது யார்? புலிதான். மக்களை தோற்கடித்து, அவர்களை மந்தையாக்கி, அவர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தங்கள் அரியணையில் வைத்தது புலிகள். இதைக்காட்டி இது தான் மக்கள் போராட்டம் என்று பாசிச ஆட்டம் போட்டதும்,  புலிகள் தான், வேறு யாருமல்ல. "நிராகரித்த சிறு மக்கள்” என்று, இதை பேரினவாதத்தின் தலையில் செருகி காட்ட முனைகின்றார் தீபச்செல்வன். முதலில் தமிழ் மக்களையே தோற்கடித்தது புலிகள் தான், அரசல்ல. புலி தோற்கடித்த மக்களைத்தான், அரசு இன்று அடிமைப்படுத்தியுள்ளது. மக்கள் போராட்டத்தை தங்கள் சொந்த அதிகாரத்துக்கான அரியணையில் ஏற்றி, அதை மக்களுக்கு மறுத்தவர்கள் புலிகள்.      

மற்றொரு கவிதையான "அபிராஜூன் தங்கை லூர்த்தம்மாவின் கண்கள்" என்ற கவிதைக்குரிய, சூழலைப் பாருங்கள்.  

"தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளால் பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டு இயக்கத்தில் சேர்க்கப்பட்ட 15வயதுச் சிறுமியான லூர்த்தம்மாவும் அவளின் அண்ணனான 16வயதுடைய அபிராஜிம் இராணுவத்திடம் சரணடைந்து - கைதுசெய்யப்பட்டு அரசாங்கத்தின் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் இவர்களுடன் 94 சிறுவர்கள் இருப்பதாகவும் அவர்களில் 44பேர் சிறுமியர்கள் எனவும் லூர்த்தம்மா ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தாள்"  இந்த குழந்தை அவலத்தை, இந்தக் குழந்தைக்கு திணித்தவர்கள் புலி "அண்ணாக்கள்" தான். இந்த குழந்தைக்கு 18 வயது வந்து இருந்தால், திருமணம் மூலம் இவர்களை புலிகளிடமிருந்து காப்பாற்ற பெற்றோர் முனைந்திருப்பார்கள். 

குழந்தைகள் என்பதால், பெற்றோரை புலிகள் மிரட்டி குழந்தைகளை இழுத்துச் சென்று பலியிட்டனர். இதையெல்லாம் விதி என்று, மறைமுகமாக புலியை நியாயப்படுத்த தீபச்செல்வனால் முடிகின்றது. ஆனால் இந்த எதார்த்தத்தில், இந்த குற்றத்தை மறைக்க முடிவதில்லை. அதை பூசி மெழுகவே முடிகின்றது. கவிதையைப் பாருங்கள். 

"லூர்த்தம்மாவின் கண்கள் பின்னிரவுகளில்
அலைந்து கொண்டிருந்தன.
அந்தத் துவக்கு மிகப் பாரமாக இருந்தது
என்கிறாள்
அபிராஜின் தங்கை லூர்த்தம்மா.
அவள் இழுத்துச் செல்லப்பட்டபோது
அபிராஜ் புதர் ஒன்றுக்குள் ஒளிந்திருந்தான்.

மீளவும் அவள் ஓடி வந்து
சருகுகளிற்குள் ஒளிந்துகொண்டாள்.
அப்பொழுது அவள் பார்த்துக்கொண்டிருக்க
அபிராஜ் இழுத்துச் செல்லப்பட்டான்.
கனவு ஒழுகி சருகுகள் ஈரமாக
லூர்த்தம்மா அழுதுகொண்டேயிருந்தாள்.
அபிராஜ் துவக்கின் சூட்டில்
வாடிவிட
லூர்த்தம்மாவை தேடிக்கொண்டிருந்தான்.
களங்கள் எங்கும் குருதி வடிந்துகொண்டிருந்தது.

இனந்தெரியாத கால்களில் மோதுகிறபோது
அபிராஜை லூர்த்தம்மா கண்டாள்.
குழந்தைகள் சரணடைந்து துவக்குகளை கையளித்தனர்.

02
அவள் ஒதுங்கும் இடங்களில்
துவக்குகள் விழித்துக்கொண்டிருக்கின்றன.
லூர்த்தம்மாவுடன்
விளையாடிக் கொண்டிருக்கும்
சிறுமிகளின் கைகளில் பாரமான இலக்கங்கள்
கட்டப்பட்டிருக்கின்றன.
மீள மீள அவள்
சரணடைந்து கொண்டிருக்கிறாள்.
அபிராஜிடம் துப்பாக்கியை கொடுக்கப்பட்டு
பரிசோதிக்கப்படுகிறது.
வந்திறங்கும் சிறுவர்களுக்காக
தயாரிக்கப்படும் இலக்கங்களை
அபிராஜ் எண்ணுகிறான்.
அபிராஜின் கால்கள் மடங்கிப்போகின்றன.

இப்போது லூர்த்தம்மாவின் கண்களை
இந்தத் துவக்குகள் காவலிட்டுக் கொண்டிருக்கின்றன.
பொம்மைக் கடைகளில்
துவக்குகள் தொங்கிக்கொண்டிருக்கிறதாய் வருகிற
கனவுகள் இருவரையும் இரவுகளில் அலைத்தன.

அபிராஜ் மீள மீள பரிசோதிக்கப்பட்டான்.
லூர்த்தம்மாவின் கண்களில்
சமரிரவுகளின் துப்பாக்கிகள் குத்திக்கொண்டிருந்தன.
துவக்குகள் லூர்த்தம்மாவையும்
அபிராஜையும் துரத்திக்கொண்டேயிருக்கின்றன.

லூர்த்தம்மாவின் குருதி கசிந்து வாடுகிற கண்கள்
அபிராஜின் முன் அலைந்துகொண்டிருந்தன."

பெற்றோர்களை மிரட்டியும், அடித்து துன்புறுத்தியும், அவர்களைக் கொன்றும், குழந்தைகளை இழுத்துச் சென்றவர்கள் புலிகள். இந்த எதார்த்தம் மீது தீபச்செல்வன் கவிதைகள் திரிக்கின்றது. இன்று அப்படி எதுவும் நடைபெறவில்லை என்று சொல்வது முதல், அதை விதி என்றும், பேரினவாதத்தின் விளைவென்றும் விளக்கம் கொடுக்கின்றார். இது புலியின் அரசியல் என்பதை மறுக்கின்றார். வலதுசாரி அரசியல் இதுவென்பதை மறுக்கின்றார். உண்மையில் இது நிகழ்ந்தபோது, அதை ஆதரித்து நியாயப்படுத்தி நின்றவர்களில் ஒருவர் தீபச்செல்வன். பின் தான் ஆதரித்த நடத்தையால் உருவான சமூக அவலத்தை கவிதையாக்குகின்றார். இதுதான் புலிகள் அரசியல் உத்தியும் கூட. சமூகம் மீது அவலத்தை உருவாக்கி, அதைக் காட்டி, அவர்களை ஆயுத பாணியாக்குதல் தான் புலிகள் நடத்திய அரசியல். இந்த உத்தியைதான் கவிதையாக்குகின்றார்.

புலிகள் குழந்தைகளின் பிஞ்சுக் கைகளில் துப்பாக்கியை திணித்தனர். அவர்களுடன் இதை முன்னின்று செய்தவர்கள் பலர், இன்று ஆமியுடன் சேர்ந்து ஆட்டம் போடுகின்றனர். அன்றும் இன்றும் என்றும், அது பிழைப்புவாதக் கூட்டமாக இருந்திருக்கின்றது. அரசியலற்ற புலிகள் இதை உருவாக்கினர். தாயின் கருவறையை வெட்டியெடுத்த பொறுக்கிகளின் கூட்டத்தின் தலைவனாக தான், பிரபாகரன் இருந்தான். இப்படிப்பட்ட நிலையில் "நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு" என்ற கவிதையில்

"குழந்தைகள் துப்பாக்கிகளில் மறைந்திருந்தனர்
என்று அம்மா சொல்லுகிறாள்."

என்பது வக்கிரமாகும். உண்மை மேலான, புலிகள் குழந்தைகள் இழுத்துச்சென்றதை  நியாயப்படுத்திய ஒரு அப்பட்டமான திரிபாகும். இதற்கு நேர்மாறானது அவரின் மற்றொரு கவிதை வரி 

"அபிராஜின் தங்கை லூர்த்தம்மா.
அவள் இழுத்துச் செல்லப்பட்டபோது
அபிராஜ் புதர் ஒன்றுக்குள் ஒளிந்திருந்தான்"

என்ற எதார்த்தம் உண்மையானது. மக்கள் இராணுவத்துக்கு எதிராக மட்டும் பங்கர் வெட்டவில்லை. தங்கள் குழந்தைகளை ஒளித்துவைக்கவும் கூட பங்கர் வெட்டினர். வீட்டுக் கூரைகளிலும், காட்டிலும் கூட புலியிடம் இருந்து பாதுகாக்க குழந்தைகள் விட்டுவைத்தனர். அவர்களை பிடித்துச் செல்வதற்;கென்று கண்காணிப்பாளர்களை வைத்திருந்தவர்கள் புலிகள். தம்மிடம் இருந்து தப்பி வருபவர்களை அடையாளம் கண்டுபிடிக்க ஆண் - பெண் இருபாலாருக்கும் மொட்டை அடித்து விட்டனர். இவர்களா துப்பாக்கி பின் மறைந்து இருந்தனர்! தங்கள் மொட்டையை மறைக்கவா!? புலிகள் துப்பாக்கியின் பின் விட்டு, அவர்களை பலி கொடுத்தனர். இன்று பேரினவாத சிறைகளில் முகம்தெரியாது சிதைந்து போகின்றனர். 
 
"மணலில் தீருகிற துயர்" என்ற கவிதையில்

"இரண்டு இராணுவ அணிகள்
சந்திக்கின்றன.
குழந்தைகள் யாருமற்று அநாதைகளாகி
அழுகிய பிணங்களை பற்றிப்பிடித்தனர்.
அதிகாரங்கள் கூத்தாடுகின்றன.
இன்னும் சற்று நேரத்தில் ஓய்ந்தடங்கும்
மணலில் மோதுகிற துயர்.
சனங்கள் தீருகின்றனர்.
மண்மேடுகள் ஒவ்வொன்றாய் விழுகிறது."

இங்கு இரண்டு அதிகாரங்கள் கூத்தாடுகின்றது என்று, உண்மை சார்ந்த எதிர்மறையான அவரின் உணர்ச்சி சார்ந்த எதார்த்தத்தை மறுத்து தான் பேட்டி வெளிவருகின்றது. உதாரணத்துக்கு "தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் நான் வேறுபடுத்திப் பார்க்கவில்லை." என்கின்றார். இங்கு இரண்டு "அதிகாரங்கள் கூத்தாடு"வதைப் பற்றி பேசுகின்றார். எதார்த்தம் சார்ந்த உணர்ச்சியின் போது உண்மையும், உணர்ச்சியற்ற எதார்த்த வலதுசாரிய சுயநலத்தில் வேறு ஒன்றாக இது வெளிப்படுகின்றது. அவரின் பேட்டி மீதான விமர்சனத்தில் இதை விரிவாக பார்ப்போம்.

அவரின் இந்த முரணிலையை "பந்துகள் கொட்டுகிற காணி" என்ற கவிதையில்

"மண்ணடியில் நமது சிதைந்த வேரில்
திணிக்கப்படுகிற சொல்லாடல்களில்
நாம்தான் உன்மையில் தோற்றிருக்கிறோம்.
மைதானத்தைவிட்டு
வெளியேறிக்கொண்டிருக்கிறது யுத்தம்."

இங்கு "நாம் தான் உண்மையில் தோற்றிருக்கிறோம்" என்ற மக்களை, புலிகளில் இருந்து மக்களை வேறுபடுத்திக் காட்டுகின்றது.

"மண்ணடியில் நமது சிதைந்த வேரில்
திணிக்கப்படுகிற சொல்லாடல்களில்" உண்மையில்  தோற்கடிக்கப்பட்டோம் என்கின்றார். இந்த திணிக்கப்பட்ட சொல்லாடல்களைக் கொண்டு, மக்களை தோற்கடிக்கும் பொய்களை  தீபச்செல்வன் கவிதையாக்கவில்லையா? புலிகள் பற்றிய பிரமையை, அவர்களின் கொடுமையான மக்கள் விரோத நடத்தைகளை, அந்த வலதுசாரிய அரசியல் வக்கிரங்களை  எல்லாம் "திணிக்கப்படுகிற சொல்லாடல்களில்" மூலம் திணித்தவர் தான் தீபச்செல்வன். இன்று அதையே செய்கின்றார். இனி அவர் சோபாசக்திக்கு வழங்கிய பேட்டியில் அதைக் காண்போம்.

தொடரும்
பி.இரயாகரன்
  

1.புலி அரசியலுக்கு மக்களின் பிணம் தேவைப்பட்டது. தீபச்செல்வனின் அரசியலுக்கு எது!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 01)

 

2.வர்க்கம் கடந்து இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கான குரல்கள், வர்க்கம் கடந்ததா!? மக்கள் சார்பானதா!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 02)

 

 

3.கடந்தகால விமர்சனம், சுயவிமர்சனமற்ற சாக்கடையில் தான் அரசியல் மிதக்கின்றது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 03)

 

4.தீபச்செல்வன் பற்றிய பொதுமதிப்பீடு மீதான அரசியல் திரிபு (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 04)