ஆம் வர்க்கம் கடந்தது என்கின்றது வலதுசாரியம். இடதுசாரியமோ இதில் நீந்த முற்படுகின்றது. இது தான் இன்று தமிழ் தேசியம் தொடர்பான பொது அரசியல் உள்ளடக்கமாகும். தமிழ் இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்க சக்திகள், இன்று சந்திக்கின்ற இடதுசாரிய அரசியல் திரிபுகள், அழுத்தங்கள் இது சார்ந்து தான் உருவாகின்றது. இன்று இலங்கையில் ஒரு வர்க்கக் கட்சி கிடையாது. கட்சி கருத்தைக் கூட பாதுகாக்கும் போராட்டம் என்பது, கடுமையான அரசியல் அழுத்தத்துக்கு உள்ளாகின்றது. இந்த நிலையில் மக்களின் வாழ்வு சார்ந்த எழுகின்ற அவலம் தொடர்ந்து முன்தள்ளும் கருத்துகள், அரசியலைக் கைவிடக் கோருகின்றது. குறுக்கு அரசியல் வழியை நடக் கோருகின்றது. 

வர்க்கம் கடநத்தாக சமூகத்தையும் சமூக நிகழ்வுகளையும் காட்டிக்கொண்டு, மூடிமறைத்த அரசியல் மூலம் மனித அவலங்களை முன்னிறுத்திய பொது அரசியல் தளத்தில் இயங்கு தளத்தை உருவாக்கின்றனர். புலிகளைப் போல். இப்படி இடதுசாரியத்தை கைவிட்ட வலதுசாரியம், எங்கும் கோலோச்சுகின்றது. இதற்கு எற்பட் மார்க்சியத்தைத் திரிக்கின்றனர். காலத்துக்கும், தேசியத்துக்கும் இது பொருந்தது என்கின்றனர்.

மக்களின் பொது அவலத்தை முன்னிலைப்படுத்தி படைப்புகள், கருத்துகள், அரசுக்கு எதிரானதாக இருக்கும் போது, இன்று அதை வர்க்கத் தன்மையற்ற மக்கள் படைப்பாக காட்டப்படுகின்றது. அரசியல் தளத்தில் வர்க்கம் கடந்த இன அடையாள அரசியல் மூலம், அனைத்து சமூக முரண்பாடுகள் சார்ந்த மக்கள் விரோத அரசியலும் மூடிமறைக்கப்படுகின்றது.  வலதுசாரியமும் இடதுசாரியமும் கடந்த பொது மனித அவலத்தைப் பற்றிப் பேசுவதன் மூலம்,  வலதுசாரியம் செழிக்கின்றது. இடதுசாரியம் வர்க்க கண்ணோட்டத்தை கோட்டை விட்டுவிட்டு, வலதுசாரியத்துக்கு பல்லாக்கு தூக்குகின்றனர்.

இனப் பிரச்சனையை அணுகும் விதத்திலும், இனம் சந்திக்கின்ற பொது அவலங்களையும், தனிமனிதர்கள் சந்தித்த அவலங்களையும் சொல்கின்ற கண்ணோட்டத்தில், வர்க்க அடிப்படை கிடையாதா!? வர்க்கம் கிடையாது என்று, வலதுசாரியம் சொல்வது வேறு. இடதுசாரியம் சொல்வது அரசியல் திரிபு. இப்படி நாம் பிரித்து பார்ப்பது வரட்டுவாதம் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம். குறுங்குழுவாதம் என்ற முத்திரைகள் வேறு. தனிமனித தாக்குதல்கள் என்று புரட்டுகள் வேறு? 

இன ஒடுக்குமுறை சார்ந்த துயரங்கள், வர்க்கம் கடந்துதான் உள்ளதா!? வர்க்க ஒடுக்கு முறையல்லாத, இன ஒடுக்குமுறை மத ஒடுக்குமுறையின் போது என்ன நடக்கின்றது?  அது எந்த வர்க்கம் என்று பார்த்து ஒடுக்குவதில்லை. அது தன் அடையாளம் மூலமே ஒடுக்குகின்றது. இதுவொரு அரசியல் உண்மை. இது உண்மை என்பதால், இதற்கு எதிரான குரல்கள், போராட்டங்கள் வர்க்கம் கடந்துதான் இருக்குமா? இல்லை. இன வன்முறைக்கு உள்ளாகுபவர்கள் வர்க்கம் கடந்தவர்கள் என்பதால், இதற்கு எதிரான குரல்கள் வர்க்கம் கடந்ததாக இருக்காது. இப்படிப் பார்க்கின்ற, காட்டுகின்ற அரசியல் கடந்த 60 வருடத்துக்கு மேலான நீடிக்கின்றது. இதன் மூலம் தான் வலதுசாரியம் தொடர்ந்து செழித்து வாழ்கின்றது. இடதுசாரியம் இதை வேறுபடுத்தி அனுகத் தவறி அழிகின்றது. பல்வேறு வர்க்கத்தைச் சார்ந்தவர்களும் இன ஒடுக்குமுறையை அனுபவிப்பவர்கள் என்ற வகையில், வர்க்கம் கடந்த ஒரு அணியாக தன் வர்க்க நிலையை களைந்து விடுவது கிடையாது. சொந்த இனத்தைச்  சேர்ந்த சக மனிதனை ஒடுக்காது, அது இன ஒடுக்குமுறையை எதிர்கொள்வது கிடையாது. வர்க்கத்தை தக்கவைக்கும் தன் சொந்த ஒடுக்குமுறையுடன் தான், இன ஒடுக்குமுறையை வர்க்க எல்லையில் தான் அணுகுகின்றது.   

இந்த வகையில் இனவொடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களின் பொது அவலத்துக்கு எதிரான குரல்கள் அனைத்தும், எங்கும் எப்போதும் வர்க்க அடிப்படையைக் கொண்டது. இப்படி பார்ப்பது வரட்டுவாதமோ, குறுங்குழுவாதமோ அல்ல. வலதுசாரிய புலிகளின் குரலும், இடதுசாரிகளின் குரலும் ஒன்றா? நிச்சயமாக இல்லை? எந்த தனிமனிதனும், இதை அணுகும் போது, தங்கள் வர்க்க அடிப்படையை அளவீடாகக் கொண்டு தான் அணுகுகின்றனர். புலிகள் போன்ற வலதுசாரிய பாசிச குழுவாக அல்லாத, மிதவாத ஜனநாயக குரலைக்கொண்ட வலதுசாரியம் கூட, வர்க்க அடிப்படையைக் கொண்டு தான் செயற்படுகின்றது. வர்க்கம் கடந்த, இனவொடுக்குமுறைக்கு எதிரான தன் தலைமையிலான அரசியலை வலதுசாரியம் கோருகின்றது. அதாவது நிலவும் வர்க்க அமைப்பினைக் குலைக்காத சமூக ஒழுங்கில், தன் அரசியல் தலைமையை கோருகின்றது. புலி இதை கோரியே, வன்முறையை எவியது. 

இந்த வகையில் பொது சமூகக் கண்ணோட்டம், வலதுசாரிய சமூக அமைப்பிலானது. அது ஒடுக்கப்பட்ட வர்க்க நிலையில் நின்று அணுகும் வர்க்க நிலையை, கைவிடு என்கின்றது. எமக்குள் நாம் வர்க்கம், பால், சாதி, மதம்…. மூலம் ஒடுக்குவதை பொது சமூக இயங்கு உலக ஒழுங்கில் அங்கீகரித்து, இனவொடுக்குமுறைக்கு எதிராக வர்க்கம் கடந்து தன்பின் அணிதிரளக் கோருகின்றது. இது மக்களின் பொது அவலத்தைப் பற்றி மட்டும் பேசுகின்றது. இதுதான் புலியின் பிண அரசியலாகியது. மக்களின் பிணத்தைக் காட்டி, வர்க்கத்தை மறத்தது. இப்படி இனவடையாளம் மூலம், இன்று இனவரசியலை முன்னிலைப்படுத்தி காட்டுகின்றனர்.

தான் மற்றவர்களை ஓடுக்குவது பற்றி பேசுவதை, அபத்தமாக காண்கின்றது, காட்டுகின்றது. இடதுசாரியம் இதை குறித்து பேசுவது என்பது, சொந்த இன ஐக்கியத்தை சிதைப்பதாக காட்டுகின்றது. தாம் ஒடுக்குவதைப் பற்றி பேசுவது, தன் தலைமையிலான சொந்த இன ஐக்கியத்துக்கு பாதகமானதாக காட்டுகின்றது.

இந்த வலதுசாரியத்தில் தான் ஒடுக்கும் ஐக்கியத்தை இன அரசியல் மூலம் பாதுகாக்க, இனவொடுக்குமுறையின் பொது அவலத்தை முதன்மைப்படுத்துகின்றது. இதன் மூலம்தான் வலதுசாரியம் செழிக்கின்றது. இதை இடதுசாரியம் வேறுபிரித்து அணுகாத அரசியல் சூழலில், வலதுசாரியம் பேசும் பொது அவலம் மீது இடதுசாரியம் மயங்கி விடும் போது, இதை வர்க்க அடிப்படையில் பிளந்து பார்ப்பதை வரட்டுவாதமாக காட்டிவிடுவது நிகழ்கின்றது. தீபச்செல்வன் பற்றிய எமது இந்த விமர்சனத்திலும், இது போல் சொல்ல வாய்ப்புகள் உள்ளது. இருந்த போதும் நாம் அதை விமர்சனம் செய்தேயாக வேண்டியுள்ளது.

தொடரும்

பி.இரயாகரன்
08.09.2010

 1.புலி அரசியலுக்கு மக்களின் பிணம் தேவைப்பட்டது. தீபச்செல்வனின் அரசியலுக்கு எது!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 01)