பேரினவாத பாசிச அரசு,  புலத்து தமிழ் மக்கள் மத்தியில் ஊடூருவும்  சதியொன்று,  அண்மையில் அம்பலமாகியுள்ளது. நெடுந்தீவு மக்கள் தங்கள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவென, பல்வேறு புலம்பெயர் நாடுகளில் தங்களை ஒருங்கிணைத்து சுயாதீனமாக தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். இந்த சங்கங்களை குறிவைத்து, இலங்கைத் தூதரகத்தினூடாக சிலர் செயல்பட்டது பாரிசில் வைத்து அம்பலமானது.

இலங்கை அரசு திட்டமிட்டு உருவாக்கும் இந்த சதியின் பின்னணி என்பது மிக நுட்பமானது.

1.நெடுந்தீவு அபிவிருத்தியினை மையமாக வைத்து சுயமாக தனியாகவும் குழுக்களாகவும்  இயகியவர்களை, சர்வதேச ரீதியாக ஒருங்கிணைந்த ஒரு அமைப்பாக செயல்படல் என்று கூறி, இந்த சதி இங்கு அரங்கேறியது. அப்படித் தங்களைத் தாங்களே ஜெர்மனிய இலங்கை தூதரக அனுசரணையுடன் ஒருங்கிணைத்துக் கொண்ட சிலர், அனைத்து  நாடுகளில் உள்ளவர்களை தமக்கு கீழ் ஒருங்கிணைக்கும் செயற்பாட்டில் இறங்கியிருந்தனர். இந்த வகையில் ஜெர்மனியில் வெற்றிகரமாக கூட்டத்தை நடத்தி நிர்வாகத்தை தெரிவு செய்திருந்தனர்.

அடுத்தது பிரிட்டனில் பெரும் செலவில் கூட்டத்ததை நடத்த இருந்தனர். அதற்கு இடையில் பிரான்சில் வைத்து அவர்கள் அம்பலமானர்கள். பிரஞ்சு நெடுந்தீவு மக்கள் தங்களுக்கு நிர்வாகத்தில் இடம் தர வேண்டும் என்று விடாப் பிடியாக நின்ற நிலையில்,  நிர்வாகமோ அதை ஏற்க மறுத்து நின்றது. பல்வேறு நொண்டிச் சாட்டுகளையும் காரணங்களையும் முன் வைத்து நின்றது. விடாப்பிடியான கோரிக்கையை அடுத்து, ஜெர்மனிய இலங்கை தூதரகத்தின் அனுமதியை  தாம் பெற வேண்டும் என்று கூறியதன் மூலம்,  இந்த சதி முதலில் அம்பலமானது. நெடுந்தீவு மக்கள் தங்கள் பிரதேசத்துக்கு உதவ, ஜெர்மனிய தூதரகத்தின் அனுமதியை பெறவேண்டும் என்பது இந்த பின்னனியை புரிந்து கொள்ள போதுமானது.

2.இந்த மாதிரியான சதியின் பின்னனியில் மக்களுக்கு உதவி, பிரதேச அபிவிருத்தி, சொந்த ஊருக்கான உதவிகள்… என்று சமூகத்தில் எதோ ஒன்றைக் காட்டி, புலத்து மக்களை எமாற்றித்தான் பேரினவாதம் இன்று புலத்தில் ஊடுருவுகின்றது. அதாவது  உதவ வேண்டும், எதாவது செய்யவேண்டும்  என்ற மனித மனப்பாங்கைத் தான், பேரினவாதம் தன் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உள்ளாக்கி வருகின்றது.

3.பேரினவாத அரசு இன்றைய தன் புலத்து நடவடிக்கைக்கு பெரும் நிதியை செலவு செய்கின்றது. புலத்து மக்களை தமக்கு கீழ் ஒருங்கிணைக்க செலவு செய்யும் பணத்தை, உண்மையில் அந்த மக்களுக்கு உதவ விரும்பின் அங்குள்ள மக்களுக்கு நேரடியாகவே அதை செலவு செய்யலாம்.  உதாரணமாக நெடுந்தீவுக்கு உதவு என்ற பெயரில், அந்த மக்களை புலத்தில் ஒருங்கிணைக்க முற்படவேண்டிய அவசியமில்லை. அந்த மக்களுக்கு உதவும் உண்மையான எண்ணம் அரசுக்கு இருந்தால் இலங்கை அரசு நேரடியாகவே அதை செய்ய முடியும்.  ஆனால் இலங்கை அரசின் நோக்கம் அதுவல்ல. மாறாக அந்த மக்களை ஒடுக்கியாள, அரசியல் ரீதியாக தங்கள் மேலான எதிர்ப்பை உடைக்கும் சதி தான் இதன் பின்னுள்ளது.

4.இதை நடைமுறைபடுத்துவதற்கு உரிய நபர்களாக புலியெதிரிப்பு அரசியல் செய்தவர்கள், புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள்,  புலியல்லாத மாற்று இயக்கத்தில் இருந்தவர்கள்,  பாதிக்கப்பட்டுள்ள எம் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற அவா உள்ளவர்கள், எதாவது செய்ய வேண்டும் என்ற கூறித் திரிபவர்கள், அறிவுத்துறையினர் என்று இவர்களை முன்னிறுத்தி, அவர்களைக் கொண்டுதான் காய் நகர்த்துகின்றனர்.

 


மக்களுக்கு உதவுதல் என்பது, சுயதீனமாகவும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். மூடி மறைத்த சதிகாரர்களின் நோக்கம் அதுவல்ல. அங்குள்ள மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு உதவுகின்ற, வெளிப்படையான நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும். மக்களை வாழவைக்க வேண்டிய அரசு அதை செய்யத் தவறுவதால் தான், நாங்கள் உதவ வேண்டிய நிலையை உருவாகின்றது. இந்த நிலையில் அரசுடன் சேர்ந்த எந்த நிகழ்ச்சி நிரலும், உண்மையற்றதாக சதியை உள்ளடக்கியதாக மாறிவிடுகின்றது.

 

அரசு செய்ய வேண்டிய பணியை அதை செய்யமறுக்கின்ற நிலையில், அவர்களுடன் சேர்ந்து செய்வது என்பது மோசடியானது. உதவியின் பெயரில் அது அந்த மக்களின் கழுத்தை அறுப்பதாகும். யுத்தம் செய்யவும், மக்களை ஒடுக்கவும் பெரும் நிதி கொண்டு செயல்பட  பின் நிற்காத அரசு, மக்களை  பிச்சைகாரக்கி கையேந்த வைக்கின்றது. பின் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று புலம் பெயர் சமுகத்தைக் கோருவதும், அதற்குள் ஊடூருவி அரசியல் செய்வது, நீங்கள் உதவ விரும்பும் சொந்த மக்களுக்கு எதிரான சதி அரசியலாகிவிடுகின்றது.

இன்று புற்றீசல் போல் பல அமைப்புகள் உருவாக்கின்றது. இதன் பின்னனியில் பல சதிகாரர்கள் தங்களை மூடிமறைத்து ஒழித்து நிற்கின்றனர். இதைத் தான் நெடுந்தீவு சங்கத்தில் நடந்த நிகழ்வு மிகத் தெளிவாக அம்பலமாக்கியுள்ளது. ஏமாறது இருக்கவும், மோசடிக்காரர்களை இனம் காணவும், இன்று நாம் ஒவ்வொருவரும் சொந்த அரசியல் விழிப்புணர்வுடன் செல்படுவது தான் அரசியலின் முதல் அரிச்சுவடியாகும்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

23.08.2010