மகாராஷ்டிரா மாநிலம் - கயர்லாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பையாலால் போட்மாங்கே குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 11 பேரில் 6 பேருக்கு மரண தண்டனை, 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் மூன்று பேரை விடுதலை செய்தும் பந்தாரா மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பளித்திருந்தது.

அவ்விரண்டு குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக உயர்த்தக் கோரியும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவ்வழக்கை விசாரிக்க முடியாது என மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்தும் மகாராஷ்டிரா அரசால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்த மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை 6 பேருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையையும் 2 பேருக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் 25 ஆண்டு காலக் கடுங்காவல் தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பளித்திருப்பதோடு, இவ்வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது என மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் உறுதி செய்திருக்கிறது.


‘‘இவ்வழக்கில் சாதிக்குப் பங்கிருப்பதாகக் கூறமுடியாது. குற்றவாளிகள் அனைவரும் சாதாரண கிராமத்து மனிதர்கள். அவர்கள் ஏற்கெனவே எந்தவொரு குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. போட்மாங்கே குடும்பத்தினரால் தாங்கள் ஏற்கெனவே ஒரு பொய்யான வழக்கில் சிக்க வைக்கப்பட்டதற்குப் பழி தீர்த்துக் கொள்ளும் நோக்கத்துடனேயே இக்குற்றங்களைச் செய்துள்ளனர். மேலும் இதுவொன்றும் அரிதினும் அரிதான வழக்கல்ல." - இவை தண்டனையைக் குறைத்ததற்கும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவ்வழக்கை விசாரிக்காமல் தள்ளுபடி செய்ததற்கும் உயர் நீதிமன்றம் சொல்லியிருக்கும் காரணங்கள்.


தாழ்த்தப்பட்ட மகர் சாதியைச் சேர்ந்த, சுயமரியாதையோடும் சுயசார்போடும் வாழ்ந்து வந்த பையாலால் போட்மாங்கேயின் மனைவி சுரேகா, மகள் பிரியங்கா, மகன்கள் சுதிர் மற்றும் ரோஷன் ஆகியோர், குன்பி என்ற ஆதிக்க சாதியைச் சேர்ந்த வெறியர்களால் ஊரே பார்க்க கொடூரமாகவும் வக்கிரமாகவும் சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர் என்பது உலகமே அறிந்த உண்மை.


இந்த வழக்கின் உயிர் நாடியைப் பிடுங்கிச் சாதாரண கிரிமினல் வழக்காகக் குறுக்கிய சதி மாவட்ட நீதிமன்றத்தில் அரங்கேறியது. ஆதிக்க சாதிவெறியோடு நடத்தப்பட்ட இவ்வன்கொடுமைக் கொலையை, தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான பகையாகவும், மோதலாகவும் சித்தரித்ததோடு, போட்மாங்கேவின் மனைவியும் மகளும் பாலியல் பலாத்காரப்படுத்தப்படவோ, மானபங்கப்படுத்தப்படவோ இல்லை என்றும் சாதித்தது மாவட்ட நீதிமன்றம். இதற்குச் சாதகமாகவே போலீசின் புலன் விசாரணையும், அரசின் வாதங்களும் அமைந்தன.


இவ்வழக்கைப் பத்தோடு பதினொன்றாக ஆக்கிய அந்நீதிமன்றம், 6 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளித்ததுகூட நீதியின் பாற்பட்டதல்ல. ஒருபுறம், இத்தண்டனையை அளித்ததன் மூலம் தனது சாதிவெறியை மறைத்துக் கொண்டது; இன்னொருபுறமோ, ஒரு சாதாரண வழக்கிற்கு மரண தண்டனை அளித்ததை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிடும் என்று தெரிந்தே இத்தண்டனையை அளித்தது. "இதுவொன்றும் அரிதினும் அரிதான வழக்கல்ல" என உயர் நீதிமன்ற நீதிபதிகள் சொல்லியுள்ள வார்த்தைகளே இக்கூட்டு களவாணித்தனத்தை அம்பலப்படுத்திவிட்டன.


தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடத்தப்படும் வன்கொடுமை வழக்குகளில் நீதிமன்றங்கள் இப்படிக் கயமைத்தனத்தோடு நடந்து கொள்வது விதிவிலக்கானதல்ல. தன்னுடைய தங்கையைக் காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞன் பிரபு, அவனது தந்தை மற்றும் பிரபுவின் வீட்டில் இருந்த இரு குழந்தைகளை வெட்டிக் கொலை செய்த தீபக் என்ற பார்ப்பன சாதிவெறியனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், "தவறானதாக இருந்த போதிலும், இயல்பான சாதி உணர்வுக்குத்தான் தீபக் பலியாகி யிருக்கிறான் எனும்போது, அவனைத் தூக்கிலிடுவது நியாயம் ஆகாது" என ஆதிக்க சாதிவெறிக்கு வக்காலத்து வாங்கியது.


‘‘தலை இருந்தால்தானே தலைவனாக முடியும்; தலைவனாக வரும் எந்த தலித்தின் தலையும் தப்பாது" என்று பகிரங்கமாக கூறிவிட்டுத்தான் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசனின் தலையை ஆதிக்க சாதிவெறியர்கள் அறுத்து வீசியெறிந்தனர். ஆனாலும், இவ்வழக்கை விசாரித்த சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றம் இப்படுகொலை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வராது எனத் தீர்ப்பளித்தது.


சென்னை உயர் நீதிமன்றம் மேலவளவு படுகொலை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் என வாயளவில் ஒத்துக் கொண்டாலும், சம்பவம் நடந்து ஒன்பது ஆண்டுகள் முடிந்து விட்டதைக் காட்டியும், தமிழக அரசு சேலம் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யாததைக் காட்டியும் அவ்வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிப்பதில் இருந்து நழுவிக் கொண்டது. திண்ணியம் வழக்கிலும் இப்படித்தான் ஆதிக்க சாதிவெறியர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படாமல் தப்ப வைக்கப்பட்டனர்.


தமிழகத்தின் 15 மாவட்டங்களில் 1990 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு முடிய தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக 6,157 வன்கொடுமைத் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், அவற்றுள் 1,657 வழக்குகள் புலன் விசாரணை நிலையிலேயே போலீசாரால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாகவும், 2,297 வழக்குகள் நீதிமன்ற விசாரணையின் போக்கில் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள 2,203 வழக்குகளில் 207 வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாகவும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலப் புல னாய்வுப் போலீசார் வெளியிட்டுள்ள "மகாராஷ்டிராவில் குற்றங்கள் - 2007" என்ற அறிக்கையில், "வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் 2 சதவீதத்துக்கும் குறைவான வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதாக’’த் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் இப்படி பெரும்பாலான வன்கொடுமை வழக்குகள் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்படுவதற்கு, "வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் தரும் வாக்குமூலங்களை நீதிபதிகள் சாட்சியமாக ஏற்றுக் கொள்ள மறுப்பதை" புன்னையா கமிசன் முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளது.


‘‘தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், அதனால் அச்சட்டத்தை அடியோடு நீக்க வேண்டும்" என ஆதிக்க சாதிவெறியர்கள் கூச்சல் போட்டு வருகிறார்கள். அதிகார வர்க்கமும் நீதிமன்றங்களும் வழக்குப் பதிவதிலும், விசாரணை நடத்துவதிலும், தீர்ப்பு வழங்குவதிலும் இச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதன் மூலம் சாதி இந்துக்களின் அக்கோரிக்கையை மறைமுகமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன.


-குப்பன்.