அன்பார்ந்த உழைக்கும் மக்களே ,

போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது போபால் நீதிமன்றம். முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது அமெரிக்க அரசு. 23,000 இந்திய மக்களை படுகொலை செய்து , 5,00,000 க்கும் மேற்பட்டோரை ஊனமாக்கியிருக்கும் அந்தப் பயங்கரவாதியை ஒரே ஒரு நாள் கூட கூண்டில் ஏற்றி விசாரிப்பதற்கு கூட விரும்பாத மன்மோகன் சிங் அரசு, மக்களுக்கு நிவாரணம் தருவதாகவும், மீண்டும் நீதி விசாரணை கோரப் போவதாகவும் நம்மிடம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

போபால் - காலம் கடந்த அநீதி

1984, டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவில் யூனியன் கார்பைடு ஆலையில் நடந்த நச்சுவாயுக் கசிவு எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல. அமெரிக்க நிறுவனம் தெரிந்தே செய்த படுகொலை. ஆபத்தான இந்த உற்பத்தியை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு தள்ளி விட்டது குற்றம். மெதில் ஐசோ சயனைடு என்ற நச்சு வாயுவிலிருந்து பூச்சிக் கொல்லி தயாரிக்கும் ஆலையை குடியிருப்பு பகுதியில் அமைத்தது குற்றம். அதே ஆலையில் பல விபத்துக்கள் நடந்த பின்னரும் இலாபத்தை கூட்டுவதற்காக நச்சுவாயுக் கிடங்கின் பாதுகாப்புச் செலவுகளை குறைத்தது குற்றம்.செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு மாற்று மருந்து கொடுத்து காப்பாற்ற முயன்ற மருத்துவர்களிடம் கூட சயனைடு வாயுவின் பெயரைக் கூறாமல் ஏமாற்றி, பல்லாயிரம் மக்களைத் துடித்துச் சாக விட்டது குற்றம். பூச்சிக் கொல்லி த்யாரிப்பதாக கூறிக் கொண்டு, இரகசியமாக இரசாயன ஆயுதங்களைத் தயாரித்தது தான் மேற்கூறிய குற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படையான கொலைக்குற்றம்.

தேடப்படும் குற்றவாளி ஆண்டர்சன்

 

குற்றவாளி யூனியன் கார்பைடு மட்டுமல்ல; ஆபத்தான இந்த ஆலைக்குத் தெரிந்தே உரிமம் வழங்கியவர் இந்திராகாந்தி. கைது செய்யப்பட்ட ஆண்டர்சனை விடுவித்து மன்னிப்பு கேட்டு, அரசு விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தவர் அன்றைய பிரதமர் இராஜீவ் காந்தி. ஒரு இந்திய உயிரின் விலை 12,414 ரூபாய் என்று 1989 இல் கார்பைடு நிறுவனத்துடன் கட்டைப் பஞ்சாயத்து பேசி முடித்தது இராஜீவ் அரசாங்கம். இந்தக் குற்றத்தை சாலை விபத்து போன்ற சாதாரணக் குற்றமாக குறைத்தது உச்ச நீதி மன்றம். வழக்கை சீர்குலைத்து குற்றவாளி ஆண்டர்சனைத் தப்பவைக்க முயன்றது சி.பி.ஐ. காங்கிரசு அரசின் எல்லா சதிகளுக்கும் உடந்தையாய் இருந்தது, அதன் பின் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு. இந்த குற்றவாளிகள் அனைவரும் எதுவுமே தெரியாதவர்கள் போல் நாடகமாடுகிறார்கள்.

26 ஆண்டுகளாக காத்திருந்த போபால் மக்களுக்கு இன்று இழைக்கப்பட்டிருப்பது அன்றைய படுகொலையைக் காட்டிலும் கொடிய அநீதி. இந்த அநீதி இந்தியாவின் சட்டமாகவே மாறவிருக்கிறது. “இந்திய அரசு அமெரிக்காவிடம் வாங்கவிருக்கும் அணு உலைகள் வெடித்து நாளை இலட்சக் கணக்கான இந்தியர்கள் செத்தாலும், அதற்காக் அமெரிக்க முதலாளிகளிடம் நட்ட ஈடு கூட கேட்க மாட்டோம்” என்கிறது மன்மோகன் சிங் அரசின் அணுசக்தி மசோதா. தற்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் டௌ கெமிக்கல்ஸ் , அன்று வியட்னாம் மக்களைக் கொல்வதற்கு நாபாம் தீக்குண்டுகளை அமெரிக்காவுக்கு தயாரித்து கொடுத்த நிறுவனம். இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு இந்தக் கொலைகார நிறுவனத்தை வருந்தி அழைத்துக் கொண்டிருக்கிறது மன்மோகன் அரசு. “பன்னாட்டு முதலாளிகளின் இலாபத்துக்காக இந்திய மக்களைக் கொல்வதும் மண்ணை விட்டு விரட்டுவதும் நம் தொழில்களை அழிப்பதும் உரிமைகளைப் பறிப்பதும் தான் நீதி: பன்னாட்டு முதலாளிகள் சொல்வது தான் சட்டம்; அவர்கள் கொழுப்பது தான் நாட்டின் முன்னேற்றம்” என்ற இந்திய அரசின் கொள்கையை அம்பலமாக்கியிருக்கிறது போபால் படுகொலை.

நீதி வேண்டுமா? புரட்சி ஒன்று தான் பாதை...

காலனியாதிக்கத்தின் கோர முகத்தை அம்பலமாக்கி, பகத்சிங் போன்ற விடுதலை வீரர்களை உருவாக்கியது ஜாலியன் வாலாபாக். இந்திய சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் பொய்முகங்களையும், மறுகாலனியாதிக்கத்தின் உண்மை முகத்தையும் உரித்துக் காட்டியிருக்கிறது போபால். நீதி வேண்டுமா?. நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை!. இது போபால் படுகொலை நமக்கு கற்பிக்கும் பாடம்.

நீதி வேண்டுமா ?.. புரட்சி ஒன்று தான் பாதை ..

நீதி வேண்டுமா? புரட்சி ஒன்று தான் பாதை...

 

கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!

முற்றுகை

ஆகஸ்டு-15

டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.

 


அனைவரும் வருக‌

-

மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னனி

-

தொடர்பு கொள்ள:

ம.க.இ.க : 94446 48879

பு.ம.இ.மு : 94451 12675

பு.ஜ.தொ.மு : 94448 34519

பெ.வி.மு : 98849 50952.

தொடர்புடைய பதிவுகள்